வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வெளிப்படுத்துதல் 7:3-ல் சொல்லப்பட்டுள்ள முத்திரையிடுதல் எதைக் குறிக்கிறது?
வெளிப்படுத்துதல் 7:1-3-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக் கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம்பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் [“அடிமைகளின்,” NW] நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்.’
இந்த ‘நான்கு காற்றுகள்’ கட்டவிழ்க்கப்படும்போது, ‘மிகுந்த உபத்திரவம்’ ஆரம்பமாகும்; அதாவது பொய் மதமும், அதைத் தொடர்ந்து இந்தப் பொல்லாத உலகத்தின் மற்ற அமைப்புகளும் அழிக்கப்படும். (வெளிப்படுத்துதல் 7:14) பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்துவின் சகோதரர்களே ‘தேவனுடைய அடிமைகள்’ ஆவர். (1 பேதுரு 2:9, 16) ஆகையால், மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும்போது, கிறிஸ்துவின் சகோதரர்கள் முத்திரையிடப்படுவது முடிவடைந்திருக்கும் என்பதை இந்தத் தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டுகிறது. இருந்தபோதிலும், அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ஆரம்ப முத்திரையைப் பெறுவதைக் குறித்தும் மற்ற சில பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றன. எனவே, சில சமயங்களில் நாம் ஆரம்ப முத்திரையிடுதலைக் குறித்தும் சில சமயங்களில் முடிவான முத்திரையிடுதலைக் குறித்தும் பேசுகிறோம். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
‘முத்திரையிடுதல்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தைக் குறித்து முதலில் சிந்திக்கலாம். பூர்வ காலங்களில் ஆவணங்களோ அது போன்ற மற்றவையோ எவ்வாறு முத்திரையிடப்பட்டன, ஏன் முத்திரையிடப்பட்டன என்பதைக் கவனியுங்கள். ஆவணம் திறந்துவிடாமல் அதை உறுதியாகப் பிடித்துக்கொள்வதற்கு சிறு களிமண் துண்டுகளை அதன்மீது ஒட்டுவார்கள்; அவற்றின்மேல் ஒரு கருவியைக் கொண்டு முத்திரைப் பொறிப்பார்கள். களிமண்ணில் பொறிக்கப்பட்ட முத்திரையை வைத்து அந்த ஆவணத்தின் உரிமையாளரை அல்லது அதன் சொந்தக்காரரைத் தெரிந்துகொள்ள முடியும்.—1 இராஜாக்கள் 21:8; யோபு 14:17.
பவுல் பரிசுத்த ஆவியை முத்திரைக்கு ஒப்பிட்டு இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நீங்களும் நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்பதை உறுதிப்படுத்தியவரும் நம்மை அபிஷேகம் செய்தவரும் தேவனே. நம்மீது தம்முடைய முத்திரையையும் அவர் பதித்திருக்கிறார்; அதோடு வரவிருக்கும் காரியத்திற்கு அடையாளமாய் இருக்கிற தம் ஆவியைத் தந்து நம் இருதயங்களை நிரப்பியிருக்கிறார்.” (2 கொரிந்தியர் 1:21, 22, NW) எனவே, இந்தக் கிறிஸ்தவர்கள் தமக்குச் சொந்தமானவர்கள் என்பதை தெரிவிப்பதற்காக யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியைக் கொண்டு இவர்களை அபிஷேகம் செய்கிறார்.
இருந்தபோதிலும், அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இரண்டு கட்டங்களில் முத்திரையிடப்படுகின்றனர். ஆரம்ப முத்திரை முடிவான முத்திரையோடு (1) நோக்கத்திலும் (2) காலத்திலும் வேறுபடுகிறது. அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் அங்கத்தினராக ஒருவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள இந்த ஆரம்ப முத்திரை உதவுகிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு முத்திரையிடப்பட்ட இந்நபர் தன்னுடைய உத்தமத்தன்மையை முழுமையாகக் காட்டியிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த இந்த முடிவான முத்திரை உதவுகிறது. முடிவான முத்திரையைப் பெறும்போதுதான், அபிஷேகம் செய்யப்பட்ட அந்நபரின் நெற்றியில் அந்த முத்திரை நிரந்தரமாக பதிக்கப்படுகிறது; அவர் சோதிக்கப்பட்டு, உண்மையுள்ளவராக நிரூபித்திருக்கிற ‘தேவனுடைய அடிமை’ என்பதற்கு அந்த முத்திரை உறுதியான நிரூபணத்தை அளிக்கிறது. வெளிப்படுத்துதல் ஏழாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள முத்திரையிடுதல் இந்த முடிவான முத்திரையிடுதலைத்தான் குறிக்கிறது.—வெளிப்படுத்துதல் 7:3.
