கலாத்தியருக்குக் கடிதம்
4 நான் சொல்வது என்னவென்றால், வாரிசாக இருப்பவன் எல்லாவற்றுக்கும் எஜமானாக இருந்தாலும், சின்னப் பிள்ளையாக இருக்கும்வரை அவனுக்கும் அடிமைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 2 அவனுடைய அப்பா குறித்திருக்கும் நாள் வரும்வரை அவன் தன்னுடைய மேற்பார்வையாளர்களுக்கும் வீட்டு நிர்வாகிகளுக்கும் கீழ்ப்பட்டுதான் இருப்பான். 3 அதேபோல், நாமும் குழந்தைகளாக இருந்தபோது இந்த உலகத்தின் அடிப்படைக் காரியங்களுக்கு அடிமையாக இருந்தோம்.+ 4 ஆனால் குறித்த காலம் வந்தபோது, கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகத்துக்கு அனுப்பினார். அந்த மகன் ஒரு பெண்ணிடம் பிறந்து+ திருச்சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தார்.+ 5 திருச்சட்டத்தின்கீழ் இருப்பவர்களை விலைகொடுத்து மீட்பதற்காகவும்+ அதன் மூலம் நம்மை மகன்களாகத் தத்தெடுப்பதற்காகவும்தான் கடவுள் அவரை அனுப்பினார்.+
6 இப்போது நீங்கள் மகன்களாக இருப்பதால், கடவுள் தன்னுடைய மகனுக்குக் கொடுத்த சக்தியை+ நம்முடைய இதயங்களுக்குள் அனுப்பியிருக்கிறார்.+ அந்தச் சக்தி “அபா,* தகப்பனே!” என்று கூப்பிடுகிறது.+ 7 அதனால், இனி நீங்கள் அடிமைகளாக இல்லாமல் மகன்களாக இருக்கிறீர்கள். நீங்கள் மகன்கள் என்றால், வாரிசுகளாகவும் இருக்கிறீர்கள்.+ இது கடவுளுடைய செயல்.
8 ஆனாலும், உங்களுக்குக் கடவுளைப் பற்றித் தெரியாமல் இருந்த காலத்தில் கடவுளாக இல்லாதவற்றுக்கு அடிமைகளாக இருந்தீர்கள். 9 ஆனால், இப்போது உங்களுக்குக் கடவுளைப் பற்றித் தெரியும்; சொல்லப்போனால், கடவுளுக்கு உங்களைப் பற்றித் தெரியும். அப்படியிருக்கும்போது, பலவீனமாகவும் வெறுமையாகவும்+ இருக்கிற அடிப்படைக் காரியங்களுக்கு நீங்கள் ஏன் திரும்பிப்போகிறீர்கள்? பழையபடி அவற்றுக்கு ஏன் அடிமையாவதற்கு விரும்புகிறீர்கள்?+ 10 நாட்களையும் மாதங்களையும் காலங்களையும் வருஷங்களையும் நுணுக்கமாக அனுசரிக்கிறீர்களே.+ 11 உங்களுக்காக நான் பாடுபட்டதெல்லாம் வீணாகிவிட்டதோ என்று பயப்படுகிறேன்.
