யாருடைய அங்கீகாரத்தை விரும்புகிறீர்கள்?
“உங்களுடைய உழைப்பையும் தன்னுடைய பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் கிடையாது.”—எபி. 6:10.
1. நமக்கு இருக்கும் இயல்பான ஆசை என்ன?
இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: உங்களுக்கு நன்றாகத் தெரிந்த, உங்கள் மதிப்புமரியாதையைச் சம்பாதித்த ஒருவர், உங்களுடைய பெயரை மறந்துவிடுகிறார்; ஏன், உங்களை அவருக்கு அடையாளமே தெரியவில்லை. இப்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? ரொம்பக் கஷ்டமாக இருக்கும், இல்லையா? ஏனென்றால், மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசை இயல்பாகவே நமக்கு இருக்கிறது. ஆனால், மற்றவர்கள் நம்மை வெறுமனே அடையாளம் கண்டுகொண்டால் மட்டும் போதுமா? இல்லை! நாம் எப்படிப்பட்டவர்கள், நாம் என்ன சாதித்திருக்கிறோம் என்பதைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிய வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.—எண். 11:16; யோபு 31:6.
2, 3. மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டுமென்ற இயல்பான ஆசை எப்படி நம்மைத் திசைதிருப்பிவிடலாம்? (ஆரம்பப் படம்)
2 ஆனால், நாம் ஜாக்கிரதையாக இல்லையென்றால், நமக்கு இருக்கும் இந்த இயல்பான ஆசை, நம்மைத் திசைதிருப்பிவிட வாய்ப்பிருக்கிறது. புகழின் உச்சியில் இருக்க வேண்டும், பிரபலமாக ஆக வேண்டுமென்ற ஆசையை நம்மில் திணிக்க சாத்தானுடைய உலகம் விரும்புகிறது. நாம் அதற்கு இணங்கிவிட்டால், நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவுக்குத் தரவேண்டிய மகிமையையும் வணக்கத்தையும் தராமல் போய்விடுவோம்.—வெளி. 4:11.
3 இயேசு வாழ்ந்த நாட்களிலிருந்த மதத் தலைவர்கள் சிலருக்கு, அங்கீகாரத்தைப் பற்றிய தவறான எண்ணம் இருந்தது. அதனால், இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “வேத அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் நீளமான அங்கிகளைப் போட்டுக்கொண்டு திரிய விரும்புகிறார்கள், சந்தைகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஜெபக்கூடங்களில் மிகச் சிறந்த இருக்கைகளிலும் விருந்துகளில் மிக முக்கியமான இடங்களிலும் உட்கார விரும்புகிறார்கள்” என்று சொன்னார். அதோடு, “அவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்” என்றும் எச்சரித்தார். (லூக். 20:46, 47, அடிக்குறிப்பு) இப்போது, வெறுமனே இரண்டு சிறிய காசுகளைக் காணிக்கையாகப் போட்ட ஏழை விதவையைப் பற்றிப் பார்க்கலாம். மற்றவர்கள் தன்னை அங்கீகரிக்க வேண்டுமென்று அந்த விதவை நினைக்காததால், இயேசு அந்த விதவையைப் பாராட்டிப் பேசினார். (லூக். 21:1-4) இதிலிருந்து என்ன தெரிகிறது? அங்கீகாரத்தைப் பற்றிய சரியான கண்ணோட்டம் இயேசுவுக்கு இருந்தது! இந்த விஷயத்தில் இயேசுவுக்கும் மற்றவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! அங்கீகாரம் சம்பந்தமாக நமக்கு எப்படிப்பட்ட எண்ணம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி, அதாவது நமக்கு எப்படிப்பட்ட எண்ணம் இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார் என்பதைப் பற்றி, இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
சிறந்த அங்கீகாரம்
4. எது சிறந்த அங்கீகாரம், ஏன்?
