ரோமருக்குக் கடிதம்
4 அப்படியிருக்கும்போது, நம்முடைய மூதாதையான ஆபிரகாமுக்குக் கிடைத்த நன்மையைப் பற்றி என்ன சொல்வோம்? 2 உதாரணத்துக்கு, ஆபிரகாம் தன்னுடைய செயல்களால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், பெருமை பேச அவருக்குக் காரணம் இருந்திருக்கும். ஆனால், கடவுளுக்கு முன்பாகப் பெருமை பேச காரணம் இருந்திருக்காது. 3 வேதவசனம் என்ன சொல்கிறது? “யெகோவாமேல்* ஆபிரகாம் விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்”+ என்று சொல்கிறது. 4 வேலை செய்கிறவனுக்குக் கொடுக்கப்படுகிற சம்பளம் ஓர் அன்பளிப்பாக* கருதப்படுவதில்லை, அவனுடைய உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய கூலியாகவே கருதப்படுகிறது. 5 மறுபட்சத்தில், ஒருவன் தன்னுடைய செயல்கள்மேல் நம்பிக்கை வைக்காமல் பாவிகளை நீதிமான்களாக ஏற்றுக்கொள்கிற கடவுள்மேல் விசுவாசம் வைக்கும்போது, அவன் நீதிமானாகக் கருதப்படுகிறான்.+ 6 செயல்கள் இல்லாமல் கடவுளால் நீதிமானாகக் கருதப்படுகிற மனிதனுக்குக் கிடைக்கும் சந்தோஷத்தைப் பற்றி தாவீதும் சொல்கிறார்: 7 “யாருடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ* அவர்கள் சந்தோஷமானவர்கள். 8 எந்த மனிதருடைய பாவத்தை யெகோவா* ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டாரோ அவர் சந்தோஷமானவர்.”+
9 அப்படியானால், இந்தச் சந்தோஷம் விருத்தசேதனம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறதா அல்லது விருத்தசேதனம் செய்யாதவர்களுக்கும் கிடைக்கிறதா?+ “விசுவாசத்தால் ஆபிரகாம் நீதிமானாகக் கருதப்பட்டார்”+ என்று நாம் சொல்கிறோம். 10 அவர் எப்போது நீதிமானாகக் கருதப்பட்டார்? விருத்தசேதனம் செய்திருந்தபோதா விருத்தசேதனம் செய்யாமலிருந்தபோதா? விருத்தசேதனம் செய்திருந்தபோது அல்ல, விருத்தசேதனம் செய்யாமலிருந்தபோதுதான் நீதிமானாகக் கருதப்பட்டார். 11 அவர் விருத்தசேதனம் செய்யாமலிருந்தபோது காட்டிய விசுவாசத்தால் ஓர் அடையாளத்தைப் பெற்றார், அதாவது விருத்தசேதனத்தை நீதியின் முத்திரையாக* பெற்றார்.+ இப்படி, விருத்தசேதனம் செய்யாமலிருந்தும் கடவுள்மேல் விசுவாசம் வைப்பதால் நீதிமான்களாகக் கருதப்படுகிற எல்லாருக்கும் அவர் தகப்பன் ஆனார்.+ 12 நம் தகப்பனாகிய ஆபிரகாம்,+ விருத்தசேதனத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்கு மட்டுமல்ல, விருத்தசேதனம் செய்யாமலிருந்தபோது தான் காட்டிய விசுவாசத்தின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி நடக்கிறவர்களுக்கும் தகப்பன் ஆனார்.
13 உலகத்தைச் சொந்தமாக்கிக்கொள்வது பற்றிய வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய சந்ததியாருக்கோ திருச்சட்டத்தால் கிடைக்கவில்லை.+ விசுவாசத்தால் கடவுளுக்குமுன் அவர் நீதிமானாக இருந்ததால்தான் கிடைத்தது.+ 14 திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் மட்டுமே அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள் என்றால், விசுவாசம் வீணானதாக இருக்கும், அந்த வாக்குறுதியும் அழிந்துபோயிருக்கும். 15 உண்மையில், திருச்சட்டம் கடவுளுடைய கடும் கோபத்தைத்தான் கொண்டுவருகிறது.+ அந்தச் சட்டம் இல்லாத காலத்தில் எந்தச் சட்டமீறுதலும் இருக்கவில்லை.+
16 அதனால்தான், அந்த வாக்குறுதி விசுவாசத்தால் கிடைக்கிறது. அதோடு, கடவுளுடைய அளவற்ற கருணையின் அடிப்படையில் கிடைக்கிறது.+ இப்படி, ஆபிரகாமின் வம்சத்தார் எல்லாருக்கும், அதாவது திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்கு மட்டுமல்ல ஆபிரகாமைப் போல் விசுவாசம் வைத்திருக்கிற எல்லாருக்கும்,+ அந்த வாக்குறுதி நிச்சயமானது.+ 17 (“நான் உன்னை நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக நியமித்திருக்கிறேன்” என்று எழுதப்பட்டிருக்கிறபடியே, ஆபிரகாம் நம் எல்லாருக்கும் தகப்பன் ஆனார்.)+ இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறவரும் நடக்கப்போகிறவற்றை நடந்ததுபோல்* சொல்கிறவருமான கடவுள்மேல் ஆபிரகாம் விசுவாசம் வைத்து, அவரிடமிருந்து அந்த வாக்குறுதியைப் பெற்றார். 18 “இப்படித்தான் உன் சந்ததி எண்ணற்றதாக ஆகும்”+ என்று சொல்லப்பட்டது நடக்குமென்று விசுவாசம் வைத்தார். நிறைய தேசங்களுக்கு அவர் தகப்பன் ஆவார் என்பது நம்ப முடியாததாக இருந்தாலும் அதில் நம்பிக்கை வைத்தார். 19 அவருக்குக் கிட்டத்தட்ட 100 வயதாகிவிட்டதால் அவருடைய உடல் தளர்ந்து செத்ததுபோல் இருந்ததையும்,+ சாராளின் கருப்பை செத்த நிலையில்* இருந்ததையும் அவர் அறிந்திருந்தார்.+ ஆனாலும், விசுவாசத்தில் தளரவில்லை. 20 கடவுளுடைய வாக்குறுதியில் ஆபிரகாமுக்கு விசுவாசம் இருந்ததால் அவர் சந்தேகப்படவில்லை, மாறாக விசுவாசத்தில் பலமுள்ளவராகி கடவுளை மகிமைப்படுத்தினார். 21 அதோடு, கடவுளால் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என்பதை முழுமையாக நம்பினார்.+ 22 அதனால், “அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்.”+
23 ஆனாலும், “அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்” என்ற வார்த்தைகள் அவருக்காக மட்டும் எழுதப்படவில்லை,+ 24 நமக்காகவும் எழுதப்பட்டன. நம் எஜமானாகிய இயேசுவை உயிரோடு எழுப்பிய கடவுள்மேல் நாம் விசுவாசம் வைப்பதால்,+ நாமும் நீதிமான்களாகக் கருதப்படுவோம். 25 நம்முடைய எஜமான் நாம் செய்த குற்றங்களுக்காகச் சாகும்படி அனுப்பப்பட்டார்.+ நாம் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக உயிரோடு எழுப்பப்பட்டார்.+