இளைஞர் கேட்கின்றனர் : . .
கடவுள் தொடர்ந்து என் நண்பராய் இருப்பாரா?
அரசனாகிய தாவீது, கடவுளின் நட்பை அனுபவித்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் கூறினதாவது: “என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது.” தாவீது, பிறர் தன்னை மோசமாக நடத்தினதால் மட்டுமின்றி தன் சொந்தத் தவறுகளாலும் துன்புற்றார். கடவுள் தன்னை ஒதுக்கிவிட்டாரோ என்றும்கூட நினைக்க ஆரம்பித்தார்; ஆகவே அவர் பின்வருமாறு ஜெபித்தார்: “என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.”—சங்கீதம் 25:11, 16-19.
ஒருவேளை நீங்களும் அதேவிதமாக வருத்தமாய் உணர்ந்துகொண்டிருக்கலாம். வீட்டிலோ, பள்ளியிலோ, உங்களைத் திக்குமுக்காடச் செய்யும் மோசமான சூழ்நிலை எழலாம். அதுமட்டுமல்லாமல், உங்களுக்குத் தீவிர உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம்; அல்லது தவிர்க்க முடியாத சில பலவீனங்களினால் நீங்கள் உற்சாகமிழந்தவர்களாய் உங்களைக் காணக்கூடும். அவை என்னவாய் இருந்தாலும்சரி, நீங்கள் தனிமையில் துன்புறவேண்டிய அவசியமில்லை; கடவுள் தம்முடைய நட்பையும் ஆதரவையும் தாராளமாய் அளிக்கிறார். a நீங்கள் ஏற்கெனவே அவருடன் ஓர் உறவை வளர்க்க ஆரம்பித்திருந்தால், கடினமான சூழ்நிலை ஏற்படுகையில், அவர் தம்முடைய நண்பர்களைக் கைவிடுவதில்லை என்று அறிகையில் ஆறுதல் அடைவீர்கள். அப்படியிருந்தாலும், நீங்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகையில், கடவுள் உங்களைவிட்டு வெகுதூரம் போய்விட்டதாக நீங்கள் உணரலாம். உங்களுக்கு அவர் உதவவே இல்லை என்றும்கூட உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் விஷயம் அப்படித்தான் இருக்கிறதா?
“மாம்சத்திலே ஒரு முள்”
முதலில், 2 கொரிந்தியர் 12:7-10-ஐத் தயவுசெய்து வாசியுங்கள். அதில், “மாம்சத்திலே ஒரு முள்” என்றழைக்கப்பட்ட ஏதோவொன்றினால் தான் எப்படி துன்புற்றார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். அந்த “முள்” என்பது, அவருடைய கண்பார்வையை உட்படுத்திய உடல்ரீதியிலான குறைபாடாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அது என்னவாயிருந்தாலும், அவரை உணர்ச்சிப்பூர்வமாக தொடர்ந்து ‘குட்டுவதாய்’ இருந்தது. அதை நீக்கும்படியாக மூன்றுதரம் கடவுளை வேண்டிக்கொண்டபோதிலும், அந்த “முள்” தொடர்ந்திருந்தது.
யெகோவா பவுலினுடைய ஜெபங்களைக் கேட்காதவர்போலிருந்தாரா? இல்லவே இல்லை! கடவுள் அவரிடம் கூறினதாவது: “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.” யெகோவா, அந்த ‘முள்ளை’ நீக்கிப்போடவில்லை என்றாலும், பவுலை அவர் கைவிட்டுவிடவில்லை. கடவுளுடைய தகுதியற்ற தயவினால், பவுல் அவருடன் ஒரு நெருங்கிய நட்பை அனுபவித்தார். தன் குறைபாட்டைச் சமாளிக்கும்படி பவுலுக்கு உதவ அது ‘போதுமானதாயிருந்தது.’ பவுல் அதைச் சமாளிக்கப் போராடுகையில், ஒரு புதிய, தனிப்பட்ட விதத்தில் கடவுளுடைய தாங்கிக்கொள்ளும் சக்தியை அனுபவிக்கப்போகிறவராயும் இருந்தார்.
