யோவான் எழுதிய முதலாம் கடிதம்
1 ஆரம்பம்முதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களால் பார்த்ததும், நாங்கள் கவனித்ததும், கைகளால் தொட்டுப் பார்த்ததுமான வாழ்வளிக்கும் வார்த்தையை+ உங்களுக்குச் சொல்கிறோம். 2 (ஆம், முடிவில்லாத வாழ்வு+ வெளிப்படுத்தப்பட்டது; அதை நாங்கள் பார்த்திருக்கிறோம், பரலோகத் தகப்பனிடம் இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த வாழ்வைப் பற்றியே இப்போது உங்களுக்குச் சாட்சியாகச் சொல்கிறோம்.)+ 3 பரலோகத் தகப்பனோடும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவோடும் நாம் ஒன்றுபட்டிருப்பது*+ போலவே, நீங்கள் எங்களோடு ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்பதற்காக, நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் உங்களுக்குச் சொல்கிறோம்.+ 4 நம்முடைய சந்தோஷம் நிறைவாய் இருப்பதற்காக இந்த விஷயங்களை உங்களுக்கு எழுதுகிறோம்.
5 நாங்கள் அவரிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவித்து வருகிற செய்தி இதுதான்: கடவுள் ஒளியாக இருக்கிறார்;+ இருள் என்பது அவரிடம் துளிகூட இல்லை. 6 “அவரோடு ஒன்றுபட்டிருக்கிறோம்” என்று சொல்லிக்கொண்டு இருளிலேயே நடந்தால், நாம் பொய் சொல்கிறவர்களாகவும் சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களாகவும் இருப்போம்.+ 7 ஆனாலும், அவர் ஒளியில் இருப்பதுபோல் நாமும் ஒளியில் நடந்தால், ஒருவரோடொருவர் ஒன்றுபட்டிருப்போம். அதோடு, அவருடைய மகனான இயேசுவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்கும்.+
8 “எங்களிடம் பாவம் இல்லை” என்று சொன்னால், நம்மையே ஏமாற்றிக்கொள்கிறவர்களாக இருப்போம்;+ நமக்குள் சத்தியம் இருக்காது. 9 நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டால், கடவுள் அந்தப் பாவங்களை மன்னித்து, அநீதியான எல்லாவற்றிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குவார்.+ ஏனென்றால், அவர் நம்பகமானவர், நீதியுள்ளவர். 10 “நாங்கள் பாவம் செய்யவில்லை” என்று சொன்னால், கடவுள் ஒரு பொய்யர் என்று சொல்வதுபோல் இருக்கிறது. அவருடைய வார்த்தை நம் உள்ளத்தில் இருக்காது.
2 சின்னப் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்காக இந்த விஷயங்களை நான் உங்களுக்கு எழுதுகிறேன். ஆனாலும், நம்மில் யாராவது ஏதாவது பாவம் செய்துவிட்டால், பரலோகத் தகப்பனோடு இருக்கிற நீதியுள்ளவரான+ இயேசு கிறிஸ்து நமக்குத் துணையாக* இருப்பார்.+ 2 நம்முடைய பாவங்களுக்குப்+ பிராயச்சித்த பலி*+ அவர்தான்; நம்முடைய பாவங்களுக்கு மட்டுமல்ல, முழு உலகத்தின் பாவங்களுக்கும் பிராயச்சித்த பலி அவர்தான்.+ 3 அவருடைய கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், அவரை அறிந்திருக்கிறோம் என்று நாம் சொல்ல முடியும். 4 “அவரை அறிந்திருக்கிறேன்” என்று ஒருவன் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன் பொய்யன்; அவனுக்குள் சத்தியம் இல்லை. 5 ஆனால், ஒருவன் அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்தால் அவன் உண்மையில் கடவுளுடைய அன்பை முழுமையாகக் காட்டுகிறான்.+ நாம் அவரோடு ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை இதனால் தெரிந்துகொள்கிறோம்.+ 6 ‘நான் அவரோடு ஒன்றுபட்டிருக்கிறேன்’ என்று சொல்கிற ஒருவன், அவர் நடந்தபடியே தானும் தொடர்ந்து நடக்கக் கடமைப்பட்டிருக்கிறான்.+
