வங்கிகள் ஏன் தோல்வியுறுகின்றன
1970-ல் ஹவாய் வங்கி, யாப் என்ற மைக்ரோனேஸியன் தீவில் ஒரு கிளையை நிறுவியபோது, அதற்கு ஒரு பிரச்னை இருந்தது: யாப் மக்களை வங்கியில் பணம் சேமிக்கச் செய்வது எப்படி? “நகரக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, அடிப்படையிலிருந்து ஆரம்பித்தோம்,” என்று, விளக்குகிறார் வங்கியின் அதிகாரி டாமினிக் B. கிரிஃபின் III. “பிழைப்பாதாரத்தில் பிற்பட்ட நிலையிலிருக்கும் பொருளாதாரத்தையுடைய சமுதாயத்தில் எதுவானாலும் பணம். ஒரு பன்றி பணம் அல்ல, ஆனால் ஒரு காகிதத்துண்டிலுள்ள கையொப்பம் பணமாகும் என்று அவர்களுக்கு விளக்கிக் காண்பிக்க வேண்டியதாயிருந்தது. அந்தப் பிரச்னை அறிவுறுத்தும் அடிப்படைக் கருத்து: நவீன சேமிப்பு முறை நம்பிக்கையின் அடிப்படையிலானது. இது மக்கள்—தனிப்பட்ட நபரும் வர்த்தக முறைகளும்—தாங்கள் வியாபாரம் செய்ய பயன்படுத்தும் வங்கிகளிலும் அவற்றை ஆதரிக்கும் ஏஜன்சிகளிலும் கொண்டிருக்கும் நம்பிக்கையில் ஆதாரமிடப்பட்டிருக்கிறது.
யாப் மக்கள் ஏற்கெனவே ஒரு வங்கியைக் கொண்டிருந்தார்கள்—அதுதான் கல் வங்கி. அவர்களுடைய கலாச்சாரம் காலாகாலமாக பெரிய கல் சக்கரங்களைப் பணமாகப் பயன்படுத்திவந்தது. அவை அவ்வளவு பெரிதாக இருந்ததால் அவற்றை சேமித்து வைக்கவும் பாதுகாப்புடன் வைக்கவும் பெட்டகங்கள் தேவைப்படவில்லை. மாறாக அவை கொலோனியாவுக்கு புறம்பே ஒரு சாலையோரமாக மதில்களிலும் மரங்களிலும் அணைத்தபடி வைக்கப்பட்டிருந்தது. அவை யாப் நகருக்கு தென் மேற்கிலிருந்த பெலெள தீவில் பாறைகளிலிருந்து வெட்டப்பட்டவை. அவற்றை வெட்டியெடுப்பதிலும் சிறு படகுகளில் கொண்டுவந்து சேர்ப்பதிலும் எவ்வளவு சிரமம் உட்பட்டிருந்தது என்பதன் பேரில்தான் அவற்றின் மதிப்பு கணக்கிடப்பட்டது. அந்தக் கற்பணம் இடம் மாற்றப்படவில்லை. ஒவ்வொரு கற்பணத்தையும் அதன் பூர்வீகத்தையும் எல்லோருமே அறிந்திருந்தனர். நிலம் அல்லது பொருட்கள் வாங்கப்படும்போது அதன் உரிமை (ஆனால் அந்தக் கற்பணம்தானே அல்ல) ஒரு குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பத்திற்கு மாற்றப்பட்டது.
எனவே யாப் மக்கள் “கற்காலத்திலிருந்து” தற்கால மின்னணு வங்கிமுறைகளுக்கு மாற்றப்பட வேண்டியதாயிருக்கிறது; அவர்கள் சேமிப்புக் கணக்குகளும் அவற்றை சரிபார்க்கும் முறைகளும், அயல்நாட்டு செலாவணிக்கும், சேமிப்பு ஆவணங்களுக்கும் தந்தி சேமிப்பு முறைகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டியதாயிருந்தது. மக்கள் அச்சடித்த துண்டுத்தாள்களின் மதிப்பைக் கற்றுக்கொண்டு, தாங்கள் கண்ணால் பார்க்காத பணத்தைக் கையாளும் வங்கிகளில் நம்பிக்கை வைக்க வேண்டும்.