துன்பங்களைச் சமாளிப்பதில் உதவி
பவுலைப் போலவே உங்களுக்கும், ஏதாவது “முள்” அல்லது பிரச்சினை உங்களைக் குட்டுவதாய், எதிர்மாறான மனநிலையையும் உற்சாகமிழப்பையும் ஏற்படுத்துவதாய் இருக்கலாம். பவுலின் விஷயத்திலிருந்ததைப் போலவே, கடவுள் அத் துன்பத்தைத் தொடர்ந்து இருக்க அனுமதிக்கலாம். அது, கடவுள் இனிமேலும் உங்களுக்கு நண்பராய் இல்லை என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. கடவுள் அப்போஸ்தலனாகிய பவுலிடம் கூறியதாவது: ‘பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.’ நீங்கள் உங்கள் சொந்த பலத்தில் அல்லாமல், கடவுளுடைய பலத்தில் சார்ந்திருந்தால், சகித்துக்கொள்ள முடியும். கடவுளுடைய ஆவியின் உதவியினால், உங்களால் செய்ய முடியும் என்று நீங்கள் ஒருபோதும் நினைத்திராதவற்றையும் உங்களால் செய்ய முடிகிறதைக் காண்பீர்கள். பவுல் சொன்னதாவது: ‘நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; . . . பலவீனங்களில் . . . நான் பிரியப்படுகிறேன்.’
ராபன் b என்ற பெயருடைய ஓர் இளம்பெண் இது உண்மையாய் இருக்கக் கண்டாள். 14-வது வயதில் விழி மிகை அழுத்தம் (glaucoma) என்ற நோயால் அவளுடைய கண்பார்வையை இழந்தாள். அதே ஆண்டில் அவளுடைய அம்மா திடீரென்று இறந்துவிட்டார்கள். இந்த வேதனைமிகுந்த “முட்களை” சமாளிக்க ஆரம்பிக்கையில், “இப்போது யெகோவா மட்டுமே எனக்கிருக்கிறார்” என்று ராபன் சொல்கிறாள். “என் சூழ்நிலையைச் சமாளிப்பதில் நான் வெற்றியடைய வேண்டுமென்றால், அவரை நெருங்கப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று எனக்குத் தெரிந்தது.” ராபன் அதையே செய்தாள்; காலப்போக்கில் ஒரு முழுநேர பிரசங்கியாக ஊழியம் செய்பவளானாள். அவள் கூறுவதாவது: “சிறிய விஷயங்களுக்கெல்லாம் யெகோவாவிடம் உதவி கேட்டேன். அவர் உண்மையிலேயே எனக்கு உதவினார்.”
சோதனைகளை அனுபவிப்பது, கடவுளுடன் நெருங்கிவருவதற்கு உண்மையிலேயே உதவுவதாகப் பல இளைஞர் கண்டறிந்துள்ளனர். இளம் ஜெஃப்பை எண்ணிப்பாருங்கள்; அவனுடைய அப்பா, ஏழு பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை அவனுடைய அம்மாவின் தலைமேல் போட்டுவிட்டு, குடும்பத்தை அப்படியே நடுத்தெருவில் திண்டாடவிட்டுப் போய்விட்டார். “அப்பா இல்லாத குறையை நினைத்து நினைத்து நான் வருந்தினேன்” என்று ஜெஃப் ஒப்புக்கொள்கிறான்; அப்போது அவனுக்கு வயது 12 தான். “எனக்கிருந்த வெறுமை உணர்வை நிரப்ப எவராவது கிடைக்கமாட்டாரா என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவித்தேன்.” ஜெஃப் என்ன செய்தான்? “அந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய எனக்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபித்தேன்.” ஜெஃப் தான் செய்துவந்த ஜெபங்களுக்கு இசைவாக உழைத்தான்; ஆவிக்குரிய நடவடிக்கைகளில் மூழ்கித் திளைத்தான். சிலகாலம் கழித்து, யெகோவாவின் தாங்கும் கைகளை—பலப்படுத்தும் அவருடைய பரிசுத்த ஆவியின் மூலமாகவும் கிறிஸ்தவ சபையின் மூலமாகவும்—அவனால் உணர முடிந்தது. (சங்கீதம் 27:10-ஐ ஒப்பிடுக.) இப்போது 27-வது வயதில் ஜெஃப் இவ்வாறு நினைத்துப் பார்க்கிறான்: “பாதுகாப்புக்காக எவரையுமே நான் எதிர்பார்க்க முடியாத நிலையில் இருந்தேன்; ஆகவே யெகோவாவிடம் மிக நெருக்கமானேன்.” அந்த நெருங்கிய உறவை, “இந்தச் சோதனையின் மூலமாகக் கிடைத்த மதிப்பிடமுடியாத ஓர் ஆசீர்வாதம்” என அவன் அழைக்கிறான்.
