ரோமருக்குக் கடிதம்
6 அப்படியானால், நாம் என்ன சொல்வோம்? அளவற்ற கருணை அதிகமதிகமாகக் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து பாவம் செய்யலாமா? 2 கூடவே கூடாது! பாவத்தைப் பொறுத்தவரை நாம் இறந்துவிட்டதால்,+ இனி எப்படிப் பாவ வாழ்க்கை நடத்திக்கொண்டே இருக்க முடியும்?+ 3 கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் எடுத்த+ நாம் எல்லாரும் அவருடைய மரணத்துக்குள் ஞானஸ்நானம் எடுத்தோம்+ என்பது உங்களுக்குத் தெரியாதா? 4 பரலோகத் தகப்பனின் வல்லமையால்* கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டார். அதேபோல், நாமும் புதிய வாழ்வு வாழ்வதற்காக+ அவருடைய மரணத்துக்குள் ஞானஸ்நானம் எடுத்து அவரோடுகூட அடக்கம் செய்யப்பட்டோம்.+ 5 நாம் அவரைப் போல இறந்து அவரோடு ஒன்றுபட்டால்,+ அவரைப் போல உயிருடன் எழுந்து நிச்சயம் அவரோடு ஒன்றுபடுவோம்.+ 6 நம்முடைய பாவ உடல் நம்மேல் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக,+ நம்முடைய பழைய சுபாவம் அவரோடு மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டது என்று நமக்குத் தெரியும்.+ அதனால் இனிமேல் நாம் பாவத்துக்கு அடிமைகளாக இருக்க மாட்டோம்.+ 7 ஏனென்றால், இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறான்.*
8 நாம் கிறிஸ்துவோடு இறந்திருந்தோம் என்றால், அவரோடு வாழ்வதும் நிச்சயம். 9 ஏனென்றால், இப்போது உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிற கிறிஸ்து+ இனி இறப்பதில்லை+ என்று நமக்குத் தெரியும். மரணம் இனிமேல் அவருடைய எஜமானாக இருக்காது. 10 அவர் இறந்தார், பாவத்தைப் போக்குவதற்காக எல்லா காலத்துக்கும் ஒரேமுறை இறந்தார்.+ ஆனால், இப்போது உயிர்வாழ்கிறார், கடவுளுக்காக உயிர்வாழ்கிறார். 11 அதேபோல் நீங்களும் பாவத்தைப் பொறுத்தவரை இறந்தவர்களாகவும், கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுளுக்காக உயிர்வாழ்கிறவர்களாகவும் உங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.+
12 அதனால், உங்களுடைய உடலின் ஆசைகளுக்குப் பாவம் உங்களை அடிமைப்படுத்தி, சாவுக்குரிய உங்கள் உடலில் தொடர்ந்து ராஜாவாக ஆட்சி செய்ய அனுமதிக்காதீர்கள்.+ 13 உங்களுடைய உடலை* அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்துக்கு அர்ப்பணிக்காமல், நீதியின் ஆயுதங்களாகக் கடவுளுக்கு அர்ப்பணியுங்கள். செத்த நிலையிலிருந்து உயிர் பெற்றிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து உங்களையே அவருக்கு அர்ப்பணியுங்கள்.+ 14 பாவம் உங்கள் எஜமானாக இருக்க அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் திருச்சட்டத்தின்கீழ் இல்லாமல்+ அளவற்ற கருணையின்கீழ் இருக்கிறீர்கள்.+
15 அப்படியானால் என்ன சொல்வது? நாம் திருச்சட்டத்தின்கீழ் இல்லாமல் அளவற்ற கருணையின்கீழ் இருக்கிறோம் என்பதற்காகப் பாவம் செய்யலாமா?+ கூடவே கூடாது! 16 யாருக்கு உங்களை அர்ப்பணித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அவருக்குத்தான் நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அதனால், நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தால்+ மரணமடைவீர்கள்,+ கீழ்ப்படிதலுக்கு அடிமைகளாக இருந்தால்+ நீதிமான்களாவீர்கள். 17 முன்பு நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தாலும், நீங்கள் எந்தப் போதனையிடம்* ஒப்படைக்கப்பட்டீர்களோ அந்தப் போதனைக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்தீர்கள்; அதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். 18 நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதால்,+ நீதிக்கு அடிமைகளானீர்கள்.+ 19 உங்களுடைய பலவீனத்தின்* காரணமாக எளிய வார்த்தைகளில் நான் உங்களிடம் பேசுகிறேன். அக்கிரமச் செயல்களைச் செய்வதற்காக உங்களுடைய உடலுறுப்புகளை அசுத்தத்துக்கும் அக்கிரமத்துக்கும் அடிமைகளாக முன்பு அர்ப்பணித்தீர்கள். ஆனால், இப்போது பரிசுத்த செயல்களைச் செய்வதற்காக உங்களுடைய உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக அர்ப்பணியுங்கள்.+ 20 ஏனென்றால், நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தபோது நீதிக்குக் கட்டுப்பட்டவர்களாக இல்லை.
21 அப்போது செய்த செயல்களால் உங்களுக்கு என்ன பலன்கள் கிடைத்தன? இப்போது அவற்றை நினைத்து வெட்கப்படுகிறீர்கள். அவை மரணத்துக்கு வழிநடத்துகின்றன.+ 22 ஆனாலும், நீங்கள் இப்போது பாவத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு கடவுளுக்கு அடிமைகளாகி இருப்பதால், பரிசுத்த வாழ்க்கையைப் பலனாகப் பெற்றிருக்கிறீர்கள்;+ அது முடிவில்லாத வாழ்வுக்கு வழிநடத்துகிறது.+ 23 பாவத்தின் சம்பளம் மரணம்;+ நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம்+ கடவுள் தரும் அன்பளிப்போ முடிவில்லாத வாழ்வு.+