உபாகமம்
25 பின்பு அவர், “இரண்டு பேருக்கு இடையில் ஏதாவது வழக்கு இருந்தால், அவர்கள் நியாயாதிபதிகளிடம் வந்து முறையிடலாம்.+ அந்த நியாயாதிபதிகள் குற்றம் செய்யாதவனை* நிரபராதி என்றும், குற்றம் செய்தவனைக் குற்றவாளி என்றும் தீர்ப்பு கொடுப்பார்கள்.+ 2 குற்றவாளியை அடிக்க வேண்டுமென்று+ நியாயாதிபதி தீர்ப்பு கொடுத்தால், அவருக்கு முன்னால் அவன் படுக்க வைக்கப்பட்டு அடிக்கப்படுவான். எத்தனை அடி கொடுக்கப்பட வேண்டும் என்பது அவன் செய்த குற்றத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். 3 அவனுக்கு 40 அடிவரை கொடுக்கலாம்,+ அதற்குமேல் அடிக்கக் கூடாது. அப்படி அடித்தால் உங்கள் சகோதரனை உங்கள் கண் முன்னால் கேவலப்படுத்துவதாக இருக்கும்.
4 போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக் கூடாது.+
5 கூடப்பிறந்த சகோதரர்கள் ஒரே இடத்தில் வாழும்போது அவர்களில் ஒருவன் ஆண் வாரிசு இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவி அந்தக் குடும்பத்துக்கு வெளியே கல்யாணம் செய்யக் கூடாது. அவளுடைய கணவனின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டு, கொழுந்தனுடைய* கடமையைச் செய்ய வேண்டும்.+ 6 அவளுக்குப் பிறக்கிற மூத்த மகன், இறந்துபோன அவளுடைய கணவனின் மகனைப் போலக் கருதப்படுவான்.*+ அதனால், அவளுடைய கணவனின் பெயர் இஸ்ரவேலிலிருந்து மறைந்துபோகாது.+
7 ஆனால், விதவையாகிவிட்ட தன் சகோதரனுடைய மனைவியைக் கல்யாணம் செய்ய அவனுக்கு இஷ்டம் இல்லையென்றால், நகரவாசலில் இருக்கிற பெரியோர்களிடம்* அவள் போய், ‘என் கொழுந்தனார் என் கணவனுடைய பெயரை இஸ்ரவேலில் கட்டிக்காக்க முடியாது என்றும், கொழுந்தனுடைய* கடமையைச் செய்ய முடியாது என்றும் சொல்கிறார்’ என்று முறையிட வேண்டும். 8 அப்போது, நகரத்துப் பெரியோர்கள் அவனைக் கூப்பிட்டுப் பேச வேண்டும். ‘அவளைக் கல்யாணம் செய்ய எனக்கு இஷ்டமில்லை’ என்று அவன் பிடிவாதமாகச் சொல்லிவிட்டால், 9 அவள் அந்தப் பெரியோர்களின் முன்னிலையில் அவனுடைய செருப்பைக் கழற்றிப்போட்டு,+ அவனுடைய முகத்தில் துப்ப வேண்டும். ‘தன் சகோதரனுடைய வம்சத்தைக் கட்டிக்காக்க முடியாது என்று சொல்கிறவனுக்கு இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று சொல்ல வேண்டும். 10 அதன்பின், இஸ்ரவேலில் அவனுடைய குடும்பம், ‘செருப்பு கழற்றப்பட்டவன் குடும்பம்’ என அழைக்கப்படும்.
11 இரண்டு ஆண்கள் சண்டை போடும்போது, அவர்களில் ஒருவனுடைய மனைவி தன் கணவனைக் காப்பாற்றுவதற்காக, அவனை அடிக்கிறவனின் பிறப்புறுப்பைக் கை நீட்டிப் பிடித்தால், 12 அவளுடைய கையை வெட்ட வேண்டும். அவள்மேல் பரிதாபப்படக் கூடாது.
13 உங்களுடைய பையில், சிறியதும் பெரியதுமான* இரண்டு வித எடைக்கற்களை வைத்துக்கொள்ளக் கூடாது.+ 14 உங்களுடைய வீட்டில், சிறியதும் பெரியதுமான இரண்டு வித படிகளை வைத்துக்கொள்ளக் கூடாது.+ 15 சரியான எடைக்கற்களையும் படிகளையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். போலியானவற்றை வைத்திருக்கக் கூடாது. அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்.+ 16 வியாபாரத்தில் அநியாயம் செய்கிற எவனும் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவன்.+
17 எகிப்திலிருந்து வரும் வழியில் அமலேக்கியர்கள் உங்களுக்குச் செய்ததை நினைத்துப் பாருங்கள்.+ 18 நீங்கள் அலுத்துக் களைத்துப் போயிருந்தபோது வழியிலே அவர்கள் உங்களை எதிர்த்து, உங்கள் பின்னால் வந்துகொண்டிருந்த எல்லாரையும் தாக்கினார்கள். கடவுளுக்கு அவர்கள் பயப்படவில்லை. 19 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்கு நீங்கள் போன பின்பு, சுற்றியுள்ள எல்லா எதிரிகளையும் உங்கள் கடவுளாகிய யெகோவா வீழ்த்தி உங்களுக்கு நிம்மதி தரும்போது,+ அமலேக்கியர்களை இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழித்துவிட வேண்டும்.+ இதை மறந்துவிடாதீர்கள்” என்றார்.