லேவியராகமம்
22 பின்பு யெகோவா மோசேயிடம் இப்படிச் சொன்னார்: 2 “இஸ்ரவேலர்கள் செலுத்துகிற பரிசுத்த பொருள்களை ஆரோனும் அவனுடைய மகன்களும் கவனமாகக் கையாள வேண்டுமென்று நீ அவர்களிடம் சொல்.+ எனக்கு அர்ப்பணிக்கப்படுகிற பொருள்களைத் தீட்டுப்படுத்தி என் பரிசுத்த பெயரை அவர்கள் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் யெகோவா. 3 நீ அவர்களிடம், ‘உங்களுடைய வம்சத்தைச் சேர்ந்த யாராவது தீட்டுப்பட்டிருந்தால், யெகோவாவுக்காக இஸ்ரவேலர்கள் அர்ப்பணிக்கிற பரிசுத்த பொருள்களுக்குப் பக்கத்தில் போகக் கூடாது. அப்படிப் போனால் அவன் கொல்லப்படுவான். தலைமுறை தலைமுறைக்கும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளை இது.+ நான் யெகோவா. 4 ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த ஒருவனுக்குத் தொழுநோய்+ இருந்தால் அல்லது பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய்+ இருந்தால் அந்தத் தீட்டு நீங்கும்வரை+ பரிசுத்த பொருள்களைச் சாப்பிடக் கூடாது. அதேபோல், பிணத்தைத் தொட்ட ஒருவனைத் தொட்டுத் தீட்டுப்பட்டவனும்,+ விந்து வெளிப்பட்ட ஒருவனும்,+ 5 அசுத்தமான சிறு பிராணியைத் தொட்டவனும்,+ ஏதோவொரு காரணத்தால் தீட்டாகிவிட்ட ஒருவனைத் தொட்டவனும்+ பரிசுத்த பொருள்களைச் சாப்பிடக் கூடாது. 6 இப்படிப்பட்ட ஒருவனையோ ஒன்றையோ தொட்டவன் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான். பரிசுத்த பொருள்களில் எதையும் அவன் சாப்பிடக் கூடாது. அவன் குளிக்க வேண்டும்.+ 7 சூரியன் மறைந்த பின்பு அவனுடைய தீட்டு நீங்கிவிடும். அதன்பின், அவன் பரிசுத்த பொருள்களைச் சாப்பிடலாம். ஏனென்றால், அது அவனுக்குச் சேர வேண்டிய உணவு.+ 8 தானாகச் செத்துப்போன மிருகத்தையோ காட்டு மிருகங்களால் கொல்லப்பட்ட மிருகத்தையோ சாப்பிட்டு அவன் தீட்டுப்படக் கூடாது.+ நான் யெகோவா.
9 அவர்கள் பரிசுத்த பொருள்களைக் களங்கப்படுத்தி பாவம் செய்தால் செத்துப்போவார்கள். அப்படி நடக்காதபடி அவர்கள் என் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நான் அவர்களைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா.
10 தகுதி இல்லாத ஒருவன்* பரிசுத்தமான எதையும் சாப்பிடக் கூடாது.+ குருவானவரின் வேறு தேசத்து விருந்தாளியோ கூலியாளோ பரிசுத்த பொருள்களில் எதையும் சாப்பிடக் கூடாது. 11 ஆனால், குருவானவர் ஒருவனை விலைகொடுத்து வாங்கியிருந்தால், அவன் அவற்றைச் சாப்பிடலாம். அதேபோல், அவருடைய வீட்டில் பிறந்த அடிமைகளும் அவருடைய உணவைச் சாப்பிடலாம்.+ 12 குருவானவரின் மகள் குருவாக இல்லாத ஒருவனைக் கல்யாணம் செய்தால், காணிக்கையாக வந்த பரிசுத்த பொருள்களைச் சாப்பிடக் கூடாது. 13 ஆனால், குருவானவரின் மகள் குழந்தையில்லாமல் விதவையாகவோ விவாகரத்து செய்யப்பட்டவளாகவோ தன்னுடைய பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்திருந்தால், தன் அப்பாவுக்குக் கிடைக்கும் உணவை அவளும் சாப்பிடலாம்.+ தகுதி இல்லாதவர்கள்* அதைச் சாப்பிடக் கூடாது.
14 பரிசுத்த பொருளை ஒருவன் தெரியாத்தனமாகச் சாப்பிட்டுவிட்டால், அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தைச் சேர்த்து அதைக் குருவானவருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.+ 15 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிற பரிசுத்த பொருள்களைக் குருமார்கள் களங்கப்படுத்தக் கூடாது.+ 16 அந்தப் பரிசுத்த பொருள்களைச் சாப்பிடும் குற்றத்துக்காக அவர்கள்மேல் தண்டனை வரும்படி செய்யவும் கூடாது. ஏனென்றால், நான் அவர்களைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா’ என்றார்.”
