பைபிள் புத்தக எண் 5—உபாகமம்
எழுத்தாளர்: மோசே
எழுதப்பட்ட இடம்: மோவாபின் சமவெளிகள்
எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 1473
காலப்பகுதி: 2 மாதங்கள் (பொ.ச.மு. 1473)
1. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலர் நுழைவது சம்பந்தமாக என்ன கேள்விகள் கேட்கப்படலாம்?
உபாகமம் புத்தகத்தில் யெகோவாவின் ஜனங்களுக்கு ஊக்கம் மிகுந்த செய்தி உள்ளது. வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாக அலைந்து திரிந்த பின்பு, இப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் வாயிலில் நின்றார்கள். அவர்களுக்கு காத்திருந்தது என்ன? யோர்தானின் மறுபுறம் அவர்கள் எதிர்ப்படவிருந்த விநோதமான பிரச்சினைகள் யாவை? அந்த ஜனத்துக்கு மோசே முடிவாக சொல்ல வேண்டியவை யாவை? ஒருவேளை நாம் கேட்கலாம்: இந்தக் கேள்விகளுக்கு விடைகளை அறிவது இன்று நமக்கு ஏன் பயனுள்ளது?
2. குறிப்பிடத்தக்க என்ன முறையில் உபாகமம் முக்கியத்துவமுடையது?
2 இதற்கான விடைகள் மோசே பேசின வார்த்தைகளில் காணப்படுகின்றன. இவற்றை அவர் பைபிளின் ஐந்தாவது புத்தகமாகிய உபாகமத்தில் பதிவு செய்தார். முந்தின புத்தகங்களிலுள்ள பலவற்றை இது திரும்ப கூறுகிறது. இருந்தபோதிலும், உபாகமம் அதற்கே உரித்தான முறையில் முக்கியத்துவமுடையது. ஏன்? யெகோவாவின் ஜனங்களுக்கு உண்மையிலேயே திறமையான தலைமை வகிப்பும் நம்பிக்கையூட்டும் வழிநடத்துதலும் தேவைப்பட்ட சமயத்தில் அளிக்கப்பட்டதால், கடவுளுடைய செய்திக்கு அது மேலும் முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது. ஒரு புதிய தலைவனின்கீழ் அந்த வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்கும் தறுவாயில் கடவுளுடைய ஜனங்கள் இருந்தார்கள். முன்னேறி செல்ல ஊக்கமூட்டுதல் தேவைப்பட்டது; அதேசமயத்தில் யெகோவாவின் ஆசீர்வாதத்துக்கு வழிநடத்தும் சரியான பாதையில் செல்ல தேவையான தெய்வீக எச்சரிப்பும் அவர்களுக்கு தேவைப்பட்டது.
3. உபாகமம் முழுவதிலும் மோசே எதை வலியுறுத்துகிறார், இது ஏன் இன்று நமக்கு முக்கியம்?
3 இதற்காக, யெகோவாவின் ஆவியால் மோசே வலிமைமிக்க விதத்தில் ஏவப்பட்டார். இஸ்ரவேலர் கீழ்ப்படிதலுடனும் உண்மையுடனும் நடந்துகொள்ளும்படி நேரடியாக கேட்டுக்கொள்கிறார். யெகோவா மகா உன்னதமான கடவுள் என்றும், தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துகிறவர் என்றும், தம்முடைய ஜனங்கள் ‘முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும் தம்மை நேசிக்க வேண்டுமென’ விரும்புகிறவர் என்றும் மோசே இப்புத்தகம் முழுவதிலும் அறிவுறுத்துகிறார். அவர் “தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.” தமக்கு எதிரான எதையும் அவர் சகிப்பதில்லை. அவருக்குக் கீழ்ப்படிவது ஜீவனையும், கீழ்ப்படியாமற்போவது மரணத்தையும் குறிக்கிறது. உபாகமத்தில் உள்ள யெகோவாவின் போதனை, இஸ்ரவேலர் செய்யவிருந்த முக்கியமான வேலைகளுக்கு அவர்களை தயார்படுத்தி தேவையான அறிவுரை வழங்கியது. இன்று, சீரழிந்த இவ்வுலகத்தின் மத்தியில் யெகோவாவின் பெயரை பரிசுத்தப்படுத்தவும், அவருக்குப் பயப்படும் பயத்தில் நாம் தொடர்ந்து நடக்கவும் தேவையான அறிவுரையாகவும் இது இருக்கிறது.—உபா. 5:9, 10; 6:4-6; NW; 10:12-22.
4 உபாகமம் (ஆங்கிலத்தில் டியூட்டெரானொமி) என்ற இந்தப் பெயர் கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில் உள்ள தலைப்பாகிய டியூட்டெரானோமியன் (Deu·te·ro·noʹmi·on) என்பதிலிருந்து வருகிறது. இது “இரண்டாவது” என பொருள்படும் டியூட்டெராஸ் (deuʹte·ros) என்ற வார்த்தையும், “நியாயப்பிரமாணம்” என பொருள்படும் நோமாஸ் (noʹmos) என்ற வார்த்தையும் சேர்ந்தது. ஆகையால் இது “இரண்டாவது நியாயப்பிரமாணம்; நியாயப்பிரமாணத்தின் மறுபகர்ப்பு” என பொருள்படுகிறது. இது உபாகமம் 17:20-ல் உள்ள எபிரெய சொற்றொடரின் கிரேக்க மொழிபெயர்ப்பாகிய மிஷ்னே ஹட்டோரா (mish·nehʹ hat·toh·rahʹ) என்பதிலிருந்து வருகிறது. இதை ‘நியாயப்பிரமாணத்தின் பிரதி’ என திருத்தமாய் மொழிபெயர்க்கலாம். உபாகமம் என்ற பெயரின் அர்த்தம் இவ்வாறு இருப்பினும், பைபிளின் இந்தப் புத்தகம் இரண்டாவது நியாயப்பிரமாணமோ, நியாயப்பிரமாணத்தின் வெறும் மறுபகர்ப்போ அல்ல. மாறாக அது நியாயப்பிரமாணத்தின் விளக்கம். இஸ்ரவேலர் சீக்கிரத்தில் பிரவேசிக்க போகிற வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் யெகோவாவை நேசிக்கவும் அவருக்குக் கீழ்ப்படியவும் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறது.—1:5.
