2 ராஜாக்கள்
24 யோயாக்கீமின் ஆட்சிக் காலத்தில் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார்+ படையெடுத்து வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷங்கள் அவனுக்குச் சேவை செய்தார், பிற்பாடு அவனுக்கு எதிராகக் கலகம் செய்தார். 2 அதன் பின்பு கல்தேயர்கள்,+ சீரியர்கள், மோவாபியர்கள், அம்மோனியர்கள் ஆகியோரின் கொள்ளைக்கூட்டங்கள் அடுத்தடுத்து அவருடைய தேசத்தைச் சூறையாட யெகோவா விட்டுவிட்டார். யெகோவா தன்னுடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகள் மூலம் சொன்னபடியே,+ யூதாவை அழிக்க அவர்களை அனுப்பிக்கொண்டே இருந்தார். 3 இதெல்லாம் யெகோவாவின் கட்டளைப்படிதான் நடந்தது; யூதா மக்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்து நீக்குவதற்காகத்தான் இப்படிச் செய்தார்.+ ஏனென்றால் மனாசே நிறைய பாவங்கள் செய்திருந்தார்;+ 4 அப்பாவி மக்களைக் கொன்று குவித்திருந்தார்;+ அப்பாவிகளின் இரத்தத்தால் எருசலேமை நிரப்பியிருந்தார். யெகோவா இதையெல்லாம் மன்னிக்கத் தயாராக இல்லை.+
5 யோயாக்கீமின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+ 6 யோயாக்கீம் இறந்த* பின்பு அடக்கம் செய்யப்பட்டார்;+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் யோயாக்கீன் ராஜாவானார்.
7 எகிப்தின் ராஜா அதன் பின்பு தன்னுடைய தேசத்திலிருந்து படைகளை அனுப்பவே இல்லை. ஏனென்றால், எகிப்தின் பள்ளத்தாக்குமுதல்*+ யூப்ரடிஸ்* ஆறுவரை+ எகிப்து ராஜாவுக்குச் சொந்தமான எல்லா பகுதிகளையும் பாபிலோன் ராஜா பிடித்துவிட்டான்.+
8 யோயாக்கீன்+ ராஜாவானபோது அவருக்கு 18 வயது. அவர் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் நெகுஸ்தாள்; அவள் எருசலேமைச் சேர்ந்த எல்நாத்தானின் மகள். 9 யோயாக்கீன் தன்னுடைய அப்பாவைப் போலவே யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார். 10 அப்போது பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் வீரர்கள் எருசலேம்மீது படையெடுத்து வந்து நகரத்தை முற்றுகையிட்டார்கள்.+ 11 அவனுடைய வீரர்கள் முற்றுகையிட்ட சமயத்தில், பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரும் அந்த நகரத்துக்கு வந்தான்.
12 யூதாவின் ராஜாவான யோயாக்கீன் தன்னுடைய அம்மாவையும் ஊழியர்களையும் உயர் அதிகாரிகளையும்* அரண்மனை அதிகாரிகளையும்+ கூட்டிக்கொண்டு பாபிலோன் ராஜாவிடம் போனார்.+ பாபிலோன் ராஜா தான் ஆட்சி செய்த எட்டாம் வருஷத்தில் அவரைக் கைதியாகப் பிடித்துக்கொண்டு போனான்.+ 13 பின்பு, யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலும் இருந்த எல்லா பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டான்.+ யெகோவாவின் ஆலயத்தில் இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் செய்து வைத்திருந்த தங்கச் சாமான்கள்+ எல்லாவற்றையும் நொறுக்கிப்போட்டான். யெகோவா சொன்னபடியே இது நடந்தது. 14 எருசலேமில் இருந்த உயர் அதிகாரிகள்,+ மாவீரர்கள், கைத்தொழிலாளிகள், கொல்லர்கள்*+ என எல்லாரையும் சிறைபிடித்துக்கொண்டு போனான்; மொத்தம் 10,000 பேரைக் கொண்டுபோனான். பரம ஏழைகளைத் தவிர வேறு யாரையுமே நகரத்தில் விட்டுவைக்கவில்லை.+ 15 இப்படி, யோயாக்கீனையும்+ அவருடைய அம்மாவையும் மனைவிகளையும் அரண்மனை அதிகாரிகளையும் பிரபலமான ஆண்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ 16 அதோடு, 7,000 போர்வீரர்களையும், 1,000 கைத்தொழிலாளிகளையும் கொல்லர்களையும்* சிறைபிடித்துக்கொண்டு போனான்; போர்ப் பயிற்சி பெற்ற அந்த மாவீரர்கள் எல்லாரையும் சிறைபிடித்துக்கொண்டு போனான். 17 யோயாக்கீனுக்குப் பதிலாக அவருடைய சித்தப்பா மத்தனியாவை+ ராஜாவாக்கி, அவருடைய பெயரை சிதேக்கியா+ என்று மாற்றினான்.
18 சிதேக்கியா ராஜாவானபோது அவருக்கு 21 வயது; அவர் எருசலேமில் 11 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அமுத்தாள்;+ அவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் மகள். 19 யோயாக்கீமைப் போலவே இவரும் யெகோவா வெறுக்கிற காரியங்களையே செய்துவந்தார்.+ 20 எருசலேமிலும் யூதாவிலும் இப்படிப்பட்ட காரியங்கள் நடந்து வந்ததால் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. கடைசியில், அவர்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்தே ஒதுக்கித்தள்ளிவிட்டார்.+ பாபிலோன் ராஜாவுக்கு எதிராக சிதேக்கியா கலகம் செய்தார்.+