7 அன்புக் கண்மணிகளே, நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதிய கட்டளை அல்ல, ஆரம்பத்திலிருந்து உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பழைய கட்டளைதான்,+ நீங்கள் கேட்ட செய்திதான். 8 இருந்தாலும், ஒரு புதிய கட்டளையை நான் உங்களுக்கு எழுதுகிறேன். அவர் கடைப்பிடித்த கட்டளை அது; நீங்களும் அதைக் கடைப்பிடித்தீர்கள். ஏனென்றால், இருள் விலகிக்கொண்டிருக்கிறது, சத்திய ஒளி ஏற்கெனவே பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.+
9 ஒளியில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு தன் சகோதரனை வெறுக்கிறவன்+ இன்னும் இருளிலேயே இருக்கிறான்.+ 10 தன் சகோதரன்மேல் அன்பு காட்டுகிறவன் ஒளியில் நிலைத்திருக்கிறான்;+ எதுவுமே அவனைத் தடுக்கி விழ வைக்காது. 11 ஆனால், தன் சகோதரனை வெறுக்கிறவன் இருளில் இருக்கிறான், இருளில் நடக்கிறான்;+ இருள் அவனுடைய கண்களைக் குருடாக்கியிருப்பதால் அவன் எங்கே போகிறான் என்பதே அவனுக்குத் தெரிவதில்லை.+
12 சின்னப் பிள்ளைகளே, அவருடைய பெயருக்காக உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருப்பதால்+ நான் உங்களுக்கு எழுதுகிறேன். 13 அப்பாக்களே, ஆரம்பத்திலிருந்து இருக்கிறவரை நீங்கள் அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞர்களே, பொல்லாதவனை நீங்கள் ஜெயித்திருப்பதால்+ நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளம் பிள்ளைகளே, பரலோகத் தகப்பனை நீங்கள் அறிந்திருப்பதால்+ நான் உங்களுக்கு எழுதுகிறேன். 14 அப்பாக்களே, ஆரம்பத்திலிருந்து இருக்கிறவரை நீங்கள் அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞர்களே, நீங்கள் பலமுள்ளவர்களாக இருக்கிறீர்கள்,+ கடவுளுடைய வார்த்தை உங்களுக்குள் நிலைத்திருக்கிறது,+ பொல்லாதவனை நீங்கள் ஜெயித்திருக்கிறீர்கள்;+ அதனால் உங்களுக்கு எழுதுகிறேன்.
15 இந்த உலகத்தின் மீதோ, இந்த உலகத்தில் இருக்கிற காரியங்களின் மீதோ அன்பு வைக்காதீர்கள்.+ ஒருவன் இந்த உலகத்தின் மீது அன்பு வைத்தால், பரலோகத் தகப்பன்மீது அவனுக்கு அன்பு இல்லை.+ 16 ஏனென்றால், உலகத்தில் இருக்கிற எல்லாமே, அதாவது உடலின் ஆசையும்+ கண்களின் ஆசையும்+ பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்கிற குணமும்,* பரலோகத் தகப்பனிடமிருந்து வருவதில்லை, இந்த உலகத்திடமிருந்துதான் வருகின்றன. 17 அதோடு, இந்த உலகமும் அதன் ஆசையும் ஒழிந்துபோகும்;+ கடவுளுடைய விருப்பத்தை* செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்.+
18 இளம் பிள்ளைகளே, இது கடைசிக் காலம். அந்திக்கிறிஸ்து வருவதாக+ நீங்கள் கேள்விப்பட்டபடி, இப்போதே அந்திக்கிறிஸ்துக்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள்.+ இது கடைசிக் காலம் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம். 19 அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஏனென்றால் அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல.+ அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மிடமே இருந்திருப்பார்கள். எல்லாரும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெட்டவெளிச்சமாவதற்குத்தான் அப்படி நடந்திருக்கிறது.+ 20 பரிசுத்தமானவரால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.*+ உங்கள் எல்லாருக்கும் சத்தியம் தெரியும். 21 உங்களுக்குச் சத்தியம்+ தெரியாது என்பதால் அல்ல, அது உங்களுக்குத் தெரியும் என்பதாலும், எந்தப் பொய்யும் சத்தியத்திலிருந்து வராது+ என்பதாலும்தான் உங்களுக்கு எழுதுகிறேன்.
