2 நாளாகமம்
34 யோசியா+ ராஜாவானபோது அவருக்கு எட்டு வயது; அவர் 31 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ 2 யெகோவாவுக்குப் பிரியமான காரியங்களை யோசியா செய்தார். தன்னுடைய மூதாதையான தாவீதின் வழியில் நடந்தார். அதிலிருந்து வலது பக்கமோ இடது பக்கமோ விலகவில்லை.
3 ராஜாவான எட்டாம் வருஷத்தில், இன்னும் சின்னப் பையனாக இருந்தபோதே, தன்னுடைய மூதாதையான தாவீதின் கடவுளைத் தேட ஆரம்பித்தார்;+ 12-ஆம் வருஷத்தில், யூதாவிலும் எருசலேமிலும் இருந்த ஆராதனை மேடுகளையும்+ பூஜைக் கம்பங்களையும்* செதுக்கப்பட்ட சிலைகளையும்+ உலோகச் சிலைகளையும் அழித்துப்போட ஆரம்பித்தார்.+ 4 அவருடைய மேற்பார்வையில் பாகால்களின் பலிபீடங்களை மக்கள் இடித்துப்போட்டார்கள். அவற்றின் மேல்பகுதியில் இருந்த தூபபீடங்களை யோசியா உடைத்துப்போட்டார்; பூஜைக் கம்பங்களையும்* செதுக்கப்பட்ட சிலைகளையும் உலோகச் சிலைகளையும் உடைத்து தூள்தூளாக்கி, அவற்றுக்குப் பலி செலுத்திவந்த ஆட்களின் கல்லறைகளில் வீசியெறிந்தார்.+ 5 அங்கே பலி செலுத்திய குருமார்களின் எலும்புகளை அவர்களுடைய பலிபீடங்களிலேயே எரித்துப்போட்டார்.+ இப்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்தப்படுத்தினார்.
6 மனாசே, எப்பிராயீம்,+ சிமியோன் ஆகிய பகுதிகளில் இருந்த நகரங்களில் மட்டுமல்லாமல், நப்தலி பகுதியிலும் அதைச் சுற்றியிருந்த பாழான பகுதிகளிலும் 7 கட்டப்பட்டிருந்த பலிபீடங்களையும் உடைத்துப்போட்டார், பூஜைக் கம்பங்களை* வெட்டிப்போட்டார், செதுக்கப்பட்ட சிலைகளைத்+ தூள்தூளாக நொறுக்கிப்போட்டார். இஸ்ரவேல் தேசமெங்கும் இருந்த தூபபீடங்கள் எல்லாவற்றையும் உடைத்துப்போட்டார்.+ அதன் பின்பு, எருசலேமுக்குத் திரும்பினார்.
8 தேசத்தையும் ஆலயத்தையும் யோசியா ராஜா சுத்தப்படுத்திய பின்பு, தான் ஆட்சி செய்த 18-ஆம் வருஷத்தில் தன்னுடைய கடவுளான யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்க்க+ விரும்பினார்; அதற்காக, அத்சலியாவின் மகன் சாப்பானையும்,+ நகரத் தலைவர் மாசெயாவையும், பதிவாளரான யோவாகாசின் மகன் யோவாவையும் அனுப்பினார். 9 அவர்கள் எல்லாரும் தலைமைக் குரு இல்க்கியாவிடம் வந்து, கடவுளுடைய ஆலயத்துக்காக மக்கள் தந்த காணிக்கை பணத்தைக் கொடுத்தார்கள். வாயிற்காவலர்களாக இருக்கிற லேவியர்கள் இந்தப் பணத்தை மனாசே, எப்பிராயீம் கோத்திரத்தாரிடமிருந்தும், இஸ்ரவேலின் மற்ற எல்லா கோத்திரத்தாரிடமிருந்தும்,+ யூதா, பென்யமீன் கோத்திரத்தாரிடமிருந்தும், எருசலேம் மக்களிடமிருந்தும் வாங்கி வைத்திருந்தார்கள். 10 பின்பு, அந்தப் பணத்தை யெகோவாவின் ஆலய வேலையை மேற்பார்வை செய்கிறவர்களிடம் கொடுத்தார்கள். யெகோவாவின் ஆலயத்தில் வேலை செய்தவர்கள் ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்காக அந்தப் பணத்தைப் பயன்படுத்தினார்கள். 11 அவர்கள் அந்தப் பணத்தைக் கைத்தொழிலாளிகளிடமும் கட்டிடக் கலைஞர்களிடமும் கொடுத்தார்கள். செதுக்கிய கற்கள், முட்டுக்கொடுப்பதற்கு மரங்கள் ஆகியவற்றை வாங்குவதற்காகவும், யூதா ராஜாக்களால் பாழடைந்த நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த ஆலயத்தின் உத்திரங்களை மாற்றுவதற்காகவும் அந்தப் பணத்தைப் பயன்படுத்தினார்கள்.+
