2 ராஜாக்கள்
20 ஒருசமயம், எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்.+ ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசி அவரிடம் வந்து, “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘நீ குணமாக மாட்டாய், இறந்துபோவாய். அதனால், உன் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டியதையெல்லாம் இப்போதே சொல்லிவிடு’”+ என்றார். 2 அதைக் கேட்டதும் எசேக்கியா சுவர் பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு யெகோவாவிடம் ஜெபம் செய்ய ஆரம்பித்தார். 3 “யெகோவாவே, நான் எப்போதும் உங்களுக்கு உண்மையாக நடந்திருக்கிறேன், முழு இதயத்தோடு கீழ்ப்படிந்திருக்கிறேன், உங்களுக்குப் பிரியமானதைச் செய்திருக்கிறேன்; தயவுசெய்து இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்”+ என்று சொல்லிக் கதறி அழுதார்.
4 ஏசாயா அங்கிருந்து புறப்பட்டு நடுமுற்றம் வரைகூட போயிருக்க மாட்டார்; அதற்குள் யெகோவா அவரிடம்,+ 5 “நீ திரும்பிப் போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாவிடம் இப்படிச் சொல்: ‘உன் மூதாதையாகிய தாவீதின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், “நீ செய்த ஜெபத்தை நான் கேட்டேன். நீ கண்ணீர்விட்டு அழுததைப் பார்த்தேன்.+ நான் உன்னைக் குணமாக்குகிறேன்.+ மூன்றாம் நாளில் நீ யெகோவாவின் ஆலயத்துக்குப் போவாய்.+ 6 உன் வாழ்நாளை இன்னும் 15 வருஷங்களுக்குக் கூட்டுகிறேன். உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய ராஜாவிடமிருந்து காப்பாற்றுவேன்.+ என் பெயருக்காகவும் என் ஊழியன் தாவீதுக்காகவும் இந்த நகரத்தைப் பாதுகாப்பேன்”’”+ என்றார்.
7 பின்பு ஏசாயா, “ஒரு அத்திப்பழ அடையைக் கொண்டுவாருங்கள்” என்று ராஜாவின் ஊழியர்களிடம் சொன்னார். அவர்கள் அதைக் கொண்டுவந்து எசேக்கியாவுடைய கொப்புளத்தின் மேல் வைத்து, பத்து போட்டார்கள். அவர் படிப்படியாகக் குணமடைந்தார்.+
8 எசேக்கியா ஏசாயாவிடம், “யெகோவா என்னைக் குணமாக்குவார், மூன்றாம் நாளில் நான் யெகோவாவின் ஆலயத்துக்குப் போவேன் என்று சொன்னீர்களே, அதற்கு என்ன அடையாளம்?”+ என்று கேட்டிருந்தார். 9 அதற்கு ஏசாயா, “யெகோவா தான் சொன்னதை நிறைவேற்றுவார் என்பதற்கு யெகோவா தரும் அடையாளம் இதுதான்: படிக்கட்டில்* விழும் நிழல் பத்துப் படிகள் முன்னால் போக வேண்டுமா, பத்துப் படிகள் பின்னால் போக வேண்டுமா?”+ என்று கேட்டார். 10 அதற்கு எசேக்கியா, “நிழல் பத்துப் படிகள் முன்னால் போவது சுலபம், பின்னால் போவதுதான் கஷ்டம்” என்று சொன்னார். 11 அப்போது, ஏசாயா தீர்க்கதரிசி யெகோவாவிடம் மன்றாடினார். அப்போது ஆகாசின் படிக்கட்டில் விழுந்திருந்த நிழல் பத்துப் படிகள் பின்னால் போகும்படி கடவுள் செய்தார்.+
12 எசேக்கியா வியாதிப்பட்டு இருந்ததை பாபிலோன் ராஜாவும் பலாதானின் மகனுமான பெரோதாக்-பலாதான் கேள்விப்பட்டான். அதனால், கடிதங்களையும் அன்பளிப்பையும் தன்னுடைய ஆட்களிடம் கொடுத்து அனுப்பினான்.+ 13 அவர்களை எசேக்கியா வரவேற்று தன் பொக்கிஷ அறை முழுவதையும் காட்டினார்.+ தங்கம், வெள்ளி, பரிமளத் தைலம், விலைமதிப்புள்ள எண்ணெய் வகைகள் ஆகியவற்றையும் ஆயுதக்கிடங்கையும் தான் சேர்த்து வைத்திருந்த மற்ற எல்லாவற்றையும் காட்டினார். தன் அரண்மனையிலும் ராஜ்யத்திலும் இருந்த ஒன்றைக்கூட அவர் காட்டாமல் இருக்கவில்லை.
14 பின்பு ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவிடம் வந்து, “இந்த ஆட்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?” என்று கேட்டார். அதற்கு எசேக்கியா, “ரொம்பத் தூரத்திலிருக்கிற பாபிலோனிலிருந்து வந்தார்கள்”+ என்று சொன்னார். 15 அப்போது ஏசாயா, “உங்கள் அரண்மனையில் எதைப் பார்த்தார்கள்?” என்று கேட்டார். அதற்கு எசேக்கியா, “என் அரண்மனையிலிருந்த எல்லாவற்றையும் பார்த்தார்கள். என்னுடைய பொக்கிஷங்களில் ஒன்றைக்கூட நான் காட்டாமல் இருக்கவில்லை” என்று சொன்னார்.
16 அப்போது ஏசாயா எசேக்கியாவிடம், “யெகோவா சொல்வதைக் கேளுங்கள்.+ 17 ‘இதோ! ஒரு காலம் வரும், அப்போது உன் அரண்மனையில் இருக்கிற எல்லா பொருள்களும், இதுவரை உன் முன்னோர்கள் சேர்த்து வைத்த எல்லா பொருள்களும் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்,+ எதுவுமே விட்டுவைக்கப்படாது’ என்று யெகோவா சொல்கிறார். 18 ‘உனக்குப் பிறக்கப்போகிற மகன்கள் சிலரும் பிடித்துக்கொண்டு போகப்படுவார்கள்.+ அவர்கள் பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் அதிகாரிகளாக இருப்பார்கள்’”+ என்று சொன்னார்.
19 அதற்கு எசேக்கியா, “யெகோவா சொன்னது நியாயம்தான்.+ என்னுடைய வாழ்நாளிலாவது சமாதானமும் பாதுகாப்பும்* இருக்குமே!”+ என்றார்.
20 எசேக்கியாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள், அவருடைய வீரதீர செயல்கள், குளமும் வாய்க்காலும் வெட்டி+ நகரத்துக்குள் தண்ணீர் கொண்டுவந்தது+ ஆகியவை எல்லாம் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 21 பின்பு, எசேக்கியா இறந்துபோனார்.*+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் மனாசே+ ராஜாவானார்.+