கடவுளுடைய உதவியைப் பெறுவது எப்படி
உங்களுடைய பரலோக நண்பர், அதேபோன்று துன்பங்களைச் சமாளிப்பதில் உங்களுக்கும் உதவுவார். ஆனால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? எந்தவொரு நட்பும் செழித்தோங்க வேண்டுமானால், பேச்சுத்தொடர்பு இருக்க வேண்டும். கடவுளுடன் பேச்சுத்தொடர்பு கொள்ள ஜெபம் நமக்கு ஒரு வழியாக இருக்கிறது. அதன் மூலமாக அவருடைய உதவி நமக்குத் தேவை என்று நாம் அவருக்குத் தெரியப்படுத்துகிறோம். என்றாலும், அந்த ஜெபத்தையே, உணர்ச்சியோடு தெரிவிக்காமலும், அரைத்த மாவையே அரைப்பது போல, சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்பவர்களாயும் இருந்தால், அதற்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது. மேற்கூறப்பட்ட இளைஞர்களைப் போல, நீங்கள் கடவுளிடம் ‘உங்கள் இருதயத்தை ஊற்றிவிட வேண்டும்’! (சங்கீதம் 62:8) நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமும் ஏற்படலாம். (பிலிப்பியர் 4:6) விண்ணப்பங்கள் என்பவை, விசேஷமாயிருக்கும் ஆழ்ந்த, உருக்கமான ஜெபங்களாகும்.
உங்கள் நினைவுகளைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினையோ, அல்லது ஒரு கெட்ட பழக்கத்தை மேற்கொள்வதில் சிரமமோ உங்களுக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். யெகோவாவிடம் விண்ணப்பியுங்கள்! சோதனைக் காலங்களின்போது, அவருடைய உதவிக்காகக் கெஞ்சுங்கள். இது எப்போதுமே எளிதாய் இல்லாமலிருக்கலாம். “தவறான செயல் ஒன்றைச் செய்ய பலமாக தூண்டப்படுவதாக நான் உணரும்போது, ஜெபிப்பதற்கு என்னைநானே வற்புறுத்திக்கொள்கிறேன்” என்று காரீ ஒப்புக்கொண்டான். “சில சமயங்களில், ‘யெகோவாவிடம் நெருங்க எனக்குத் தகுதியிருக்கிறதா?’ என்று நான் நினைப்பதுண்டு. என்றாலும், உதவிக்காக அவரிடம் நான் கெஞ்சவே செய்கிறேன். நான் தொடர்ந்து நிலைத்திருக்க எனக்குத் தேவைப்படும் பலத்தை அவர் எனக்கு அளிக்கிறார்.” முதலில் அது சிரமமாய் இருந்தாலும்கூட, கடவுளிடம் உங்கள் இதயத்தைத் தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருங்கள்.
