எபேசியருக்குக் கடிதம்
1 கடவுளுடைய விருப்பத்தால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கும் பவுல், எபேசுவில்+ கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிற உண்மையுள்ள பரிசுத்தவான்களுக்கு எழுதுவது:
2 பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.
3 நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவருக்குப் புகழ் சேரட்டும். ஏனென்றால், கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நமக்குக் கடவுள் தன்னுடைய சக்தியின் மூலம் எல்லா ஆசீர்வாதங்களையும் பரலோகத்தில் கொடுத்து நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.+ 4 கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நாம் அவருக்கு முன்பாக அன்பானவர்களாகவும் பரிசுத்தமானவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும்+ இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உலகம் உண்டாவதற்கு முன்பே நம்மைத் தேர்ந்தெடுத்தார். 5 அவருடைய பிரியத்தின்படியும் விருப்பத்தின்படியும்,*+ இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்மைத் தன்னுடைய சொந்த மகன்களாகத் தத்தெடுப்பதற்கு+ முன்தீர்மானித்தார்.+ 6 தனக்குப் புகழ் சேருவதற்காக, தன்னுடைய அன்பு மகன்+ மூலம் இப்படி அளவற்ற கருணையை+ நமக்குத் தயவாகக் காட்டியிருக்கிறார். 7 அவருடைய அளவற்ற கருணையின்படி, அந்த அன்பு மகன் தன்னுடைய இரத்தத்தை மீட்புவிலையாகக் கொடுத்தார்.+ அதனால் நமக்கு விடுதலை கிடைத்திருக்கிறது, அதாவது நம் குற்றங்களுக்கு மன்னிப்பு கிடைத்திருக்கிறது.+
8 எல்லா ஞானத்தோடும் புத்தியோடும்கூட* இந்த அளவற்ற கருணையையும் அவர் எங்களுக்கு அதிகமதிகமாகக் கொடுத்து, 9 தன்னுடைய விருப்பத்தை* பற்றிய பரிசுத்த ரகசியத்தைத்+ தெரியப்படுத்தினார். இந்த ரகசியம், ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அவருடைய நோக்கத்துக்கும் பிரியத்துக்கும் ஏற்றபடி இருக்கிறது. 10 குறித்த காலங்கள் நிறைவேறும்போது அந்த நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. அதாவது, பரலோகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் பூமியில் இருக்கிற எல்லாவற்றையும்+ மறுபடியும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டிச்சேர்க்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. அதன்படியே, கிறிஸ்துவுக்குள் கூட்டிச்சேர்க்கப்பட்டு 11 அவரோடு ஒன்றுபட்டிருக்கிற எங்களை வாரிசுகளாகவும் நியமித்தார்.+ எல்லாவற்றையும் தன்னுடைய விருப்பத்தின்படி* தீர்மானித்து நிறைவேற்றுகிற அவர், தன்னுடைய நோக்கத்தின்படி எங்களை முன்கூட்டியே தேர்ந்தெடுத்தார்.* 12 கிறிஸ்துமேல் முதன்முதலில் நம்பிக்கை வைத்த எங்கள் மூலம் தனக்கு மகிமையும் புகழும் சேருவதற்காக எங்களை அப்படித் தேர்ந்தெடுத்தார். 13 ஆனால் சத்தியத்தின் செய்தியை, அதாவது உங்கள் மீட்பைப் பற்றிய நல்ல செய்தியை, கேட்ட பின்பு நீங்களும் அவர்மேல் நம்பிக்கை வைத்தீர்கள். அப்படி நம்பிக்கை வைத்த பின்பு, வாக்குறுதி கொடுக்கப்பட்ட கடவுளுடைய சக்தியால் அவர் மூலம் நீங்கள் முத்திரை போடப்பட்டீர்கள்.+ 14 கடவுளுக்குச் சொந்தமானவர்கள்+ மீட்புவிலையால்+ விடுதலையாகி தங்களுடைய ஆஸ்தியைப் பெறுவார்கள் என்பதற்கு அவருடைய சக்தியே உத்தரவாதமாக* இருக்கிறது.+ கடவுள் தனக்கு மகிமையும் புகழும் சேருவதற்காக இப்படியெல்லாம் செய்தார்.
15 அதனால்தான், நம் எஜமானாகிய இயேசுவின் மேல் நீங்கள் வைத்திருக்கிற விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலும் நீங்கள் காட்டுகிற அன்பையும் பற்றி நான் கேள்விப்பட்ட சமயத்திலிருந்து 16 உங்களுக்காக இடைவிடாமல் கடவுளுக்கு நன்றி சொல்லி வருகிறேன். என்னுடைய ஜெபங்களில் எப்போதும் உங்களை நினைத்துக்கொள்கிறேன். 17 நீங்கள் அவரைப் பற்றித் திருத்தமாகக் கற்றுக்கொள்ளும்போது,+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளாகவும் மகிமையுள்ள தகப்பனாகவும் இருக்கிற அவர் உங்களுக்கு ஞானத்தையும் வெளிப்படுத்துதலையும் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். 18 அவர் உங்களுடைய மனக்கண்களைத் திறந்திருக்கிறார். அவர் உங்களை அழைத்ததால் நீங்கள் பெற்றிருக்கிற நம்பிக்கை எப்படிப்பட்டது என்றும், பரிசுத்தவான்களுக்கு அவர் ஆஸ்தியாகத் தரப்போகிற மகத்தான ஆசீர்வாதங்கள் எப்படிப்பட்டது என்றும்,+ 19 விசுவாசிகளாகிய* நம்மிடம் அவர் வெளிக்காட்டுகிற மகா மேன்மையான வல்லமை எப்படிப்பட்டது என்றும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்.+ அந்த மகா வல்லமையையும் ஆற்றலையும் 20 கிறிஸ்துவின் விஷயத்தில் கடவுள் காட்டினார். எப்படியென்றால், கிறிஸ்துவை உயிரோடு எழுப்பி, பரலோகத்தில் தன்னுடைய வலது பக்கத்தில் உட்கார வைத்தார்.+ 21 எல்லா அரசாங்கத்துக்கும் அதிகாரத்துக்கும் வல்லமைக்கும் தலைமை ஸ்தானத்துக்கும் மேலாக அவரை உயர்த்தினார். இந்த உலகத்தில்* மட்டுமல்ல, இனிவரும் உலகத்திலும்கூட, எல்லா பெயருக்கும் மேலாக இருக்கும்படி அவரை உயர்த்தினார்.+ 22 எல்லாவற்றையும் அவருடைய காலடியில் கீழ்ப்படுத்தி,+ சபை சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் தலையாக அவரை நியமித்தார்.+ 23 அவருடைய உடலாகிய+ சபை அவரால் நிறைந்திருக்கிறது; அவரே எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைவு செய்கிறார்.