ஏசாயா
64 நீங்கள் வானத்தைக் கிழித்துக்கொண்டு கீழே இறங்கி வந்து,
மலைகளை அதிர வைத்து,
2 விறகைக் கொழுந்துவிட்டு எரிய வைக்கிற நெருப்பைப் போலவும்,
தண்ணீரைத் தளதளவென்று கொதிக்க வைக்கிற தீயைப் போலவும் எதிரிகளைத் தாக்கினால்,
நீங்கள் யார் என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.
தேசங்கள் உங்களுக்கு முன்னால் நடுநடுங்கும்.
3 உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கத் தகுதி இல்லாதபோதுகூட எங்களுக்காக அற்புதங்களைச் செய்தீர்கள்.+
கீழே இறங்கி வந்தீர்கள்; அப்போது மலைகள் உங்களுக்கு முன்னால் நடுநடுங்கின.+
4 நம்பிக்கையோடு* காத்திருக்கிறவர்களின் உதவிக்கு வருகிற கடவுள் நீங்கள் மட்டும்தான்.
உங்களைத் தவிர வேறொரு கடவுள் அப்படிச் செய்ததாக
பழங்காலத்திலிருந்தே யாரும் காதால் கேட்டதும் இல்லை,
கண்களால் கண்டதும் இல்லை.+
5 நல்ல காரியங்களைச் சந்தோஷமாகச் செய்கிறவர்களுக்கும்,+
உங்களை நினைவில் வைத்து உங்கள் வழிகளில் நடக்கிறவர்களுக்கும்
நீங்கள் துணையாக இருக்கிறீர்கள்.
நாங்கள் பாவம் செய்துகொண்டே இருந்தபோது எங்கள்மேல் ரொம்பக் கோபப்பட்டீர்கள்.+
காலம்காலமாக நாங்கள் திருந்தவே இல்லை.
அப்படியிருக்கும்போது, எங்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியுமா?
6 நாங்கள் எல்லாரும் தீட்டுப்பட்டவர்கள் போல ஆகிவிட்டோம்.
நாங்கள் செய்கிற நீதியான காரியங்களெல்லாம் தீட்டுப்பட்ட* துணியைப்+ போல இருக்கிறது.
நாங்கள் எல்லாரும் காய்ந்த இலைகளைப் போல உதிர்ந்துவிடுவோம்.
நாங்கள் செய்கிற அக்கிரமங்கள் காற்றைப் போல எங்களை அடித்துக்கொண்டு போய்விடும்.
7 யாருமே உங்கள் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது இல்லை.
உங்களையே உறுதியாகப் பிடித்துக்கொண்டிருக்க யாரும் விரும்புவதும் இல்லை.
நீங்கள் உங்களுடைய முகத்தை எங்களிடமிருந்து மறைத்துக்கொண்டீர்கள்.+
எங்கள் அக்கிரமங்களே எங்களை வாட்டி வதைக்கும்படி விட்டுவிட்டீர்கள்.
8 ஆனால் யெகோவாவே, நீங்கள்தான் எங்களுடைய தகப்பன்.+
நாங்கள் களிமண்; நீங்கள்தான் எங்களுடைய குயவர்.+
நாங்கள் எல்லாரும் உங்கள் கைகளால் உருவானவர்கள்.
9 அதனால் யெகோவாவே, எங்கள்மேல் ரொம்பவும் கோபப்படாதீர்கள்.+
எங்கள் அக்கிரமங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.
தயவுசெய்து எங்களைப் பாருங்கள்; நாங்கள் எல்லாரும் உங்களுடைய ஜனங்கள்தானே.
10 உங்களுடைய பரிசுத்தமான நகரங்கள் வனாந்தரம்போல் ஆகிவிட்டன.
சீயோன் வெறும் வனாந்தரத்தைப் போலவும்,
எருசலேம் பொட்டல் காடு போலவும் ஆகிவிட்டது.+
11 எங்கள் முன்னோர்கள் உங்களை வழிபட்ட இடமாகிய
பரிசுத்தமும் மகிமையுமான* ஆலயம்
இப்போது தீயில் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கிறது.+
நாங்கள் நெஞ்சார நேசித்ததெல்லாம் நாசமாகிவிட்டது.
12 யெகோவாவே, இதையெல்லாம் பார்த்த பிறகும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருப்பீர்களா?
நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உதவி செய்ய மாட்டீர்களா?+