5 இது ஐந்தாகமத்தின் ஐந்தாவது சுருளாக, அல்லது தொகுப்பாக இருப்பதால், முந்தின நான்கு புத்தகங்களின் எழுத்தாளரே இதன் எழுத்தாளராகவும் இருந்திருக்க வேண்டும், அவரே மோசே. ஆரம்ப வார்த்தைகள் உபாகமத்தை ‘மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்கள்’ என உறுதிப்படுத்துகிறது. மேலும், “மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி”னார், “மோசே அந்தப் பாட்டை எழுதி”னார் போன்ற பின்னால் குறிப்பிடப்பட்ட கூற்றுகளும் அவர் எழுதினார் என்பதை தெளிவாய் நிரூபிக்கின்றன. இந்தப் புத்தகத்தில் அவருடைய பெயர் ஏறக்குறைய 40 தடவை வருகிறது. பொதுவாக, இது யாரால் சொல்லப்படுகிறது என்பதை தெரிவிப்பதற்காகும். புத்தகம் முழுவதிலும் மோசேயைக் குறிக்கும் தன்னிலை சுட்டுப்பெயர் (first person) முனைப்பாய்ப் பயன்படுத்தப்படுகிறது. முடிவான வசனங்கள் மோசேயின் மரணத்துக்குப் பின்பு சேர்க்கப்பட்டன. பெரும்பாலும் யோசுவா அல்லது பிரதான ஆசாரியன் எலெயாசார் எழுதியிருக்கலாம்.—1:2; 31:9, 22, 24-26.
6 உபாகமத்திலுள்ள சம்பவங்கள் எப்போது நடைபெற்றன? ‘நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் . . . சொன்னார்’ என இப்புத்தகமே தொடக்கத்தில் கூறுகிறது. உபாகமம் எழுதி முடிக்கப்பட்ட பின்பு, யோசுவாவின் புத்தகம், யோர்தானை கடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்து பதிவைத் தொடங்குகிறது. இது “முதல் மாதம் பத்தாம் தேதி” ஆகும். (உபா. 1:4; யோசு. 1:11; 4:19) அப்படியென்றால் உபாகமத்திலுள்ள சம்பவங்கள் இரண்டு மாதங்களும் ஒரு வாரமும் அடங்கிய காலப்பகுதியில் நிகழ்ந்திருக்க வேண்டும். என்றபோதிலும், இந்த ஒன்பது வார காலப்பகுதியில் 30 நாட்கள் மோசேயின் மரணத்தின் காரணமாக துக்கம் கொண்டாடுவதில் செலவிடப்பட்டன. (உபா. 34:8) ஆகவே, உபாகமத்திலுள்ள சம்பவங்கள் அனைத்தும் 40-வது ஆண்டின் 11-வது மாதத்தில் பெரும்பாலும் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த மாதத்தின் முடிவுக்குள், அல்லது பொ.ச.மு. 1473-ன் தொடக்கத்தில் இந்தப் புத்தகம் பெரும்பாலும் எழுதி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். மோசே 40-வது ஆண்டின் 12-வது மாதத் தொடக்கத்தில் மரித்திருக்கலாம்.
7 ஐந்தாகமத் தொகுப்பின் முதல் நான்கு புத்தகங்களின் நம்பகத்தன்மைக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்ட நிரூபணங்கள், ஐந்தாவது புத்தகமாகிய உபாகமத்துக்கும் பொருந்துகின்றன. மேலும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் வெகு அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நான்கு எபிரெய புத்தகங்களில் இதுவும் ஒன்று—மற்றவை ஆதியாகமம், சங்கீதம், ஏசாயா. மொத்தம் 83 மேற்கோள்கள் உள்ளன, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் 6 புத்தகங்கள் மாத்திரம்தான் உபாகமத்தைக் குறிப்பிடவில்லை.a
8 உபாகமத்தின் ஆதரவாக இயேசுதாமே மிக பலமான அத்தாட்சியை கொடுத்தார். அவருடைய ஊழியத்தின் தொடக்கத்தில், சாத்தானால் மூன்று தடவை சோதிக்கப்பட்டார், அந்த மூன்று தடவையும், “எழுதியிருக்கிறதே” என்று பதிலுரைத்தார். எங்கே எழுதியிருக்கிறது? உபாகமத்தில்தான் (8:3; 6:16, 13, தி.மொ.). தேவாவியால் எழுதப்பட்ட இந்த வசனங்களையே இயேசு ஆதாரமாக மேற்கோள் காட்டினார்: “மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து பிறக்கிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” “உங்கள் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் சோதிக்கக்கூடாது.” “உன் கடவுளாகிய யெகோவாவையே நீ வணங்க வேண்டும், அவர் ஒருவருக்கே நீ பரிசுத்த சேவை செய்ய வேண்டும்.” (மத். 4:1-11, NW) பிற்பாடு, கடவுளுடைய கட்டளைகள் சம்பந்தமாக இயேசுவை பரிசேயர்கள் சோதிக்க வந்தபோது, அவர்களுக்கு விடையளிக்கையில், உபாகமம் 6:5-லிருந்து ‘பிரதானமும் முதன்மையுமான கற்பனையை’ அவர் எடுத்துக் குறிப்பிட்டார். (மத். 22:37, 38, தி.மொ.; மாற். 12:30; லூக். 10:27) உபாகமம் நம்பத்தக்கது என்பதை இயேசுவின் அத்தாட்சி முடிவாக உறுதிப்படுத்துகிறது.
9 மேலும், இந்தப் புத்தகத்தில் உள்ள சம்பவங்களும் கூற்றுகளும் சரித்திர சூழ்நிலைக்கும் சுற்றுப்புற சூழல்களுக்கும் திருத்தமாக பொருந்துகின்றன. எகிப்து, கானான், அமலேக்கு, அம்மோன், மோவாப், ஏதோம் ஆகியவற்றை பற்றிய குறிப்புகள் அந்தக் காலங்களுக்கு உண்மையில் பொருந்துபவையாக இருக்கின்றன. மேலும் இடப்பெயர்கள் திருத்தமாக கூறப்பட்டுள்ளன.b மோசே எழுதியவை உண்மை என்பதற்கு அதிகதிகமான நிரூபணங்களைத் தொல்பொருள் ஆராய்ச்சி தொடர்ந்து அளித்துவருகிறது. ஹென்றி ஹெச். ஹாலி பின்வருமாறு எழுதுகிறார்: “தொல்பொருள் ஆராய்ச்சி சமீபத்தில் அவ்வளவு தெளிவான அத்தாட்சிகளை கொடுப்பதால், [ஐந்தாகமத் தொகுப்பை மோசே எழுதினார் என்ற] இந்தப் பாரம்பரிய கருத்தை ஏற்க வைக்கிறது. மோசேயின் நாளில் எழுத்துமுறை இல்லை என்ற கோட்பாடு முற்றிலும் தவறென நிராகரிக்கப்படுகிறது. [எபிரெய வேதாகமத்தின்] கூற்றுகள் உண்மையான சரித்திர பதிவுகள் என்பதற்கான அத்தாட்சிகள் கிடைத்துள்ளன. இவை, எகிப்திலும் பலஸ்தீனாவிலும் மெசொப்பொத்தேமியாவிலும் ஆண்டுதோறும் தோண்டியெடுக்கப்படுகிற கல்வெட்டுகளிலும் மண் அடுக்குகளிலும் காணப்படுகின்றன. மோசே நூலாசிரியர் என்ற பாரம்பரியத்தை அறிஞர்கள் இன்னும் அதிகமாக மதிக்க துவங்கியிருக்கிறார்கள்.”c இவ்வாறு, பைபிள் சாராத அத்தாட்சியும்கூட, உபாகமமும் ஐந்தாகமத் தொகுப்பின் மற்ற புத்தகங்களும் கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய மோசேயால் எழுதப்பட்ட மெய்யான, நம்பகமான பதிவென ஆதரிக்கிறது.