12 அந்த ஆட்கள் உண்மையுடன் வேலை செய்தார்கள்.+ மெராரியரான+ யாகாத், ஒபதியா ஆகியோரும், கோகாத்தியரான+ சகரியா, மெசுல்லாம் ஆகிய லேவியர்களும் இந்த வேலையை மேற்பார்வை செய்தார்கள். திறமையான இசைக் கலைஞர்களாக+ இருந்த மற்ற லேவியர்களும் 13 அங்கே வேலை செய்தவர்களை* மேற்பார்வை செய்தார்கள்; வெவ்வேறு வேலைகளைச் செய்த எல்லா ஆட்களையும் அவர்கள் மேற்பார்வை செய்தார்கள். லேவியர்களில் சிலர் செயலாளர்களாகவும், சிலர் அதிகாரிகளாகவும், சிலர் வாயிற்காவலர்களாகவும் இருந்தார்கள்.+
14 யெகோவாவின் ஆலயத்துக்காக மக்கள் கொடுத்த பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டிருந்தபோது,+ மோசே மூலம்+ கொடுக்கப்பட்ட யெகோவாவின் திருச்சட்ட புத்தகத்தை குருவாகிய இல்க்கியா ஆலயத்தில் கண்டுபிடித்தார்.+ 15 உடனே இல்க்கியா செயலாளரான சாப்பானிடம் போய், “இந்தத் திருச்சட்ட புத்தகத்தை யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுத்தேன்” என்று சொல்லி அதைக் கொடுத்தார். 16 சாப்பான் அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ராஜாவிடம் போய், “கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் உங்களுடைய ஊழியர்கள் நன்றாகச் செய்கிறார்கள். 17 யெகோவாவுடைய ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியிலிருந்த எல்லா பணத்தையும் எடுத்து, மேற்பார்வை செய்கிறவர்களிடமும் வேலை செய்கிறவர்களிடமும் கொடுத்துவிட்டார்கள்” என்று சொன்னார். 18 அதோடு, “குருவாகிய இல்க்கியா என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்”+ என்றும் சொன்னார். பின்பு, ராஜாவின் முன்னால் சாப்பான் அதிலிருந்து வாசிக்க ஆரம்பித்தார்.+
19 திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்த விஷயங்களைக் கேட்டவுடனே, ராஜா தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார்.+ 20 பின்பு இல்க்கியா, சாப்பானின் மகன் அகிக்காம்,+ மீகாவின் மகன் அப்தோன், செயலாளர் சாப்பான், ராஜாவின் ஊழியர் அசாயா ஆகியோரிடம், 21 “நீங்கள் போய் எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியிருக்கிற மக்களுக்காகவும் யெகோவாவிடம் விசாரியுங்கள். இப்போது கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற விஷயங்களைப் பற்றி அவரிடம் கேளுங்கள். ஏனென்றால், இந்தப் புத்தகத்தில் யெகோவா எழுதி வைத்திருக்கிற கட்டளைகள் எல்லாவற்றையும் நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடிக்கவில்லை, அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லை. அதனால், யெகோவா தன்னுடைய கடும் கோபத்தை நம்மீது கொட்டப்போகிறார்”+ என்று ராஜா சொன்னார்.
