2 நாளாகமம்
6 அப்போது சாலொமோன், “யெகோவாவே, கார்மேகத்தில் குடியிருப்பேன் என்று சொன்னீர்களே.+ 2 இப்போது நான் உங்களுக்காகப் பிரமாண்டமான ஒரு ஆலயத்தைக் கட்டியிருக்கிறேன், நீங்கள் என்றென்றும் குடியிருப்பதற்காக நிலையான ஒரு இடத்தைத் தயார் செய்திருக்கிறேன்”+ என்று சொன்னார்.
3 பின்பு ராஜா திரும்பி, அங்கே நின்றுகொண்டிருந்த இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் பார்த்து அவர்களை ஆசீர்வதித்தார்.+ 4 அப்போது அவர், “இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைப் புகழ்கிறேன். அவர் தன்னுடைய வாய் திறந்து என் அப்பா தாவீதுக்கு வாக்குக் கொடுத்து, அதைத் தன்னுடைய கைகளால் நிறைவேற்றியும் இருக்கிறார். 5 அவர் என் அப்பாவிடம், ‘என் மக்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்தேன். அதுமுதல், என் பெயர் நிலைத்திருப்பதற்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே நான் எந்த நகரத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை.+ என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக எந்தவொரு மனிதனையும் தேர்ந்தெடுக்கவில்லை. 6 ஆனால், இப்போது என் பெயர் நிலைத்திருக்கும் இடமாக எருசலேமைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.+ என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக தாவீதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’+ என்று சொல்லியிருந்தார். 7 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று என் அப்பா தாவீது மனதார ஆசைப்பட்டார்.+ 8 ஆனால் யெகோவா என் அப்பா தாவீதிடம், ‘என் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்ட நீ மனதார ஆசைப்பட்டாய், அப்படி ஆசைப்பட்டது நல்லதுதான். 9 இருந்தாலும், ஆலயத்தை நீ கட்ட மாட்டாய். உனக்குப் பிறக்கப்போகிற உன் மகன்தான் என் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான்’+ என்று சொன்னார். 10 கொடுத்த வாக்கை யெகோவா நிறைவேற்றிவிட்டார். யெகோவா வாக்குக் கொடுத்தபடியே,+ என் அப்பா தாவீதுக்குப் பிறகு இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் நான் ராஜாவாக உட்கார்ந்திருக்கிறேன்.+ அதோடு, இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தையும் கட்டி முடித்திருக்கிறேன். 11 இஸ்ரவேலர்களுடன் யெகோவா செய்திருந்த ஒப்பந்தம் அடங்கிய பெட்டியை+ அங்கே வைத்திருக்கிறேன்” என்று சொன்னார்.
12 பின்பு யெகோவாவுடைய பலிபீடத்தின் முன்னால் சாலொமோன் நின்றார், இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அவருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர் தன் கைகளை வானத்துக்கு நேராக விரித்தார்;+ 13 (சாலொமோன் ஒரு செம்பு மேடையைச் செய்து அதைப் பிரகாரத்தின் நடுவில் வைத்திருந்தார்.+ அதன் நீளம் 5 முழம்,* அகலம் 5 முழம், உயரம் 3 முழம்; அதன்மீது அவர் நின்றார்.) இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அவருக்குப் பின்னால் இருக்க, அவர் மண்டிபோட்டு தன் கைகளை வானத்துக்கு நேராக விரித்து,+ 14 “இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவே, வானத்திலோ பூமியிலோ உங்களைப் போல் வேறெந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருக்கிறீர்கள், உங்களுடைய வழியில் முழு இதயத்தோடு நடக்கிற ஊழியர்களுக்கு மாறாத அன்பைக் காட்டியிருக்கிறீர்கள்.+ 15 உங்களுடைய ஊழியரான என் அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றியிருக்கிறீர்கள்.+ நீங்கள் வாய் திறந்து சொன்ன வாக்கை இன்றைக்கு உங்கள் கையால் நிறைவேற்றியிருக்கிறீர்கள்.+ 16 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவே, உங்களுடைய ஊழியரான என் அப்பா தாவீதிடம், ‘நீ என் வழியில் நடந்ததுபோல் உன் வாரிசுகளும் என் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து என் வழியில் நடந்தால், இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய உனக்கு வாரிசு இல்லாமல் போவதில்லை’+ என்று நீங்கள் கொடுத்திருந்த வாக்கை இப்போது நிறைவேற்றுங்கள்.+ 17 யெகோவாவே, இஸ்ரவேலின் கடவுளே, உங்கள் ஊழியரான தாவீதுக்கு நீங்கள் கொடுத்த வாக்கு நிறைவேறுவதாக!
