யோவான் எழுதியது
2 மூன்றாம் நாள் கலிலேயாவில் இருக்கிற கானா ஊரில் ஒரு கல்யாண விருந்து நடந்தது. இயேசுவின் அம்மா அங்கே வந்திருந்தார். 2 இயேசுவும் அவருடைய சீஷர்களும்கூட அந்தக் கல்யாண விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
3 திராட்சமது கிட்டத்தட்ட தீர்ந்துபோனபோது இயேசுவின் அம்மா, “பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சமது இல்லை” என்று அவரிடம் சொன்னார். 4 அப்போது இயேசு, “பெண்மணியே, அதற்கு நாம் என்ன செய்வது?* என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை” என்று சொன்னார். 5 அதனால் அவருடைய அம்மா, “அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்” என்று பரிமாறுகிறவர்களிடம் சொன்னார். 6 யூதர்களுடைய தூய்மைச் சடங்குக்குத்+ தேவையான ஆறு தண்ணீர் ஜாடிகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கல்ஜாடிகள் ஒவ்வொன்றும் இரண்டு அல்லது மூன்று குடம்* தண்ணீர் பிடிப்பவை. 7 பரிமாறுகிறவர்களைப் பார்த்து இயேசு, “இந்த ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று சொன்னார். அவர்களும் அவற்றின் விளிம்புவரை நிரப்பினார்கள். 8 பின்பு அவர்களிடம், “இதிலிருந்து எடுத்துக்கொண்டு போய் விருந்தின் மேற்பார்வையாளரிடம் கொடுங்கள்” என்று சொன்னார். அவர்களும் அப்படியே செய்தார்கள். 9 திராட்சமதுவாக மாற்றப்பட்ட தண்ணீரை மேற்பார்வையாளர் ருசிபார்த்தார். அந்தத் திராட்சமது எப்படி வந்ததென்று அதைக் கொண்டுவந்தவர்களுக்குத் தெரிந்திருந்தபோதிலும் அவருக்குத் தெரியவில்லை. அதனால், அந்த மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, 10 “எல்லாரும் தரமான திராட்சமதுவை முதலில் பரிமாறிவிட்டு, விருந்தாளிகள் மனம்போல் குடித்த பிறகு தரம் குறைந்ததைப் பரிமாறுவார்கள். ஆனால், நீங்கள் தரமான திராட்சமதுவை இதுவரை வைத்திருக்கிறீர்களே” என்று சொன்னார். 11 கலிலேயாவில் இருக்கிற கானா ஊரில் இயேசு இந்த முதல் அற்புதத்தைச் செய்து, தன்னுடைய வல்லமையைக் காட்டினார்.+ அவருடைய சீஷர்கள் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள்.
12 இதன் பின்பு, அவரும் அவருடைய அம்மாவும் அவருடைய சகோதரர்களும்+ அவருடைய சீஷர்களும் கப்பர்நகூமுக்குப்+ போனார்கள். ஆனால், அங்கே அவர்கள் அதிக நாட்கள் தங்கவில்லை.
13 யூதர்களுடைய பஸ்கா பண்டிகை+ நெருங்கிவிட்டதால் இயேசு எருசலேமுக்குப் போனார். 14 ஆலயத்தில் ஆடு, மாடு, புறா+ விற்பவர்களையும், இருக்கைகளில் உட்கார்ந்திருந்த காசுத் தரகர்களையும் பார்த்தார். 15 உடனே, கயிறுகளால் ஒரு சாட்டை செய்து, ஆடு மாடுகளோடு சேர்த்து அவர்கள் எல்லாரையும் ஆலயத்திலிருந்து விரட்டினார்; காசு மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டி, அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப்போட்டார்.+ 16 புறா விற்பவர்களிடம், “இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்! என் தகப்பனுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!”+ என்று சொன்னார். 17 அப்போது, “உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்”+ என்று எழுதப்பட்டிருக்கிற வசனத்தை அவருடைய சீஷர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.
18 யூதர்கள் அவரிடம், “இப்படியெல்லாம் செய்கிறாயே, உனக்கு அதிகாரம் இருப்பதை நிரூபிக்க என்ன அடையாளத்தை எங்களுக்குக் காட்டப்போகிறாய்?”+ என்று கேட்டார்கள். 19 அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்”+ என்று சொன்னார். 20 அப்போது யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்ட 46 வருஷங்கள் எடுத்தன, நீ இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவாயோ?” என்றார்கள். 21 ஆனால், அவர் தன்னுடைய உடலாகிய ஆலயத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்.+ 22 இயேசு அடிக்கடி அப்படிச் சொன்னதை அவர் உயிரோடு எழுப்பப்பட்டபோது சீஷர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.+ அதனால், வேதவசனங்களையும் அவர் சொன்ன வார்த்தைகளையும் நம்பினார்கள்.
23 பஸ்கா பண்டிகை சமயத்தில் அவர் எருசலேமில் செய்த அடையாளங்களைப் பார்த்து, நிறைய பேர் அவருடைய பெயரில் விசுவாசம் வைத்தார்கள். 24 ஆனால், இயேசு அவர்களை நம்பவில்லை. ஏனென்றால், அவர்கள் எல்லாரையும் பற்றி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. 25 எந்த மனிதனைப் பற்றியும் அவருக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனென்றால், அவர்களுடைய இதயத்தில் என்ன இருந்ததென்று அவருக்குத் தெரிந்திருந்தது.+