லூக்கா எழுதியது
18 அதன் பின்பு, மனம் தளராமல் எப்போதும் ஜெபம் செய்வது எவ்வளவு முக்கியம்+ என்பதைக் காட்ட அவர் ஓர் உவமையை அவர்களுக்குச் சொன்னார்; 2 “ஒரு நகரத்தில் நீதிபதி ஒருவர் இருந்தார்; அவர் கடவுளுக்குப் பயப்படாதவர், மனுஷர்களையும் மதிக்காதவர். 3 அந்த நகரத்தில் ஒரு விதவையும் இருந்தாள். அவள் ஓயாமல் அவரிடம் போய், ‘எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற வழக்கில் எனக்கு நியாயம் வழங்குங்கள்’ என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். 4 அவரோ பல நாட்களாக அவளுக்கு உதவி செய்ய விரும்பவில்லை. அதன் பின்பு அவர், ‘நான் கடவுளுக்கும் பயப்படுவதில்லை, எந்த மனுஷரையும் மதிப்பதில்லை. 5 இருந்தாலும், இந்த விதவை ஓயாமல் என்னை நச்சரிப்பதால், எப்படியாவது இவளுக்கு நியாயம் வழங்கிவிட வேண்டும். அப்போதுதான் இவள் திரும்பத் திரும்ப வந்து என் உயிரை வாங்க மாட்டாள்’+ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்” என்றார். 6 பின்பு இயேசு, “அந்த நீதிபதி அநீதியுள்ளவராக இருந்தும் என்ன சொன்னாரென்று கவனித்தீர்களா? 7 அப்படியிருக்கும்போது, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவரை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும்போது, அவர் அவர்களிடம் பொறுமையோடு இருந்து,+ அவர்களுக்கு நியாயம் வழங்காமல் இருப்பாரா?+ 8 நான் உங்களுக்குச் சொல்கிறேன், சீக்கிரத்தில் அவர்களுக்கு நியாயம் வழங்குவார். இருந்தாலும், மனிதகுமாரன் வரும்போது பூமியில் உண்மையிலேயே இப்படிப்பட்ட விசுவாசத்தைப் பார்ப்பாரா?” என்று கேட்டார்.
9 தங்களை நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களைத் துளியும் மதிக்காத சிலருக்காக இந்த உவமையையும் அவர் சொன்னார்: 10 “ஜெபம் செய்வதற்காக இரண்டு பேர் ஆலயத்துக்குப் போனார்கள். ஒருவன் பரிசேயன், இன்னொருவன் வரி வசூலிப்பவன். 11 அந்தப் பரிசேயன் நின்றுகொண்டு, ‘கடவுளே, கொள்ளையடிப்பவர்களையும் அநீதியாக நடக்கிறவர்களையும் மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் போல நான் இல்லை, வரி வசூலிக்கிற இவனைப் போலவும் நான் இல்லை. இதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். 12 நான் வாரத்தில் இரண்டு தடவை விரதம் இருக்கிறேன், எனக்குக் கிடைக்கிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன்’+ என்று மனதுக்குள் ஜெபம் செய்தான். 13 தூரத்தில் நின்றுகொண்டிருந்த வரி வசூலிப்பவனோ, வானத்தைப் பார்ப்பதற்குக்கூட துணியாமல், தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, இந்தப் பாவிக்குக் கருணை காட்டுங்கள்’+ என்று ஜெபம் செய்தான். 14 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்தப் பரிசேயனைவிட இவனே அதிக நீதியுள்ளவனாகத் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான்.+ ஏனென்றால், தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்; தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”+
15 கைக்குழந்தைகளை அவர் தொடுவதற்காக மக்கள் அவர்களைக் கொண்டுவந்தார்கள். இதைப் பார்த்தபோது, சீஷர்கள் அவர்களைத் திட்ட ஆரம்பித்தார்கள்.+ 16 ஆனால், இயேசு அந்தக் குழந்தைகளைத் தன்னிடம் கொடுக்கச் சொன்னார். பின்பு, “சின்னப் பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள், இப்படிப்பட்டவர்களுக்கே கடவுளுடைய அரசாங்கம் சொந்தமாகும்.+ 17 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு சின்னப் பிள்ளையைப் போலிருந்து கடவுளுடைய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாத எவனும் அதில் அனுமதிக்கப்படவே மாட்டான்”+ என்று சொன்னார்.