உபாகமத்தின் பொருளடக்கம்
10 முக்கியமாய் இந்தப் புத்தகத்தில், எரிகோவுக்கு எதிரான மோவாபின் சமவெளிகளில் மோசே இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுத்த தொடர்ச்சியான பேச்சுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது 4-ம் அதிகாரத்தில் முடிகிறது, இரண்டாவது 26-ம் அதிகாரத்தின் முடிவு வரையாகவும் செல்லுகிறது. மூன்றாவது 28-ம் அதிகாரம் முழுவதும் தொடருகிறது, மற்றொரு பேச்சு 30-ம் அதிகாரத்தின் முடிவு வரையாக நீடிக்கிறது. மோசேயின் மரணம் நெருங்கிவருவதால், யோசுவாவை தனக்குப் பின் பொறுப்பேற்பவராக நியமிப்பது உட்பட, முடிவான ஏற்பாடுகளைச் செய்கிறார். பின்பு, யெகோவாவுக்குத் துதியை கொண்டுவரும் மிக அழகிய ஒரு பாட்டையும், அதைத் தொடர்ந்து இஸ்ரவேல் கோத்திரத்தார் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதத்தையும் பதிவுசெய்கிறார்.
11 மோசேயின் முதல் சொற்பொழிவு (1:1–4:49). இது, பின்தொடரும் சம்பவங்களுக்கு சரித்திரப்பூர்வ முன்னுரையை அளிக்கிறது. யெகோவா தம்முடைய ஜனத்தை உண்மையோடு நடத்தியதை மோசே முதலாவது நினைப்பூட்டுகிறார். தங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு வாக்குப்பண்ணிய தேசத்துக்குள் சென்று அதை கைப்பற்றும்படி மோசே அவர்களுக்குச் சொல்கிறார். வனாந்தர பயணத்தின் தொடக்கத்தில், ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் சேவிக்கும்படி, ஞானமும் விவேகமும் அனுபவமுமுள்ள ஆண்களைத் தெரிந்தெடுக்கும்படி யெகோவா மோசேயிடம் கூறினார். இவ்வாறு தேவாட்சியைக் கொண்ட இந்தச் சமுதாயத்தின் நடவடிக்கையை கடவுள் எவ்வாறு ஒழுங்கமைத்தார் என்பதை மோசே திரும்பக் கூறுகிறார். இஸ்ரவேல் ஜனம் “அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்து” சென்றபோது யெகோவாவின் கண்காணிப்பின்கீழ் மிகச் சிறப்பாய் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.—1:19.
12 கானானிலிருந்து திரும்பிவந்த வேவுகாரரின் அறிக்கையை மக்கள் கேட்டு, யெகோவா தங்களைப் பகைத்தார், எமோரியரிடம் விட்டுவிடுவதற்காக தங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தாரென்று யெகோவாவை குற்றப்படுத்தி முறையிட்டார்கள். அவர்களுடைய கலகத்தனமான அந்தப் பாவத்தை மோசே இப்பொழுது திரும்பவும் நினைவுபடுத்துகிறார். அவர்கள் விசுவாசமற்றோராக இருந்தனர்; அதனால், காலேபையும் யோசுவாவையும் தவிர, அந்தப் பொல்லாத சந்ததியாரில் ஒருவரும் அந்த நல்ல தேசத்தை காணப்போவதில்லை என யெகோவா கூறினார். இதனால் அவர்கள் மறுபடியும் கலகத்தனமாக நடந்து, அனைவரும் கொந்தளிப்படைந்து தாங்களே போய் எதிரிகளை தாக்கினர். ஆனால், தேனீக்களின் கூட்டத்தைக் கலைப்பதுபோல் எமோரியர்கள் அவர்களை துரத்திச் சிதறடித்தார்கள்.
13 கீழே செங்கடலை நோக்கி வனாந்தரத்தில் அவர்கள் பயணப்பட்டார்கள், அந்த 38 ஆண்டுகளில் யுத்தவீரர் அனைவரும் இறந்துவிட்டனர். அப்பொழுது அர்னோன் ஆற்றை கடந்து அதற்கு வடக்கே இருந்த தேசத்தைக் கைப்பற்றும்படி யெகோவா அவர்களுக்கு பின்வருமாறு கட்டளையிட்டார்: “வானத்தின்கீழ் எங்குமுள்ள ஜனங்கள் உன்னாலே திகிலும் பயமும் அடையும்படி செய்ய இன்று நான் தொடங்குவேன்; அவர்கள் உன் கீர்த்தியைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள்.” (2:25) சீகோனும் அவனுடைய நாடும் இஸ்ரவேலின் கைவசமாயின. பின்பு ஓகின் ராஜ்யம் கைப்பற்றப்பட்டது. எல்லா ராஜ்யங்களையும் கைப்பற்றுவதில் இதே முறையில் யெகோவா இஸ்ரவேலுக்காக போர் செய்வாரென யோசுவாவுக்கு மோசே உறுதியளித்தார். அப்போது மோசே, யோர்தானுக்கு அப்பாலிருந்த அந்த நல்ல தேசத்துக்குத் தான் எப்படியாவது கடந்து செல்லக்கூடுமா என கடவுளைக் கேட்டார். ஆனால் யெகோவா அந்த வேண்டுகோளை மறுத்து விடுகிறார். மாறாக யோசுவாவுக்குப் பொறுப்பளித்து, அவரை உற்சாகப்படுத்தி, பலப்படுத்தும்படி சொன்னார்.
14 மோசே இப்போது கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்கிறார். கடவுளுடைய கட்டளைகளோடு கூட்டுவதற்கு அல்லது அவற்றிலிருந்து எடுத்துப்போடுவதற்கு எதிராக எச்சரிக்கிறார். கீழ்ப்படியாமை அழிவை கொண்டுவரும்: “உன் கண் கண்டவைகளை மறவாதபடிக்கும் உன் ஆயுள் நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தைவிட்டு நீங்காதபடிக்கும் எச்சரிக்கையாயிருந்து உன்னை ஜாக்கிரதையாய்க் காத்துக்கொள்; உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அவற்றை அறிவிக்க வேண்டும்.” (4:9, தி.மொ.) ஓரேபில் திகிலுண்டாக்கின சூழ்நிலைமைகளில் அவர்களுக்கு அந்தப் பத்து வார்த்தைகளை யெகோவா கூறினபோது அவர்கள் எந்த உருவத்தையும் காணவில்லை. இப்பொழுது அவர்கள் விக்கிரகாராதனைக்கும் உருவ வழிபாட்டுக்கும் திரும்பினால், அழிவை சந்திப்பார்கள். ஏனெனில், மோசே சொல்வதுபோல், “உன் கடவுள் யெகோவா பட்சிக்கிற அக்கினி, தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துகிற கடவுள்.” (4:24, NW) அவரே அவர்களுடைய முற்பிதாக்களை நேசித்து அவர்களைத் தேர்ந்தெடுத்தார். மேலே வானங்களிலோ கீழே பூமியிலோ வேறு கடவுள் இல்லை. ‘உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு எக்காலத்திற்குமெனக் கொடுக்கிற தேசத்திலே நீங்கள் நெடுநாளிருக்கும்படி’ அவருக்குக் கீழ்ப்படியுங்கள் என்று மோசே அறிவுரை கூறுகிறார்.—4:40, தி.மொ.
