நியாயாதிபதிகள்
2 பின்பு, யெகோவாவின் தூதர்+ கில்காலிலிருந்து+ போகீமுக்கு வந்து, “நான் உங்கள் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எகிப்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன். உங்களோடு செய்த ஒப்பந்தத்தை ஒருபோதும் முறிக்க மாட்டேன்+ என்று உங்களிடம் சொன்னேன். 2 அதோடு, ‘நீங்கள் இந்தத் தேசத்தின் ஜனங்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது,+ அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும்’+ என்று சொன்னேன். ஆனால், நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை.+ ஏன் இப்படிச் செய்தீர்கள்? 3 அதனால்தான் நான் உங்களிடம், ‘மற்ற தேசத்தாரை உங்களிடமிருந்து நான் துரத்தியடிக்க மாட்டேன்.+ அவர்கள் உங்களை ஆபத்தில் சிக்க வைப்பார்கள்.+ அவர்களுடைய தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாக இருக்கும்’+ என்று சொன்னேன்” என்றார்.
4 இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் யெகோவாவின் தூதர் இதைச் சொன்னபோது, அவர்கள் சத்தமாக அழ ஆரம்பித்தார்கள். 5 அதனால் அந்த இடத்துக்கு போகீம்* என்று பெயர் வைத்து, அங்கே யெகோவாவுக்குப் பலி செலுத்தினார்கள்.
6 பின்பு யோசுவா இஸ்ரவேலர்களை அனுப்பி வைத்தார். அவரவர் இடத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள எல்லாரும் புறப்பட்டுப் போனார்கள்.+ 7 யோசுவாவின் காலத்திலும் அவருக்குப்பின் உயிரோடிருந்த பெரியோர்களின்* காலத்திலும், அதாவது இஸ்ரவேலுக்காக யெகோவா செய்த எல்லா அற்புதங்களையும் கண்களால் பார்த்த பெரியோர்களின் காலத்திலும், இஸ்ரவேலர்கள் யெகோவாவை வணங்கிவந்தார்கள்.+ 8 பின்பு, நூனின் மகனும் யெகோவாவின் ஊழியருமாகிய யோசுவா 110-வது வயதில் இறந்தார்.+ 9 அவருக்குச் சொத்தாகக் கிடைத்த இடத்தில், அதாவது காயாஸ் மலைக்கு வடக்கே எப்பிராயீம் மலைப்பகுதியிலுள்ள திம்னாத்-ஏரேசில்,+ அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+ 10 அந்தத் தலைமுறையைச் சேர்ந்த எல்லாரும் இறந்துபோனார்கள்.* அவர்களுக்குப்பின் வந்த தலைமுறைக்கு யெகோவாவைப் பற்றியும், இஸ்ரவேலர்களுக்கு அவர் செய்தவற்றைப் பற்றியும் தெரியவில்லை.
11 அதனால், அவர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்து, பாகால்களைக் கும்பிட்டார்கள்.+ 12 எகிப்திலிருந்து தங்களைக் கூட்டிக்கொண்டு வந்த தங்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு,+ தங்களைச் சுற்றியிருந்த ஜனங்களின் தெய்வங்களைத் தேடிப்போனார்கள்.+ அவற்றை வணங்கி, யெகோவாவைக் கோபப்படுத்தினார்கள்.+ 13 யெகோவாவை விட்டுவிட்டு பாகால் சிலைகளையும் அஸ்தரோத் சிலைகளையும் கும்பிட்டார்கள்.+ 14 அதனால், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. சுற்றியிருந்த எதிரிகள் வந்து, இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமானதையெல்லாம் சுருட்டிக்கொண்டு போகும்படி செய்தார்.+ அந்த எதிரிகளின் கையில் அவர்களைக் கொடுத்துவிட்டார்,*+ அவர்களால் அந்த எதிரிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை.+ 15 யெகோவா அவர்களுக்குச் சொன்னபடியே, யெகோவா அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னபடியே,+ அவர்கள் போன இடமெல்லாம் யெகோவா அவர்களுக்கு விரோதமாக இருந்தார். அவர்களுக்குக் கேடுதான் வந்தது.+ அவர்கள் மன வேதனையில் துடித்தார்கள்.+ 16 அதனால், எதிரிகளின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற யெகோவா நியாயாதிபதிகளை நியமித்தார்.+
17 ஆனால், அந்த நியாயாதிபதிகளின் பேச்சையும் அவர்கள் கேட்கவில்லை. மற்ற தெய்வங்களை வணங்கி யெகோவாவுக்குத் துரோகம் செய்தார்கள். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த முன்னோர்களின் வழியைவிட்டு சீக்கிரமாக விலகிப்போனார்கள்.+ அந்த முன்னோர்களைப் போல அவர்கள் நடக்கவில்லை. 18 அவர்களுக்காக யெகோவா ஒரு நியாயாதிபதியை நியமித்தபோதெல்லாம்,+ யெகோவா அந்த நியாயாதிபதியோடு இருந்து, அவருடைய காலம் முழுவதும் எதிரிகளின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றினார். ஏனென்றால், கொடுமைக்காரர்களின் கொடுமை+ தாங்காமல் அவர்கள் குமுறியதைக் கேட்டு யெகோவா மனம் உருகினார்.*+
19 ஆனால், ஒவ்வொரு நியாயாதிபதி இறந்த பிறகும் அவர்கள் பழையபடி மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் வணங்கி, தங்களுடைய முன்னோர்களைவிட படுமோசமாக நடக்க ஆரம்பித்தார்கள்.+ கெட்ட பழக்கங்களையும் பிடிவாத குணத்தையும் அவர்கள் விடவே இல்லை. 20 கடைசியில், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது.+ அதனால் அவர், “இந்த ஜனங்கள் அவர்களுடைய முன்னோர்களுடன் நான் செய்த ஒப்பந்தத்தை+ மீறி, எனக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள்.+ 21 அதனால், யோசுவா சாகும்போது விட்டுவைத்திருந்த ஒரு தேசத்தாரைக்கூட+ அவர்கள் முன்னாலிருந்து நான் துரத்த மாட்டேன். 22 இஸ்ரவேலர்கள் அவர்களுடைய முன்னோர்களைப் போல யெகோவாவின் வழியில் நடக்கிறார்களா இல்லையா என்று பார்ப்பதற்காக+ அப்படிச் செய்வேன்” என்று சொன்னார். 23 அதன்படியே, யெகோவா மற்ற தேசத்து ஜனங்களை அங்கேயே இருக்கும்படி விட்டுவிட்டார். அவர்களை உடனடியாகத் துரத்தியடிக்கவும் இல்லை, யோசுவாவின் கையில் கொடுக்கவும் இல்லை.