22 அப்போது, ராஜா அனுப்பிய ஆட்களைக் கூட்டிக்கொண்டு உல்தாள் என்ற பெண் தீர்க்கதரிசியிடம்+ இல்க்கியா போனார். அவள் அர்காசின் பேரனும் திக்வாவின் மகனுமான சல்லூமின் மனைவி. அவளுடைய கணவர்தான் துணிமணி அறைக்குப் பொறுப்பாளராக இருந்தார். எருசலேமின் புதிய பகுதியில் உல்தாள் குடியிருந்தாள். ராஜா அனுப்பிய இந்த ஆட்கள் எல்லாரும் அங்கே போய் அவளைச் சந்தித்தார்கள்.+ 23 அவள் அவர்களிடம், “இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான். ‘என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் போய் இதைச் சொல்லுங்கள்: 24 “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இந்த இடத்தையும் இங்கே குடியிருப்பவர்களையும் அழிக்கப்போகிறேன்.+ யூதா ராஜாவின் முன்னால் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள எல்லா சாபங்களையும் வரச் செய்வேன்.+ 25 ஏனென்றால், இந்த மக்கள் என்னை விட்டுவிட்டு,+ மற்ற தெய்வங்களுக்கு முன்னால் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்கிறார்கள். அவர்களுடைய கைவேலைகள் எல்லாவற்றாலும் என்னைப் புண்படுத்துகிறார்கள்.+ அதனால், இந்த இடத்தின் மீது என்னுடைய கடும் கோபத்தைக் கொட்டுவேன், அது அணையவே அணையாது.’”+ 26 ஆனால், யெகோவாவிடம் விசாரிக்கச் சொல்லி உங்களை அனுப்பிய யூதா ராஜாவிடம் போய் இதைச் சொல்லுங்கள்: “நீ கேட்ட வார்த்தைகளைப்+ பற்றி இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: 27 ‘இந்த இடத்துக்கும் இந்தக் குடிமக்களுக்கும் எதிராக நான் சொன்னதைக் கேட்டு நீ மனம் வருந்தினாய்;* கடவுளுக்கு முன்னால் தாழ்மையாக நடந்துகொண்டாய். என் முன்னால் உன்னைத் தாழ்த்திக்கொண்டு, உடையைக் கிழித்துக்கொண்டு என்னிடம் அழுதாய். அதனால், நானும் உன்னுடைய மன்றாட்டைக் கேட்டேன்+ என்று யெகோவா சொல்கிறார். 28 நீ இறந்துபோனதும்* நல்லடக்கம் செய்யப்படுவாய். இந்த இடத்தின் மீதும் இங்கே குடியிருக்கிறவர்கள் மீதும் நான் கொண்டுவரப்போகிற அழிவை நீ பார்க்க மாட்டாய்’”’”+ என்று சொன்னாள்.
அவள் சொன்னதை ராஜாவிடம் போய் அவர்கள் சொன்னார்கள். 29 அப்போது, ராஜா ஆள் அனுப்பி யூதாவிலும் எருசலேமிலும் இருந்த எல்லா பெரியோர்களையும்* ஒன்றுகூட்டினார்.+ 30 பின்பு யூதா ஆண்கள் எல்லாரையும், எருசலேம் மக்கள் எல்லாரையும், குருமார்களையும், லேவியர்களையும், சொல்லப்போனால் சிறியவர்கள்முதல் பெரியவர்கள்வரை எல்லாரையும், கூட்டிக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்குப் போனார். யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒப்பந்தப் புத்தகத்தில் உள்ள எல்லா வார்த்தைகளையும் அவர்கள் முன்னால் சத்தமாக வாசித்தார்.+ 31 தன்னுடைய இடத்தில் நின்றுகொண்டு, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி நடப்பதாக யெகோவா முன்னால் ஒப்பந்தம் செய்தார்.+ அதாவது யெகோவாவின் வழியில் நடப்பதாகவும், அவருடைய கட்டளைகளுக்கும் நினைப்பூட்டுதல்களுக்கும் விதிமுறைகளுக்கும் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும்+ கீழ்ப்படிவதாகவும் ஒப்பந்தம் செய்தார்.+ 32 அதோடு, இந்த ஒப்பந்தத்திற்குக் கீழ்ப்படியச் சொல்லி எருசலேமையும் பென்யமீனையும் சேர்ந்த எல்லாரையும் ஊக்கப்படுத்தினார். அதனால், எருசலேம் மக்கள் எல்லாரும் தங்களுடைய முன்னோர்களின் கடவுளுடன் செய்த ஒப்பந்தத்தின்படி நடக்க ஆரம்பித்தார்கள்.+ 33 இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமான பகுதிகள் எல்லாவற்றிலும் இருந்த எல்லா அருவருப்பான சிலைகளையும் யோசியா அழித்துப்போட்டார்.+ இஸ்ரவேல் மக்கள் எல்லாரையும் தங்கள் கடவுளான யெகோவாவை வணங்க வைத்தார். யோசியா உயிரோடு இருந்தவரை, அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவைவிட்டு விலகவே இல்லை.