ஆனால், உங்கள் ஜெபங்கள் கேட்கப்படாதவை போல தோன்றினால் என்ன செய்வது? உதாரணமாக, லாரா தற்புணர்ச்சியாகிய கெட்ட பழக்கத்தை மேற்கொள்ளப் போராடிவந்தாள். “நான் அந்தப் பிரச்சினையைப் பற்றி நேர்மையுடன் யெகோவாவிடம் பேசுவேன், ஆனால் என்னால் நிறுத்த முடிவதுபோல் தோன்றவில்லை” என்று அவள் விவரிக்கிறாள். சிலசமயங்களில், நம் விண்ணப்பங்களைக் குறித்து நாம் எந்தளவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோம் என்பதைச் செயலில் காட்டும்படி கடவுள் நம்மை அனுமதிக்கலாம். (சங்கீதம் 88:13, 14-ஐ ஒப்பிடுக.) ஆகவே, நாம் ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்க வேண்டும்! (மத்தேயு 7:7; ரோமர் 12:12) லாரா அதைத்தான் செய்தாள். அதே சமயத்தில், உவாட்ச் டவர் சங்கத்தின் பிரசுரங்களில் வெளிவந்திருந்த அந்தத் தலைப்பையுடைய விஷயத்தில் கொடுக்கப்பட்டிருந்த ஆலோசனைகளையும் பொருத்த ஆரம்பித்தாள். c காலப்போக்கில், அவற்றுக்கெல்லாம் இருந்த பலன்களைக் காண ஆரம்பித்தாள். அவள் நினைவுகூருவதாவது: “சோதனையை வெற்றிகரமாய் எதிர்த்துநின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நான் யெகோவாவுக்கு நன்றி தெரிவிப்பேன்; ஏனெனில் அவரே என்னை ஆதரித்தவர் என்று எனக்குத் தெரிந்தது.” உண்மைதான், உங்களுக்கிருக்கும் பிரச்சினையை எதிர்த்துச் சமாளிக்க நீங்கள் போராடுகையில், அவ்வப்போது நீங்கள் அதே பிரச்சினையில் திரும்பவும் சறுக்கி விழுந்துவிடலாம். ஆனால், நீங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டேயும், வேண்டுமென்றே உங்கள் பலவீனங்களுக்கு விட்டுக்கொடுத்துவிடாமலும் இருக்கும்வரையில், உங்களுடைய ‘கடும் முயற்சிகளினால்’ கடவுள் மகிழ்வார்; தொடர்ந்து உங்கள் நண்பராகவும் இருப்பார்.—2 பேதுரு 1:5, NW.
கடவுளுடன் சேர்ந்து வேலைசெய்வது
கடவுளின் உதவியை நீங்கள் பயன்படுத்திக்கொள்வதற்கான மற்றொரு வழி, அவருக்கு ‘உடன்வேலையாட்களாயிருக்க’ வேண்டி அவர் அழைப்பதை ஏற்றுக்கொள்வது. (1 கொரிந்தியர் 3:9) இது, கடவுளைப் பற்றி மற்றவர்கள் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவுவதில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதை உட்படுத்துகிறது. (மத்தேயு 28:19, 20) நீங்கள் வருத்தமாகவோ, உற்சாகமிழந்தவராகவோ உணரும்போது, எந்தவித வேலை செய்யவும் பிடிக்காமல் இருந்திருக்கலாம். என்றாலும், ‘கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாய் இருப்பது’ உண்மையிலேயே உங்களுக்கு உதவ முடியும். (1 கொரிந்தியர் 15:58) உங்கள் சொந்த பிரச்சினைகளைப் பற்றியே உங்கள் மனம் நினைத்துக்கொண்டிராமலாவது இருக்க முடியும். (நீதிமொழிகள் 18:1-ஐ ஒப்பிடுக.) முன்பு குறிப்பிடப்பட்ட ராபன், அவளுக்கு நேர்ந்த கஷ்டமான சந்தர்ப்பங்களைப் பற்றிக் கூறுவதாவது: “என்னை நிலைத்துநிற்கச் செய்தது, நான் செய்துவந்த கடவுளுடைய வேலையே!”
கடவுளோடு சேர்ந்து வேலைசெய்வது, கடவுள் உங்களைக் கைவிட்டுவிட்டார் என்ற தொடர்ந்திருக்கும் எண்ணத்தையும் மேற்கொள்ள உங்களுக்கு உதவலாம். ஒரு பொதுவான இலக்குக்காக, இருவர் ஒரு குழுவாக சேர்ந்து வேலைசெய்யும்போது, பெரும்பாலும் அவர்கள் நண்பர்களாக நெருங்கிவருவதில்லையா? பிரசங்க வேலையில் ஈடுபடுகையில், நீங்கள் தொடர்ந்து சவால்களை எதிர்ப்படுகிறீர்கள். உதவிக்காக கடவுளிடம் திரும்புவதை நீங்களே கண்டுணருகிறீர்கள். உங்கள் பிரயாசத்தைக் கடவுள் ஆசீர்வதித்து வரவர, அவருடைய நட்பு அதிக நிஜமானதாக ஆகிறது. உங்களை ஓர் உடன்வேலையாளாக நினைத்து, கடவுள் உங்களில் வைத்திருக்கும் நம்பிக்கையை நீங்கள் உணர ஆரம்பிக்கிறீர்கள். இது உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு நிஜமான உந்துதலாய் இருக்கலாம்.
