மத்தேயு எழுதியது
3 அந்தக் காலத்தில், யோவான்+ ஸ்நானகர் யூதேயாவின் வனாந்தரத்துக்கு வந்து, 2 “மனம் திருந்துங்கள், பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது”+ என்று பிரசங்கித்துக்கொண்டிருந்தார்.+ 3 இவரைப் பற்றித்தான் ஏசாயா+ தீர்க்கதரிசி+ இப்படிச் சொல்லியிருந்தார்: “‘யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துங்கள், அவருக்காகப் பாதைகளைச் சமப்படுத்துங்கள்’ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்வதைக் கேளுங்கள்!”+ 4 யோவான் ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப் போட்டிருந்தார், தோல் வாரை இடுப்பில் கட்டியிருந்தார்;+ வெட்டுக்கிளிகளையும்+ காட்டுத் தேனையும் சாப்பிட்டுவந்தார்.+ 5 எருசலேமிலிருந்தும் யூதேயா முழுவதிலிருந்தும் யோர்தான் ஆற்றைச் சுற்றியிருந்த எல்லா பகுதிகளிலிருந்தும் மக்கள் அவரிடம் போனார்கள்.+ 6 தாங்கள் செய்த பாவங்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றார்கள்.+
7 ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட அந்த இடத்துக்கு நிறைய பரிசேயர்களும்+ சதுசேயர்களும்+ வருவதைப் பார்த்தவுடனே யோவான் அவர்களிடம், “விரியன் பாம்புக் குட்டிகளே,+ கடவுளுடைய கோபத்தின் நாளில்+ தப்பித்து ஓடச் சொல்லி உங்களை எச்சரித்தது யார்? 8 நீங்கள் மனம் திருந்திவிட்டீர்கள் என்பதைச் செயலில் காட்டுங்கள்.* 9 ‘ஆபிரகாம் எங்கள் தகப்பன்’ என்று மனதுக்குள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளாதீர்கள்;+ கடவுள் நினைத்தால் இந்தக் கற்களிலிருந்துகூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க முடியுமென்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். 10 மரங்களின் வேருக்குப் பக்கத்தில் ஏற்கெனவே கோடாலி இருக்கிறது; நல்ல பழங்களைத் தராத எல்லா மரங்களும் வெட்டப்பட்டு நெருப்பில் போடப்படும்.+ 11 நீங்கள் மனம் திருந்தியதால் நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்;+ ஆனால், எனக்குப் பின்பு வரப்போகிறவர்+ என்னைவிட வல்லவர்; அவருடைய செருப்புகளைக் கழற்றுவதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை.+ அவர் கடவுளுடைய சக்தியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.+ 12 அவர் தன்னுடைய கையில் தூற்றுவாரியை* வைத்திருக்கிறார்; தன்னுடைய களத்துமேடு முழுவதையும் சுத்தப்படுத்தி, கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணைக்க முடியாத நெருப்பில் சுட்டெரிப்பார்”+ என்று சொன்னார்.
13 பின்பு, யோவானிடம் ஞானஸ்நானம் பெறுவதற்காக இயேசு கலிலேயாவிலிருந்து யோர்தான் ஆற்றுக்கு வந்தார்.+ 14 ஆனால் யோவான், “ஞானஸ்நானம் பெறுவதற்கு நான்தான் உங்களிடம் வர வேண்டும், நீங்கள் என்னிடம் வரலாமா?” என்று சொல்லி அவரைத் தடுக்கப் பார்த்தார். 15 அதற்கு இயேசு, “என்னைத் தடுக்காதே; இதன் மூலம்தான், நீதியான எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும்” என்று சொன்னார். அதன் பின்பு, யோவான் அவரைத் தடுக்கவில்லை. 16 இயேசு ஞானஸ்நானம் பெற்று தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தவுடன், வானம் திறக்கப்பட்டது;+ கடவுளுடைய சக்தி புறாவைப் போல் அவர்மேல் இறங்குவதை+ யோவான் பார்த்தார். 17 அப்போது, “இவர் என் அன்பு மகன்,+ நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்”+ என்று வானத்திலிருந்து ஒரு குரல்+ கேட்டது.