பேதுருவின் இரண்டாம் கடிதம்
1 நம் கடவுளின் நீதியாலும் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் நீதியாலும் நாங்கள் பெற்றிருக்கிற அதே விலைமதிப்புள்ள நம்பிக்கையைப் பெற்றிருப்பவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் அடிமையும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுவது:
2 கடவுளையும் நம் எஜமானாகிய இயேசுவையும் பற்றிய திருத்தமான அறிவின் மூலம்+ உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் அதிகமதிகமாகக் கிடைக்கட்டும். 3 ஏனென்றால், தன்னுடைய மகிமையாலும் நல்ல குணத்தாலும் கடவுள் நம்மை அழைத்திருக்கிறார். அவரைப் பற்றித் திருத்தமாகத் தெரிந்துகொள்வதன் மூலம்+ நாம் கடவுள்பக்தியோடு வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் தன்னுடைய வல்லமையால் நமக்குத் தந்திருக்கிறார்.* 4 கெட்ட* ஆசையால் சீரழிந்து கிடக்கும் உலகத்திலிருந்து தப்பித்திருக்கிற நமக்கு மகிமையாலும் நல்ல குணத்தாலும் மிக அருமையான, மகத்தான வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார்;*+ தெய்வீகத்தன்மையை நீங்கள் பெறுவதற்காக+ இப்படிச் செய்திருக்கிறார்.
5 இந்தக் காரணத்துக்காக, உங்கள் விசுவாசத்தோடு ஒழுக்கத்தையும்,+ ஒழுக்கத்தோடு அறிவையும்,+ 6 அறிவோடு சுயக்கட்டுப்பாட்டையும், சுயக்கட்டுப்பாட்டோடு+ சகிப்புத்தன்மையையும், சகிப்புத்தன்மையோடு கடவுள்பக்தியையும்,+ 7 கடவுள்பக்தியோடு சகோதரப் பாசத்தையும், சகோதரப் பாசத்தோடு அன்பையும்+ சேர்த்து தாராளமாகக் காட்டுவதற்கு அதிக ஊக்கமாக முயற்சி செய்யுங்கள்.+ 8 இந்தப் பண்புகள் உங்களுக்குள் அதிகமதிகமாகப் பெருகினால், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவைப் பயன்படுத்துவதில் நீங்கள் செயலற்றவர்களாகவும் பலனற்றவர்களாகவும்+ ஆகிவிட மாட்டீர்கள்.
9 இந்தப் பண்புகளில் குறைவுபடுகிறவன் குருடனாக, ஒளியைப் பார்க்க விரும்பாமல் தன் கண்களை மூடிக்கொள்கிறவனாக* இருக்கிறான்;+ ஒருகாலத்தில் தான் செய்த பாவங்களிலிருந்து சுத்தமாக்கப்பட்டதை மறந்தவனாக இருக்கிறான்.+ 10 அதனால் சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்டும்+ தேர்ந்தெடுக்கப்பட்டும் இருப்பதால், கடைசிவரை அதற்குத் தகுதியுள்ளவர்களாக இருப்பதற்கு இன்னும் ஊக்கமாக முயற்சி செய்யுங்கள். நீங்கள் இவற்றைச் செய்துவந்தால் ஒருபோதும் தகுதியில்லாதவர்களாக ஆகிவிட மாட்டீர்கள்.+ 11 சொல்லப்போனால், நம்முடைய எஜமானும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின்+ முடிவில்லாத அரசாங்கத்துக்குள்+ போவதற்குத் தாராளமாக அனுமதிக்கப்படுவீர்கள்.
12 இதனால்தான், இந்த விஷயங்களைப் பற்றித் தெரிந்தவர்களாகவும் கற்றுக்கொண்ட சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருக்கிறவர்களாகவும் நீங்கள் இருக்கிறபோதிலும், இவற்றை உங்களுக்கு ஞாபகப்படுத்த எப்போதும் தயாராக இருக்கிறேன். 13 நான் இந்தக் கூடாரத்தில்*+ இருக்கும்வரை உங்களுக்கு ஞாபகப்படுத்தி+ உங்களைத் தூண்டுவது சரியென்று நினைக்கிறேன். 14 ஏனென்றால், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்து எனக்குச் சொன்னபடி, சீக்கிரத்தில் நான் இந்தக் கூடாரத்தைவிட்டுப் போக வேண்டியிருக்கும்.+ 15 நான் போன பின்பு இந்த விஷயங்களை நீங்கள் எப்போதும் ஞாபகப்படுத்திப் பார்ப்பதற்காக, இப்போது என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்யப்போகிறேன்.
16 நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் பிரசன்னத்தையும் பற்றி நாங்கள் உங்களிடம் சொன்னபோது, தந்திரமாக உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளின் அடிப்படையில் பேசவில்லை; அவருடைய மகத்துவத்தை நேரில் பார்த்ததால்தான் பேசினோம்.+ 17 “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று உன்னதமான மகிமையிடமிருந்து வார்த்தைகள் கேட்டன.*+ அப்போது, கடவுளாகிய தகப்பனிடமிருந்து கிறிஸ்துவுக்கு மாண்பும் மகிமையும் கிடைத்தன. 18 அவரோடு பரிசுத்த மலையில் நாங்கள் இருந்தபோது, வானத்திலிருந்து வந்த அந்த வார்த்தைகளைக் கேட்டோம்.
19 அதனால், தீர்க்கதரிசன வார்த்தைகள் நமக்கு இன்னும் உறுதியாகிவிட்டன; பொழுது விடிந்து விடிவெள்ளி+ உதிக்கும்வரை, இருட்டில் பிரகாசிக்கிற விளக்கைப் போல்+ உங்கள் இதயங்களில் பிரகாசிக்கிற அவற்றுக்கு நீங்கள் கவனம் செலுத்துவது நல்லது. 20 வேதவசனங்களில் இருக்கிற எந்தத் தீர்க்கதரிசனமும் தனி நபர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் சொல்லப்படவில்லை என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். 21 ஏனென்றால், மனிதர்கள் ஒருகாலத்திலும் தங்களுடைய விருப்பத்தால் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.+ கடவுளுடைய வார்த்தைகளை அவருடைய சக்தியால் தூண்டப்பட்டுதான் சொன்னார்கள்.+