2 சாமுவேல்
6 இஸ்ரவேலில் இருந்த தலைசிறந்த வீரர்கள் எல்லாரையும் தாவீது மறுபடியும் ஒன்றுகூட்டினார்; அவர்கள் மொத்தம் 30,000 பேர். 2 அந்தச் சமயத்தில், உண்மைக் கடவுளின் பெட்டி+ பாலை-யூதாவில் இருந்தது; கேருபீன்களுக்கு மேலே* அமர்ந்திருக்கும்+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய+ பெயரைச் சொல்லி, மக்கள் எல்லாரும் அந்தப் பெட்டிக்கு முன்னால் வேண்டிக்கொள்வார்கள். அந்தப் பெட்டியைக் கொண்டுவர தாவீதும் அவருடைய வீரர்களும் அங்கே புறப்பட்டுப் போனார்கள். 3 ஒரு குன்றின் மேலிருந்த அபினதாபின் வீட்டிலிருந்து+ உண்மைக் கடவுளின் பெட்டியை எடுத்து ஒரு புதிய மாட்டுவண்டியில் ஏற்றினார்கள்.+ அபினதாபின் மகன்களான ஊசாவும் அகியோவும் அந்தப் புதிய மாட்டுவண்டிக்கு முன்னால் நடந்துபோனார்கள்.
4 குன்றின் மேலிருந்த அபினதாபின் வீட்டிலிருந்து உண்மைக் கடவுளின் பெட்டியைக் கொண்டுவந்தபோது, பெட்டிக்கு முன்னால் அகியோ நடந்து போய்க்கொண்டிருந்தான். 5 தாவீதும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் யெகோவாவுக்கு முன்னால் உற்சாகம் பொங்க கொண்டாடினார்கள். ஆபால் மரத்தில் செய்யப்பட்ட இசைக் கருவிகள், யாழ்கள், மற்ற நரம்பிசைக் கருவிகள்,+ கஞ்சிராக்கள்,+ ஜால்ராக்கள், தாள வாத்தியங்கள் ஆகியவற்றை இசைத்துக்கொண்டு வந்தார்கள்.+ 6 ஆனால் நாகோனின் களத்துமேட்டுக்கு அவர்கள் வந்தபோது, மாடுகள் தடுமாறியதால் உண்மைக் கடவுளின் பெட்டி கீழே விழப்போனது. உடனே ஊசா தன்னுடைய கையை நீட்டி அந்தப் பெட்டியைப் பிடித்தான்.+ 7 அதனால், ஊசாமீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. கடவுளுடைய சட்டத்தை மதிக்காமல்+ ஊசா இப்படி நடந்துகொண்டதால், அவனை அந்த இடத்திலேயே உண்மைக் கடவுள் கொன்றுபோட்டார்.+ உண்மைக் கடவுளின் பெட்டிக்குப் பக்கத்திலேயே ஊசா விழுந்து செத்தான். 8 யெகோவா கடும் கோபத்தோடு ஊசாவைக் கொன்றுபோட்டதால் தாவீது கோபம்* அடைந்தார். அதனால், அந்த இடம் இன்றுவரை பேரேஸ்-ஊசா* என்று அழைக்கப்படுகிறது. 9 அன்றைக்கு தாவீது யெகோவாவுக்குப் பயந்து,+ “யெகோவாவின் பெட்டியை எப்படி என்னுடைய இடத்துக்குக் கொண்டுபோவேன்?”+ என்றார். 10 யெகோவாவின் பெட்டியை ‘தாவீதின் நகரத்தில்’+ இருந்த தன்னுடைய இடத்துக்குக் கொண்டுபோக அவர் விரும்பவில்லை. அதனால், காத்* நகரத்தைச் சேர்ந்த ஓபேத்-ஏதோமின் வீட்டுக்கு+ அதை அனுப்பிவைத்தார்.
