எசேக்கியேல்
13 யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “மனிதகுமாரனே, இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.+ சொந்தமாகக் கற்பனை செய்து தீர்க்கதரிசனங்கள் சொல்கிறவர்களிடம்+ இப்படிச் சொல்: ‘யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். 3 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “எந்தத் தரிசனத்தையும் பார்க்காமல் சொந்தமாகக் கதை கட்டுகிற முட்டாள் தீர்க்கதரிசிகளுக்குக் கேடுதான் வரும்.+ 4 இஸ்ரவேலர்களே, உங்களுடைய தீர்க்கதரிசிகள் இடிபாடுகளின் நடுவே இருக்கிற குள்ளநரிகளைப் போல ஆகிவிட்டார்கள். 5 யெகோவாவின் நாளில்+ நடக்கும் போரில் உங்கள் தேசத்தைப் பாதுகாப்பதற்காக அதன் கற்சுவர்களின் விரிசல்களை நீங்கள் போய்ப் பழுதுபார்க்க மாட்டீர்கள்.”+ 6 “அவர்கள் போலித் தரிசனங்களைப் பார்த்து பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். யெகோவா அவர்களை அனுப்பாவிட்டாலும், ‘இதுதான் யெகோவாவின் செய்தி’ என்று சொல்கிறார்கள். தாங்கள் சொன்னது நிறைவேறுவதற்காகக் காத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.+ 7 நான் எந்தச் செய்தியும் சொல்லாதபோது, ‘இதுதான் யெகோவாவின் செய்தி’ என்று சொல்கிறீர்களே, நீங்கள் சொல்வதெல்லாம் பொய்த் தீர்க்கதரிசனம், நீங்கள் பார்ப்பதெல்லாம் போலித் தரிசனம்.”’
8 “‘அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “‘நீங்கள் பொய்களைச் சொன்னதாலும் போலித் தரிசனங்களைப் பார்த்ததாலும் நான் உங்கள் எதிரியாகிவிட்டேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா+ சொல்கிறார்.” 9 போலித் தரிசனங்களைப் பார்த்துப் பொய்த் தீர்க்கதரிசனங்களைச் சொல்கிற தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன்.+ எனக்குப் பிரியமான ஜனங்களோடு அவர்கள் இருக்க மாட்டார்கள். இஸ்ரவேல் ஜனங்களுடைய பதிவேட்டில் அவர்களுடைய பெயர் இருக்காது. அவர்கள் இஸ்ரவேல் தேசத்துக்குத் திரும்பிவர மாட்டார்கள். அப்போது, நான்தான் உன்னதப் பேரரசராகிய யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+ 10 சமாதானம் இல்லாதபோதும் “சமாதானம் இருக்கிறது” என்று சொல்லி என் ஜனங்களை அவர்கள் ஏமாற்றியதால்தான் அவர்களுக்கு இந்தக் கதி ஏற்படும்.+ அவர்கள் உறுதியில்லாத தடுப்புச்சுவரைக் கட்டி, அதற்கு மேற்பூச்சாக வெள்ளையடிக்கிறார்கள்.’*+
11 அந்தச் சுவர் இடிந்து விழும் என்று அதற்கு வெள்ளையடிக்கிற ஆட்களிடம் சொல். கன மழையும் ஆலங்கட்டி* மழையும் பயங்கரமான சூறாவளியும் அதைத் தரைமட்டமாக்கும்.+ 12 அது விழும்போது, ‘நீங்கள் பூசிய பூச்சு எங்கே?’+ என்று மற்றவர்கள் கேட்பார்கள்.
13 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என்னுடைய கடும் கோபத்தினால் பயங்கரமான சூறாவளியை வீச வைத்து, கன மழையைப் பெய்ய வைத்து, ஆலங்கட்டிகளை விழ வைத்து, அந்தச் சுவரை நாசமாக்குவேன். 14 நீங்கள் வெள்ளையடித்த அந்தச் சுவரை நான் நொறுக்கித் தள்ளுவேன். அதன் அஸ்திவாரங்கள் வெளியே தெரியும். நகரம் அழியும்போது நீங்களும் அழிந்துபோவீர்கள். அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்.’