அந்த நிலை உலகெங்கும் நிலவுகிறது. தங்களுடைய பணத்தைக் காண்பிக்க வேண்டும் என்று மக்கள் எந்த ஒரு வங்கியிடமும் கேட்டதில்லை. உண்மையில் பெரும்பான்மையான பணப் பழக்கமும் மின்னணுக் கருவிகளின் வாயிலாக அல்லது காசோலைகள் வாயிலாக நடைபெறுகிறது. தேவைப்பட்டபோது பணம் கிடைக்கும், அல்லது சேமிப்புக் கால முடிவில் கிடைக்கும் என்ற அந்த நம்பிக்கை மக்களுக்கு வங்கிகள் மீது இருக்கிறது. என்றபோதிலும் அனுதின பழக்கத்திற்கான பணத்தை மட்டுமே தங்கள் பெட்டகத்தில் கொண்டிருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அல்லது காலத்தில் எவ்வளவு பணம் தேவையாயிருக்கும் என்பதை அவர்கள் அனுபவத்தினால் அறிந்திருக்கிறார்கள். அப்படியென்றால், அந்த மற்ற பணம் எல்லாம் எங்கே?
வங்கிகளின் வியாபாரம்
வங்கிகள் வியாபார நிறுவனங்கள். மற்ற நிறுவனங்களைப் போலவே இவைகளும் இலாபம் பெறுவதற்காக வியாபாரம் செய்கின்றன. ஆனால் மற்றவைகளைப் போலில்லாமல் பணம்தான் இவற்றின் உற்பத்திச் சரக்கு. சுருங்கச் சொன்னால், பணத்தை ஓர் இடத்திலிருந்து கடன் வாங்கி மற்றொன்றுக்குக் கடன் வழங்குகின்றன. வாங்கிய கடனின் வட்டியைக் காட்டிலும் அதிக வட்டிக்குக் கடன் கொடுப்பதன் மூலம் தங்களுக்கும், தங்களிடம் பணம் சேமிப்பவர்களுக்கும், தங்களுடைய பணிகளுக்குமான பணத்தைச் சம்பாதிக்கின்றன. ஆனால் வங்கிகள் பணத்தை உற்பத்தியும் செய்கின்றன? இது எப்படி செய்யப்படுகிறது?
டெனிஸ் டர்னர் “உங்கள் வங்கி தோல்வியுறும்போது” என்ற தன்னுடைய புத்தகத்தில் பின்வருமாறு விளக்குகிறார்: “வங்கிகள் ஒரு சிறிய அளவு வைப்புத் தொகையைத்தான் கையிருப்பில் கொண்டிருக்க வேண்டும் என்று பெடரல் ரிசர்வ் சிஸ்டம் எதிர்பார்க்கிறது. கையிருப்பில் இருக்கும் சேமத் தொகை வங்கிகளின் அளவு மற்றும் சேமிப்பின் வகை ஆகியவற்றை சார்ந்து வித்தியாசப்படுகிறது என்றாலும், அது தற்போது [1983] சராசரியாக 8%-ஆக இருக்கிறது. சேமிப்புக்குப் பணம் செலுத்துபவர் ரூ.100.-ஐ தன் கணக்கில் செலுத்துவாரானால், வங்கி அந்தத் தொகையில் ரூ.92-ஐ கடனாக வழங்கக்கூடும். கடன் வாங்குபவர் அந்தப் பணத்தை செலவு செய்தாலுஞ்சரி, அல்லது வேறொரு வங்கிக் கணக்கில் வைத்தாலுஞ்சரி, அவர் புதிய வைப்புத் தொகைகளில் ரூ.92-ஐ ஆரம்பித்து வைக்கிறார். இந்த வைப்புத் தொகையில் ரூ.84.64 கடனாக வழங்கப்படக்கூடும். ஆனால் ரூ.7.36 சேமத் தொகையாகிறது. இந்த முறை தொடர்கிறது. இப்படியாக 8% சேமத் தொகை இருக்கவேண்டும் என்ற நிபந்தனை முறையில் வைப்புத்தொகையாக இருக்கும் ரூ.100 புதிய பணமாக மொத்தம் ரூ.1200-ஐ உற்பத்தி செய்யக்கூடும்.
வங்கிகள் சாதாரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் அளவுக்குக் கடன் வழங்குகின்றனர். ஆனால் வங்கி பிரச்னையிலிருக்கிறது என்ற ஒரு வதந்தி பரவுமானால், அதில் சேமிப்பவர்கள் நம்பிக்கையிழந்து தாங்கள் சேமித்திருக்கும் பணத்தை திருப்பித் தரும்படி ஒட்டுமொத்தமாக விண்ணப்பிக்கின்றனர். பணத்தைத் திரும்பக் கேட்கும் எல்லோருக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாத நிலைக்குள்ளாகி வங்கி நொடியக்கூடும்—அரசாங்கம் உதவிக்கு வந்தாலொழிய அல்லது நிலையான வங்கிகளுடன் இணைக்கப்பட்டாலொழிய அது நொடிந்துபோகக்கூடும். நிதிநிலையில் ஆரோக்கியமாக இருக்கும் வங்கிகளுங்கூட இப்படியாக இடந்தெரியாமற் போய்விட்டிருக்கின்றன.