4 எதைச் சிறந்த அங்கீகாரம் என்று சொல்லலாம்? இன்று நிறைய மக்கள், உயர்கல்வி படித்தால்... வியாபாரம் அல்லது பொழுதுபோக்குத் துறையில் சாதித்தால்... மற்றவர்களுடைய கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்க்க முடியுமென்று நினைக்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் சிறந்த அங்கீகாரம் கிடையாது. இதைப் பற்றி பவுல் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்: “இப்போது உங்களுக்குக் கடவுளைப் பற்றித் தெரியும்; சொல்லப்போனால், கடவுளுக்கு உங்களைப் பற்றித் தெரியும். அப்படியிருக்கும்போது பலவீனமாகவும் வெறுமையாகவும் இருக்கிற அடிப்படைக் காரியங்களுக்கு நீங்கள் ஏன் திரும்பிப்போகிறீர்கள்? பழையபடி அவற்றுக்கு ஏன் அடிமையாவதற்கு விரும்புகிறீர்கள்?” (கலா. 4:9) இந்தப் பிரபஞ்சத்தின் உன்னத ஆட்சியாளருக்கு ‘நம்மைப் பற்றித் தெரிந்திருப்பது’ நமக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட ஒரு பாக்கியம்! அதுமட்டுமல்ல, நாம் எப்படிப்பட்டவர்கள் என்று யெகோவாவுக்குத் தெரியும்; அவர் நம்மை நேசிக்கிறார்; அவரோடு நாம் நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். சொல்லப்போனால், அவருடைய நண்பர்கள் என்ற அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் அவர் நம்மைப் படைத்திருக்கிறார்.—பிர. 12:13, 14.
5. கடவுளுக்கு நம்மைப் பற்றித் தெரிய வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
5 மோசேக்கு அந்த அங்கீகாரம் கிடைத்தது. ஒருசமயம் அவர் யெகோவாவிடம், “உங்கள் வழிகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று கெஞ்சிக் கேட்டார். அதற்கு யெகோவா, “நீ கேட்கிறபடி செய்கிறேன். ஏனென்றால், நீ எனக்குப் பிரியமானவன். உன்னை எனக்கு நன்றாகத் தெரியும்” என்று பதிலளித்தார். (யாத். 33:12-17) யெகோவாவுக்கு நம்மைப் பற்றியும் நன்றாகத் தெரியும். அப்படியென்றால், மோசேயைப் போல நாமும் யெகோவாவுடைய நண்பராக ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்? யெகோவாவை நேசித்து, நம்மை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்.—1 கொரிந்தியர் 8:3-ஐ வாசியுங்கள்.
6, 7. யெகோவாவோடு நமக்கிருக்கும் நட்பை இழந்துவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? விளக்கவும்.
6 யெகோவாவோடு நமக்கிருக்கும் இந்த அருமையான நட்பை நாம் எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும். கலாத்தியாவில் இருந்த ஆரம்பக் கால கிறிஸ்தவர்களைப் போலவே, இந்த உலகத்தின் அங்கீகாரத்தைப் பெறுவது உட்பட, இந்த உலகத்தின் ‘பலவீனமான வெறுமையான அடிப்படைக் காரியங்கள்’ எல்லாவற்றுக்குமே அடிமையாவதை நாம் நிறுத்த வேண்டும். (கலா. 4:9) கலாத்தியாவில் இருந்த கிறிஸ்தவர்கள் கடவுளைப் பற்றித் தெரிந்துவைத்திருந்தார்கள்; கடவுளும் அவர்களை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். ஆனால், அவர்கள் மறுபடியும் வெறுமையான காரியங்களுக்குத் ‘திரும்பிப்போகிறார்கள்’ என்று பவுல் சொன்னார். வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘எதுக்குமே பிரயோஜனமில்லாத காரியங்களுக்கு ஏன் மறுபடியும் திரும்பிபோறீங்க, அதுக்கு ஏன் அடிமையாகுறீங்க?’ என்று அவர்களைக் கேட்டார்.
