மல்கியா
1 ஓர் அறிவிப்பு:
மல்கியா* மூலம் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா சொன்ன செய்தி இதுதான்:
2 “நான் உங்களை நேசித்தேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
ஆனால் நீங்கள், “எந்த விதத்தில் எங்களை நேசித்தீர்கள்?” என்று கேட்கிறீர்கள்.
அதற்கு யெகோவா, “யாக்கோபின் அண்ணன்தானே ஏசா?+ ஆனால், நான் யாக்கோபை நேசித்தேன், ஏசாவை வெறுத்தேன்.+ 3 அவனுடைய மலைகளைப் பாழாக்கினேன்.+ அவனுக்குச் சொந்தமான இடத்தைக் காட்டு நரிகளுக்குக் கொடுத்துவிட்டேன்”+ என்று சொல்கிறார்.
4 “‘நாங்கள் துரத்தியடிக்கப்பட்டாலும் திரும்பி வருவோம், இடிந்து கிடக்கிற எங்கள் நகரங்களைக் கட்டுவோம்’ என்று ஏதோம் ஜனங்கள் சொல்கிறார்கள். ஆனால், பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்கள் கட்டுவார்கள், ஆனால் நான் இடித்துப் போடுவேன். ஏதோம் தேசம் “அக்கிரமக்காரர்களின் தேசம்” என்றும், அதன் ஜனங்கள் “யெகோவாவிடமிருந்து நிரந்தரமான கண்டனத் தீர்ப்பைப் பெற்ற ஜனங்கள்”+ என்றும் அழைக்கப்படுவார்கள். 5 நீங்கள் அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள். “இஸ்ரவேல் தேசமெங்கும் யெகோவாவின் புகழ் பரவட்டும்” என்று சொல்வீர்கள்.’”
6 “பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயரை அவமதிக்கிற குருமார்களே,+ ‘மகன் தன்னுடைய தகப்பனுக்கு மதிப்புக் கொடுக்கிறான்,+ வேலைக்காரன் தன்னுடைய எஜமானுக்கு மதிப்புக் கொடுக்கிறான். நான் தகப்பன்+ என்றால், எனக்குக் கொடுக்கப்பட வேண்டிய மதிப்பு எங்கே?+ நான் எஜமான்* என்றால், எனக்குக் காட்டப்பட வேண்டிய மரியாதை* எங்கே?’ என்று அவர் கேட்கிறார்.
‘ஆனால் நீங்கள், “உங்களுடைய பெயரை நாங்கள் எப்படி அவமதிக்கிறோம்?” என்று கேட்கிறீர்கள்.’
7 ‘என் பலிபீடத்தில் தீட்டான பலியைச் செலுத்தி என்னை அவமதிக்கிறீர்கள்.’
‘ஆனால் நீங்கள் என்னிடம், “நாங்கள் எப்படித் தீட்டான பலியைச் செலுத்தி உங்களை அவமதிக்கிறோம்?” என்று கேட்கிறீர்கள்.’
‘“யெகோவாவின் மேஜையெல்லாம்+ ஒரு மேஜையா?” என்று கேவலமாகப் பேசுகிறீர்களே. 8 அதோடு, பலி செலுத்துவதற்காகக் குருடான மிருகத்தைக் கொண்டுவந்து, “இது ஒன்றும் மோசமானது இல்லை” என்று சொல்கிறீர்கள். அதேபோல், நொண்டியான மிருகத்தையோ நோயுள்ள மிருகத்தையோ கொண்டுவந்து, “இது ஒன்றும் மோசமானது இல்லை”+ என்று சொல்கிறீர்கள்.’”
“இதையெல்லாம் தயவுசெய்து உங்கள் ஆளுநரிடம் கொடுத்துப் பாருங்கள். அவர் உங்களைப் பார்த்து சந்தோஷப்படுவாரா? உங்களுக்குக் கருணை காட்டுவாரா?” என்று பரலோகப் படைகளின் யெகோவா கேட்கிறார்.
9 “இப்போது தயவுசெய்து நமக்குக் கருணை காட்டும்படி கடவுளிடம் கெஞ்சிக் கேளுங்கள். இப்படிப்பட்ட காணிக்கைகளைக் கடவுளுக்குச் செலுத்துகிறீர்களே, அவர் உங்களில் யாருக்காவது கருணை காட்டுவாரா?” என்று பரலோகப் படைகளின் யெகோவா கேட்கிறார்.
10 “நீங்கள் ஆதாயம் இல்லாமல் கதவுகளை மூடுவீர்களா?*+ என் பலிபீடத்தில் தீ மூட்டுவதற்குக்கூட காசு வாங்குவீர்களே!+ உங்களைக் கண்டாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. நீங்கள் கொடுக்கிற காணிக்கைகள் எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
11 “சூரியன் உதிக்கும் திசையிலிருந்து அது மறையும் திசைவரைக்கும் உள்ள எல்லா தேசங்களிலும் என் பெயர் புகழ் பெற்றிருக்கும்.+ எல்லா இடங்களிலும் எனக்குத் தகன பலிகள் செலுத்தப்படும். என் பெயரில் பரிசுத்தமான காணிக்கைகள் அர்ப்பணிக்கப்படும். ஏனென்றால், எல்லா தேசங்களிலும் என் பெயர் புகழ் பெற்றிருக்கும்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
12 “ஆனால் நீங்கள், ‘யெகோவாவின் மேஜை அசுத்தமாக இருக்கிறது. அதன்மேல் இருக்கிற காணிக்கையெல்லாம் ஒரு காணிக்கையா?’ என்று கேவலமாகப் பேசி+ அதை* களங்கப்படுத்துகிறீர்கள்.+ 13 அதுமட்டுமல்ல, ‘ச்சே! சலித்துப்போய்விட்டது!’ என்று சொல்லி அதை ஏளனம் செய்கிறீர்கள்” எனப் பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். “திருடியதையும், நொண்டியானதையும், நோய் பிடித்ததையும் எனக்குக் காணிக்கையாகக் கொண்டுவருகிறீர்களே! அதை நான் உங்கள் கையிலிருந்து வாங்க வேண்டுமோ?”+ என்று யெகோவா கேட்கிறார்.
14 “எந்தக் குறையுமில்லாத மிருகத்தை வைத்துக்கொண்டு, குறையுள்ள மிருகத்தை யெகோவாவுக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்துகிற தந்திரக்காரன் சபிக்கப்படுவான். ஏனென்றால், நான் மகா ராஜா.+ எல்லா தேசத்தாரும் என் பெயருக்கு மதிப்பு மரியாதை காட்டுவார்கள்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.