17 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 18 “ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் எல்லா இஸ்ரவேலர்களிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘இஸ்ரவேலைச் சேர்ந்த ஒருவனோ இஸ்ரவேலில் குடியிருக்கிற வேறு தேசத்தைச் சேர்ந்த ஒருவனோ தான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்ற அல்லது தானாகவே விருப்பப்பட்டு காணிக்கை செலுத்த+ யெகோவாவுக்குத் தகன பலியைக்+ கொண்டுவந்தால், 19 குறையில்லாத காளையையோ+ செம்மறியாட்டுக் கடாக் குட்டியையோ வெள்ளாட்டுக் கடாவையோ கொண்டுவர வேண்டும். அப்போதுதான், கடவுள் அதை ஏற்றுக்கொள்வார். 20 குறையுள்ள எதையும் நீங்கள் செலுத்தக் கூடாது.+ ஏனென்றால், கடவுள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
21 யெகோவாவுக்கு நேர்ந்துகொண்டதை நிறைவேற்றவோ தானாகவே விருப்பப்பட்டு காணிக்கை செலுத்தவோ ஒருவன் சமாதான பலியைக்+ கொண்டுவந்தால், அது குறையில்லாத மாடாக அல்லது ஆடாக இருக்க வேண்டும். அப்போதுதான், கடவுள் அதை ஏற்றுக்கொள்வார். அதில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. 22 அவன் கொண்டுவரும் ஆடு அல்லது மாடு, குருடாகவோ எலும்பு முறிந்ததாகவோ வெட்டுக்காயம் உள்ளதாகவோ பாலுண்ணி வந்ததாகவோ சொறிசிரங்கு உள்ளதாகவோ படர்தாமரை நோய் பிடித்ததாகவோ இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட எதையும் யெகோவாவுக்குக் கொண்டுவரக் கூடாது, அவற்றை யெகோவாவின் பலிபீடத்தில் செலுத்தவும் கூடாது. 23 ஒரு காளை மாட்டுக்கு அல்லது செம்மறியாட்டுக்கு ஒரு கால் நெட்டையாகவோ குட்டையாகவோ இருந்தால், நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாக அதை யாரும் கொண்டுவரக் கூடாது, கடவுள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால், அவர்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலியாக அதைக் கொண்டுவரலாம். 24 விரை சேதமடைந்த, விரை நசுக்கப்பட்ட, அல்லது காயடிக்கப்பட்ட மிருகத்தை யெகோவாவுக்குக் கொண்டுவரக் கூடாது. அப்படிப்பட்ட மிருகங்களை உங்களுடைய தேசத்தில் பலி செலுத்தக் கூடாது. 25 வேறு தேசத்து ஜனங்கள் அவற்றைக் கடவுளுக்கு உணவாகப் படைக்கக் கூடாது. ஏனென்றால், அவையெல்லாம் ஊனமும் குறையும் உள்ளவை. அவற்றைக் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார்’” என்றார்.
26 பின்பு யெகோவா மோசேயிடம், 27 “ஒரு மாடு கன்று போட்டால் அல்லது ஒரு ஆடு குட்டி போட்டால், அந்தக் கன்றும் குட்டியும் ஏழு நாட்கள் தாயோடு இருக்க வேண்டும்.+ எட்டாம் நாளிலிருந்து அதை யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தலாம், அவர் அதை ஏற்றுக்கொள்வார். 28 ஒரு மாட்டையும் அதன் கன்றையும் ஒரே நாளில் வெட்டக் கூடாது, ஒரு ஆட்டையும் அதன் குட்டியையும் ஒரே நாளில் வெட்டக் கூடாது.+
29 நீங்கள் யெகோவாவுக்கு நன்றிப் பலி செலுத்தினால்,+ அதை அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செலுத்த வேண்டும். 30 அதே நாளில் அதைச் சாப்பிட வேண்டும். காலைவரை எதையும் மீதி வைக்கக் கூடாது.+ நான் யெகோவா.
31 நீங்கள் என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.+ நான் யெகோவா. 32 நீங்கள் என் பரிசுத்த பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ இஸ்ரவேலர்கள் மத்தியில் நான் பரிசுத்தப்பட வேண்டும்.+ நான் அவர்களைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா.+ 33 நான்தான் உங்களுடைய கடவுள் என்று நிரூபிப்பதற்காக உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நான் யெகோவா” என்றார்.