22 இயேசுவைக் கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறவனைத் தவிர வேறு யார் பொய்யன்?+ தகப்பனையும் மகனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறவன்தான் அந்திக்கிறிஸ்து.+ 23 மகனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர்களைத் தகப்பன் ஏற்றுக்கொள்ள மாட்டார்.+ ஆனால், மகனை வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறவனைத்+ தகப்பன் ஏற்றுக்கொள்வார்.+ 24 அதனால், ஆரம்பத்திலிருந்து கேட்ட விஷயங்கள் உங்களுக்குள் நிலைத்திருக்க வேண்டும்.+ ஆரம்பத்திலிருந்து கேட்ட விஷயங்கள் உங்களுக்குள் நிலைத்திருந்தால், மகனோடும் ஒன்றுபட்டிருப்பீர்கள், தகப்பனோடும் ஒன்றுபட்டிருப்பீர்கள். 25 அதோடு, அவர் நமக்கு முடிவில்லாத வாழ்வை+ வாக்குக் கொடுத்திருக்கிறார்.
26 உங்களை ஏமாற்றப் பார்க்கிறவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விஷயங்களை உங்களுக்கு எழுதுகிறேன். 27 அவர் தன்னுடைய சக்தியால் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்;+ அந்தச் சக்தி உங்களில் நிலைத்திருக்கிறது. அதனால், யாருமே உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரிடமிருந்து வருகிற அந்தச் சக்தி உண்மையானது, பொய் அல்ல. அது உங்களுக்கு எல்லா விஷயங்களைப் பற்றியும் கற்றுக்கொடுக்கிறது.+ அதனால், கற்றுக்கொண்டபடியே அவரோடு ஒன்றுபட்டிருங்கள்.+ 28 சின்னப் பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது தயக்கமில்லாமல் பேசுகிறவர்களாக+ இருப்பதற்காகவும், அவருடைய பிரசன்னத்தின்போது அவமானத்தில் விலகிப்போய்விடாமல் இருப்பதற்காகவும் அவரோடு ஒன்றுபட்டிருங்கள். 29 அவர் நீதியுள்ளவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால், நீதியைக் கடைப்பிடிக்கிற எல்லாரும் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள்+ என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்.
3 நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம் என்றால், பரலோகத் தகப்பன் எந்தளவுக்கு நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார் என்று பாருங்கள்!+ நாம் அவருடைய பிள்ளைகளாகவே இருக்கிறோம்.+ இந்த உலகம் அவரைப் பற்றித் தெரியாமல் இருப்பதால்தான்+ நம்மைப் பற்றியும் தெரியாமல் இருக்கிறது.+ 2 அன்புக் கண்மணிகளே, நாம் இப்போது கடவுளுடைய பிள்ளைகளாக இருக்கிறோம்.+ ஆனால், இனி நாம் எந்த விதத்தில் இருப்போம் என்பது இன்னும் நமக்கு வெளிப்படுத்தப்படவில்லை.+ இருந்தாலும், அவர் வெளிப்படும்போது நாம் அவரைப் போலவே இருப்போம் என்பது நமக்குத் தெரியும். ஏனென்றால், அவர் எந்த விதத்தில் இருக்கிறாரோ அந்த விதத்திலேயே அவரைப் பார்ப்போம். 3 இந்த நம்பிக்கையோடு இருக்கிற ஒவ்வொருவனும், அவர் சுத்தமாக இருப்பதைப் போலவே தன்னையும் சுத்தமாக்கிக்கொள்கிறான்.+