7 அந்த ஆரம்பக் கால கிறிஸ்தவர்களுக்கு நடந்ததைப் போலவே நமக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது. நாம் சத்தியத்துக்கு வந்தபோது, பவுலைப் போலவே நாமும் சாத்தானுடைய உலகத்தில் கிடைத்த பேர்புகழைத் தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கலாம். (பிலிப்பியர் 3:7, 8-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை, உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை நமக்குக் கிடைத்திருக்கலாம். அல்லது, நல்ல வேலையோ, கைநிறைய சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளோ நமக்குக் கிடைத்திருக்கலாம். இல்லையென்றால், இசையிலோ விளையாட்டுத் துறையிலோ நாம் திறமைசாலிகளாக இருந்திருக்கலாம்; அதன் மூலம், பிரபலமாவதற்கும் பணக்காரர்களாக ஆவதற்குமான வாய்ப்புகள் நம்மைத் தேடி வந்திருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் நாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு வந்திருக்கிறோம். (எபி. 11:24-27) ஆனால், நாம் விட்டு வந்த வாய்ப்புகளை நினைத்து ஏங்குவது ஞானமாக இருக்குமா? அந்த வாய்ப்புகளை நழுவவிடாமல் இருந்திருந்தால், வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று யோசிப்பது சரியாக இருக்குமா? ஒருவேளை நாம் அப்படி யோசித்தால், இந்த உலகத்தின் ‘பலவீனமான வெறுமையான காரியங்கள்’ என்று எவற்றை நாம் ஒதுக்கித்தள்ளினோமோ, அவற்றுக்கே நாம் மறுபடியும் திரும்பிப்போய் விடுவோம்.a—அடிக்குறிப்பைப் பாருங்கள்.
யெகோவாவின் அங்கீகாரம் வேண்டுமென்ற விருப்பத்தைப் பலப்படுத்துங்கள்
8. யெகோவாவின் அங்கீகாரம் வேண்டுமென்ற விருப்பத்தைப் பலப்படுத்திக்கொள்ள எது நமக்கு உதவும்?
8 இந்த உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமென்ற ஆசையை ஒதுக்கித்தள்ளுமளவுக்கு, யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமென்ற ஆசை நமக்குப் பலமாக இருக்க வேண்டும். அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? இரண்டு முக்கியமான உண்மைகளை மனதில் வைக்க வேண்டும். ஒன்று, தனக்கு உண்மையோடு சேவை செய்பவர்களை யெகோவா எப்போதும் அங்கீகரிக்கிறார். (எபிரெயர் 6:10-ஐ வாசியுங்கள்; எபி. 11:6) தன்னுடைய ஒவ்வொரு ஊழியரையும் யெகோவா ரொம்ப உயர்வாக மதிக்கிறார்; அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதை ‘அநீதியான’ செயலாகக் கருதுகிறார். “தனக்குச் சொந்தமானவர்களை” யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார். (2 தீ. 2:19) ‘நீதிமான்களின் பாதையை அவர் தெரிந்துவைத்திருக்கிறார்.’ அதோடு, சோதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்றும் தெரிந்துவைத்திருக்கிறார்.—சங். 1:6; 2 பே. 2:9.
9. யெகோவா தன் மக்களை எப்படி அங்கீகரித்திருக்கிறார்? உதாரணம் கொடுங்கள்.
