மாற்கு எழுதியது
12 பின்பு, உவமைகளைப் பயன்படுத்தி பேச ஆரம்பித்தார்; அவர்களிடம், “ஒரு மனுஷர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு,+ அதைச் சுற்றிலும் வேலியடைத்தார். அதில் திராட்சரசத் தொட்டியை அமைத்து, காவலுக்கு ஒரு கோபுரத்தைக் கட்டினார்.+ அதைத் தோட்டக்காரர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டுத் தூர தேசத்துக்குப் போனார்.+ 2 அறுவடைக் காலம் வந்தபோது, தனக்குச் சேர வேண்டிய பங்கை வாங்கி வரச் சொல்லி ஓர் அடிமையை அந்தத் தோட்டக்காரர்களிடம் அனுப்பினார். 3 ஆனால், அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுங்கையோடு அனுப்பிவிட்டார்கள். 4 அதனால், மறுபடியும் வேறொரு அடிமையை அனுப்பினார்; அவர்கள் அவனைத் தலையில் தாக்கி, அவமானப்படுத்தினார்கள்.+ 5 பின்பு இன்னும் ஒருவனை அனுப்பினார், அவனைக் கொன்றுபோட்டார்கள். வேறு பலரையும் அனுப்பினார்; அவர்களில் சிலரை அடித்தார்கள், சிலரைக் கொலை செய்தார்கள். 6 அவருக்கு ஒரு அன்பான மகன்+ இருந்தான்; ‘என் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று நினைத்து, கடைசியாக அவர் தன்னுடைய மகனையே அனுப்பினார். 7 ஆனால் அந்தத் தோட்டக்காரர்கள், ‘இவன்தான் வாரிசு.+ வாருங்கள், நாம் இவனைத் தீர்த்துக்கட்டிவிடலாம், இவனுடைய சொத்து நமக்குக் கிடைத்துவிடும்’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு, 8 அவனைப் பிடித்து, கொலை செய்து, திராட்சைத் தோட்டத்துக்கு வெளியே தூக்கிப்போட்டார்கள்.+ 9 இப்போது, அந்தத் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரர் என்ன செய்வார்? அவர் வந்து, அந்தத் தோட்டக்காரர்களைக் கொன்றுவிட்டு, திராட்சைத் தோட்டத்தை மற்றவர்களிடம் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்.+ 10 ‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது;+ 11 இது யெகோவாவின்* செயல், இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது’+ என்ற வசனத்தை நீங்கள் வாசித்ததே இல்லையா?” என்று கேட்டார்.
12 அதைக் கேட்டதும், அவரைப் பிடிக்க* நினைத்தார்கள்; ஏனென்றால், தங்களை மனதில் வைத்துதான் அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால், மக்களுக்குப் பயந்து அவரைவிட்டு விலகிப்போனார்கள்.+
13 பின்பு, அவருடைய பேச்சிலேயே அவரைச் சிக்க வைப்பதற்காக பரிசேயர்கள் சிலரையும் ஏரோதுவின் ஆதரவாளர்கள் சிலரையும் அனுப்பினார்கள்.+ 14 அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீங்கள் எப்போதும் உண்மை பேசுகிறவர், யாருடைய தயவையும் எதிர்பார்க்காதவர், மனுஷர்களுடைய வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர், கடவுளைப் பற்றிய சத்தியங்களைச் சொல்லிக்கொடுக்கிறவர் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும். ரோம அரசனுக்கு* வரி* கட்டுவது சரியா இல்லையா? 15 நாங்கள் வரி கட்ட வேண்டுமா வேண்டாமா?” என்று கேட்டார்கள். அவர்களுடைய வெளிவேஷத்தை அவர் புரிந்துகொண்டு, “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? ஒரு தினாரியுவை* என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார். 16 அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். “இதில் இருக்கிற உருவமும் பட்டப்பெயரும் யாருடையது?” என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள், “ரோம அரசனுடையது” என்று சொன்னார்கள். 17 அப்போது இயேசு, “அரசனுடையதை* அரசனுக்கும்+ கடவுளுடையதைக் கடவுளுக்கும்+ கொடுங்கள்” என்று சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.
18 உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர்கள்+ அவரிடம் வந்து,+ 19 “போதகரே, ஒருவன் பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டு அவனுக்காக வாரிசு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்திருக்கிறார்.+ 20 எங்களோடு ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, வாரிசு இல்லாமல் இறந்துபோனான். 21 இரண்டாவது சகோதரன் அவளைத் திருமணம் செய்து அவனும் வாரிசு இல்லாமல் இறந்துபோனான். மூன்றாவது சகோதரனும் அதேபோல் செய்து இறந்துபோனான். 22 அந்த ஏழு பேரும் வாரிசு இல்லாமல் இறந்துபோனார்கள்; கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். 23 அவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது, அவள் யாருக்கு மனைவியாக இருப்பாள்? அந்த ஏழு பேருக்கும் அவள் மனைவியாக இருந்தாளே” என்றார்கள். 24 அதற்கு இயேசு, “உங்கள் எண்ணம் தவறு. ஏனென்றால் உங்களுக்கு வேதவசனங்களும் தெரியவில்லை, கடவுளுடைய வல்லமையும் தெரியவில்லை;+ 25 உயிரோடு எழுப்பப்படுகிற ஆண்களும் சரி, பெண்களும் சரி, திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்; அவர்கள் பரலோகத்திலுள்ள தேவதூதர்களைப் போல் இருப்பார்கள்.+ 26 இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் புத்தகத்தில் இருக்கிற முட்புதரைப் பற்றிய பதிவில் நீங்கள் வாசித்ததில்லையா? கடவுள் அவரிடம், ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’+ என்று சொன்னார், இல்லையா? 27 அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார். அதனால் உங்கள் எண்ணம் முற்றிலும் தவறு”+ என்று சொன்னார்.