15 ‘அந்தச் சுவரின் மேலேயும் அதற்கு வெள்ளையடித்த ஆட்களின் மேலேயும் நான் என்னுடைய கோபத்தைக் கொட்டித் தீர்க்கும்போது உங்களிடம் இப்படிச் சொல்வேன்: “இனி சுவரும் இல்லை, அதற்கு வெள்ளையடித்த ஆட்களும் இல்லை.+ 16 எருசலேமில் தீர்க்கதரிசனம் சொல்கிற இஸ்ரவேல் தீர்க்கதரிசிகள் இல்லாமல் போய்விட்டார்கள். சமாதானம் இல்லாதபோது சமாதானம் இருப்பதாகத் தரிசனம் பார்க்கிற அந்த ஆட்கள் ஒழிந்துவிட்டார்கள்”’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
17 மனிதகுமாரனே, சொந்தமாகக் கற்பனை செய்து தீர்க்கதரிசனங்களைச் சொல்கிற பெண்களுக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல். 18 அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “ஆட்களின் உயிர்களை வேட்டையாடுவதற்காகக் கைப்பட்டைகளையும்* அவரவர் உயரத்துக்குப் பொருத்தமான முக்காடுகளையும் செய்கிற பெண்களுக்குக் கேடுதான் வரும். என்னுடைய ஜனங்களின் உயிரை வேட்டையாடிவிட்டு உங்களுடைய உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறீர்களோ? 19 கையளவு பார்லிக்காகவும் கொஞ்சம் ரொட்டித் துண்டுகளுக்காகவும் என்னுடைய ஜனங்களின் நடுவே என் பெயரைக் களங்கப்படுத்துவீர்களோ?+ நீங்கள் சொல்கிற பொய்களை நம்பி ஏமாறுகிற என்னுடைய ஜனங்களிடம் பொய்க்குமேல் பொய் சொல்லி, சாகக் கூடாதவர்களைச் சாகடித்து, சாக வேண்டியவர்களை உயிரோடு விட்டுவிடுவீர்களோ?”’+ என்று கேள்.
20 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘பெண்களே, பறவைகளை வேட்டையாடுவது போல ஆட்களின் உயிர்களை வேட்டையாட நீங்கள் பயன்படுத்தும் கைப்பட்டைகளை உங்கள் கைகளிலிருந்து பிடுங்கி எறிவேன். பறவைகளைப் போல நீங்கள் வேட்டையாடுகிற ஆட்களை நான் விடுதலை செய்வேன். 21 உங்களுடைய முக்காடுகளைப் பிடுங்கி எறிந்து, என்னுடைய ஜனங்களை உங்கள் கையிலிருந்து காப்பாற்றுவேன். இனியும் அவர்களை நீங்கள் வேட்டையாடிப் பிடிக்க முடியாது. அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்.+ 22 நீதிமான்களுக்கு நான் வேதனை தராதபோதிலும், நீங்கள் பொய்களைச் சொல்லி+ அவர்களுக்கு மனவேதனை உண்டாக்கினீர்கள். பொல்லாதவர்கள் தங்களுடைய கெட்ட வழியைவிட்டுத் திருந்தி, உயிர் பிழைக்காதபடிக்கு+ நீங்கள் அவர்களுக்கு உடந்தையாக இருந்தீர்கள்.+ 23 பெண்களே, நீங்கள் இனி போலித் தரிசனங்களைப் பார்க்க மாட்டீர்கள், குறிசொல்ல மாட்டீர்கள்.+ என்னுடைய ஜனங்களை உங்கள் கையிலிருந்து நான் காப்பாற்றுவேன். அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்.’”