11 யெகோவாவின் பெட்டி காத் நகரத்தைச் சேர்ந்த ஓபேத்-ஏதோமின் வீட்டில் மூன்று மாதம் இருந்தது; அப்போது, அவரையும் அவருடைய வீட்டிலிருந்த எல்லாரையும் யெகோவா ஆசீர்வதித்து வந்தார்.+ 12 “உண்மைக் கடவுளின் பெட்டி ஓபேத்-ஏதோமின் வீட்டில் இருப்பதால் யெகோவா அவரையும் அவருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் ஆசீர்வதித்திருக்கிறார்” என்ற செய்தி தாவீது ராஜாவுக்குக் கிடைத்தது. அதனால், உண்மைக் கடவுளின் பெட்டியை ஓபேத்-ஏதோமின் வீட்டிலிருந்து ‘தாவீதின் நகரத்துக்கு’ கொண்டுவருவதற்காக தாவீது அங்கே சந்தோஷமாகப் போனார்.+ 13 யெகோவாவின் பெட்டியைச் சுமந்தவர்கள்+ ஆறடி எடுத்து வைத்ததும், ஒரு காளையையும் கொழுத்த கன்றையும் பலி கொடுத்தார்.
14 நாரிழை* ஏபோத்தைப் போட்டுக்கொண்டு யெகோவாவுக்கு முன்னால் தாவீது உற்சாகம் பொங்க நடனமாடிக்கொண்டு வந்தார்.+ 15 தாவீதும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடும்+ ஊதுகொம்பின் முழக்கத்தோடும்+ யெகோவாவின் பெட்டியைக்+ கொண்டுவந்தார்கள். 16 யெகோவாவின் பெட்டியை ‘தாவீதின் நகரத்துக்குள்’ அவர்கள் கொண்டுவந்தபோது, சவுலின் மகளான மீகாள்+ ஜன்னல் வழியாகப் பார்த்தாள். யெகோவாவுக்கு முன்னால் தாவீது ராஜா துள்ளிக் குதித்து நடனமாடுவதைப் பார்த்து, மனதுக்குள் அவரைக் கேவலமாக நினைத்தாள்.+ 17 யெகோவாவின் பெட்டியை வைப்பதற்காக தாவீது போட்டிருந்த கூடாரத்துக்குள் அதைக் கொண்டுவந்து வைத்தார்கள்.+ பின்பு, யெகோவாவுக்கு முன்னால் தாவீது தகன பலிகளையும்+ சமாதான பலிகளையும்+ கொடுத்தார்.+ 18 தாவீது தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொடுத்த பின்பு, பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயரில் மக்களை ஆசீர்வதித்தார். 19 அதோடு, அங்கே திரண்டு வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும், ஆண்கள் பெண்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு வட்ட ரொட்டியையும் பேரீச்ச அடையையும் உலர்ந்த திராட்சை அடையையும் கொடுத்தார். பின்பு, மக்கள் எல்லாரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.
20 தாவீது தன்னுடைய வீட்டில் இருப்பவர்களை ஆசீர்வதிக்க வந்தபோது, சவுலின் மகளான மீகாள்+ அவரைப் பார்க்க வெளியே வந்தாள். அப்போது அவரிடம், “இஸ்ரவேலின் ராஜா தன்னுடைய ஊழியர்களின் பணிப்பெண்கள் முன்னால் இன்றைக்கு பைத்தியக்காரன் மாதிரி அரைகுறை ஆடையோடு ஆடியது ரொம்பவே பிரமாதம்!”+ என்று சொன்னாள். 21 அதற்கு தாவீது, “உன் அப்பாவுக்கும் அவருடைய வம்சத்துக்கும் பதிலாக என்னைத் தேர்ந்தெடுத்த யெகோவாவுக்கு முன்னால்தான் நான் ஆடிப்பாடி கொண்டாடினேன்; தன்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கு என்னைத் தலைவனாக்கியது யெகோவாதான்.+ அதனால், யெகோவாவுக்கு முன்பாக நான் மகிழ்ச்சியோடு ஆடிப்பாடுவேன்; 22 இதைவிடவும் என்னைத் தாழ்த்திக்கொண்டு, என் கண்களிலேயே அற்பமானவனாக ஆவேன். ஆனாலும், நீ சொன்ன அந்தப் பணிப்பெண்கள் என்னைப் பற்றிப் பெருமையாகத்தான் பேசுவார்கள்” என்று சொன்னார். 23 அதனால், சாகும்வரை சவுலின் மகளான மீகாளுக்குக்+ குழந்தை பாக்கியம் இருக்கவில்லை.