15 இந்த வலிமையான பேச்சை முடித்த பின்பு, பேசேரையும், ராமோத்தையும், கோலானையும் யோர்தானுக்குக் கிழக்கே அடைக்கலப் பட்டணங்களாக மோசே பிரிக்கிறார்.
16 மோசேயின் இரண்டாவது சொற்பொழிவு (5:1–26:19). இது, சீனாயில் முகமுகமாய் அவர்களுடன் பேசின யெகோவாவுக்குச் செவிகொடுக்கும்படி இஸ்ரவேலுக்கு விடுத்த ஓர் அழைப்பாகும். மோசே, நியாயப்பிரமாணத்தைச் சில அவசியமான சரிப்படுத்துதல்களோடு திரும்ப எடுத்துக் கூறுவதைக் கவனியுங்கள். இவ்வாறு யோர்தானுக்கு அப்பால் அவர்களுடைய புதிய வாழ்க்கைக்குப் பொருத்தமாக எடுத்துக் கூறுகிறார். கட்டளைகளையும் நியமங்களையும் வெறுமனே அவர் விவரிக்கவில்லை. ஒவ்வொரு வார்த்தையும், கடவுளிடமாக ஆழ்ந்த பற்றும் பக்தியும் ததும்பும் மோசேயின் இதயத்தை படம்பிடித்துக் காட்டுகின்றன. அந்த ஜனத்தின் நலனுக்காக அவர் பேசுகிறார். வற்புறுத்துதலால் அல்ல, இதயப்பூர்வ அன்பால் தூண்டப்பட்டு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படிவதன் அவசியம் பேச்சு முழுவதுமாக அறிவுறுத்தப்படுகிறது.
17 முதலாவது, பத்துக் கட்டளைகளாகிய அந்தப் பத்து வார்த்தைகளை மோசே திரும்பக் கூறுகிறார். அவற்றிற்குக் கீழ்ப்படிந்து, அவற்றைவிட்டு வலதுபுறமோ இடதுபுறமோ திரும்பாதிருக்கும்படியும் இஸ்ரவேலருக்கு சொல்கிறார். அவ்வாறு செய்யும்போது அந்தத் தேசத்தில் அவர்கள் தங்கள் நாட்களை நீடிக்கவும், எண்ணிக்கையில் பெருகவும் முடியும் என்பதாக சொல்கிறார். “இஸ்ரவேலே, கேள்: யெகோவாவே நமது கடவுள், யெகோவா ஒருவரே.” (6:4, தி.மொ.) அவரை முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், உயிர்ச்சக்தியோடும் நேசிக்க வேண்டும். மேலும் இஸ்ரவேலர் தங்கள் குமாரருக்குக் கற்பித்து எகிப்தில் யெகோவா நடப்பித்த மகா அடையாளங்களையும் அற்புதங்களையும் பற்றி அவர்களுக்குச் சொல்ல வேண்டும். விக்கிரகாராதனைக்காரராகிய கானானியரோடு திருமண உறவுகள் எதுவும் வைக்கக்கூடாது. இஸ்ரவேலர் ஜனத்தொகை பெருகியவர்களாக இருப்பதால் அல்ல, மாறாக, யெகோவா அவர்களை நேசிப்பதன் காரணமாகவும் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு அவர் கொடுத்த வாக்கை காப்பதன் காரணமாகவும் இஸ்ரவேலைத் தமது தனிப்பட்ட ஜனமாக தேர்ந்தெடுத்தார். பேய் மதத்தின் கண்ணிக்கு இஸ்ரவேல் ஜனம் அறவே விலகியிருக்க வேண்டும், விக்கிரகங்களை தேசத்திலிருந்து அழிக்கப்பட வேண்டும், மெய்யாகவே ‘மகத்தானவரும் பயமுண்டாக்குகிறவருமான கடவுளாகிய’ யெகோவாவை விடாது பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.—7:21, NW.
18 யெகோவா அவர்களுக்கு 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் மனத்தாழ்மையை கற்றுக்கொடுத்தார். மனுஷன் மன்னாவினால் அல்லது அப்பத்தினால் அல்ல, யெகோவாவின் வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையினாலுமே பிழைக்கிறான் என அவர்களுக்குக் கற்பித்தார். திருத்துதலுக்கு உட்பட்டிருந்த அந்த எல்லா ஆண்டுகளின்போதும், அவர்களுடைய உடை கந்தையாகிவிடவுமில்லை, அவர்களுடைய பாதங்கள் வீங்கிப்போகவுமில்லை. இப்பொழுது அவர்கள் செல்வமும் வளமுமுள்ள ஒரு தேசத்துக்குள் பிரவேசிக்கும் தறுவாயில் இருக்கிறார்கள்! எனினும், பொருளாசையும் சுயநீதியுமான கண்ணிகளுக்கு எதிராக அவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். யெகோவாவே ‘ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பலத்தைக் கொடுக்கிறவர்,’ பொல்லாத ஜனத்தை அவர்களுடைய இடத்திலிருந்து வெளியேற்றுபவர் என்பதை அந்த மக்கள் நினைவில் வைக்க வேண்டும். (8:18, தி.மொ.) பின்பு இஸ்ரவேலர் கடவுளைக் கோபமூட்டின சந்தர்ப்பங்களை மோசே குறிப்பிடுகிறார். வனாந்தரத்தில் வாதையாலும் அக்கினியாலும் படுகொலையாலும் யெகோவாவின் கோபம் அவர்களுக்கு எதிராகப் பற்றியெரிந்ததை அவர்கள் நினைவில் வைக்க வேண்டும்! பொன் கன்றுக்குட்டியை வணங்கியதால் யெகோவாவின் கடும் கோபம் பற்றியெரிந்தது. நியாயப்பிரமாண கற்பலகைகள் திரும்ப உண்டாக்கப்பட வேண்டியதாயிற்று என்பதையும் அவர்கள் நினைவில் வைக்க வேண்டும்! (யாத். 32:1-10, 35; 17:2-7; எண். 11:1-3, 31-35; 14:2-38) நிச்சயமாகவே, அவர்கள் இப்பொழுது யெகோவாவைச் சேவித்து அவரைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும். அவர்களுடைய பிதாக்களின் காரணமாக கடவுள் அவர்களை நேசித்து “வானத்தின் நட்சத்திரங்களைப்போல வர்த்திக்கச் செய்திருக்கிறார்.”—உபா. 10:22, தி.மொ.
19 “கட்டளைகளையெல்லாம்” இஸ்ரவேலர் கைக்கொள்ள வேண்டும், கண்டிப்பாக யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும், கடவுளாக அவரை நேசித்து முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அவரைச் சேவிக்க வேண்டும். (11:8, 13) அவர்கள் கீழ்ப்படிந்தால் யெகோவா அவர்களை ஆதரித்து பலனளிப்பார். எனினும், அவர்கள் தங்களுடைய குமாரருக்கு முழு கவனத்தோடு ஊக்கமாக கற்பிக்க வேண்டும். இஸ்ரவேலுக்கு முன்பாக இருந்த தெரிவு தெளிவாக கூறப்படுகிறது: கீழ்ப்படிந்து ஆசீர்வாதத்தைப் பெறலாம், கீழ்ப்படியாமல் சாபத்தைப் பெறலாம். அவர்கள் “வேறே தேவர்களைப் பின்பற்”றக் கூடாது. (11:26-28) இப்போது வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை இஸ்ரவேலர் கைப்பற்ற போகிறார்கள். இச்சமயத்தில் அவர்களை பாதிக்கும் திட்டவட்டமானச் சட்டங்களை மோசே சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். அவை: (1) மதம் மற்றும் வணக்கம் சம்பந்தப்பட்ட சட்டங்கள்; (2) நீதி வழங்குவது, அரசாங்கம், மற்றும் போர் சம்பந்தப்பட்ட சட்டங்கள்; மேலும் (3) ஜனங்களின் தனிப்பட்ட மற்றும் சமுதாய வாழ்க்கையை கட்டுப்படுத்தும் சட்டங்கள்.
20 (1) மதமும் வணக்கமும் (12:1–16:17). இஸ்ரவேலர் அந்தத் தேசத்துக்குள் பிரவேசிக்கையில், பொய்மதத்தின் எல்லா தடயத்தையும்—அதன் மேடைகள், பலிபீடங்கள், தூண்கள், புனித கம்பங்கள், விக்கிரகங்கள் ஆகியவற்றை—முற்றிலும் அழிக்க வேண்டும். யெகோவா தம்முடைய பெயரை வைக்கத் தெரிந்துகொள்ளும் இடத்தில் மாத்திரமே இஸ்ரவேலர் அவரை வணங்க வேண்டும். அங்கேயே அவர்கள் அனைவரும் அவரில் களிகூர வேண்டும். மாம்சம் சாப்பிடுவது சம்பந்தமாகவும் பலிகள் சம்பந்தமாகவும் கொடுக்கப்படும் சட்டங்களில் இரத்தத்தை அவர்கள் சாப்பிடக்கூடாது என்ற நினைப்பூட்டுதல் திரும்பத் திரும்பக் கொடுக்கப்படுகிறது. “இரத்தத்தை மாத்திரம் சாப்பிடக்கூடாதென்று உறுதியாய்த் தீர்மானித்திரு . . . நீ அதைச் சாப்பிடக்கூடாது. அப்போது உனக்கும் உனக்குப்பின் உன் குமாரருக்கும் நலமுண்டாகும். ஏனெனில் யெகோவாவின் கண்களில் சரியானதை நீ செய்வாய்.” (12:16, 23-25, 27, NW; 15:23) மோசே இப்பொழுது விக்கிரகாராதனையை வெளிப்படையாக கண்டனம் செய்கிறார். இஸ்ரவேலர் பொய்மதத்தின் வழிகளைக் குறித்துக் கேட்கவுங்கூடாது. ஒருவன் பொய்த் தீர்க்கதரிசியென நிரூபிக்கப்பட்டால் அவன் கொல்லப்பட வேண்டும். அதேவிதமாய் விசுவாச துரோகிகள்—அன்பான உறவினராக அல்லது நண்பராக இருந்தாலும், ஏன், முழு நகரங்களாக இருந்தாலுங்கூட—அழிக்கப்பட வேண்டும். அடுத்தபடியாக சுத்தமும் அசுத்தமுமான உணவு, தசமபாகங்கள் செலுத்துதல், லேவியர்களைக் கவனித்தல் ஆகியவற்றின்பேரில் பிரமாணங்கள் கொடுக்கப்படுகின்றன. கடனாளிகள், ஏழைகள், நிரந்தர அடிமைகள் ஆகியோரின் நலன் அன்புடன் பாதுகாக்கப்பட வேண்டும். முடிவாக, யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காக அவருக்கு நன்றி செலுத்துவதற்கான காலங்களாக வருடாந்தர பண்டிகைகளை மோசே திரும்பவும் நினைப்பூட்டுகிறார்: “வருஷத்தில் மூன்றுதரம், புளிப்பில்லாத அப்பம் புசிக்கும் உற்சவத்திலும் ஏழாம் வாரத்து உற்சவத்திலும் கூடார உற்சவத்திலும் உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே அவர் சந்நிதிக்குமுன்பாக வந்து காணப்படவேண்டும். அவர்கள் யெகோவாவின் சந்நிதியில் வெறுங்கையாய் வரலாகாது.”—16:16, தி.மொ.
21 (2) நீதி, அரசாங்கம், போர் (16:18–20:20). முதலாவதாக, நியாயாதிபதிகளையும் அதிகாரிகளையும் உட்படுத்தும் சட்டங்களை மோசே கொடுக்கிறார். நீதி வழங்குவது முக்கியம், லஞ்சம் வாங்குவதும் நியாயத்தைப் புரட்டுவதும் யெகோவாவுக்கு வெறுப்பானவை. அத்தாட்சியை உறுதிப்படுத்துவதிலும் சட்டப்பூர்வமான வழக்குகளைக் கையாளுவதிலும் செயல்பட வேண்டிய முறைகள் குறிப்பிடப்படுகின்றன. “சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படக்கடவன்.” (17:6) அரசர்கள் சம்பந்தமாகவும் சட்டங்கள் கூறப்படுகின்றன. ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆவியுலகத் தொடர்பு ‘யெகோவாவுக்கு அருவருப்பானது’ என தடைசெய்யப்படுகிறது. (18:12, தி.மொ.) எதிர்காலத்தை தொலைதூரம் நோக்குபவராக, மோசே பின்வருமாறு அறிவிக்கிறார்: “உன் கடவுளாகிய யெகோவா என்னைப்போலும் ஒரு தீர்க்கதரிசியை உன் சகோதரரிலிருந்து உனக்காக உன் நடுவே எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுங்கள்.” (18:15-19, தி.மொ.) எனினும், கள்ளத் தீர்க்கதரிசி சாகவேண்டும். இந்தப் பகுதி, அடைக்கலப் பட்டணங்களையும் இரத்தம் பழிவாங்கப்படுவதையும் இராணுவ சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுதற்கான தகுதிகளையும் போர் விதிகளையும் பற்றிய சட்டங்களுடன் முடிவடைகிறது.
22 (3) தனிப்பட்ட மற்றும் சமுதாய வாழ்க்கை (21:1–26:19). இஸ்ரவேலரின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்டுக் கிடக்கும் ஆள், சிறைபிடிக்கப்பட்ட பெண்ணை மணம் செய்தல், முதற்பேறானவனின் உரிமை, கலகத்தனமான குமாரன், குற்றவாளியை மரத்தில் தொங்கவிடுதல், கன்னிமையின் அத்தாட்சி, பாலுறவு குற்றங்கள், விதையடிப்பு, முறைகேடாகப் பிறந்த குமாரர்கள், அந்நியரை நடத்தும் முறை, சுகாதாரம், வட்டியையும் பொருத்தனைகளையும் செலுத்துதல், விவாகரத்து, கடத்தல், கடன், சம்பளம், அறுப்பில் சிதறிய கதிர்களைப் பொறுக்குதல் போன்ற விஷயங்கள் சம்பந்தமாக சட்டங்கள் விவரிக்கப்படுகின்றன. ஒரு மனிதனை 40 தடவைக்கு மேல் அடிக்கக்கூடாது என்பதாக வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. போரடிக்கையில் காளையின் வாயைக் கட்டக்கூடாது. மைத்துனன் மணம் செய்வதற்கான முறை குறிக்கப்படுகிறது. சரியான எடை கற்களைப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் அநீதி யெகோவாவுக்கு அருவருப்பானது.
23 ஆர்வமிக்க இந்த பேச்சை முடிப்பதற்கு முன்பாக, இஸ்ரவேலர் எகிப்தைவிட்டு ஓடிப்போகையில் களைப்புற்றிருந்த அவர்களைப் பின்புறத்திலிருந்து அமலேக்கியர் தாக்கினதை மோசே நினைப்பூட்டுகிறார். “நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்” என்று மோசே இஸ்ரவேலருக்குக் கட்டளையிடுகிறார். (25:19) அவர்கள் அந்தத் தேசத்துக்குள் பிரவேசிக்கையில், அந்த நிலத்தின் முதற்கனிகளை மகிழ்ச்சியோடு யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும். மேலும் தசமபாகங்களையும் நன்றியறிதலுள்ள ஜெபத்துடன் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும்: “நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும்.” (26:15) இந்தக் கட்டளைகளை அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் நிறைவேற்றினால், யெகோவா, தம் பங்காக, ‘தாம் சிருஷ்டித்த சகல ஜாதிகளைப் பார்க்கிலும் அவர்களைப் புகழிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் மேலானவர்களாக்குவார், அவர்களும் அவர் சொன்னபடியே தங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பார்கள்.’—26:19, தி.மொ.
24 மோசேயின் மூன்றாவது சொற்பொழிவு (27:1–28:68). கீழ்ப்படியாமையினால் விளையும் யெகோவாவின் சாபங்களையும் உண்மையுள்ளவர்களாக இருப்பதன் ஆசீர்வாதங்களையும் மோசே சொல்லுகிறார். அப்போது இஸ்ரவேலின் மூப்பர்களும் ஆசாரியர்களும் அவருடன் இருக்கின்றனர். உண்மையற்று நடப்பதன் பயங்கர விளைவுகளைக் குறித்து கடும் எச்சரிக்கைகள் கொடுக்கப்படுகின்றன. அவருடைய பரிசுத்த ஜனமாக இஸ்ரவேலர், தங்கள் கடவுளாகிய யெகோவாவின் குரலுக்குத் தொடர்ந்து செவிகொடுத்து வந்தால், அருமையான ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வார்கள். யெகோவாவின் பெயர் அவர்கள்மீது இருப்பதை பூமியின் ஜனங்கள் யாவரும் காண்பார்கள். எனினும், இதில் அவர்கள் தவறினால், யெகோவா அவர்கள்மீது “சாபத்தையும் கலக்கத்தையும் தண்டனையையும்” அனுப்புவார். (28:20, தி.மொ.) அவர்கள் அருவருப்பூட்டும் நோயாலும், வறட்சியாலும், பஞ்சத்தாலும் தாக்கப்படுவார்கள்; அவர்களுடைய எதிரிகள் அவர்களைப் பிடித்து அடிமைப்படுத்துவார்கள், அவர்கள் தேசத்துக்கு வெளியே சிதறடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுப் போவார்கள். அவர்கள் “[தங்கள்] கடவுளாகிய யெகோவா என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படி, இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்க . . . ஜாக்கிரதையா[க] . . . இராவிட்டால்,” இந்தச் சாபங்களும், இன்னும் அதிகமானவையும் அவர்கள்மீது வரும்.—28:58, தி.மொ.
25 மோசேயின் நான்காவது சொற்பொழிவு (29:1–30:20). யெகோவா இப்போது மோவாபில் இஸ்ரவேலோடு ஓர் உடன்படிக்கை செய்கிறார். இது, மோசே திரும்பவும் விளக்கிய நியாயப்பிரமாணத்தை உட்படுத்துகிறது. இது வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலர் பிரவேசிக்கையில் அவர்களை வழிநடத்தும். இந்த உடன்படிக்கையோடு சேர்ந்து வரும் ஆணையுறுதி அந்த ஜனத்தின் பொறுப்புகளை உள்ளத்தில் ஆழப் பதிய வைக்கிறது. முடிவாக, மோசே அந்த ஜனத்திற்கு முன்பாக ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கையில், வானங்களையும் பூமியையும் சாட்சியாக அழைத்து, பின்வருமாறு அறிவுரை கூறுகிறார்: “நீயும் உன் சந்ததியும் பிழைப்பதற்கு நீ ஜீவனைத் தெரிந்துகொள். யெகோவா உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பதாக அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படி உன் கடவுளாகிய யெகோவாவில் அன்புகூர்ந்து அவர் சப்தத்திற்குச் செவிகொடுத்து அவரைப் பற்றிக்கொள்; அப்படிச் செய்வதே உனக்கு ஜீவன், தீர்க்காயுசு.”—30:19, 20, தி.மொ.
26 யோசுவாவுக்குப் பொறுப்பளிப்பதும், மோசேயின் பாட்டும் (31:1–32:47). நியாயப்பிரமாணத்தை எழுதி அதைத் தவறாமல் யாவர் முன்னும் வாசிக்க வேண்டியதைப் பற்றி போதனைகள் கொடுத்தப் பின்பு, மோசே யோசுவாவுக்குப் பொறுப்பளிக்கிறார். தைரியமாகவும் மனோபலத்துடனும் இருக்கும்படி அவருக்குச் சொல்கிறார். பின்பு அவர் ஒரு நினைவு பாட்டை இயற்றி நியாயப்பிரமாணத்தை எழுதி முடித்து, அதை யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியின் அருகில் வைப்பதற்கு ஏற்பாடு செய்கிறார். இவை அனைத்தையும் 31-ம் அதிகாரம் கூறுகிறது. அதன் பின்பு, சபை முழுவதற்கும் இந்தப் பாட்டின் வார்த்தைகளைக் குறிப்பிட்டு மோசே முடிவான அறிவுரை வழங்குகிறார்.
27 மோசேயினுடைய பாட்டு அவருடைய போதனையின் ஊற்றுமூலத்தை அடையாளங்காண்பித்து, எத்தகைய நன்றியுணர்வுடன் தொடங்குகிறது! “என் உபதேசம் மழைபோல் இறங்கும், என் வார்த்தை பனிபோற் பெய்யும்; இளந்தளிர்மேல் தூறலைப்போலும் புல்லின்மேலே பெருமழைபோலுமாம். யெகோவா திருநாமம் பிரசித்தம்பண்ணுவேன்.” ஆம், “கன்மலை”யாகிய “நமது கடவுளுக்கு” மகத்துவம் செலுத்துங்கள். (32:2-4, தி.மொ.) அவருடைய பரிபூரண செயலையும், அவருடைய நியாயமான வழிகளையும், அவருடைய உண்மையையும், நீதியையும், நேர்மையையும் தெரியப்படுத்துங்கள். வெறுமையான, ஊளையிடும் வனாந்தரத்தில் யெகோவா இஸ்ரவேலரைச் சூழ்ந்து, தம்முடைய கண்மணியைப்போல் பாதுகாத்து, கழுகு தன் குஞ்சுகளின்மேல் சிறகு விரித்துப் பறப்பதுபோல் அவர்களை பாதுகாத்தார். இருந்தபோதிலும் இஸ்ரவேலர் சீரழிவான முறையில் நடந்துகொண்டது வெட்கக் கேடாயிருந்தது. அவர் தம்முடைய ஜனங்களைக் கொழுக்கச் செய்து, யெஷூரன், அதாவது “நேர்மையானவர்” என அழைத்தார். ஆனால் அவர்கள் அந்நிய தெய்வங்களை வணங்கி அவருக்கு எரிச்சலூட்டி, ‘உண்மையில்லாத பிள்ளைகளாக’ ஆனார்கள். (32:20) பழிவாங்குதலும் தண்டனையளிப்பதும் யெகோவாவுக்குரியது. அவர் கொல்லவும் உயிர்ப்பிக்கவும் செய்கிறார். அவர் தம்முடைய மின்னும் பட்டயத்தை கருக்காக்குகையிலும் அவருடைய கரம் நியாயத்தீர்ப்பைப் பற்றிக்கொள்கையிலும், நிச்சயமாகவே தம்முடைய எதிரிகளை பழிவாங்குவார். இது அவருடைய ஜனங்களுக்கு எத்தகைய திடநம்பிக்கை அளிக்க வேண்டும்! முடிவாக இந்தப் பாட்டு சொல்வதுபோல், ‘ஜாதிகள், அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருவதற்கு’ இது காலமாயுள்ளது. (32:43) யெகோவாவுக்காக ஏறெடுக்கப்பட்ட இந்தப் பாடலின் மேம்பட்ட அழகையும், வலிமையையும், கருத்தின் ஆழத்தையும் உலகத்திலுள்ள வேறு எந்தக் கவிஞனும் என்றாவது எட்ட முடியுமா?
28 மோசேயின் முடிவான ஆசீர்வாதம் (32:48–34:12). மோசேயின் மரணத்தைக் குறித்து அவருக்கு முடிவான கட்டளைகள் இப்போது கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவர் தன்னுடைய தேவராஜ்ய சேவையை இன்னும் முடிக்கவில்லை. முதலாவதாக, அவர் இஸ்ரவேலை ஆசீர்வதிக்க வேண்டும். இதைச் செய்கையில், யெஷூரனில் அரசராகிய யெகோவாவை, தம்முடைய பரிசுத்த பதினாயிரங்களானோரோடு பிரகாசிப்பவராக அவர் மறுபடியும் போற்றிப் புகழுகிறார். பேர்பேராக அந்தக் கோத்திரங்கள் தனித்தனியே ஆசீர்வாதங்களைப் பெறுகின்றன. பின்பு மோசே யெகோவாவை மகா மாண்புமிகுந்தவராகப் போற்றுகிறார்: “அநாதி கடவுளே அடைக்கலம், அவர் நித்திய புயங்கள் ஆதாரம்.” (33:27, தி.மொ.) நன்றியுணர்வு பொங்கும் இருதயத்தோடு, அவர் அந்த ஜனத்துக்குத் தம்முடைய முடிவான வார்த்தைகளை சொல்கிறார்: “இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; யெகோவாவினால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு நிகரானவன் யார்?”—33:29, தி.மொ.
29 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நேபோ மலையிலிருந்து பார்த்த பின்பு, மோசே மரணமடைகிறார். யெகோவா அவரை மோவாபில் அடக்கம் செய்கிறார், அவருடைய பிரேதக் குழி இந்நாள்வரையாக அறியப்படாமலும் கனப்படுத்தப்படாமலும் இருக்கிறது. அவர் 120 வயது வரை வாழ்ந்தார். ஆனால் ‘அவர் கண் இருளடையவுமில்லை, அவர் பலம் குறையவுமில்லை.’ பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வதற்கு யெகோவா அவரைப் பயன்படுத்தினார். மேலும் கடைசி அதிகாரம் அறிவிக்கிறபடி, ‘மோசேக்கு நிகரான தீர்க்கதரிசி ஒருவரும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை; அவரே யெகோவாவை முகமுகமாய் அறிந்து பழகினவர்.’—34:7, 10, தி.மொ.
ஏன் பயனுள்ளது
30 ஐந்தாகமத் தொகுப்பின் கடைசி புத்தகமான உபாகமம், யெகோவா தேவனின் உன்னதப் பெயரை அறிவிப்பதிலும் பரிசுத்தப்படுத்துவதிலும் முன் எழுதப்பட்ட எல்லா பதிவுகளையும் இணைக்கிறது. அவர் ஒருவரே கடவுள், தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துகிறவர் மற்றும் பொய்மத வணக்கத்தின் பேய்த் தெய்வங்கள் போட்டியிடுவதைச் சகித்துக்கொள்ளாதவர். இன்றும், கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்கு அடிப்படையான சிறந்த நியமங்களுக்கு கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஊக்கமாக கவனம் செலுத்தி அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். இவ்வாறு, எதிரிகளை பழிவாங்குவதற்காக அவர் தம்முடைய மின்னும் பட்டயத்தைக் கருக்காக்குகையில், அவர்கள் அவருடைய சாபத்துக்கு ஆளாகாதிருப்பார்கள். அவருடைய முக்கியமானதும் முதலாவதுமான கட்டளை அவர்களுடைய வாழ்க்கையின் வழிகாட்டியாக இருக்க வேண்டும்: “உன் கடவுள் யெகோவாவை உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு ஆற்றலோடும் நேசிக்க வேண்டும்.”—6:5, NW.
