எசேக்கியேல்
37 நான் யெகோவாவின் சக்தியால் நிரப்பப்பட்டேன்.* யெகோவா தன்னுடைய சக்தியால் என்னைத் தூக்கிக்கொண்டு போய் சமவெளியின் நடுவில் விட்டார்.+ அந்தச் சமவெளி முழுவதும் எலும்புகளாகக் கிடந்தன. 2 அவர் என்னை அந்த எலும்புகளைச் சுற்றி நடக்க வைத்தார். மிகவும் காய்ந்துபோன எலும்புகள்+ அங்கே ஏராளமாகக் கிடப்பதைப் பார்த்தேன். 3 அப்போது அவர் என்னிடம், “மனிதகுமாரனே, இந்த எலும்புகளுக்கு உயிர் வருமா?” என்று கேட்டார். அதற்கு நான், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, அது உங்களுக்குத்தானே தெரியும்”+ என்று சொன்னேன். 4 அப்போது அவர், “இந்த எலும்புகளைப் பற்றித் தீர்க்கதரிசனம் சொல். அவற்றைப் பார்த்து இப்படிச் சொல்: ‘காய்ந்துபோன எலும்புகளே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்:
5 எலும்புகளிடம் உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “உங்களுக்குள் மூச்சுக்காற்று வரும்படி நான் செய்வேன். அப்போது, நீங்கள் உயிர் அடைவீர்கள்.+ 6 தசைநாண்களாலும் சதைகளாலும் உங்களை மூடுவேன். உங்களைத் தோலால் போர்த்தி, உங்களுக்குள் மூச்சுக்காற்றை வர வைப்பேன். நீங்கள் உயிர் அடைவீர்கள். அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்”’” என்றார்.
7 அவர் கட்டளை கொடுத்தபடியே நான் தீர்க்கதரிசனம் சொன்னேன். உடனே, எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. அவை ஒன்றோடு ஒன்று இணைந்தன. 8 பின்பு, தசைநாண்களும் சதைகளும் அவற்றை மூடின. தோல் அவற்றைப் போர்த்தியது. ஆனாலும், அவை மூச்சுக்காற்று இல்லாமல் கிடந்தன.
9 அப்போது அவர் என்னிடம், “மனிதகுமாரனே, நீ காற்றைப் பார்த்துத் தீர்க்கதரிசனம் சொல். அதைப் பார்த்து இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “காற்றே, கொல்லப்பட்ட இந்த ஜனங்கள் உயிர் பெறுவதற்காக நீ நான்கு திசைகளிலிருந்தும் அவர்கள்மேல் வீசு”’” என்றார்.
10 அவர் கட்டளை கொடுத்தபடியே நான் தீர்க்கதரிசனம் சொன்னேன். அப்போது, அவர்களுக்குள் மூச்சுக்காற்று வந்தது. அவர்கள் உயிர் பெற்று, ஒரு மாபெரும் படை போல எழுந்து நின்றார்கள்.+
11 அப்போது அவர், “மனிதகுமாரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் குறிக்கின்றன.+ அவர்கள், ‘எங்களுடைய எலும்புகள் காய்ந்துவிட்டன, எங்களுக்கு நம்பிக்கையே போய்விட்டது,+ நாங்கள் ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளப்பட்டோம்’ என்று சொல்கிறார்கள். 12 அதனால் நீ அவர்களிடம் இப்படித் தீர்க்கதரிசனம் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் உங்களுடைய கல்லறைகளைத் திறந்து,+ அங்கிருந்து உங்களை எழுப்புவேன். என் ஜனங்களே, உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ 13 என் ஜனங்களே, நான் உங்களுடைய கல்லறைகளைத் திறந்து, அங்கிருந்து உங்களை எழுப்பும்போது நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்.”’+ 14 யெகோவா சொல்வது இதுதான்: ‘என்னுடைய சக்தியை உங்களுக்குக் கொடுப்பேன். நீங்கள் உயிர் பெறுவீர்கள்.+ உங்கள் தேசத்திலேயே உங்களைக் குடிவைப்பேன். அப்போது, யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன், நானே இதைச் செய்தேன் என்று தெரிந்துகொள்வீர்கள்’” என்றார்.