18 கடவுளே, நீங்கள் உண்மையிலேயே இந்தப் பூமியிலுள்ள மனிதர்களோடு குடியிருப்பீர்களா?+ வானங்கள், ஏன் வானாதி வானங்கள்கூட, நீங்கள் குடியிருப்பதற்குப் போதாதே!+ அப்படியிருக்கும்போது நான் கட்டிய இந்த ஆலயம் உங்களுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை!+ 19 யெகோவாவே, என் கடவுளே, இந்த அடியேனின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேளுங்கள், கருணை காட்டச் சொல்லி நான் உங்களிடம் செய்யும் மன்றாட்டைக் கேளுங்கள்; உதவி கேட்டு நான் கெஞ்சுவதைக் கேளுங்கள். உங்கள் முன்னால் இந்த அடியேன் செய்யும் ஜெபத்தைக் கேளுங்கள். 20 உங்களுடைய பெயருக்குப் புகழ்சேர்க்க இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொன்னீர்களே.+ அதனால், இந்த இடத்தை நோக்கி உங்களுடைய ஊழியன் செய்கிற ஜெபத்தைக் கேட்பதற்காக இரவும் பகலும் உங்களுடைய கண்கள் இந்த ஆலயத்தின் மேல் இருக்கட்டும். 21 உங்களிடம் உதவி கேட்டு இந்த அடியேன் கெஞ்சுவதைக் கேளுங்கள். இந்த இடத்தை நோக்கி உங்களுடைய மக்களான இஸ்ரவேலர்கள் செய்யும் வேண்டுதலைக் கேளுங்கள்.+ நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து கேட்டு+ எங்களை மன்னியுங்கள்.+
22 தனக்கு எதிராகப் பாவம் செய்ததாக ஒருவன் இன்னொருவன்மீது குற்றம்சாட்டி, ‘நீ பாவம் செய்யவில்லை என்று எனக்குச் சத்தியம் செய்து கொடு’* என்று கேட்கும் பட்சத்தில், சத்தியம் செய்து கொடுத்தவன் இந்த ஆலயத்திலுள்ள பலிபீடத்துக்கு முன்னால் வரும்போது,+ 23 நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு நீதி வழங்குங்கள். தவறு செய்தவனுக்குச் சரியான பதிலடி கொடுங்கள், அவன் செய்த பாவத்துக்குத் தக்க தண்டனை கொடுங்கள்.+ தவறு செய்யாதவனை* நிரபராதி என்று தீர்ப்பளித்து, அவன் செய்த நீதியான செயல்களுக்காக அவனை ஆசீர்வதியுங்கள்.+
24 உங்களுக்கு எதிராகப் பாவம் செய்துவந்த இஸ்ரவேலர்கள் எதிரியிடம் தோற்றுப்போன பின்பு+ மனம் திருந்தி வந்தால், உங்களுடைய பெயரை மகிமைப்படுத்தி+ இந்த ஆலயத்தில் உங்கள் முன்னால் ஜெபம் செய்தால்,+ கருணை காட்டச் சொல்லி உங்களிடம் கெஞ்சி மன்றாடினால்,+ 25 அதை நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு+ உங்களுடைய மக்களான இஸ்ரவேலர்கள் செய்த பாவத்தை மன்னியுங்கள்; அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் தந்த தேசத்துக்கு அவர்களை மறுபடியும் கொண்டுவாருங்கள்.+
26 அவர்கள் உங்களுக்கு எதிராகத் தொடர்ந்து பாவம் செய்ததால்+ வானம் அடைபட்டு மழை பெய்யாமல் போகும்போது,+ அவர்கள் இந்த இடத்தை நோக்கி ஜெபம் செய்தால், உங்கள் பெயரை மகிமைப்படுத்தினால், அவர்களை நீங்கள் தாழ்த்தியதன்* காரணமாகத் தங்களுடைய பாவத்தைவிட்டுத் திருந்தினால்,+ 27 நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு உங்களுடைய ஊழியர்களும் உங்களுடைய மக்களுமான இஸ்ரவேலர்கள் செய்த பாவத்தை மன்னியுங்கள். அவர்கள் நடக்க வேண்டிய நல்ல வழியைக் கற்றுக்கொடுங்கள்;+ உங்களுடைய மக்களுக்குச் சொத்தாகக் கொடுத்த உங்கள் தேசத்தில் மழை பெய்யப் பண்ணுங்கள்.+
28 தேசத்தில் பஞ்சமோ+ கொள்ளைநோயோ+ வரும்போது, கடும் வெப்பக் காற்றால் பயிர்கள் கருகிப்போகும்போது, பூஞ்சணம் தொற்றும்போது,+ படையெடுத்துவருகிற வெட்டுக்கிளிகளும் அகோரப் பசிகொண்ட வெட்டுக்கிளிகளும்+ தாக்கும்போது, இஸ்ரவேல் நகரம் ஒன்றை எதிரிகள் சுற்றிவளைக்கும்போது,+ கொடிய வியாதியோ வேறு ஏதாவது நோயோ வரும்போது,+ 29 இந்த ஆலயத்துக்கு நேராக தனிநபர்களோ இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்தோ தங்களுடைய கைகளை விரித்து+ என்ன வேண்டுதல் செய்தாலும்,+ கருணை காட்டச் சொல்லி கெஞ்சினாலும்+ (அவரவருடைய இதயத்தில் இருக்கும் கஷ்டமும் வேதனையும் அவரவருக்குத்தான் தெரியும்),+ 30 நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து+ அவர்களுடைய மன்றாட்டைக் கேட்டு அவர்களை மன்னியுங்கள்.+ ஒவ்வொருவருடைய செயல்களுக்கும் தகுந்த வெகுமதியைக் கொடுங்கள். ஏனென்றால், அவர்களுடைய இதயத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியும் (மனிதனுடைய இதயத்தில் இருப்பது உங்களுக்கு மட்டும்தான் நன்றாகத் தெரியும்);+ 31 அப்போது, எங்களுடைய முன்னோர்களுக்கு நீங்கள் கொடுத்த தேசத்தில் காலமெல்லாம் அவர்கள் உங்களுக்குப் பயந்து உங்களுடைய வழிகளில் நடப்பார்கள்.