28 அவர்கள் அவரிடம் வாதாடியதையும் அவர் மிக நன்றாகப் பதில் சொன்னதையும் பார்த்து, அங்கே வந்திருந்த வேத அறிஞர்களில் ஒருவன், “கட்டளைகளிலேயே முதலாவது* கட்டளை எது?”+ என்று அவரிடம் கேட்டான். 29 அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள், நம் கடவுளாகிய யெகோவா* ஒருவரே யெகோவா.* 30 உங்கள் கடவுளாகிய யெகோவாமேல்* உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்’+ என்பதே முதலாவது கட்டளை. 31 ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்’ என்பது இரண்டாவது கட்டளை.+ இவற்றைவிட முக்கியமான கட்டளை வேறெதுவும் இல்லை” என்று சொன்னார். 32 அதற்கு அந்த வேத அறிஞன், “போதகரே, நீங்கள் அருமையாகச் சொன்னீர்கள், நீங்கள் சொன்னதுதான் உண்மை; ‘கடவுள் ஒருவரே, அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை’;+ 33 அதுமட்டுமல்ல, தகன பலிகளையும் மற்ற பலிகளையும் கொடுப்பதைவிட முழு இதயத்தோடும் முழு மனதோடும்* முழு பலத்தோடும் அவர்மேல் அன்பு காட்டுவதும், தன்மேல் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்டுவதும்தான் சிறந்தது”+ என்று சொன்னான். 34 அவன் புத்திசாலித்தனமாகச் சொன்னதைப் பார்த்து, “கடவுளுடைய அரசாங்கம் உனக்கு ரொம்பத் தூரத்தில் இல்லை” என்று இயேசு சொன்னார். அதன் பின்பு அவரிடம் கேள்வி கேட்க யாருக்குமே தைரியம் வரவில்லை.+
35 ஆலயத்தில் இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது அவர்களிடம், “கிறிஸ்துவை தாவீதின் மகன்+ என்று வேத அறிஞர்கள் எப்படிச் சொல்கிறார்கள்? 36 ‘யெகோவா* என் எஜமானிடம், “உன்னுடைய எதிரிகளை நான் உன் காலடியில் வீழ்த்தும்வரை நீ என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார்’ எனக் கடவுளுடைய சக்தியால்+ தாவீது சொன்னார். 37 தாவீதே அவரை எஜமான் என்று அழைத்திருப்பதால் அவர் எப்படி இவருடைய மகனாக இருக்க முடியும்?”+ என்று கேட்டார்.
அவர் பேசியதை ஏராளமான மக்கள் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 38 அவர் தொடர்ந்து கற்பித்தபோது, “வேத அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் நீளமான அங்கிகளைப் போட்டுக்கொண்டு திரிய விரும்புகிறார்கள்; சந்தைகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார்கள்.+ 39 அதோடு, ஜெபக்கூடங்களில் முன்வரிசை* இருக்கைகளிலும் விருந்துகளில் மிக முக்கியமான இடங்களிலும் உட்கார விரும்புகிறார்கள்.+ 40 விதவைகளுடைய சொத்துகளை* விழுங்கிவிடுகிறார்கள்; மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நீண்ட ஜெபம் செய்கிறார்கள்; அதனால், அவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்” என்று சொன்னார்.
41 பின்பு, காணிக்கைப் பெட்டிகளைப்+ பார்த்தபடி அவர் உட்கார்ந்துகொண்டு, அவற்றில் மக்கள் காசு போடுவதைக் கவனிக்க ஆரம்பித்தார். பணக்காரர்கள் பலர் நிறைய காசுகளைப் போட்டார்கள்.+ 42 அந்தச் சமயத்தில், ஓர் ஏழை விதவை வந்து, மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளை* போட்டாள்.+ 43 அப்போது, அவர் தன்னுடைய சீஷர்களைக் கூப்பிட்டு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், காணிக்கைப் பெட்டிகளில் மற்ற எல்லாரும் போட்டதைவிட இந்த ஏழை விதவைதான் அதிகமாகப் போட்டாள்.+ 44 அவர்கள் எல்லாரும் தங்கள் தேவைக்கு அதிகமாக இருந்ததைத்தான் போட்டார்கள்; ஆனால், இவள் தனக்குத் தேவையிருந்தும், தன்னிடமிருந்த எல்லாவற்றையும், தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள்”+ என்று சொன்னார்.