எஸ்றா
3 அவரவர் நகரங்களில் குடியேறியிருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும், ஏழாம் மாதம்+ வந்தபோது ஒருமனதாக எருசலேமில் கூடினார்கள். 2 யோசதாக்கின் மகன் யெசுவாவும்,+ அவருடன் குருமார்களாக இருந்தவர்களும், சலாத்தியேலின்+ மகன் செருபாபேலும்,+ அவருடைய சகோதரர்களும் இஸ்ரவேலின் கடவுளுக்குப் பலிபீடம் கட்டினார்கள். உண்மைக் கடவுளின் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள தகன பலிகளைச் செலுத்துவதற்காக அதைக் கட்டினார்கள்.+
3 சுற்றியிருந்த மற்ற தேசத்தாரை நினைத்து அவர்கள் பயந்தாலும்,+ பலிபீடத்தை முன்பிருந்த இடத்திலேயே அமைத்து, காலையிலும் மாலையிலும் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய தகன பலிகளைச்+ செலுத்த ஆரம்பித்தார்கள். 4 பின்பு, திருச்சட்டத்தில் எழுதியிருந்தபடியே கூடாரப் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.+ தினசரி கணக்கின்படி+ ஒவ்வொரு நாளும் தகன பலிகளைச் செலுத்தினார்கள். 5 அதன்பின், தினமும் செலுத்துகிற* தகன பலியையும்,+ மாதப்பிறப்புக்கான* பலிகளையும்,+ யெகோவாவின் புனித பண்டிகைகளுக்கான+ பலிகளையும், யெகோவாவுக்காக ஜனங்கள் விருப்பப்பட்டுக் கொண்டுவந்த காணிக்கைகளையும்+ செலுத்தினார்கள். 6 இப்படி, ஏழாம் மாதம், முதல் நாளிலிருந்தே+ யெகோவாவுக்குத் தகன பலிகளைச் செலுத்த ஆரம்பித்தார்கள். ஆனால், யெகோவாவின் ஆலயத்துக்கு அதுவரை அஸ்திவாரம் போடப்படவில்லை.
7 கற்களை வெட்டிச் செதுக்குகிறவர்களுக்கும்+ கைத்தொழிலாளிகளுக்கும்+ அவர்கள் பணம் கொடுத்தார்கள். அதோடு, சீதோனையும் தீருவையும் சேர்ந்த ஜனங்களுக்கு உணவையும் பானத்தையும் எண்ணெயையும் கொடுத்தார்கள். ஏனென்றால், அந்த ஜனங்கள் பெர்சிய ராஜா கோரேசின் உத்தரவுப்படி+ தேவதாரு மரங்களை லீபனோனிலிருந்து யோப்பாவுக்குக் கடல் வழியாகக் கொண்டுவந்திருந்தார்கள்.+
8 சலாத்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும், அவர்களுடைய மற்ற சகோதரர்களான குருமார்களும், லேவியர்களும், மற்றவர்களும் எருசலேமுக்குத் திரும்பி வந்த பின்பு,+ இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்தில் உண்மைக் கடவுளான யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும் வேலையை ஆரம்பித்தார்கள். அதை மேற்பார்வை செய்ய 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள லேவியர்களை அவர்கள் நியமித்தார்கள். 9 அதனால், யூதா என்பவரின் வம்சத்தைச் சேர்ந்த யெசுவாவும் அவருடைய மகன்களும் சகோதரர்களும், கத்மியேலும் அவருடைய மகன்களும் உண்மைக் கடவுளின் ஆலய வேலையை மேற்பார்வை செய்தார்கள். அவர்களோடு சேர்ந்து லேவியர்களான எனாதாத்தின் வம்சத்தாரும்+ அவர்களுடைய மகன்களும் சகோதரர்களும் அந்த வேலையை மேற்பார்வை செய்தார்கள்.
10 யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டபோது,+ குருமார்கள் தங்களுக்குரிய உடையில் எக்காளங்களோடும்,+ லேவியர்களான ஆசாபின் வம்சத்தார் ஜால்ராக்களோடும் எழுந்து நின்று யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள்; இஸ்ரவேல் ராஜா தாவீது கட்டளை கொடுத்திருந்தபடியே+ அப்படிச் செய்தார்கள். 11 அவர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லி, “அவர் நல்லவர், இஸ்ரவேலர்களிடம் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று மாறிமாறி அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.+ யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டதால் ஜனங்களும் மிக சத்தமாக யெகோவாவைப் புகழ்ந்தார்கள். 12 முன்பிருந்த ஆலயத்தைக்+ கண்ணால் பார்த்திருந்த பெரியோர்களான குருமார்கள், லேவியர்கள், தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் பலர் இந்த ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டதைப் பார்த்தபோது சத்தமாக அழுதார்கள்; மற்றவர்கள் சந்தோஷமாகக் கோஷம் போட்டார்கள்.+ 13 ரொம்பத் தூரம் கேட்கும் அளவுக்கு ஜனங்கள் சத்தமிட்டதால், ஆனந்தக் குரலுக்கும் அழுகைக் குரலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை.