எசேக்கியேல்
7 யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “மனிதகுமாரனே, உன்னதப் பேரரசராகிய யெகோவா இஸ்ரவேல் தேசத்துக்குச் சொல்வது இதுதான்: ‘அழிவு வந்துவிட்டது! தேசத்தின் நாலாபக்கத்துக்கும் அழிவு வந்துவிட்டது! 3 இப்போதே உனக்கு அழிவு வந்துவிட்டது! நான் என்னுடைய கோபத்தை உன்மேல் கொட்டுவேன். உன்னுடைய நடத்தைக்கு ஏற்றபடி உனக்குத் தீர்ப்பு கொடுப்பேன். நீ செய்த அருவருப்பான காரியங்களுக்காக உன்னைத் தண்டிப்பேன். 4 உன்னைப் பார்த்து நான் பரிதாபப்பட மாட்டேன். உன்மேல் கரிசனை காட்ட மாட்டேன்.+ நீ செய்த பாவங்களுக்குத் தக்க தண்டனை கொடுப்பேன். உன்னுடைய அருவருப்பான செயல்களின் விளைவுகளை நீ அனுபவிப்பாய்.+ அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வாய்.’+
5 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, ஆபத்து வருகிறது! இதுவரை வராத ஆபத்து வருகிறது!+ 6 அழிவு வருகிறது! அந்த அழிவு வந்தே தீரும்! அது திடீரென்று உன்மேல் வரும். இதோ, அது வருகிறது! 7 தேசத்தில் குடியிருக்கிறவனே, உனக்கு வேளை* வந்துவிட்டது. அந்த நாளும் நேரமும் நெருங்கிவிட்டது.+ மலைகளிலே சந்தோஷ சத்தம் கேட்பதற்குப் பதிலாக அலறல் சத்தம்தான் கேட்கிறது.
8 இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் என்னுடைய கோபத்தை உன்மேல் கொட்டுவேன்.+ அதை முழுமையாகக் கொட்டித் தீர்ப்பேன்.+ உன்னுடைய நடத்தைக்கு ஏற்றபடி உனக்குத் தீர்ப்பு கொடுப்பேன். நீ செய்த அருவருப்பான காரியங்களுக்காக உன்னைத் தண்டிப்பேன். 9 உன்னைப் பார்த்து நான் பரிதாபப்பட மாட்டேன். உன்மேல் கரிசனை காட்ட மாட்டேன்.+ நீ செய்த பாவங்களுக்குத் தக்க தண்டனை கொடுப்பேன். உன்னுடைய அருவருப்பான செயல்களின் விளைவுகளை நீ அனுபவிப்பாய். அப்போது, யெகோவாவாகிய நான்தான் உன்னைத் தண்டிக்கிறேன் என்று தெரிந்துகொள்வாய்.+
10 இதோ, அந்த நாள் வருகிறது!+ இதோ, அது வந்துகொண்டிருக்கிறது! உனக்கு வேளை* வந்துவிட்டது. பிரம்பு தயாராக இருக்கிறது. எதிரியின் அகங்காரம்* அதிகமாகிவிட்டது. 11 நீ அக்கிரமம் செய்ததால், அந்தப் பிரம்பு உன்னை அடித்து நொறுக்கியிருக்கிறது.*+ யாருமே தப்பிக்க முடியாது. எந்த ஆட்களினாலும் செல்வத்தினாலும் செல்வாக்கினாலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. 12 அந்த நேரமும் நாளும் கண்டிப்பாக வரும். நிலத்தை வாங்குகிறவர்கள் சந்தோஷப்பட வேண்டாம், விற்கிறவர்களும் அழுது புலம்ப வேண்டாம்; ஏனென்றால், எல்லா ஜனங்கள்மேலும் என்னுடைய கோபம் பற்றியெரியும்.*+ 13 விற்கிறவர்கள் உயிர்தப்பினாலும் விற்ற நிலத்துக்குத் திரும்ப மாட்டார்கள். யாருமே திரும்ப மாட்டார்கள். ஏனென்றால், தரிசனம் மொத்த ஜனத்துக்கும் எதிரானது. கெட்டது செய்வதால்* யாருமே தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மாட்டார்கள்.