4 பாவம் செய்துகொண்டே இருக்கிற ஒவ்வொருவனும் சட்டத்தை மீறி நடக்கிறான். சட்டத்தை மீறுவதுதான் பாவம். 5 நம்முடைய பாவங்களைப் போக்குவதற்காகக் கிறிஸ்து வந்தார்+ என்றும் உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவமே இல்லை. 6 அவரோடு ஒன்றுபட்டிருக்கிற யாரும் பாவம் செய்துகொண்டே இருப்பதில்லை;+ பாவம் செய்துகொண்டே இருக்கிற யாரும் அவரைப் பார்த்ததும் இல்லை, அவரைப் பற்றித் தெரிந்துகொண்டதும் இல்லை. 7 சின்னப் பிள்ளைகளே, நீங்கள் யாரிடமும் ஏமாந்துவிடாதீர்கள். நீதியான செயல்களைச் செய்துகொண்டே இருக்கிறவன், அவர் நீதியுள்ளவராக இருப்பதைப் போலவே தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான். 8 பாவம் செய்துகொண்டே இருக்கிறவன் பிசாசின் பக்கம் இருக்கிறான்; ஏனென்றால், பிசாசு ஆரம்பத்திலிருந்தே பாவம் செய்துவந்திருக்கிறான்.+ பிசாசின் செயல்களை ஒழிப்பதற்காகத்தான் கடவுளுடைய மகன் வந்தார்.+
9 கடவுளுடைய பிள்ளையாக இருக்கிற யாரும் பாவம் செய்துகொண்டே இருப்பதில்லை.+ ஏனென்றால், கடவுளுடைய சக்தி* அப்படிப்பட்டவனில் நிலைத்திருக்கிறது; அவன் கடவுளுடைய பிள்ளையாக+ இருப்பதால் அவனால் பாவம் செய்துகொண்டே இருக்க முடியாது. 10 நீதியான செயல்களைச் செய்துகொண்டே இருக்காத யாரும் கடவுளின் பக்கம் இல்லை. அதேபோல், தன் சகோதரன்மேல் அன்பு காட்டாத யாரும் கடவுளின் பக்கம் இல்லை.+ கடவுளுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும் இந்த உண்மையிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். 11 நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்து நீங்கள் கேட்ட செய்தி.+ 12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன;+ ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன.+
13 சகோதரர்களே, இந்த உலகம் உங்களை வெறுப்பதைப் பார்த்து ஆச்சரியப்படாதீர்கள்.+ 14 சகோதரர்கள்மேல் நாம் அன்பு காட்டுவதால்,+ இறந்தவர்களைப் போல் இருந்த நாம் இப்போது உயிர் வாழ்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.+ அன்பு காட்டாதவன் இறந்தவனைப் போல் இருக்கிறான்.+ 15 தன் சகோதரனை வெறுக்கிற ஒவ்வொருவனும் கொலைகாரன்தான்.+ கொலைகாரன் எவனுக்கும் முடிவில்லாத வாழ்வு இல்லை+ என்பது உங்களுக்குத் தெரியும். 16 அவர் நமக்காகத் தன்னுடைய உயிரைக் கொடுத்ததால் அன்பு என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொண்டோம்;+ நாமும் நம் சகோதரர்களுக்காக நம்முடைய உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.+ 17 ஆனால், இந்த உலகத்தில் பொருள் வசதிகள் உள்ளவன் தன்னுடைய சகோதரன் வறுமையில் வாடுவதைப் பார்த்தும், அவன்மேல் கரிசனை காட்ட மறுத்தால் கடவுள்மேல் அவனுக்கு அன்பு இருக்கிறதென்று எப்படிச் சொல்ல முடியும்?+ 18 சின்னப் பிள்ளைகளே, உங்களுடைய சொல்லில் மட்டுமல்ல,+ செயலிலும் அன்பு காட்ட வேண்டும்,+ அதை உண்மை மனதோடு காட்ட வேண்டும்.+