32 வெகு தூரத்திலுள்ள தேசத்தில் குடியிருக்கிற இஸ்ரவேலர் அல்லாத ஒருவர் உங்களுடைய மகத்தான பெயரையும்*+ கைபலத்தையும் மகா வல்லமையையும் பற்றிக் கேள்விப்பட்டு இங்கே வந்து இந்த ஆலயத்தை நோக்கி ஜெபம் செய்தால்,+ 33 நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து கேளுங்கள். அந்த நபர் கேட்பதையெல்லாம் கொடுங்கள். அப்போது, உலகத்திலிருக்கிற எல்லா மக்களும் இஸ்ரவேலர்களைப் போலவே உங்களுடைய பெயரைத் தெரிந்துகொண்டு+ உங்களுக்குப் பயப்படுவார்கள். நான் கட்டிய இந்த ஆலயம் உங்கள் பெயரைத் தாங்கியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.
34 எதிரிகளோடு போர் செய்ய உங்களுடைய மக்களை நீங்கள் எங்கே அனுப்பினாலும் சரி,+ நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிற இந்த நகரத்தை நோக்கி, உங்கள் பெயருக்காக நான் கட்டிய இந்த ஆலயத்தை நோக்கி,+ அவர்கள் உங்களிடம் ஜெபம் செய்தால்,+ 35 அவர்கள் செய்யும் ஜெபத்தையும் கருணை காட்டச் சொல்லி அவர்கள் செய்கிற மன்றாட்டையும் பரலோகத்திலிருந்து கேட்டு அவர்களுக்கு நீதி வழங்குங்கள்.+
36 ஒருவேளை, அவர்கள் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்யும்போது (பாவம் செய்யாத மனிதன் யாருமில்லையே)+ நீங்கள் பயங்கர கோபம்கொண்டு எதிரியின் கையில் அவர்களைச் சிக்க வைத்தால், பக்கத்திலோ தூரத்திலோ இருக்கிற தேசத்துக்கு அவர்கள் பிடித்துக்கொண்டு போகப்பட்டால்,+ 37 அந்தத் தேசத்தில் இருக்கும்போது அவர்களுக்குப் புத்திவந்து, ‘நாங்கள் பாவம் செய்துவிட்டோம், தப்பு செய்துவிட்டோம், மோசமாக நடந்துவிட்டோம்’ என்று சொல்லி உங்களிடம் திரும்பி வந்தால், கருணை கேட்டுக் கெஞ்சினால்,+ 38 தங்களைப் பிடித்துக்கொண்டு போன எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது+ முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் உங்களிடம் திரும்பி வந்தால்,+ முன்னோர்களுக்கு நீங்கள் கொடுத்த தேசத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்த நகரத்தையும் உங்கள் பெயருக்காக நான் கட்டிய இந்த ஆலயத்தையும் நோக்கி ஜெபம் செய்தால்,+ 39 அவர்கள் செய்கிற ஜெபத்தையும் கருணை காட்டச் சொல்லி உங்களிடம் செய்கிற மன்றாட்டையும் நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து கேட்டு அவர்களுக்கு நீதி வழங்குங்கள்.+ உங்களுக்கு எதிராகப் பாவம் செய்த உங்களுடைய மக்களை மன்னியுங்கள்.
40 என் கடவுளே, இந்த இடத்திலிருந்து* ஒருவர் ஜெபம் செய்யும்போது தயவுசெய்து கண்ணோக்கிப் பாருங்கள், காதுகொடுத்துக் கேளுங்கள்.+ 41 யெகோவா தேவனே, நீங்களும் உங்களுடைய பலத்துக்கு அடையாளமாக இருக்கிற ஒப்பந்தப் பெட்டியும் இந்த இடத்தில் தங்கியிருக்க வேண்டும்.+ யெகோவா தேவனே, உங்களுடைய குருமார்கள் மீட்பை அணிந்துகொள்ளட்டும். உங்களுக்கு உண்மையாக* இருப்பவர்கள் நீங்கள் செய்த நன்மைகளை நினைத்து சந்தோஷப்படட்டும்.+ 42 யெகோவா தேவனே, நீங்கள் அபிஷேகம் செய்தவரை ஒதுக்கிவிடாதீர்கள்.+ உங்கள் ஊழியரான தாவீதுக்கு நீங்கள் காட்டிய மாறாத அன்பை நினைத்துப் பாருங்கள்”+ என்று சொல்லி ஜெபம் செய்தார்.