‘மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிய’ மற்றவர்களுக்கு உதவுதல்
1 யெகோவா விரும்பும் விதத்தில் அவரை வணங்க, கீழ்ப்படிதல் மிக முக்கியம். (உபா. 12:28; 1 பே. 1:14-16) வெகுசீக்கிரத்தில் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு, ‘தேவனை அறியாதவர்கள் மீதும் . . . சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் மீதும்’ வரப்போகிறது. (2 தெ. 1:7) எனவே, கடவுளுடைய வார்த்தையிலுள்ள போதனைகளுக்கு ‘மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிய’ மற்றவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?—ரோ. 6:17.
2 விசுவாசத்தையும் அன்பையும் வளர்த்துக்கொள்ள உதவுதல்: கீழ்ப்படிதலுக்கும் விசுவாசத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை பைபிள் காட்டுகிறது. ‘அநாதி தேவனுடைய கட்டளையின்படி . . . விசுவாசத்திற்குக் கீழ்ப்படியுமாறு’ அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (ரோ. 16:25) எபிரெயர் 11-ம் அதிகாரம் முழுவதிலும், விசுவாசத்தில் சிறந்து விளங்கிய ஏராளமானவர்களுடைய உதாரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன; இவர்களில் பெரும்பாலோர் யெகோவாவின் சித்தத்திற்கு இசைய நடந்துகொண்டவர்கள். (எபி. 11:7, 8, 17) மறுபட்சத்தில், கீழ்ப்படியாமை அவிசுவாசத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. (யோவா. 3:36; எபி. 3:18, 19) கடவுளுடைய வார்த்தையை உபயோகிப்பதில் நம்முடைய திறமையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான், கீழ்ப்படிதலை வெளிக்காட்டும் விதத்தில் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள மற்றவர்களுக்கு நம்மால் உதவ முடியும்.—2 தீ. 2:15; யாக். 2:14, 17.
3 கீழ்ப்படிதல், கடவுள் மீதுள்ள அன்போடும் தொடர்புபடுத்தப்படுகிறது. (உபா. 5:10; 11:1, 22; 30:16) ‘நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளல்ல’ என்று 1 யோவான் 5:3 சொல்கிறது. யெகோவாமீது அன்பை வளர்த்துக்கொள்ள மாணாக்கர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? படிப்பு நடத்தும்போது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் யெகோவாவின் குணங்களைப் போற்றிப் பேசுங்கள். அவர்மீது உங்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நன்றியுணர்வைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். யெகோவா தேவனிடம் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்வதைக் குறித்து மாணாக்கரைச் சிந்திக்க வையுங்கள். வேறு எதையும்விட, யெகோவா மீதுள்ள அன்பே, இருதயத்திலிருந்து கீழ்ப்படிய மற்றவர்களைத் தூண்டும், நம்மையும்கூடத் தூண்டும்.—மத். 22:37.
4 நம்முடைய சொந்த முன்மாதிரி: நற்செய்திக்குக் கீழ்ப்படிய மற்றவர்களை ஊக்குவிப்பதற்கான சக்திவாய்ந்த ஒரு வழி, நம்முடைய சொந்த முன்மாதிரிதான். என்றாலும், ‘கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை’ வளர்த்துக்கொள்ள நம் பங்கில் விடாமுயற்சி தேவைப்படுகிறது. (1 இரா. 3:9, NW; நீதி. 4:23) அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பைபிளைத் தொடர்ந்து படிப்பதன் மூலமும், கூட்டங்களுக்கு ஆஜராவதன் மூலமும் உங்களுடைய இருதயத்திற்கு ஆன்மீக உணவை ஊட்டுங்கள். (சங். 1:1, 2; எபி. 10:24, 25) உண்மை வணக்கத்தில் ஒன்றுபட்டிருப்பவர்களோடு சகவாசம் வைத்துக்கொள்ள முயற்சியுங்கள். (நீதி. 13:20) உங்களுடைய பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டுமென்ற உள்ளப்பூர்வ விருப்பத்தோடு வெளி ஊழியத்தில் தவறாமல் ஈடுபடுங்கள். நல்ல இருதயத்தை வளர்த்துக்கொள்ள உதவுமாறு யெகோவா தேவனிடம் ஜெபியுங்கள். (சங். 86:11) உங்களுடைய மனதைக் கெடுக்கும் காரியங்களை, அதாவது ஒழுக்கயீனமான அல்லது வன்முறை நிறைந்த பொழுதுபோக்குகளை தவிருங்கள். கடவுளோடு நெருங்கிச் செல்லவும் அவருடனுள்ள உறவை மேன்மேலும் பலப்படுத்தவும் உதவுகிற காரியங்களையே எப்போதும் செய்யுங்கள்.—யாக். 4:7, 8.
5 யெகோவா, தம்முடைய ஜனங்கள் தம் வார்த்தைக்குச் செவிகொடுத்தால் ஆசீர்வாதங்களைப் பொழியப்போவதாக அன்று உறுதிப்படுத்தினார். (உபா. 28:1, 2) அதேபோல் இன்றும் ‘தமக்குக் கீழ்ப்படிகிறவர்களை’ அவர் அபரிமிதமாக ஆசீர்வதிக்கிறார். (அப். 5:32) எனவே, நம்முடைய போதனையாலும் முன்மாதிரியாலும் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிய மற்றவர்களுக்கு உதவுவோமாக.
[கேள்விகள்]
1. யெகோவா தம்முடைய வணக்கத்தாரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்?
2. பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவது ஏன் அவசியம்?
3. (அ) கீழ்ப்படிதல் எவ்வாறு அன்போடு சம்பந்தப்பட்டிருக்கிறது? (ஆ) யெகோவாமீது அன்பை வளர்த்துக்கொள்ள பைபிள் மாணாக்கர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
4. (அ) நம்முடைய முன்மாதிரி ஏன் முக்கியம்? (ஆ) ‘கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை’ வளர்த்துக்கொள்ள நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
5. கீழ்ப்படிகிறவர்கள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்?