19 இதன் மூலம்தான், நாம் சத்தியத்தின் பக்கம் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்வோம். 20 எந்தக் காரணத்துக்காவது நம்முடைய இதயம் நம்மைக் கண்டனம் செய்யும்போது, கடவுள் நம்மைக் கண்டனம் செய்வதில்லை என்று நம் இதயத்துக்கு உறுதி அளித்துக்கொள்ளலாம்.* ஏனென்றால், கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவராக இருக்கிறார், எல்லாவற்றையும் தெரிந்தவராகவும் இருக்கிறார்.+ 21 அன்புக் கண்மணிகளே, நம்முடைய இதயம் நம்மைக் கண்டனம் செய்யவில்லை என்றால், கடவுளிடம் நாம் தயக்கமில்லாமல் பேச முடியும்.+ 22 அதோடு, நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குத் தருவார்.+ ஏனென்றால், நாம் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குப் பிரியமான காரியங்களைச் செய்துவருகிறோம். 23 உண்மையில் இதுதான் அவருடைய கட்டளை: அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் நாம் விசுவாசம் வைத்து,+ அவர் நமக்குக் கட்டளை கொடுத்தபடியே ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும்.+ 24 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் அவரோடு ஒன்றுபட்டிருக்கிறான். அப்படிப்பட்டவனோடு அவரும் ஒன்றுபட்டிருக்கிறார்.+ அவர் நம்மோடு ஒன்றுபட்டிருக்கிறார்+ என்பதை அவர் நமக்குத் தந்த சக்தியால் தெரிந்துகொள்கிறோம்.
4 அன்புக் கண்மணிகளே, கடவுளிடமிருந்து வந்ததுபோல் தெரிகிற செய்திகள் எல்லாவற்றையும் நம்பாதீர்கள்;+ அவை கடவுளிடமிருந்துதான் வந்திருக்கின்றனவா என்பதைச் சோதித்துப் பாருங்கள்.+ ஏனென்றால், போலித் தீர்க்கதரிசிகள் நிறைய பேர் இந்த உலகத்தில் வந்திருக்கிறார்கள்.+
2 கடவுளிடமிருந்து வந்த செய்தியைத் தெரிந்துகொள்ளும் வழி இதுதான்: இயேசு கிறிஸ்து மனிதராக வந்தார் என்பதைத் தெரிவிக்கிற செய்திகளெல்லாம் கடவுளிடமிருந்து வந்திருக்கின்றன.+ 3 ஆனால், இயேசு மனிதராக வந்தார் என்பதைத் தெரிவிக்காத செய்திகளெல்லாம் கடவுளிடமிருந்து வரவில்லை.+ அதோடு, அந்திக்கிறிஸ்துவின் செய்தி வருமென்று நீங்கள் கேள்விப்பட்டபடி,+ அது ஏற்கெனவே உலகத்தில் வந்துவிட்டது.+
4 சின்னப் பிள்ளைகளே, நீங்கள் கடவுளின் பக்கம் இருக்கிறீர்கள். உலகத்தோடு ஒன்றுபட்டிருக்கிற பிசாசைவிட+ உங்களோடு ஒன்றுபட்டிருக்கிற கடவுள்+ உயர்ந்தவராக இருப்பதால், அப்படிப்பட்ட ஆட்களை நீங்கள் ஜெயித்திருக்கிறீர்கள்.+ 5 அந்த ஆட்கள் உலகத்தின் பக்கம் இருக்கிறார்கள்.+ அதனால்தான் உலக விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள், உலகமும் அவர்கள் சொல்வதைக் கேட்கிறது.+ 6 ஆனால், நாம் கடவுளின் பக்கம் இருக்கிறோம். கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்கிறவன் நாம் சொல்கிற விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்கிறான்.+ கடவுளின் பக்கம் இல்லாதவன் நாம் சொல்கிற விஷயங்களைக் கேட்பதில்லை.+ பொய்யான செய்தி எது என்பதையும், கடவுளால் கொடுக்கப்பட்ட உண்மையான செய்தி எது என்பதையும் இப்படித்தான் தெரிந்துகொள்கிறோம்.+