15 யெகோவா மறுபடியும் என்னிடம், 16 “மனிதகுமாரனே, நீ ஒரு கோலை எடுத்து அதில், ‘யூதாவுக்கும் அவனோடு இருக்கிற* இஸ்ரவேல் ஜனங்களுக்கும்’+ என்று எழுது. பின்பு இன்னொரு கோலை எடுத்து அதில், ‘எப்பிராயீமைக் குறிக்கும் யோசேப்பின் கோலுக்கும், அவனோடு இருக்கிற* இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும்’+ என்று எழுது. 17 அதன்பின், இரண்டு கோலும் ஒரே கோலாக ஆகும்படி அவற்றைச் சேர்த்துப் பிடி.+ 18 ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சொல்ல மாட்டீர்களா?’ என்று உன்னுடைய ஜனங்கள் கேட்டால், 19 நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் எப்பிராயீமின் கையில் இருக்கிற கோலை, அதாவது யோசேப்பையும் அவரோடு இருக்கிற இஸ்ரவேல் கோத்திரங்களையும் குறிக்கிற கோலை எடுத்து யூதாவின் கோலோடு இணைப்பேன். அவற்றை ஒரே கோலாக்குவேன்.+ அவை என் கையில் ஒரே கோலாக இருக்கும்”’ என்று சொல். 20 நீ எழுதிய கோல்களை அவர்கள் பார்க்கும்படி உன் கையில் வைத்திரு.
21 பின்பு அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேலர்களை அவர்கள் சிதறிப்போன தேசங்களிலிருந்து கூட்டிக்கொண்டு வருவேன். நாலாபக்கத்திலிருந்தும் அவர்களைக் கூட்டிச்சேர்த்து அவர்களுடைய தேசத்துக்குக் கொண்டுவருவேன்.+ 22 இஸ்ரவேலின் மலைகளில் அவர்களை ஒரே தேசமாக்குவேன்.+ ஒரே ராஜா அவர்களை ஆட்சி செய்வார்.+ அவர்கள் இனி இரண்டு தேசங்களாக இருக்க மாட்டார்கள். இரண்டு ராஜ்யங்களாகப் பிரிந்திருக்க மாட்டார்கள்.+ 23 இனியும் அருவருப்பான* சிலைகளை வணங்கியோ, அருவருப்பான காரியங்களைச் செய்தோ, குற்றங்கள் செய்தோ தங்களைத் தீட்டுப்படுத்த மாட்டார்கள்.+ அவர்கள் எனக்கு உண்மையாக இல்லாமல் எத்தனையோ பாவங்கள் செய்திருந்தாலும் அதிலிருந்தெல்லாம் அவர்களை விடுவித்து சுத்தப்படுத்துவேன். அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.+
24 என் ஊழியனாகிய தாவீது அவர்களுடைய ராஜாவாக இருப்பான்.+ அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பன்தான் இருப்பான்.+ அவர்கள் என்னுடைய நீதித்தீர்ப்புகளின்படி நடப்பார்கள், என்னுடைய சட்டதிட்டங்களைக் கவனமாகக் கடைப்பிடிப்பார்கள்.+ 25 என் ஊழியனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தேசத்திலே, உங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த அந்தத் தேசத்திலே,+ அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் என்றென்றும் வாழ்வார்கள்.+ என் ஊழியனாகிய தாவீது என்றென்றும் அவர்களுடைய தலைவனாக இருப்பான்.+
26 நான் அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்வேன்.+ அது என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைநாட்டி, ஏராளமாகப் பெருக வைப்பேன்.+ என்னுடைய ஆலயத்தை அவர்களுக்கு நடுவில் என்றென்றும் நிறுத்துவேன். 27 நான் அவர்களோடு தங்குவேன்.* நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்.+ 28 என்னுடைய ஆலயம் இஸ்ரவேலர்களின் நடுவில் என்றென்றும் இருக்கும்போது, யெகோவாவாகிய நான் அவர்களைப் புனிதப்படுத்துகிறேன் என்பதை எல்லா ஜனங்களும் தெரிந்துகொள்வார்கள்”’+ என்று சொல்” என்றார்.