12 சகோதரர்களே, ஒருகாலத்தில் நானும் உங்களைப் போலத்தான் இருந்தேன்.+ அதனால் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்: நீங்கள் இப்போது என்னைப் போல் ஆகுங்கள். நீங்கள் எனக்கு எந்த அநியாயமும் செய்யவில்லை. 13 ஆனால் உங்களுக்குத் தெரிந்தபடி, எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால்தான், முதன்முதலில் உங்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 14 என் உடல்நலக் குறைவு உங்களுக்கு ஒரு சோதனையாக இருந்தபோதிலும், அதற்காக நீங்கள் என்னை அவமதிக்கவோ அருவருக்கவோ* இல்லை. அதற்குப் பதிலாக, ஒரு தேவதூதரை ஏற்றுக்கொள்வது போலவும், கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்வது போலவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள். 15 அப்போது உங்களுக்கு இருந்த சந்தோஷம் இப்போது எங்கே? முடிந்தால், உங்கள் கண்களைக்கூட எனக்காகப் பிடுங்கிக் கொடுத்திருப்பீர்களே.+ 16 நான் உங்களிடம் உண்மையைச் சொல்வதால் உங்களுக்கு எதிரியாகிவிட்டேனா? 17 சிலர் உங்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்குத் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். நல்ல எண்ணத்தில் அப்படிச் செய்யாமல், அவர்கள் பின்னால் நீங்கள் ஆர்வமாக வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்னிடமிருந்து உங்களைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். 18 யாராவது நல்ல எண்ணத்தில் உங்கள்மேல் ஆர்வம் காட்டினால் நல்லதுதான். ஆனால், நான் உங்களோடு இருக்கிற சமயத்தில் மட்டுமல்ல, எல்லா சமயத்திலும் அப்படி ஆர்வம் காட்ட வேண்டும். 19 சின்னப் பிள்ளைகளே,+ கிறிஸ்து உங்களுக்குள் உருவாகும்வரை உங்களுக்காக நான் மறுபடியும் பிரசவ வேதனைப்படுகிறேன். 20 உங்களை நினைக்கும்போது எனக்குக் குழப்பமாக இருக்கிறது. அதனால் இப்போதே உங்களிடம் வந்து இன்னும் சாந்தமாகப் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
21 திருச்சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிறவர்களே, இதை எனக்குச் சொல்லுங்கள்: திருச்சட்டம் சொல்வதை நீங்கள் கேட்பதில்லையா? 22 உதாரணமாக, ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்,+ இன்னொருவன் சுதந்திரப் பெண்ணிடம் பிறந்தவன்.+ 23 அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன் இயல்பான முறையில் பிறந்தான்,+ சுதந்திரப் பெண்ணிடம் பிறந்தவனோ கடவுளுடைய வாக்குறுதியால் பிறந்தான்.+ 24 இவற்றுக்கு அடையாள அர்த்தம் இருக்கலாம்;* ஏனென்றால், இந்தப் பெண்கள் இரண்டு ஒப்பந்தங்களைக் குறிக்கிறார்கள். அவற்றில் ஒரு ஒப்பந்தம் சீனாய் மலையில்+ செய்யப்பட்டது, இந்த ஒப்பந்தத்துக்கு உட்பட்ட எல்லாரும் அடிமைகளாக இருக்கிறார்கள்; இந்த ஒப்பந்தம் ஆகார் என்பவள்தான். 25 அரேபியாவில் இருக்கிற சீனாய் மலையை+ ஆகார் குறிக்கிறாள்; இப்போது இருக்கிற எருசலேம் ஆகாருக்கு ஒப்பாக இருக்கிறாள். ஏனென்றால், இவள் தன் பிள்ளைகளோடுகூட அடிமையாக இருக்கிறாள். 26 ஆனால், மேலான எருசலேம் சுதந்திரமாக இருக்கிறாள், அவள்தான் நமக்குத் தாய்.
27 ஏனென்றால், “குழந்தை பெறாதவளே, சந்தோஷப்படு. பிரசவ வேதனைப்படாதவளே, சந்தோஷமாக ஆரவாரம் செய்; கணவனோடு வாழ்கிறவளைவிட கைவிடப்பட்டவளுக்கே ஏராளமான பிள்ளைகள் இருக்கிறார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 28 சகோதரர்களே, நாம் ஈசாக்கைப் போல வாக்குறுதியால் பிறந்த பிள்ளைகளாக இருக்கிறோம்.+ 29 ஆனால், இயல்பான முறையில் பிறந்தவன் கடவுளுடைய சக்தியால் பிறந்தவனை அப்போது துன்புறுத்தியது போலவே+ இப்போதும் நடந்து வருகிறது.+ 30 இருந்தாலும், வேதவசனம் என்ன சொல்கிறது? “அடிமைப் பெண்ணையும் அவளுடைய மகனையும் துரத்திவிடுங்கள். அடிமைப் பெண்ணின் மகன் சுதந்திரப் பெண்ணின் மகனோடு சேர்ந்து ஒருபோதும் வாரிசாக இருக்க முடியாது” என்று சொல்கிறது.+ 31 அதனால் சகோதரர்களே, நாம் அடிமைப் பெண்ணின் பிள்ளைகளாக இல்லாமல் சுதந்திரப் பெண்ணின் பிள்ளைகளாக இருக்கிறோம்.