7 அன்புக் கண்மணிகளே, நாம் தொடர்ந்து ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவோமாக.+ ஏனென்றால், அன்பு கடவுளிடமிருந்துதான் வருகிறது. அன்பு காட்டுகிற ஒவ்வொருவனும் கடவுளுடைய பிள்ளையாக இருக்கிறான், கடவுளைப் பற்றித் தெரிந்தவனாக இருக்கிறான்.+ 8 அன்பு காட்டாதவன் கடவுளைப் பற்றித் தெரியாதவனாக இருக்கிறான். ஏனென்றால், கடவுள் அன்பாகவே இருக்கிறார்.+ 9 தன்னுடைய ஒரே மகன் மூலம் நமக்கு வாழ்வு கிடைப்பதற்காகக்+ கடவுள் அவரை இந்த உலகத்துக்கு அனுப்பினார்;+ இதன் மூலம் கடவுள் நம்மேல் வைத்திருக்கிற அன்பு தெரியவந்தது. 10 நாம் கடவுள்மேல் அன்பு காட்டியதால் அல்ல, அவர் நம்மேல் அன்பு காட்டியதால்தான் நம் பாவங்களுக்குப்+ பிராயச்சித்த பலியாக*+ தன்னுடைய மகனை அனுப்பினார், இதுதான் அன்பு.
11 அன்புக் கண்மணிகளே, இந்த விதத்தில் கடவுள் நம்மேல் அன்பு காட்டினார் என்றால், நாமும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.+ 12 ஒருவனும் ஒருபோதும் கடவுளைப் பார்த்ததில்லை.+ நாம் ஒருவருக்கொருவர் தொடர்ந்து அன்பு காட்டினால், கடவுள் நம்மோடு நிலைத்திருப்பார், தன்னுடைய அன்பை நமக்கு முழுமையாக* காட்டுவார்.+ 13 அவர் தன்னுடைய சக்தியை நமக்குக் கொடுத்ததால்தான் நாம் அவரோடு ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதையும், அவர் நம்மோடு ஒன்றுபட்டிருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்கிறோம். 14 அதுமட்டுமல்ல, பரலோகத் தகப்பன் தன்னுடைய மகனை இந்த உலகத்துக்கு மீட்பராக அனுப்பியதை+ நாங்கள் நேரடியாகப் பார்த்திருக்கிறோம், அதைப் பற்றிச் சாட்சி கொடுத்தும் வருகிறோம். 15 இயேசுதான் கடவுளுடைய மகன் என்று ஏற்றுக்கொள்கிறவனோடு+ கடவுள் ஒன்றுபட்டிருக்கிறார், அவனும் கடவுளோடு ஒன்றுபட்டிருக்கிறான்.+ 16 கடவுள் எங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம், அதை நம்பவும் செய்கிறோம்.+
கடவுள் அன்பாகவே இருக்கிறார்.+ தொடர்ந்து அன்பு காட்டுகிறவன் கடவுளோடு ஒன்றுபட்டிருக்கிறான், கடவுளும் அவனோடு ஒன்றுபட்டிருக்கிறார்.+ 17 நியாயத்தீர்ப்பு நாளில் நாம் தயக்கமில்லாமல் பேசுவதற்காகத்தான்*+ இந்த விதத்தில் அன்பு நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது; ஏனென்றால், அவர் இருக்கிற விதமாகவே நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோம். 18 அன்பில் பயம் இல்லை,+ முழுமையான* அன்பு பயத்தைப் போக்கிவிடும்.* ஏனென்றால், பயம் ஒருவனைக் கட்டுப்படுத்தி வைக்கிறது. சொல்லப்போனால், பயப்படுகிறவனிடம் முழுமையான அன்பு இல்லை.+ 19 கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டியதால் நாமும் அன்பு காட்டுகிறோம்.+
