சகரியா
11 “லீபனோனே, உன் கதவுகளைத் திற!
உன் தேவதாரு மரங்களை நெருப்பு எரிக்கட்டும்.
2 ஆபால் மரங்களே, அழுது புலம்புங்கள்! தேவதாரு மரங்களெல்லாம் அழிந்துவிட்டதே!
உயர்ந்தோங்கி நின்ற மரங்களெல்லாம் வெட்டிச் சாய்க்கப்பட்டதே!
பாசானின் கருவாலி மரங்களே, அழுது புலம்புங்கள்!
அடர்ந்த காடு பாழாய்ப்போனதே!
3 மேய்ப்பர்களின் கதறலைக் கேளுங்கள்.
அவர்களுடைய வளமான மேய்ச்சல் நிலங்களெல்லாம் நாசமாக்கப்பட்டதே!
இளம் சிங்கங்களின் கர்ஜனையைக் கேளுங்கள்.
யோர்தானை ஒட்டியுள்ள அடர்ந்த புதர்க் காடுகளெல்லாம் பாழாக்கப்பட்டதே!
4 என் கடவுளாகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘வெட்டுவதற்காகவே வைக்கப்பட்டுள்ள ஆடுகளை நீ மேய்க்க வேண்டும்.+ 5 அந்த ஆடுகளை விலைக்கு வாங்குகிறவர்கள் அவற்றை வெட்டினாலும்,+ குற்றவாளிகள் ஆவதில்லை. அவற்றை விற்பவர்கள்,+ “நான் பணக்காரன் ஆகப்போகிறேன். இதற்கு யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்!” என்கிறார்கள். மேய்ப்பர்களுக்கு அந்த ஆடுகள்மேல் கரிசனையே இல்லை.’+
6 யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘இந்தத் தேசத்து ஜனங்களுக்கு இனி நான் கரிசனை காட்ட மாட்டேன். ஒவ்வொருவனும் அடுத்தவனின் கையிலும் அரசனின் கையிலும் சிக்கித் தவிக்கும்படி செய்வேன். அவர்கள் தேசத்தை அழிப்பார்கள். அவர்களிடமிருந்து நான் யாரையும் காப்பாற்ற மாட்டேன்.’”
7 வெட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ள ஆடுகளே, நான் உங்களை மேய்க்க ஆரம்பித்தேன்.+ அவதிப்படுகிற ஆடுகளே, உங்களுக்காகத்தான் அதைச் செய்தேன். அதனால், நான் இரண்டு கோல்களை எடுத்தேன். ஒரு கோலுக்கு இனிமை என்றும், மற்றொரு கோலுக்கு ஒற்றுமை என்றும் பெயர் வைத்தேன்.+ பின்பு, மந்தையை மேய்க்க ஆரம்பித்தேன். 8 ஒரு மாதத்தில் மூன்று மேய்ப்பர்களை வேலையிலிருந்து நீக்கினேன். ஏனென்றால், அதற்குமேல் அவர்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, அவர்களும் என்னை வெறுத்தார்கள். 9 அதனால் நான், “இனி உங்களை மேய்க்க மாட்டேன். சாகிறவர்கள் சாகட்டும், அழிகிறவர்கள் அழியட்டும். மிச்சமிருப்பவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றுபோடட்டும்” என்று சொன்னேன். 10 பின்பு, எல்லா ஜனங்களோடும் நான் செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்காக, இனிமை என்ற என் கோலை+ எடுத்து முறித்தேன். 11 அன்றைக்கு அந்த ஒப்பந்தம் முறிக்கப்பட்டது. அவதிப்பட்ட ஆடுகள் என்னைக் கவனித்துக்கொண்டிருந்தன. அது யெகோவாவின் செய்தி என்பதைப் புரிந்துகொண்டன.
12 பின்பு நான், “நீங்கள் விரும்பினால் எனக்குக் கூலி கொடுங்கள்; இல்லையென்றால், வேண்டாம்” என்று சொன்னேன். அப்போது, அவர்கள் எனக்கு 30 வெள்ளிக் காசுகளைக் கூலியாகக் கொடுத்தார்கள்.+
13 அப்போது யெகோவா என்னிடம், “அவர்களுக்கு என்மேல் எவ்வளவு மதிப்பு!+ அதைப் பொக்கிஷ அறையில் தூக்கியெறி!” என்று சொன்னார். அதனால், நான் அந்த 30 வெள்ளிக் காசுகளை எடுத்து யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொக்கிஷ அறையில் எறிந்துவிட்டேன்.+
14 பின்பு, யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதர பந்தத்தைத் துண்டிப்பதற்காக+ ஒற்றுமை என்ற இரண்டாவது கோலை+ எடுத்து முறித்தேன்.
15 யெகோவா என்னிடம், “எதற்குமே லாயக்கில்லாத ஒரு மேய்ப்பனின்+ ஆயுதங்களை எடு. 16 இந்தத் தேசத்தை மேய்க்க ஒரு மேய்ப்பனை நான் அனுமதிப்பேன். சாகக்கிடக்கிற ஆடுகளை அவன் காப்பாற்ற மாட்டான்.+ ஆட்டுக்குட்டிகளைத் தேடிப்போக மாட்டான். காயப்பட்ட ஆடுகளுக்குக் கட்டுப்போட மாட்டான்.+ ஆரோக்கியமான ஆடுகளுக்கு உணவு கொடுக்க மாட்டான். அதற்குப் பதிலாக, கொழுத்த ஆடுகளின் இறைச்சியை விழுங்குவான்.+ ஆடுகளின் காலில் உள்ள குளம்புகளைப் பிய்த்தெடுப்பான்.+
17 மந்தையைத் தவிக்கவிடும் உதவாக்கரை மேய்ப்பனுக்குக்+ கேடுதான் வரும்!+
அவனுடைய கையும் வலது கண்ணும் ஒரு வாளால் தாக்கப்படும்.
அவனுடைய கை விளங்காமல் போய்விடும்.
அவனுடைய கண் குருடாகிவிடும்” என்றார்.