லேவியராகமம்
2 பின்பு அவர், “‘ஒருவன் யெகோவாவுக்கு உணவுக் காணிக்கையை+ கொண்டுவர விரும்பினால், நைசான மாவில் எண்ணெய் ஊற்றி, அதன்மேல் சாம்பிராணி வைத்துக் கொண்டுவர வேண்டும்.+ 2 பின்பு, குருமார்களாகிய ஆரோனின் மகன்களிடம் அதைக் கொடுக்க வேண்டும். குருவானவர் அந்த நைசான மாவையும் எண்ணெயையும் மொத்த சாம்பிராணியோடு சேர்த்து ஒரு கைப்பிடி எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக+ அதைப் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 3 மீதியிருக்கும் உணவுக் காணிக்கை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சேர வேண்டும்.+ யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலியில் இது மகா பரிசுத்தமானது.+
4 அடுப்பில் சுட்ட ரொட்டியை உணவுக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால், அதை நைசான மாவில் செய்ய வேண்டும். அது எண்ணெயில் பிசைந்து சுடப்பட்ட புளிப்பில்லாத வட்ட ரொட்டியாகவோ எண்ணெய் தடவிய புளிப்பில்லாத மெல்லிய ரொட்டியாகவோ இருக்க வேண்டும்.+
5 வட்டக் கல்லில் சுட்ட ரொட்டியை உணவுக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால்,+ புளிப்பில்லாத நைசான மாவில் எண்ணெய் கலந்து அதைச் செய்ய வேண்டும். 6 பின்பு அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதன்மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும்.+ இது உணவுக் காணிக்கை.
7 வாணலியில் செய்த ரொட்டியை உணவுக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால், அதை நைசான மாவிலும் எண்ணெயிலும் செய்ய வேண்டும். 8 இப்படிப்பட்ட உணவுக் காணிக்கையை நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்துவதற்காக குருவானவரிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் பலிபீடத்துக்குக் கொண்டுபோக வேண்டும். 9 அந்த உணவுக் காணிக்கையில் கொஞ்சத்தை குருவானவர் எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக+ அதைப் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ 10 மீதியிருக்கும் உணவுக் காணிக்கை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சேர வேண்டும். யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலியில் இது மகா பரிசுத்தமானது.+
11 நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எந்த உணவுக் காணிக்கையிலும் புளிப்பு சேர்க்கக் கூடாது.+ புளித்த மாவையோ தேனையோ* யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தக் கூடாது.
12 அவற்றை முதல் விளைச்சலிலிருந்து எடுத்து யெகோவாவுக்குப் படைக்கலாம்.+ ஆனால், வாசனையான காணிக்கையாகப் பலிபீடத்தில் எரிக்கக் கூடாது.
13 நீங்கள் செலுத்தும் உணவுக் காணிக்கைகள் எல்லாவற்றிலும் உப்பு சேர்க்க வேண்டும். அது கடவுள் செய்த ஒப்பந்தத்தை ஞாபகப்படுத்துவதால் உணவுக் காணிக்கையில் அதைச் சேர்க்காமல் இருக்கக் கூடாது. நீங்கள் செலுத்துகிற எல்லாவற்றோடும் சேர்த்து உப்பையும் செலுத்த வேண்டும்.+
14 முதல் விளைச்சலிலிருந்து உணவுக் காணிக்கை செலுத்தும்போது, பச்சையான கதிர்களைத் தீயில் வாட்டி, குறுணையாக்கி செலுத்த வேண்டும். முதல் விளைச்சலிலிருந்து யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கை அது.+ 15 அதன்மேல் எண்ணெய் ஊற்றி சாம்பிராணியை வைக்க வேண்டும். அது உணவுக் காணிக்கை. 16 குருவானவர் அந்தக் குறுணையையும் எண்ணெயையும் மொத்த சாம்பிராணியோடு சேர்த்து ஒரு கைப்பிடி எடுத்து மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக அதைப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும்.+ அது யெகோவாவுக்குச் செலுத்தும் தகன பலி’” என்றார்.