20 “கடவுள்மேல் எனக்கு அன்பு இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டு ஒருவன் தன் சகோதரனை வெறுத்தால், அவன் பொய்யன்.+ ஏனென்றால், தான் பார்க்கிற சகோதரன்மேல் அன்பு காட்டாதவன்,+ தான் பார்க்காத கடவுள்மேல்+ அன்பு காட்ட முடியாது. 21 கடவுள்மேல் அன்பு காட்டுகிறவன் தன் சகோதரன்மேலும் அன்பு காட்ட வேண்டும். இதுதான் அவர் நமக்குக் கொடுத்த கட்டளை.+
5 இயேசுதான் கிறிஸ்து என்று நம்புகிற ஒவ்வொருவனும் கடவுளுடைய பிள்ளையாக இருக்கிறான்.+ தகப்பனாகிய கடவுள்மீது அன்பு காட்டுகிற ஒவ்வொருவனும் அவருடைய பிள்ளைமீதும் அன்பு காட்டுகிறான். 2 நாம் கடவுள்மீது அன்பு காட்டி அவருடைய கட்டளைகளின்படி நடக்கும்போது, அவருடைய பிள்ளைகள்மீது+ அன்பு காட்டுகிறோம் என்று சொல்ல முடியும். 3 நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும்.+ அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.+ 4 ஏனென்றால், கடவுளுடைய பிள்ளைகள் எல்லாரும் இந்த உலகத்தை ஜெயிக்கிறார்கள்.*+ நம்முடைய விசுவாசம்தான் இந்த உலகத்தை ஜெயித்திருக்கிற ஜெயம்.+
5 இந்த உலகத்தை யாரால் ஜெயிக்க முடியும்?+ இயேசுதான் கடவுளுடைய மகன் என்று விசுவாசிக்கிறவனால்தான் முடியும், இல்லையா?+ 6 இயேசு கிறிஸ்துவாகிய இவர்தான் தண்ணீராலும் இரத்தத்தாலும் வந்தவர். இவர் தண்ணீரோடு மட்டுமல்ல,+ தண்ணீரோடும் இரத்தத்தோடும் வந்தவர்.+ கடவுளுடைய சக்திதான் இதற்குச் சாட்சி,+ ஏனென்றால் அந்தச் சக்திதான் சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. 7 சாட்சி கொடுப்பவை மூன்று: 8 கடவுளுடைய சக்தி,+ தண்ணீர்,+ இரத்தம்.+ இந்த மூன்றும் ஒரே விஷயத்தைப் பற்றிச் சாட்சி கொடுக்கின்றன.
9 மனிதர்கள் கொடுக்கிற சாட்சியை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றால், கடவுள் கொடுக்கிற சாட்சி அதைவிட உயர்ந்தது. ஏனென்றால், அது கடவுளே தன்னுடைய மகனைப் பற்றிக் கொடுத்திருக்கிற சாட்சி. 10 கடவுளுடைய மகன்மேல் விசுவாசம் வைக்கிறவன் தனக்குக் கொடுக்கப்பட்ட அந்தச் சாட்சியை மனதார ஏற்றுக்கொண்டிருப்பதைக் காட்டுகிறான். கடவுளை விசுவாசிக்காதவனோ அவரைப் பொய்யராக்கியிருக்கிறான்.+ ஏனென்றால், அவர் தன்னுடைய மகனைப் பற்றிக் கொடுத்த சாட்சியில் அவன் விசுவாசம் வைப்பதில்லை. 11 கடவுள் நமக்கு முடிவில்லாத வாழ்வைக்+ கொடுத்தார் என்பதுதான் அந்தச் சாட்சி. அந்த வாழ்வு அவருடைய மகன் மூலம் வருகிறது.+ 12 மகனை ஏற்றுக்கொள்கிறவனுக்கு அந்த வாழ்வு கிடைக்கிறது. கடவுளுடைய மகனை ஏற்றுக்கொள்ளாதவனுக்கோ அந்த வாழ்வு கிடைப்பதில்லை.+
13 கடவுளுடைய மகனின் பெயரில் விசுவாசம் வைக்கிற+ உங்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.+ இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றை எழுதுகிறேன். 14 கடவுளுடைய விருப்பத்துக்கு* ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்+ என்பதுதான் நாம் அவர்மேல் வைத்திருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை.*+ 15 அதோடு, நாம் எதைக் கேட்டாலும் அவர் காதுகொடுத்துக் கேட்கிறார் என்பதை அறிந்திருப்பதால், அவரிடம் கேட்டுக்கொண்ட காரியங்கள் நமக்குக் கிடைக்கும் என்பதையும் அறிந்திருக்கிறோம்.+