18 அப்போது, யூதத் தலைவர்களில் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?”+ என்று கேட்டான். 19 அதற்கு இயேசு அவனிடம், “என்னை ஏன் நல்லவன் என்று சொல்கிறாய்? கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரும் நல்லவர் கிடையாது.+ 20 ‘மணத்துணைக்குத் துரோகம் செய்யாதே,+ கொலை செய்யாதே,+ திருடாதே,+ பொய் சாட்சி சொல்லாதே,+ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடு’+ என்ற கட்டளைகளெல்லாம் உனக்குத் தெரியுமே” என்று சொன்னார். 21 அதற்கு அவன், “இவை எல்லாவற்றையும் சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்” என்று சொன்னான். 22 இயேசு இதைக் கேட்டபோது, “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது: நீ போய் உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா. அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்”+ என்று சொன்னார். 23 அவன் பெரிய பணக்காரனாக இருந்ததால், இதைக் கேட்டு மிகவும் துக்கப்பட்டான்.+
24 பின்பு இயேசு அவனைப் பார்த்து, “பணக்காரர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போவது எவ்வளவு கஷ்டம்!+ 25 சொல்லப்போனால், கடவுளுடைய அரசாங்கத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவதைவிட ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம்”+ என்றார். 26 இதைக் கேட்டவர்கள், “அப்படியானால், யாரால் மீட்புப் பெற முடியும்?”+ என்று கேட்டார்கள். 27 அதற்கு அவர், “மனுஷர்களால் செய்ய முடியாத காரியங்களைக் கடவுளால் செய்ய முடியும்”+ என்று சொன்னார். 28 பேதுருவோ அவரிடம், “இதோ! எங்களுக்குச் சொந்தமானதையெல்லாம் விட்டுவிட்டு உங்களைப் பின்பற்றி வந்திருக்கிறோமே”+ என்று சொன்னார். 29 அதற்கு அவர், “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், கடவுளுடைய அரசாங்கத்துக்காக வீட்டையோ மனைவியையோ சகோதரர்களையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ தியாகம் செய்கிறவன்+ 30 இந்தக் காலத்தில் பல மடங்கு அதிகமாகப் பெறுவான். வரப்போகும் காலத்தில்* முடிவில்லாத வாழ்வையும் நிச்சயம் பெறுவான்”+ என்று சொன்னார்.
31 பின்பு, பன்னிரண்டு பேரையும்* தனியாகக் கூப்பிட்டு, “நாம் இப்போது எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்; மனிதகுமாரனைப் பற்றித் தீர்க்கதரிசிகள் மூலம் எழுதப்பட்ட எல்லா விஷயங்களும் நிறைவேறும்.+ 32 உதாரணமாக, மற்ற தேசத்தாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார்.+ அவர்கள் அவரைக் கேலி செய்து,+ அவமதித்து, அவர்மேல் துப்புவார்கள்.+ 33 அவரை முள்சாட்டையால் அடித்து, பின்பு கொலை செய்வார்கள்.+ ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார். 34 இருந்தாலும், இவற்றில் எதையுமே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் அவற்றைப் புரிந்துகொள்ளவில்லை.
35 இயேசு எரிகோவை நெருங்கியபோது, பார்வையில்லாத ஒருவன் பாதையோரமாக உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான்.+ 36 மக்கள் கூட்டமாகப் போகிற சத்தத்தைக் கேட்டு, என்ன நடக்கிறதென்று விசாரிக்க ஆரம்பித்தான். 37 அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசு போய்க்கொண்டிருக்கிறார்!” என்று சொன்னார்கள். 38 அப்போது அவன் சத்தமாக, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரக்கம் காட்டுங்கள்!” என்று சொன்னான். 39 முன்னால் போய்க்கொண்டிருந்தவர்கள் அவனைப் பேசாமல் இருக்கச் சொல்லி அதட்டினார்கள். ஆனாலும் அவன், “தாவீதின் மகனே, எனக்கு இரக்கம் காட்டுங்கள்!” என்று இன்னும் சத்தமாகக் கத்திக்கொண்டே இருந்தான். 40 அப்போது இயேசு நின்று, அவனைக் கூட்டிக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அவன் பக்கத்தில் வந்தவுடன், 41 “உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவன், “எஜமானே, தயவுசெய்து எனக்குப் பார்வை கொடுங்கள்” என்று சொன்னான். 42 அதற்கு இயேசு, “உனக்குப் பார்வை கிடைக்கட்டும்; உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது”+ என்று சொன்னார். 43 அந்த நொடியே அவன் பார்வை பெற்று, கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டே அவரைப் பின்பற்றிப் போனான்.+ அதைப் பார்த்து, மக்கள் எல்லாரும் கடவுளைப் புகழ்ந்தார்கள்.+