சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; “அழித்துவிடாதீர்கள்” என்ற இசையில்; தாவீதின் பாடல். மிக்தாம்.*
58 மனிதர்களே, இப்படி அமைதியாக இருந்தால் நீதியைப் பற்றி உங்களால் பேச முடியுமா?+
நேர்மையோடு தீர்ப்பு கொடுக்க முடியுமா?+
2 அக்கிரமம் செய்வதற்கு நீங்கள் உள்ளத்திலே திட்டம் போடுகிறீர்கள்.+
தேசத்திலே வன்முறையைக் கையில் எடுக்கிறீர்கள்.+
3 பிறந்ததிலிருந்தே பொல்லாதவர்கள் தவறான வழியில் போகிறார்கள்.
பிறந்த சமயத்திலிருந்தே சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள், பொய் பேசுகிறார்கள்.
4 அவர்களுடைய விஷம் பாம்புகளின் விஷம்போல் இருக்கிறது.+
காதை அடைத்துக்கொள்கிற நாகப்பாம்புபோல் அவர்கள் செவிடர்களாக இருக்கிறார்கள்.
5 பாம்பாட்டிகள் என்னதான் திறமையாக மகுடி ஊதினாலும்,
அவர்களுடைய சத்தம் கேட்காதபடி அது தன் காதை அடைத்துக்கொள்கிறது.
6 கடவுளே, எதிரிகளின் பற்களை உடைத்தெறியுங்கள்!
யெகோவாவே, இந்தச் சிங்கங்களின் தாடைகளை நொறுக்கிப்போடுங்கள்!
7 வேகமாய் ஓடி மறைந்துபோகிற காட்டாறுபோல் அவர்கள் மறைந்துபோகட்டும்.
கடவுள் தன்னுடைய வில்லை வளைத்து அவர்களை அம்புகளால் வீழ்த்தட்டும்.
8 ஊர்ந்து ஊர்ந்து கரைந்துபோகிற நத்தைபோல் அவர்கள் கரைந்துபோகட்டும்.
செத்துப் பிறக்கிற குழந்தைபோல் சூரிய ஒளியைப் பார்க்காமல் போகட்டும்.
9 சுள்ளிக் குச்சிகளின்* நெருப்பினால் உங்களுடைய பானை சூடாவதற்கு முன்பே,
கடவுள் ஒரு புயல்காற்றுபோல் வந்து,
பச்சையான குச்சிகளையும் எரிகிற குச்சிகளையும் அடித்துக்கொண்டுபோவார்.+
10 பொல்லாதவன் பழிவாங்கப்பட்டதைப் பார்த்து நீதிமான் சந்தோஷப்படுவான்.+
அவனுடைய பாதங்களில் பொல்லாதவனின் இரத்தம் வழிந்தோடும்.+
11 அப்போது, “நீதிமான்களுக்குக் கண்டிப்பாகப் பலன் கிடைக்கும்” என்றும்,+
“பூமியை நியாயந்தீர்க்கிற கடவுள் ஒருவர் நிச்சயமாகவே இருக்கிறார்”+ என்றும் மனிதர்கள் சொல்வார்கள்.