தெசலோனிக்கேயருக்கு முதலாம் கடிதம்
3 உங்களுடைய பிரிவால் ஏற்பட்ட வேதனையை எங்களால் தாங்க முடியாமல் போனபோது, நாங்கள் மட்டும் அத்தேனே நகரத்தில் இருப்பது நல்லது என்று நினைத்தோம்.+ 2 கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்கிற கடவுளுடைய ஊழியரான* நம் சகோதரர் தீமோத்தேயுவை+ உங்களிடம் அனுப்பி வைத்தோம்; உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தி உங்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகவும், 3 உங்களுக்கு வருகிற உபத்திரவங்களால் நீங்கள் யாரும் நிலைகுலைந்துவிடாதபடி பார்த்துக்கொள்வதற்காகவும் அவரை அனுப்பி வைத்தோம். இந்த உபத்திரவங்கள் நமக்கு நிச்சயம் வரும் என்பது உங்களுக்கே தெரியும்.+ 4 சொல்லப்போனால், நமக்குக் கண்டிப்பாக உபத்திரவம் வரும் என்று உங்களோடு இருந்தபோதே நாங்கள் பல தடவை சொன்னோம்; அதன்படியே உபத்திரவம் வந்துவிட்டது, இதுவும் உங்களுக்குத் தெரியும்.+ 5 அதனால்தான், உங்களுடைய பிரிவால் ஏற்பட்ட வேதனையை என்னால் தாங்க முடியாமல் போனபோது, உங்கள் உண்மைத்தன்மையைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக தீமோத்தேயுவை அனுப்பி வைத்தேன்.+ ஏனென்றால், ஏதோவொரு விதத்தில் சோதனைக்காரன்+ உங்களைச் சோதித்திருப்பானோ என்றும், எங்களுடைய உழைப்பு வீண்போயிருக்குமோ என்றும் பயந்தேன்.
6 இப்போதுதான் தீமோத்தேயு உங்களிடமிருந்து வந்து,+ நீங்கள் காட்டுகிற உண்மைத்தன்மையையும் அன்பையும் பற்றி நல்ல செய்தி சொன்னார். நீங்கள் எப்போதும் எங்களைப் பாசத்தோடு நினைத்துப் பார்ப்பதாகவும், நாங்கள் உங்களைப் பார்க்க ஏங்குவது போலவே நீங்களும் எங்களைப் பார்க்க ஏங்குவதாகவும் சொன்னார். 7 அதனால்தான் சகோதரர்களே, எங்களுக்கு எவ்வளவோ கஷ்டங்களும் உபத்திரவங்களும் வந்தபோதிலும், நீங்கள் உண்மையாக இருப்பதை நினைத்து ஆறுதல் அடைந்திருக்கிறோம்.+ 8 ஏனென்றால், நம் எஜமானுடைய ஊழியர்களாக நீங்கள் உறுதியோடு நிற்கும்போது எங்களுக்குப் புதுத்தெம்பு கிடைக்கிறது. 9 நம் கடவுளுக்குமுன் உங்களால் எங்களுக்குக் கிடைத்திருக்கிற அளவில்லாத சந்தோஷத்துக்காக அவருக்கு எப்படி நன்றி சொல்வோம்? 10 உங்களுடைய முகத்தைப் பார்ப்பதற்கும், உங்களுடைய விசுவாசத்தில் குறைவுபடுகிறவற்றை நிறைவாக்குவதற்கும் இரவு பகலாக மிகவும் ஊக்கத்தோடு அவரிடம் மன்றாடுகிறோம்.+
11 நாங்கள் உங்களிடம் நல்லபடியாக வந்துசேருவதற்கு நம் தகப்பனாகிய கடவுளும் நம் எஜமானாகிய இயேசுவும் எங்களுக்கு உதவி செய்வார்களாக. 12 அதோடு, நாங்கள் உங்கள்மீது வைத்திருக்கிற அன்பில் வளர்வதுபோல், நீங்களும் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கிற அன்பிலும் மற்ற எல்லார்மீதும் வைத்திருக்கிற அன்பிலும் அதிகமதிகமாக வளரும்படி நம் எஜமான் உதவி செய்வாராக.+ 13 இப்படி, நம் எஜமானாகிய இயேசு தன்னுடைய பரிசுத்தவான்கள் எல்லாரோடும்கூட பிரசன்னமாகும்போது,+ நம் கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவருடைய பார்வையில் நீங்கள் குற்றமற்றவர்களாகவும் பரிசுத்தமானவர்களாகவும் இருப்பதற்கு உங்கள் இதயங்களைப் பலப்படுத்துவாராக.+