9 சிலசமயங்களில், யெகோவா தன்னுடைய மக்களை விசேஷமான விதங்களில் அங்கீகரித்திருக்கிறார். (2 நா. 20:20, 29) உதாரணத்துக்கு, பார்வோனுடைய சக்திவாய்ந்த படை இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு போனபோது யெகோவா அவர்களைச் செங்கடலில் காப்பாற்றியதைப் பற்றி யோசித்துப்பாருங்கள்! (யாத். 14:21-30; சங். 106:9-11) அந்தச் சம்பவம் அந்தளவுக்கு பிரமிப்பாக இருந்ததால்தான், 40 வருஷம் கழித்தும் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அதை ஞாபகம் வைத்திருந்தார்கள். (யோசு. 2:9-11) பூர்வ காலத்தில் தன் மக்களை யெகோவா எப்படியெல்லாம் நேசித்தார் என்பதைப் பற்றியும், அவர்களைக் காப்பாற்றுவதற்குத் தன்னுடைய வல்லமையை எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதைப் பற்றியும் யோசித்துப்பார்க்கும்போது, எதிர்காலத்தில் மாகோகின் கோகு தாக்கும்போதும் யெகோவா கண்டிப்பாக நம்மைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படும். (எசே. 38:8-12) இந்த உலகத்தின் அங்கீகாரத்துக்குப் பதிலாக கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற முயற்சி செய்ததை நினைத்து அந்தச் சமயத்தில் நாம் சந்தோஷப்படுவோம்.
10. நாம் மனதில் வைக்க வேண்டிய இன்னொரு உண்மை என்ன?
10 நாம் மனதில் வைக்க வேண்டிய இரண்டாவது உண்மை: நாம் எதிர்பார்க்காத விதங்களில் யெகோவா நம்மை அங்கீகரிக்கலாம். மற்றவர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக நல்ல செயல்களைச் செய்யும் ஆட்களுக்கு யெகோவாவிடமிருந்து எந்தப் பலனும் கிடைக்காது. ஏனென்றால், இயேசு சொன்னபடி அவர்கள் ஆசைப்பட்டது அவர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. அதாவது, அவர்கள் எதிர்பார்த்த புகழ் அவர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. (மத்தேயு 6:1-5-ஐ வாசியுங்கள்.) ஆனால், மற்றவர்களுக்குத் தாங்கள் செய்த நல்ல செயல்களுக்கான அங்கீகாரம் கிடைக்காத ஆட்களை யெகோவா கவனிக்கிறார். “எல்லாவற்றையும் பார்க்கிற” கடவுள், அவர்கள் செய்த செயல்களுக்கான பலன்களைக் கொடுக்கிறார். சிலசமயங்களில், எதிர்பார்க்காத விதங்களில் தன்னுடைய ஊழியர்களுக்குப் பலன் கொடுக்கிறார். அதற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
தாழ்மையுள்ள பெண்ணுக்குக் கிடைத்த எதிர்பார்க்காத அங்கீகாரம்
11. மரியாளை யெகோவா எப்படி அங்கீகரித்தார்?
11 தன்னுடைய மகன் இயேசுவை பெற்றெடுப்பதற்கு, தாழ்மையுள்ள இளம் பெண்ணான மரியாளை யெகோவா தேர்ந்தெடுத்தார். நாசரேத் என்ற ஒரு சின்ன ஊரில்தான் மரியாள் வாழ்ந்தார். எருசலேமிலிருந்தும் அங்கிருந்த அழகான ஆலயத்திலிருந்தும் அந்த ஊர் ரொம்பத் தூரத்தில் இருந்தது. (லூக்கா 1:26-33-ஐ வாசியுங்கள்.) யெகோவா ஏன் மரியாளைத் தேர்ந்தெடுத்தார்? காபிரியேல் தூதன் மரியாளைச் சந்தித்தபோது, “நீ கடவுளுக்குப் பிரியமானவள்” என்று அவளிடம் சொன்னார். மரியாளுக்கு யெகோவாவோடு நெருக்கமான பந்தம் இருந்தது. தன்னுடைய சொந்தக்காரரான எலிசபெத்திடம் அவர் பேசியதிலிருந்து இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. (லூக். 1:46-55) மரியாளுடைய உண்மைத்தன்மையை யெகோவா ரொம்பக் காலமாகக் கவனித்து வந்திருந்தார். அதற்குப் பலனாக, அவர் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத விதத்தில் அவரை அங்கீகரித்தார்.