உதாரணமாக, காரல் வெகு பாதுகாப்பற்றவளாய் இருந்தாள். அவளுடைய அம்மா தற்கொலை செய்துகொண்டார்கள்; துர்ப்பிரயோகம் செய்யும் அவளுடைய அப்பா, தொடர்ந்து அவளை மட்டந்தட்டிக்கொண்டே இருந்தார். ஆனால் 17-வது வயதில், அவள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாகி, பிரசங்கவேலையைச் செய்ய ஆரம்பித்தாள். இப்போது, ஒரு முழுநேரப் பிரசங்கியாக பத்து ஆண்டுகள் கழித்து அவள் கூறுவதாவது: “இந்த வேலை எனக்கு மிகவும் உதவியாய் இருந்திருக்கிறது; ஏனென்றால் யெகோவாவின் ஆசீர்வாதம் என்மேல் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். ‘கடவுள் என்னை நேசிக்கிறார் என்றால், நான் ஏன் தகுதியற்றவளாய் உணரவேண்டும்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். யெகோவாவின் நாமத்தைப் பறைசாற்றுவதில், அவரால் நான் பயன்படுத்தப்பட்டிருப்பது, நான் மிகவும் பாதுகாப்பாய் இருக்கும்படி செய்திருக்கிறது.”
‘யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்’
உயிருக்கு அச்சுறுத்தலாயிருந்த ஓர் ஆபத்தான சூழ்நிலையிலிருந்து மயிரிழையில் உயிர்த்தப்பினபிறகு, ‘என்னுடைய எல்லாப் பயத்துக்கும் [கடவுள்] என்னை நீங்கலாக்கிவிட்டார்’ என்று அரசனாகிய தாவீது எழுதினார். (சங்கீதம் 34:4, 6, மேல்முகவரி; 1 சாமுவேல் 21:10-12) தன் சொந்த அனுபவத்திலிருந்து தாவீதால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்.”—சங்கீதம் 34:8, NW.
தாவீதின் வாழ்வைப் போன்று உங்கள் வாழ்வு ஒருபோதும் ஆபத்தில் இராமல் இருக்கலாம் என்றாலும், சில சமயங்களில், சில கஷ்டங்களையும் சஞ்சலங்களையும் நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று உங்களுக்கு நிச்சயமாய்த் தெரியும். ‘உங்கள் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கும்போது’ கடவுளிடம் விண்ணப்பியுங்கள். (சங்கீதம் 25:17) கடவுள் தம் நட்பை உங்களிடமிருந்து விலக்கிக்கொள்வாரோ என்று பயப்படாதீர்கள். நீங்கள் பொறுமையுடன் சகித்திருந்து, யெகோவாவின் நேரிடையான ஆதரவையும் கவனிப்பையும் அனுபவிக்கையில், “யெகோவா நல்லவர் என்பதை” நீங்களே ‘ருசித்துப்பார்ப்பீர்கள்.’ அதோடு, அவர் என்றென்றுமாகத் தொடர்ந்து உங்கள் நண்பராய் இருப்பார்.—யாக்கோபு 4:8.
[அடிக்குறிப்புகள்]
a எமது ஜூலை 22, 1995 இதழில் வெளிவந்த, “இளைஞர் கேட்கின்றனர் . . . உண்மையில் என்னால் கடவுளின் நண்பனாயிருக்க முடியுமா?” என்ற கட்டுரையைக் காண்க.
b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
c இந்தியாவிலுள்ள காவற்கோபுர பைபிள் மற்றும் துண்டுப்பிரதி சங்கத்தால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில், அதிகாரங்கள் 25, 26-ஐக் காண்க.
[பக்கம் 19-ன் படம்]
துன்ப காலங்களின்போது தம் நண்பர்களைக் கடவுள் கைவிட்டுவிடுகிறாரா?