14 எக்காளம் ஊதப்பட்டிருக்கிறது.+ எல்லாரும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், யாரும் போருக்குப் போகாமல் இருக்கிறார்கள். ஏனென்றால், மொத்த ஜனத்தின் மேலும் என் கோபம் பற்றியெரிகிறது.+ 15 வெளியே வாள் வெட்டிச் சாய்க்கிறது.+ உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உயிரைப் பறிக்கிறது. வயலில் இருக்கிற எல்லாரும் வாளுக்குப் பலியாவார்கள். நகரத்தில் இருக்கிறவர்கள் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாவார்கள்.+ 16 அவர்களில் உயிர்தப்பிக்கிறவர்கள் மலைகளுக்குப் போவார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய குற்றத்தை நினைத்துப் பள்ளத்தாக்குகளில் உள்ள புறாக்களைப் போல முனகுவார்கள்.+ 17 அவர்களுடைய கைகள் தளர்ந்துவிடும், முழங்கால்களில் நீர் வழிந்தோடும்.*+ 18 அவர்கள் துக்கத் துணி* போட்டிருக்கிறார்கள்.+ பயத்தில் நடுநடுங்குகிறார்கள். எல்லாரும் அவமானப்பட்டுப் போவார்கள், தங்களுடைய தலையை மொட்டை அடித்துக்கொள்வார்கள்.+
19 அவர்கள் தங்களுடைய வெள்ளியை வீதிகளில் வீசிவிடுவார்கள். தங்கத்தைக் கண்டாலே அவர்களுக்கு வெறுப்பாக இருக்கும். யெகோவாவுடைய கடும் கோபத்தின் நாளில் அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ அவர்களைக் காப்பாற்றாது.+ அவை அவர்களைத் திருப்திப்படுத்தாது, அவர்களுடைய வயிற்றையும் நிரப்பாது. அவை அவர்களைப் பாவக்குழியில்தான் தள்ளியிருக்கின்றன. 20 அவர்கள் தங்களுடைய ஆபரணங்களின் அழகைப் பார்த்துப் பெருமைப்பட்டார்கள். அவற்றை* வைத்து அருவருப்பான சிலைகளைச் செய்தார்கள்.+ அதனால், அவற்றையே அவர்களுக்கு அருவருப்பானதாக ஆக்குவேன். 21 அவற்றை* மற்ற தேசத்தாரின் கையிலும் கொள்ளையடிக்கிறவர்களின் கையிலும் கொடுத்துவிடுவேன். அவர்கள் அவற்றைத் தீட்டுப்படுத்துவார்கள்.
22 நான் அவர்களிடமிருந்து என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன்.+ என்னுடைய மறைவான இடத்தை* அவர்கள்* தீட்டுப்படுத்துவார்கள். திருடர்கள் அங்கே நுழைந்து அதன் பரிசுத்தத்தைக் கெடுப்பார்கள்.+
23 நீ சங்கிலியை* தயார் செய்.+ அநியாயமான தீர்ப்புகளால் தேசமெங்கும் ஜனங்கள் சாகிறார்கள்.+ நகரமெங்கும் ஒரே வன்முறை.+ 24 ஜனங்களிலேயே மிகக் கொடூரமான ஜனங்களை நான் அவர்களுக்கு எதிராக வர வைப்பேன்.+ அந்த ஜனங்கள் அவர்களுடைய வீடுகளைப் பறித்துக்கொள்வார்கள்.+ பலம்படைத்தவர்களின் பெருமைக்கு நான் முடிவுகட்டுவேன். அவர்களுடைய பரிசுத்தமான இடங்கள் தீட்டுப்படுத்தப்படும்.+ 25 வேதனையில் தவிக்கும்போது அவர்கள் சமாதானத்தைத் தேடுவார்கள், ஆனாலும் அது கிடைக்காது.+ 26 அழிவுக்குமேல் அழிவு வரும். செய்திக்குமேல் செய்தி வரும். தரிசனத்துக்காக ஜனங்கள் தீர்க்கதரிசியைத் தேடிப்போவார்கள்.+ ஆனாலும், குருமார்கள் போதிக்க* மாட்டார்கள், பெரியோர்கள்* ஆலோசனை சொல்ல மாட்டார்கள்.+ 27 ராஜா அழுது புலம்புவார்.+ அதிகாரி மிகவும் பதற்றமாக இருப்பார். தேசத்து ஜனங்களுடைய கைகள் பயத்தில் நடுங்கும். அவர்களுடைய நடத்தைக்கு ஏற்றபடியே நான் அவர்களை நடத்துவேன். அவர்கள் மற்றவர்களை நியாயந்தீர்க்கிறபடியே நான் அவர்களை நியாயந்தீர்ப்பேன். அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.’”+