12, 13. இயேசு பிறந்தபோதும், 40 நாட்கள் கழித்து மரியாள் அவரை ஆலயத்துக்குக் கொண்டுபோனபோதும் இயேசு எப்படி மகிமைப்படுத்தப்பட்டார்?
12 இயேசு பிறந்தபோது, அவருடைய பிறப்பைப் பற்றி முதலில் யாரிடம் யெகோவா தெரியப்படுத்தினார்? எருசலேமிலும் பெத்லகேமிலும் இருந்த முக்கியமான அதிகாரிகளிடமும் ஆளுநர்களிடமுமா? இல்லவே இல்லை! பெத்லகேமுக்கு வெளியே இருந்த வயல்வெளிகளில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் தேவதூதர்களை அனுப்பி இந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னார். (லூக். 2:8-14) பிறகு, அந்த மேய்ப்பர்கள் குழந்தை இயேசுவைப் போய்ப் பார்த்தார்கள். (லூக். 2:15-17) இந்த விதத்தில் இயேசுவை யெகோவா மகிமைப்படுத்தியதைப் பார்த்து யோசேப்பும் மரியாளும் கண்டிப்பாக ஆச்சரியப்பட்டிருப்பார்கள். யெகோவா செயல்படும் விதமும் சாத்தான் செயல்படும் விதமும் ரொம்பவே வித்தியாசப்படுகிறது. இயேசுவையும் அவருடைய பெற்றோரையும் சந்திப்பதற்காகச் சாத்தான் ஜோதிடர்களை அனுப்பினான். அதனால், இயேசுவின் பிறப்பைப் பற்றி எருசலேமிலிருந்த எல்லாரும் கேள்விப்பட்டார்கள். அது, நிறைய பிரச்சினைகளைக் கொண்டு வந்தது. (மத். 2:3) அப்பாவிக் குழந்தைகள் நிறைய பேர் கொல்லப்பட்டார்கள்.—மத். 2:16.
13 திருச்சட்டத்தின்படி, ஆண் குழந்தை பிறந்து 40 நாட்கள் கழித்து, அந்தக் குழந்தையின் தாய் யெகோவாவுக்குப் பலி கொடுக்க வேண்டும். அதனால், இயேசுவை எடுத்துக்கொண்டு பெத்லகேமிலிருந்து 9 கி.மீ. (6 மைல்) தூரத்திலிருந்த எருசலேமுக்கு யோசேப்போடு மரியாள் போகிறார். (லூக். 2:22-24) போகும் வழியில், “இயேசுவ மகிமைப்படுத்துறதுக்காக, ஆலய குரு ஏதாவது விசேஷமா செய்வாரா?” என்று அவர் யோசித்திருக்கலாம். ஆனால், அவர் எதிர்பார்க்காத விதத்தில் இயேசு மகிமைப்படுத்தப்பட்டார். இயேசுதான் வாக்குக்கொடுக்கப்பட்ட மேசியா அல்லது கிறிஸ்துவாக ஆகப்போகிறார் என்பதை அறிவிக்க, ‘நீதிமானும், பக்தியுள்ளவராகவும்’ இருந்த சிமியோனையும், 84 வயது விதவையான அன்னாளையும் யெகோவா தேர்ந்தெடுத்தார்.—லூக். 2:25-38.
14. மரியாளை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?
