தீத்துவுக்குக் கடிதம்
3 அரசாங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும்,+ எல்லா விதமான நல்ல செயல்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும், 2 யாரைப் பற்றியும் மோசமாகப் பேசக் கூடாது, யாரோடும் தகராறு செய்யக் கூடாது, நியாயமானவர்களாக* நடந்துகொள்ள வேண்டும்,+ எல்லாரிடமும் எல்லாவற்றிலும் சாந்தகுணத்தைக் காட்ட வேண்டும்+ என்றெல்லாம் அவர்களுக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்து. 3 ஏனென்றால், நாமும்கூட ஒருகாலத்தில் புத்தியில்லாதவர்களாக, கீழ்ப்படியாதவர்களாக, வழிதவறி நடக்கிறவர்களாக, பலவிதமான ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களாக, தீமையும் பொறாமையும் நிறைந்தவர்களாக, வெறுக்கத்தக்கவர்களாக, ஒருவரை ஒருவர் பகைக்கிறவர்களாக இருந்தோம்.
4 ஆனாலும், நம் மீட்பராகிய கடவுள் தன்னுடைய கருணையையும்+ அன்பையும் மனிதர்கள்மேல் காட்டியபோது, 5 மறுவாழ்வு பெறுவதற்கு நம்மைத் தூய்மையாக்கியதன்* மூலமும்+ தன்னுடைய சக்தியால் புதுப்பித்ததன் மூலமும் நம்மை மீட்டார்;+ நம்முடைய நீதியான செயல்களால் அல்ல,+ தன்னுடைய இரக்கத்தால் நம்மை மீட்டார்.+ 6 அந்தச் சக்தியை நம் மீட்பரான இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்மேல் அளவில்லாமல்* பொழிந்தார்.+ 7 அவருடைய அளவற்ற கருணையால் நாம் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு,+ முடிவில்லாத வாழ்வு+ என்ற நம்பிக்கையைச் சொத்தாகப் பெற வேண்டும்+ என்பதற்காக அப்படிச் செய்தார்.
8 இந்த வார்த்தைகள் நம்பகமானவை; அதனால், கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள் தொடர்ந்து நல்ல செயல்கள் செய்வதில் முழு கவனத்தோடு இருப்பதற்காக இவற்றை நீ அவர்களுக்கு வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இவை சிறந்தவை, மனிதர்களுக்குப் பிரயோஜனமானவை.
9 முட்டாள்தனமான விவாதங்களையும், வம்சாவளி விவரங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளையும், சச்சரவுகளையும், திருச்சட்டத்தைப் பற்றிய சண்டைகளையும் அடியோடு தவிர்த்து விடு; அவை பிரயோஜனம் இல்லாதவை, வீணானவை.+ 10 சபையில் பிரிவினைகளை உண்டாக்குகிறவனுக்கு+ ஒரு தடவை புத்திசொல்,* இரண்டாவது தடவையும் புத்திசொல்,+ அதன் பின்பு அவனை ஒதுக்கிவிடு.+ 11 ஏனென்றால், அப்படிப்பட்டவன் வழிதவறி நடக்கிறான், பாவம் செய்கிறான், தனக்குத்தானே தண்டனைத் தீர்ப்பை வரவழைத்துக்கொள்கிறான்.
12 அர்தெமாவையோ தீகிக்குவையோ+ நான் உன்னிடம் அனுப்பிய பின்பு, நிக்கொப்போலிக்கு என்னிடம் வர உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்; அங்கேதான் குளிர் காலத்தில் தங்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். 13 திருச்சட்ட வல்லுநனாகிய சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் எந்தக் குறைவும் இல்லாதபடி அவர்களுடைய பயணத்துக்கு வேண்டியதையெல்லாம் பார்த்துக் கொடுத்தனுப்பு.+ 14 நம்மைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து நல்ல செயல்கள் செய்து, அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.+ அப்போதுதான், அவர்கள் பலன் தராத ஊழியர்களாக இருக்க மாட்டார்கள்.+
15 என்னோடு இருக்கிற எல்லாரும் உனக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். விசுவாசத்தில் இருக்கிற நம் நண்பர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்.
கடவுளுடைய அளவற்ற கருணை உங்கள் எல்லார்மீதும் இருக்கட்டும்.