16 மரணத்துக்கு வழிநடத்தாத ஒரு பாவத்தைத் தன் சகோதரன் செய்வதை ஒருவர் பார்த்துவிட்டால், அவர் அவனுக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்வார். கடவுள் அவனுக்கு வாழ்வு கொடுப்பார்.*+ ஆம், மரணத்துக்கு வழிநடத்தாத பாவத்தைச்+ செய்தவர்களுக்குத்தான் அது பொருந்தும். மரணத்துக்கு வழிநடத்துகிற பாவம் இருக்கிறது. அப்படிப்பட்ட பாவத்தைச் செய்கிறவனுக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்யும்படி நான் அவரிடம் சொல்லவில்லை. 17 அநீதியான எல்லா செயலும் பாவம்தான்.+ ஆனால், மரணத்துக்கு வழிநடத்தாத பாவமும் இருக்கிறது.
18 கடவுளுடைய பிள்ளையாக இருக்கிற ஒவ்வொருவனும் பாவம் செய்துகொண்டே இருப்பதில்லை என்று நமக்குத் தெரியும்; ஆனால், கடவுளுடைய பிள்ளையாக இருப்பவர்* அவனைப் பாதுகாக்கிறார்; பொல்லாதவனால் அவனை எதுவும் செய்ய முடியாது.+ 19 நாம் கடவுளின் பக்கம் இருக்கிறோம் என்று நமக்குத் தெரியும், ஆனால் இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.+ 20 கடவுளுடைய மகன் வந்திருக்கிறார்+ என்றும், உண்மையானவரைப் பற்றிய அறிவை நாம் அடையும்படி ஆழமான புரிந்துகொள்ளுதலை* தந்திருக்கிறார் என்றும் நமக்குத் தெரியும். உண்மையானவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்து மூலம் நாம் அவரோடு ஒன்றுபட்டிருக்கிறோம்.+ அவர்தான் உண்மையான கடவுளாகவும் முடிவில்லாத வாழ்வாகவும் இருக்கிறார்.+ 21 சின்னப் பிள்ளைகளே, சிலைகளுக்கு விலகி உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.+
வே.வா., “நல்லுறவை அனுபவிப்பது.”
வே.வா., “வழக்கறிஞராக.”
வே.வா., “பாவப் பரிகார பலி; சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுகிறது.”
வே.வா., “தன்னிடம் இருப்பதைப் பற்றிப் பெருமையடிக்கிற குணமும்.”
வே.வா., “சித்தத்தை.”
வே.வா., “அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறீர்கள்.”
நே.மொ., “கடவுளுடைய விதை.” அதாவது, கனி தரக்கூடிய விதை.
வே.வா., “இதயத்தை நம்ப வைக்கலாம்.”
வே.வா., “பாவப் பரிகார பலி; சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுகிறது.”
வே.வா., “பரிபூரணமாக.”
வே.வா., “நம்பிக்கையோடு இருப்பதற்காகத்தான்.”
வே.வா., “பரிபூரண.”
வே.வா., “விரட்டிவிடும்.”
நே.மொ., “கடவுளிடமிருந்து வருகிற எல்லாமே இந்த உலகத்தை ஜெயிக்கும்.”
வே.வா. “சித்தத்துக்கு.”
வே.வா., “காதுகொடுத்துக் கேட்கிறார் என்பதால் நாம் அவரிடம் தயக்கமில்லாமல் பேச முடியும்.”
வே.வா., “அவனை மன்னிப்பார்.”
அதாவது, “கடவுளுடைய மகனாகிய இயேசு கிறிஸ்து.”
நே.மொ., “புத்திக்கூர்மையை.”