14 இப்போது மரியாளின் விஷயத்துக்கு வரலாம். யெகோவா கொடுத்த பொறுப்பை மரியாள் உண்மையோடு செய்ததற்காக, அதாவது இயேசுவை வளர்த்ததற்காகவும் அவரைக் கவனித்துக்கொண்டதற்காகவும், அவருக்குக் கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தை யெகோவா தொடர்ந்து கொடுத்தாரா? கண்டிப்பாக! மரியாள் சொன்ன, செய்த சில விஷயங்களை அவர் பைபிளில் பதிவு செய்திருக்கிறார். இயேசு ஊழியம் செய்த மூன்றரை வருஷ காலப்பகுதியில், அவரோடு சேர்ந்து பயணம் செய்ய மரியாளால் முடியவில்லை என்று தெரிகிறது. விதவையாக இருந்ததால், அவர் நாசரேத்திலேயே தங்கியிருக்கலாம். அதனால், மற்றவர்களுக்குக் கிடைத்த அருமையான அனுபவங்கள் மரியாளுக்குக் கிடைக்காமல் போனது. ஆனால், இயேசு இறந்த சமயத்தில் மரியாளும் அங்கே இருந்தார். (யோவா. 19:26) அதற்குப் பிறகு, எருசலேமில், இயேசுவின் சீஷர்களோடு மரியாள் இருந்தார். அதாவது, அந்த சீஷர்கள் பெந்தெகொஸ்தே நாளன்று கடவுளுடைய சக்தியைப் பெறுவதற்கு முன்பிருந்தே மரியாள் அவர்களோடு இருந்தார். (அப். 1:13, 14) மற்ற சீஷர்களோடு சேர்த்து மரியாளும் அந்தச் சமயத்தில் அபிஷேகம் செய்யப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை. அப்படியென்றால், இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் என்றென்றும் வாழும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது என்று சொல்லலாம். அவர் உண்மையாக செய்த சேவைக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதம்!
தன் மகனுக்கு யெகோவா கொடுத்த அங்கீகாரம்
15. இயேசு பூமியில் இருந்தபோது, யெகோவா எப்படி அவரை அங்கீகரித்தார்?
15 அன்றிருந்த மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் தன்னை அங்கீகரிக்க அல்லது மகிமைப்படுத்த வேண்டுமென்று இயேசு எதிர்பார்க்கவில்லை. ஆனால், தன்னுடைய அப்பாவிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தபோது இயேசுவுக்கு எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும்! யெகோவா மூன்று முறை பரலோகத்திலிருந்து பேசினார்! அதன் மூலம் தன்னுடைய மகன்மீது தான் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தினார். யோர்தான் ஆற்றில் ஞானஸ்நானம் பெற்று இயேசு வெளியே வந்தபோது, “இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று யெகோவா சொன்னார். (மத். 3:17) அந்தச் சமயத்தில், யோவான் ஸ்நானகர் மட்டும்தான் அந்த வார்த்தைகளைக் கேட்டதாகத் தெரிகிறது. அதற்குப் பிறகு, இயேசு இறப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்பு, இயேசுவைப் பற்றி யெகோவா இப்படிச் சொன்னார்: “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்; இவர் சொல்வதைக் கேளுங்கள்.” (மத். 17:5) இந்தச் சமயத்திலும், இயேசுவின் மூன்று அப்போஸ்தலர்கள் மட்டும்தான் அந்த வார்த்தைகளைக் கேட்டார்கள். பிறகு, இயேசு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, மறுபடியும் பரலோகத்திலிருந்து யெகோவா அவரிடம் பேசினார்.—யோவா. 12:28.
16, 17. யெகோவா எப்படி எதிர்பார்க்காத விதத்தில் இயேசுவை மகிமைப்படுத்தினார்?
16 தெய்வ நிந்தனை செய்பவன் என்ற பழிப்பேச்சோடு தான் சாக வேண்டியிருக்கும் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும், தன்னுடைய விருப்பத்தின்படி அல்ல, யெகோவாவின் விருப்பத்தின்படி எல்லாம் நடக்கட்டும் என்று அவர் ஜெபம் செய்தார். (மத். 26:39, 42) இயேசு, “அவமானத்தைப் பொருட்படுத்தாமல் மரக் கம்பத்தில் வேதனைகளைச் சகித்தார்.” ஏனென்றால், இந்த உலகத்தின் அங்கீகாரத்தை அல்ல, கடவுளிடமிருந்து வரும் அங்கீகாரத்தைத்தான் அவர் விரும்பினார். (எபி. 12:2) கடவுள் அவரை எப்படி அங்கீகரித்தார்?
