எபிரெயருக்குக் கடிதம்
7 அந்த மெல்கிசேதேக்கு, சாலேமின் ராஜாவாகவும் உன்னதமான கடவுளுக்குச் சேவை செய்த குருவாகவும் இருந்தார்; ராஜாக்களைத் தோற்கடித்துவிட்டு வந்துகொண்டிருந்த ஆபிரகாமை அவர் சந்தித்து ஆசீர்வதித்தார்.+ 2 ஆபிரகாம் எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை அவருக்குக் கொடுத்தார். மெல்கிசேதேக்கு என்ற பெயருக்கு “நீதியின் ராஜா” என்று அர்த்தம். சாலேமின் ராஜா என்பதற்கு “சமாதானத்தின் ராஜா” என்று அர்த்தம். 3 அவருடைய தாய் தகப்பனைப் பற்றி யாருக்கும் தெரியாது. அவரைப் பற்றிய வம்ச வரலாறும் கிடையாது; அவர் எப்போது பிறந்தார், எப்போது இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவர் கடவுளுடைய மகனைப் போல் ஆக்கப்பட்டார், அவர் என்றென்றும் குருவாக இருக்கிறார்.+
4 வம்சத் தலைவரான* ஆபிரகாமே தான் கைப்பற்றிய மிகச் சிறந்த பொருள்களில் பத்திலொரு பாகத்தை அவருக்குக் கொடுத்தார்+ என்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவர் என்று பாருங்கள். 5 உண்மைதான், குருத்துவப் பொறுப்பு கொடுக்கப்படுகிற லேவியின் மகன்கள்+ இஸ்ரவேல் மக்களிடமிருந்து, அதாவது தங்கள் சகோதரர்களிடமிருந்து, பத்திலொரு பாகத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற கட்டளை திருச்சட்டத்தில் இருக்கிறது.+ இஸ்ரவேல் மக்கள் ஆபிரகாமின் வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறபோதிலும் அந்தக் கட்டளையின்படி லேவியின் மகன்கள் அதை வாங்கிக்கொள்கிறார்கள். 6 இருந்தாலும், லேவியின் வம்சத்தில் வராத மெல்கிசேதேக்கு ஆபிரகாமிடமிருந்து பத்திலொரு பாகத்தை வாங்கிக்கொண்டார்; அதோடு, கடவுளுடைய வாக்குறுதிகளைப் பெற்ற அவரை ஆசீர்வதித்தார்.+ 7 சிறியவரை பெரியவர் ஆசீர்வதிப்பதுதான் முறை; இதில் எந்தக் கேள்விக்கும் இடமில்லை. 8 இப்போது, இறந்துபோகிற மனிதர்கள் பத்திலொரு பாகத்தை வாங்கிக்கொள்கிறார்கள்; ஆனால் அப்போது, உயிர்வாழ்கிறவர் என்று சாட்சி பெற்றவர் அதை வாங்கிக்கொண்டார்.+ 9 பத்திலொரு பாகத்தை வாங்கிக்கொள்கிற லேவியும்கூட ஆபிரகாமின் மூலம் பத்திலொரு பாகத்தை அவருக்குக் கொடுத்தான் என்று சொல்லலாம். 10 எப்படியென்றால், மெல்கிசேதேக்கு ஆபிரகாமைச் சந்தித்தபோது,+ லேவி தன்னுடைய மூதாதையான ஆபிரகாமின் வருங்காலச் சந்ததியாக இருந்தான்.
11 இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தில் லேவி கோத்திரத்தின் குருத்துவம் ஓர் அம்சமாக இருந்தது. அந்தக் குருத்துவத்தின் மூலம்தான் ஒருவன் பரிபூரணமாக ஆவான்+ என்றால், ஆரோனைப் போல் இல்லாமல் மெல்கிசேதேக்கைப் போல்+ வேறொரு குரு தோன்ற வேண்டிய அவசியம் என்ன? 12 குருத்துவம் மாற்றப்படுவதால், திருச்சட்டமும் கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.+ 13 ஏனென்றால், இந்த விவரங்களெல்லாம் யாரைப் பற்றியதோ அவர் வேறொரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்; அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த யாரும் பலிபீடத்தில் சேவை செய்ததில்லை.+ 14 நம்முடைய எஜமான் அந்த யூதா கோத்திரத்திலிருந்து வந்தவர்+ என்ற விஷயம் தெளிவாக இருக்கிறது; அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் குருமார்களாக ஆவதைப் பற்றி மோசே சொல்லவே இல்லை.