எந்தக் காலப்பகுதியில் ஒருவர் ஆரம்ப முத்திரையைப் பெறுகிறார் என்பதைக் குறித்து அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.’ (எபேசியர் 1:13, 14) அநேக சந்தர்ப்பங்களில், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நற்செய்தியைக் கேட்டு, கிறிஸ்துவில் விசுவாசம் வைத்த சிறிது காலத்திலேயே முத்திரையிடப்பட்டார்கள் என்பதாக பைபிள் பதிவு காட்டுகிறது. (அப்போஸ்தலர் 8:15-17; 10:44) இவ்வாறு முத்திரையிடுவது கடவுள் அவர்களை அங்கீகரித்திருக்கிறார் என்பதைக் காட்டியது. ஆனாலும், கடவுள் அவர்களை நிரந்தரமாக அங்கீகரித்துவிட்டார் என அது காட்டவில்லை. ஏன் அப்படிச் சொல்கிறோம்?
அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் “மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரை” பெற்றதாக பவுல் குறிப்பிட்டார். (எபேசியர் 4:30) ஆரம்ப முத்திரையைப் பெற்று அநேக ஆண்டுகள் சென்ற பிறகுதான் முடிவான முத்திரையைப் பெறுவார்கள் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்ட நாளிலிருந்து தங்களுடைய மாம்ச உடலைவிட்டு ‘மீட்கப்படும் நாள்’ வரையாக, அதாவது தங்களுடைய மரணம் வரையாக, உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பது அவசியம். (ரோமர் 8:23; பிலிப்பியர் 1:23; 2 பேதுரு 1:10) எனவே, தன்னுடைய அந்திம காலத்தில்தான் பவுலால் இப்படிச் சொல்ல முடிந்தது: “ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது.” (2 தீமோத்தேயு 4:6-8) மேலுமாக, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய சபையிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.”—வெளிப்படுத்துதல் 2:10; 17:14.
ஆரம்ப முத்திரையிடுதலுக்கும் முடிவான முத்திரையிடுதலுக்கும் இடையே கால இடைவெளி இருக்க வேண்டுமென்பதற்குக் கூடுதல் ஆதாரத்தை ‘கிரீடம்’ என்ற வார்த்தை அளிக்கிறது. ஏன்? பூர்வ காலங்களில், ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரருக்கு கிரீடம் சூட்டுவது வழக்கமாக இருந்தது. கிரீடத்தைப் பெறுவதற்கு, அவர் அந்தப் பந்தயத்தில் கலந்துகொண்டால் மட்டுமே போதாது. வெற்றிக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைவரை விடாமல் ஓட வேண்டும். அதைப்போலவே, அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் முடிவு வரையாக, அதாவது ஆரம்ப முத்திரைப் பெற்றதிலிருந்து கடைசி முத்திரையைப் பெறும் வரையாக, நிலைத்திருந்தால்தான் பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்க்கையால் கிரீடம் சூட்டப்படுவார்கள்.—மத்தேயு 10:22; யாக்கோபு 1:12.
ஆரம்ப முத்திரையைப் பெற்ற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் மீதியானோர் எப்பொழுது தங்களுடைய கடைசி முத்திரையைப் பெறுவார்கள்? மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன், பூமியில் இன்னும் மீந்திருப்பவர்கள் ‘தங்கள் நெற்றிகளில்’ முத்திரையிடப்படுவார்கள். உபத்திரவத்தின் நான்கு காற்றுகள் அவிழ்த்துவிடப்படும்போது, ஆவிக்குரிய இஸ்ரவேலர்களில் சிலர் பூமியில் இன்னும் உயிருடன் இருந்தாலும், அவர்கள் அனைவருமே முடிவான முத்திரையைப் பெற்றிருப்பார்கள். அதன்பிறகே, அவர்களுடைய பூமிக்குரிய வாழ்க்கை முடிவுக்கு வரும்.