17 பரலோகத்தில் தன் அப்பாவோடு இருந்தபோது தனக்கிருந்த அதே மகிமையைத் தந்து தன்னை மகிமைப்படுத்தும்படி இயேசு ஜெபம் செய்தார். (யோவா. 17:5) அதைவிட அதிகமாக அவர் எதிர்பார்த்ததாக பைபிளில் எங்கேயும் சொல்லப்படவில்லை. கடவுளுடைய விருப்பத்தைப் பூமியில் நிறைவேற்றியதற்காக, அவர் விசேஷ பலன்களை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர் எதிர்பார்க்காத விதத்தில் யெகோவா அவரை மகிமைப்படுத்தினார். இயேசுவை உயிர்த்தெழுப்பியபோது, “மேலான நிலைக்கு” அவரை உயர்த்தினார். அதுமட்டுமல்ல, அதுவரை யாருமே பெறாத சாவாமையுள்ள ஆவி உடலை யெகோவா அவருக்குத் தந்தார்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (பிலி. 2:9; 1 தீ. 6:16) இயேசு தனக்கு உண்மையாக சேவை செய்ததற்கு, பிரமாண்டமான விதத்தில் யெகோவா அவருக்குப் பலனளித்தார்.
18. இந்த உலகத்திடமிருந்து அங்கீகாரத்தை விரும்பாமல், கடவுளிடமிருந்து அங்கீகாரத்தை நாடுவதற்கு எது நமக்கு உதவும்?
18 இந்த உலகத்தின் அங்கீகாரத்தை விரும்பாமல், கடவுள் கொடுக்கும் அங்கீகாரத்தை நாடுவதற்கு எது நமக்கு உதவும்? தனக்கு உண்மையோடு சேவை செய்பவர்களை யெகோவா எப்போதும் அங்கீகரிக்கிறார் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். அதோடு, பெரும்பாலும் எதிர்பார்க்காத விதங்களில் அவர் பலனளிக்கிறார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. எதிர்பார்க்காத என்னென்ன ஆசீர்வாதங்களை நாம் எதிர்காலத்தில் அனுபவிக்கப் போகிறோம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், அதுவரைக்கும் இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து வரும் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் நாம் சகிக்க வேண்டியிருக்கிறது. இந்த உலகம் அழியப்போவதால், அதனிடமிருந்து கிடைக்கும் எந்தவொரு அங்கீகாரமும் அழியத்தான் போகிறது என்பதை ஞாபகத்தில் வைப்பது நல்லது. (1 யோ. 2:17) நம் அன்பான அப்பா யெகோவா, நம்முடைய உழைப்பையும் அவருடைய பெயருக்காக நாம் காட்டிய அன்பையும் மறக்கவே மாட்டார். ஏனென்றால், அவர் “அநீதியுள்ளவர் கிடையாது.” (எபி. 6:10) நாம் கற்பனைகூட செய்து பார்க்காத விதங்களில் அவர் நம்மை அங்கீகரிப்பார்!
a வேறுசில பைபிள் மொழிபெயர்ப்புகள், “வெறுமையாகவும்” என்ற வார்த்தைக்குப் பதிலாக, “ஒன்றுக்கும் உதவாத,” “பரிதாபத்துக்குரிய,” “இழிவான” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கின்றன.
b இந்த ஆசீர்வாதம் உண்மையிலேயே எதிர்பார்க்காத ஒன்றாக இருந்திருக்கும். ஏனென்றால், எபிரெய வேதாகமத்தில் சாவாமையைப் பற்றி எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.