தோல்விக்கு வேறு காரணங்கள்
சாதாரணமாக, கடன் வழங்குதல் வங்கிகளைப் பிரச்னைக்குள்ளாக்கிவிடுகிறது, விசேஷமாக குறைந்த வட்டிக்கு நீண்ட கால கடன்கள் வழங்குதல் இந்நிலைக்குக் காரணமாயிருக்கிறது. பொதுவாகப் பொருளாதாரம் ஒரே நிலையில் இருக்கும்போதும், பணம் சேமிப்பவர்களுக்குக் கொடுக்கப்படும் வட்டி விகிதம், வழங்கப்படும் கடன்கள் பேரிலான வட்டி விகிதத்தைவிட குறைவாக இருக்கும்போதும் பிரச்னை ஏற்படுவதில்லை. ஆனால், அண்மைக் காலங்களில் இருந்ததுபோல், வைப்புத் தொகைக்குரிய வட்டி விகிதம் அதிகரிக்கும்போது, வங்கிகள் தாங்கள் பெறுவதைவிட அதிகம் செலுத்திக்கொண்டிருப்பதைக் காண்கின்றன.
கடன்களைப் பெற்றவர்கள் அவற்றைத் திருப்பிக்கொடுக்க முடியாத நிலையிலிருக்கும்போது பிரச்னை அதிக மோசமாகிவிடுகிறது. ஐக்கிய மாகாணங்களிலுள்ள அநேக விவசாயிகளின் நிலை இப்படியாகத்தான் இருக்கிறது. இந்த நிலை பல பிராந்திய வங்கிகளைத் தோல்வியுறச் செய்கிறது. “1985-ல் தயாரிக்கப்பட்ட தோல்வியுற்ற வங்கிகளின் பட்டியலில் பாதி விவசாய வங்கிகளாக இருந்தன, அதாவது அவற்றின் 25% கடன் தொகைகள் விவசாயத்துடன் சம்பந்தப்பட்டதாயிருந்தது,” என்று நிதிநிலை காட்டும் செய்தித்தாளாகிய அமெரிக்கன் பாங்க்கர் குறிப்பிடுகிறது.
ஏமாற்றுதலும் மோசடியும் வங்கிகளின் தோல்விக்கு மற்றொரு காரணம். மின்னணு மாற்றங்களைக் கொண்டிருக்கும் இந்தச் சகாப்தத்தில் பணம் திருடப்படுவது கடந்த கால வங்கிக் கொள்ளைகளைக் காட்டிலும் அதிக மோசமாக இருக்கிறது. “இந்த முறையில் அமெரிக்க பொருளாதாரம் ஆண்டுதோறும் 50 கோடி டாலர் நஷ்டத்தை அனுபவிக்கிறது,” என்று பாரீஸ் நகரின் தினசரி லெஃபிகாலோ குறிப்பிடுகிறது. “ஐரோப்பாவில் பெரிய வங்கிகள் தங்கள் புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் அதிக ஜாக்கிரதையாயிருக்கிறது, தங்களுடைய பிரச்னைகளை வெளியாக்கிட மனமற்றவர்களாயிருக்கின்றனர். என்றபோதிலும் பொதுவாகக் காணப்படும் வங்கிக் கொள்ளைகளைவிட கம்ப்யூட்டரின் மோசடியே அதிகமான நஷ்டத்திற்குக் காரணம் என்பதை ஒப்புக்கொள்கின்றனர். கம்ப்யூட்டரின் மோசடி நம்முடைய நவீன பொருளாதாரத்தின் ஒரு வாதையாகிவிட்டிருக்கிறது. . . . கம்ப்யூட்டர் வல்லுநர்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் அவற்றிற்குப் பதில் பரிகாரங்கள் கண்டுபிடித்த உடனேயே அவற்றையும் மீறி செயல்படுவதற்கான புதிய வழிமுறைகள் வெளிச்சத்திற்கு வந்து வருகிறது. இந்த வழிமுறைகளைச் சிலர் தங்களுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் வகையில் விரைவாக செயல்படுகின்றனர்.