15 அதனால், மெல்கிசேதேக்கைப் போன்ற+ வேறொரு குரு+ வந்திருக்கிறார் என்பது இன்னும் தெளிவாகிவிட்டது. 16 திருச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள கோத்திரத்தின்படி அல்ல, அழியாத வாழ்வைத்+ தரும் வல்லமையால்தான் அவர் குருவாகியிருக்கிறார். 17 இதற்குச் சாட்சியாக, “மெல்கிசேதேக்கைப் போலவே+ நீ என்றென்றும் குருவாக இருக்கிறாய்” என்று ஒரு வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
18 முந்தின கட்டளை பலவீனமாகவும் பலனற்றதாகவும்+ இருப்பதால் அது நீக்கப்படுகிறது. 19 திருச்சட்டம் எதையுமே பரிபூரணமாக்கவில்லை;+ அதைவிட மேலான நம்பிக்கையோ+ எல்லாவற்றையும் பரிபூரணமாக்குகிறது; இந்த நம்பிக்கையின் மூலம்தான் நாம் கடவுளிடம் நெருங்கிப் போகிறோம்.+ 20 மற்றவர்கள் குருமார்களானபோது, எதுவும் ஆணையிட்டுச் சொல்லப்படவில்லை. 21 ஆனால், இயேசுவுக்கு ஆணையிட்டுச் சொல்லப்பட்டதால் அவர் குருவாகியிருக்கிறார். “‘நீ என்றென்றும் குருவாக இருக்கிறாய்’ என்று யெகோவா* ஆணையிட்டுச் சொன்னார். அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ள மாட்டார்.”*+ 22 இதனால்தான், இயேசு மேலான ஓர் ஒப்பந்தத்துக்கு உத்தரவாதமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறார்.+ 23 குருமார்கள் தங்களுடைய சேவையைத் தொடர்ந்து செய்வதற்கு மரணம் தடையாக இருந்தது; அதனால், அடுத்தடுத்து வேறு பலர் குருமார்களாக நியமிக்கப்பட வேண்டியிருந்தது.+ 24 ஆனால் அவர் என்றென்றும் உயிரோடு இருப்பதால்+ அவருக்கு அடுத்து வேறு யாரும் குருவாக நியமிக்கப்பட வேண்டியதில்லை. 25 அதனால், தன் மூலம் கடவுளை அணுகுகிற ஆட்களை முழுமையாக மீட்பதற்கு அவர் வல்லவராக இருக்கிறார். ஏனென்றால், அவர்களுக்காகப் பரிந்து பேச+ அவர் எப்போதும் உயிரோடு இருக்கிறார்.
26 இப்படிப்பட்ட தலைமைக் குருதான் நமக்கு ஏற்றவர்; அவர் உண்மையுள்ளவர்,* சூதுவாதில்லாதவர், களங்கமில்லாதவர்,+ பாவிகளைப் போல இல்லாதவர், வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.+ 27 அதனால், மற்ற தலைமைக் குருமார்களைப் போல், முதலில் தன்னுடைய பாவங்களுக்காகவும் பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும்+ அவர் தினமும் பலி கொடுக்க வேண்டியதில்லை.+ ஏனென்றால், அவர் எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகத் தன்னையே பலியாகக் கொடுத்துவிட்டார்.+ 28 திருச்சட்டத்தின்படி, பலவீனங்கள் உள்ள மனிதர்கள் தலைமைக் குருமார்களாக நியமிக்கப்படுகிறார்கள்.+ ஆனால், திருச்சட்டத்துக்குப் பின்பு கொடுக்கப்பட்ட ஆணையின்படி,+ என்றென்றும் பரிபூரணமாக்கப்பட்ட மகன்+ தலைமைக் குருவாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.