எண்ணாகமம்
17 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேலர்களிடம் பேசி, ஒவ்வொரு கோத்திரத்துக்கும் ஒரு கோல் என மொத்தம் 12 கோல்களை அந்தந்த கோத்திரத் தலைவரிடமிருந்து+ வாங்கிக்கொள். அவரவர் பெயரை அவரவர் கோலில் எழுது. 3 ஆரோனின் பெயரை லேவியின் கோலில் எழுது. ஒவ்வொரு கோத்திரத் தலைவருக்கும் இருக்கிற கோலை 4 சந்திப்புக் கூடாரத்திலே, நான் உங்களைத் தவறாமல் சந்திக்கிற+ சாட்சிப் பெட்டிக்கு+ முன்னால் வை. 5 நான் தேர்ந்தெடுக்கிறவரின்+ கோல் மட்டும் துளிர்த்து மொட்டுவிடும்படி செய்வேன். இப்படி, எனக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும்+ இனி இஸ்ரவேலர்கள் முணுமுணுக்காதபடி+ செய்வேன்” என்றார்.
6 இவற்றை மோசே இஸ்ரவேலர்களிடம் சொன்னார். அவர்களுடைய கோத்திரத் தலைவர்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு கோல் என 12 கோல்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்களுடைய கோல்களுடன் ஆரோனின் கோலும் இருந்தது. 7 பின்பு, மோசே அந்தக் கோல்களைச் சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் யெகோவாவின் முன்னிலையில் வைத்தார்.
8 அடுத்த நாள், சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருந்த கூடாரத்துக்குள் மோசே போனார். அப்போது, லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆரோனின் கோல் மட்டும் துளிர்த்து, மொட்டுவிட்டு, பூப்பூத்திருந்தது. அதில் வாதுமைப் பழங்களும் இருந்தன. 9 பின்பு, மோசே அந்தக் கோல்களை யெகோவாவின் முன்னிலையிலிருந்து எடுத்து இஸ்ரவேல் ஜனங்களிடம் கொண்டுவந்தார். அவர்கள் அதைப் பார்த்தார்கள். பின்பு, எல்லாரும் அவரவர் கோலை எடுத்துக்கொண்டார்கள்.
10 அப்போது யெகோவா மோசேயிடம், “ஆரோனின் கோலைத்+ திரும்பவும் சாட்சிப் பெட்டிக்கு முன்னால் வை. எனக்கு அடங்கி நடக்காதவர்களை+ எச்சரிக்கும் அடையாளமாக அது இருக்கும்.+ அப்போதுதான் அவர்கள் எனக்கு எதிராக முணுமுணுக்கவோ, அதனால் அழிந்துபோகவோ மாட்டார்கள்” என்றார். 11 யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே உடனடியாகச் செய்தார். அவர் அப்படியே செய்தார்.
12 பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயிடம், “ஐயோ! நாங்கள் செத்துவிடுவோம், நாங்கள் அழிந்துவிடுவோம், நாங்கள் எல்லாருமே அழிந்துவிடுவோம்! 13 யெகோவாவின் கூடாரத்துக்குப் பக்கத்தில் வந்தால்கூட செத்துவிடுவோம்!+ எங்களுக்கு இப்படித்தான் சாவு வர வேண்டுமா?”+ என்றார்கள்.