மற்ற எந்த வியாபாரத்திலும் இருப்பதுபோல், தவறான நிர்வாகமும், மோசமான வியாபார பழக்கங்களும் வங்கிகளின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருக்கலாம். தவறானதும் திறமையற்றதுமான நிர்வாகம் அநேக வங்கிகளின் தோல்விக்குக் காரணமாயிருந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. வங்கியின் இயக்குநர்கள் தங்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தகுந்த கடனீட்டுறுதியின்றி கடன் வழங்கியிருக்கக்கூடும். அல்லது, செழித்தோங்கும் காலங்களில் அவர்கள் அளவுக்கு மிஞ்சி கடன் வழங்கியிருக்கக்கூடும். அல்லது, பேராசையும், ஏமாற்றி வேகமாகப் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற பேராசையும் அது சம்பந்தமான முயற்சியும் சில கவலீனமான சேமிப்புகளை வளர்த்திருக்கக்கூடும்.
சில சமயங்களில், கடுமையான போட்டிகளுங்கூட, ஆபத்தான செயல்முறைகளைப் பின்பற்றும்படி செய்திருக்கக்கூடும். சில வங்கிகள் தங்களுடைய சொந்த அளவுகடந்த கடன் வழங்கும் திட்டங்களுக்குப் பலியாகியிருக்கின்றன. பிரச்னைகள் எற்படுகையில், அவற்றை மறைப்பதற்காகவும் வரவை பெறுக்குவதற்காகவும், அசாதாரணமான உயர்ந்த வட்டி விகிதங்களை வழங்கும் திட்டங்களைக் கொண்டிருப்பதில் அல்லது இன்னும் அதிக ஆபத்தான முதலீடுகளைச் செய்வதில் ஈடுபடுகின்றன.
சேமிப்புகளுக்கு அரசாங்க ஈட்டுறுதி உத்தரவாதமுங்கூட—என்ன நடந்தாலும் சேமித்தவர்களின் தொகை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதமுங்கூட—சில வங்கிகளைக் கவலையீனமாக இருக்கத் தூண்டிவிட்டிருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத நிலை இருக்கிறது.
இன்னும் சிலர், எண்ணை மற்றும் எரிபொருள்களின் விலை அதிகமாக இருக்கும்போது, அக்கிடங்குகள் பேரில் முதலீடு செய்கின்றனர், ஆனால் அவற்றின் விலை சரியும்போது ஓட்டாண்டியாகிவிடுகின்றனர். அல்லது பணம் மதிப்பில் உயரும்போது, மதிப்பில் சரிந்துள்ள பணவீக்கமடைந்த டாலரில் கடனைத் திருப்பிக்கொடுக்க நினைத்தவருக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடும்.
வங்கிகளின் தோல்விக்கு வழிநடத்தும் இந்தப் பிரச்னைகள் சிறிய வங்கிகளுக்கு மட்டுப்பட்டதாயில்லை. உலகின் சில மிகப் பெரிய நிதி நிறுவனங்கள்கூட இக்கட்டான நிலைக்குள்ளாகியிருக்கின்றன. அநேக வங்கிகள், முன்னேற்றமடையாத நாடுகளுக்குப் பல கோடி டாலர் கடன் தொகை வழங்கியிருக்கின்றன, ஆனால் அந்த நாடுகள் இப்பொழுது வட்டியைக்கூட கட்ட முடியாத நிலையிலிருக்கும்போது, அசல் தொகையைத் திருப்பிக் கொடுப்பதைப் பற்றி குறிப்பிடுவதற்கில்லை. வங்கிகள் வேகமாகத் தோல்வியுறும் காரியம் அண்மை ஆண்டுகளில் உலகமுழுவதும் கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. நம்முடைய நம்பிக்கை தவறான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறதா? வங்கிகள் எந்தளவுக்குப் பாதுகாப்பானவை? (g86 10/22)
[பக்கம் 6-ன் வரைப்படம்/படம்]
ஐ.மா.-ல் தோல்வியுற்ற வங்கிகள்a
1977 - 6
1978 - 7
1979 - 10
1980 - 10
1981 - 10
1982 - 42
1983 - 48
1984 – 79
1985 -120
[அடிக்குறிப்புகள்]
a FDIC (பெடரல் டெப்பாஸிட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்) நிறுவனத்தால் ஈட்டுறுதி அளிக்கப்பட்ட வங்கிகள். இது தோல்வியுற்ற மற்ற சேமிப்பு நிறுவனங்களை உட்படுத்தவில்லை. மார்ச் 11, 1986 பட்டியல்படி FDIC பிரச்னையில் கூடுதலாக 1,196 வங்கிகளின் பெயர்கள் காணப்பட்டன.
[பக்கம் 5-ன் படம்]
யாப் மக்களின் கற் பணத்தை இந்த வீட்டிற்கு வெளியே காணலாம்