31 வேதாகமத்தின் மற்ற பகுதிகள், கடவுளுடைய நோக்கங்களுக்கு மதித்துணர்வைப் பெருக்குவதற்கு உபாகமத்தை அடிக்கடி குறிப்பிடுகின்றன. சோதனைக்காரனுக்குப் பதிலளிப்பதில் இயேசு இதிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக்காட்டியது மட்டுமல்லாமல், வேறு பல குறிப்புகளையும் எடுத்துக் கூறியிருக்கிறார். (உபா. 5:16—மத். 15:4; உபா. 17:6—மத். 18:16 மற்றும் யோவா. 8:17) இவை வெளிப்படுத்துதல் வரையாகவும் தொடருகின்றன. அதில், மகிமைப்படுத்தப்பட்ட இயேசு, யெகோவாவின் தீர்க்கதரிசன சுருளில் கூட்டுவதற்கோ அதிலிருந்து எடுத்துப்போடுவதற்கோ எதிராக கடைசியாக எச்சரிக்கிறார். (உபா. 4:2—வெளி. 22:18) மோசேயைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசியை இஸ்ரவேலில் எழுப்புவதாக யெகோவா வாக்குறுதி அளித்திருந்தார். அந்த தீர்க்கதரிசி இயேசு என்றும் அந்த இயேசுவே கிறிஸ்து என்றும் உபாகமத்திலிருந்து பேதுரு மேற்கோள் காட்டி பலமாக விவாதித்தார். (உபா. 18:15-19—அப். 3:22, 23) வேலையாளுக்குரிய கூலிகள், சாட்சிகளின் வாக்கின்மூலம் தீர விசாரணை செய்வது, பிள்ளைகளுக்குக் கட்டளை ஆகியவற்றின் சம்பந்தமாக பவுல் உபாகமத்திலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் குறிப்பிடுகிறார்.—உபா. 25:4—1 கொ. 9:8-10 மற்றும் 1 தீ. 5:17, 18; உபா. 13:14-ம் 19:15-ம்—1 தீ. 5:19-ம் 2 கொ. 13:1-ம்; உபா. 5:16—எபே. 6:2, 3.
32 கிறிஸ்தவ வேதாகமத்தின் எழுத்தாளர்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ காலங்களுக்கு முன்னிருந்த கடவுளுடைய ஊழியர்களுங்கூட உபாகமத்திலிருந்து போதனையையும் உற்சாகத்தையும் பெற்றார்கள். அவர்களுடைய முன்மாதிரியை நாம் பின்பற்றுவது நல்லது. மோசேயின் ஸ்தானத்திற்கு யோசுவா வந்தார். கானானுக்குள் அவர் படையெடுத்தபோது, ஆகான் கொள்ளைப்பொருளை எடுத்தான். ஆனால் அவன் செய்ததுபோல் செய்யாமல், கைப்பற்றின நகரங்களை முற்றிலும் அழித்தபோது காட்டிய முழுமையான கீழ்ப்படிதலைக் கவனியுங்கள். (உபா. 20:15-18-ம் 21:23-ம்—யோசு. 8:24-27, 29) “பயமும் நடுக்கமும்” உள்ளோரை கிதியோன் தன் படையிலிருந்து நீக்கினார். இது, நியாயப்பிரமாண சட்டத்திற்கு இசைவானதாகும். (உபா. 20:1-9—நியா. 7:1-11) இஸ்ரவேலிலும் யூதாவிலும் இருந்த தீர்க்கதரிசிகள், வழுவிப்போன தேசங்களைக் கண்டனம் செய்து தைரியமாக பேசினார்கள். யெகோவாவின் சட்டத்துக்கு உண்மையுள்ளோராக அவர்கள் இருந்ததே இதற்கு காரணம். இது சம்பந்தமாக ஆமோஸ் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். (உபா. 24:12-15—ஆமோ. 2:6-8) உபாகமத்தைக் கடவுளுடைய வார்த்தையின் மீதி பாகத்தோடு இணைக்கும் உதாரணங்கள் உண்மையில் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இவ்வாறு ஒத்திசைவான முழு பைபிளின் முக்கியமான, பயனுள்ள பாகமாக உபாகமம் இருக்கிறது.
33 உன்னத அரசதிகாரியாகிய யெகோவா தேவனுக்குத் துதி உண்டாக்குவதே உபாகமத்தின் மையப்பொருள். ‘யெகோவாவை வணங்கு; அவருக்குத் தனிப்பட்ட பக்தியைச் செலுத்து’ என்பது இப்புத்தகம் முழுவதிலும் வலியுறுத்தப்படுகிறது. நியாயப்பிரமாணம் கிறிஸ்தவர்களை இனிமேலும் கட்டுப்படுத்துவதில்லை; இருந்தபோதிலும், அதன் அடிப்படையான நியமங்கள் ரத்து செய்யப்படவில்லை. (கலா. 3:19) படிப்படியான போதகமும், நேர்மையும், எளிய நடையும் அடங்கியதாக, கடவுளுடைய சட்டத்தைக்கொண்ட ஆற்றல்வாய்ந்த இந்த புத்தகத்திலிருந்து உண்மையான கிறிஸ்தவர்கள் எவ்வளவு அதிகத்தை கற்றுக்கொள்ளலாம்! இந்த உலகத்தின் தேசங்களுங்கூட, யெகோவாவின் உன்னத சட்டத்தின் மேன்மையை உணர்ந்துள்ளனர். எனவேதான், உபாகமத்தின் பிரமாணங்கள் பலவற்றைத் தங்கள் சொந்த சட்ட புத்தகங்களில் எழுதியுள்ளனர். அவர்கள் எடுத்திருக்கும் அல்லது நியமத்தில் பொருத்திப் பயன்படுத்தியிருக்கும் சட்டங்களின், ஆர்வத்தை தூண்டும் உதாரணங்களை இங்குள்ள அட்டவணை அளிக்கிறது.
34 மேலும், நியாயப்பிரமாணத்தின் இந்த விளக்கம் கடவுளுடைய ராஜ்யத்திற்கு கவனத்தை திருப்பி, அதற்குரிய போற்றுதலை அதிகப்படுத்துகிறது. எவ்வாறு? அரசராகும் பொறுப்பைப் பெற்ற இயேசு கிறிஸ்து பூமியிலிருக்கையில், இந்தப் புத்தகம் முழுவதையும் நன்றாக அறிந்தவராய் இதைப் பொருத்திப் பயன்படுத்தினார். அவருடைய திறம்பட்ட மேற்கோள்கள் இதைக் காட்டுகின்றன. தம்முடைய ராஜ்ய ஆட்சியை பூமி முழுவதிலும் செலுத்துகையில், இதே ‘சட்டத்தின்’ சரியான நியமங்களின்படி இயேசு ஆளுவார். மேலும், ராஜ்ய ‘வித்தாக’ அவரில் தங்களை ஆசீர்வதித்துக்கொள்ள வருவோர் அனைவரும் இந்த நியமங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். (ஆதி. 22:18; உபா. 7:12-14, NW) இப்பொழுதே அவற்றிற்குக் கீழ்ப்படிய தொடங்குவது நன்மையாகவும் பிரயோஜனமாகவும் இருக்கும். 3,500 ஆண்டுகள் பழமையான இந்தச் “சட்டம்” கால ஓட்டத்தில் பழையதாகி விடாமல், இன்றும் நம்மிடம் வலிமையுடன் பேசுகிறது. கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் இருக்கப்போகும் அந்தப் புதிய உலகத்திலும் இது தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கும். முதல் ஐந்து புத்தகங்களுடைய தொகுப்பின் போதனைகள் அனைத்தையும் பின்பற்றுவதில் யெகோவாவின் பெயர் அவருடைய ஜனங்களுக்குள் தொடர்ந்து பரிசுத்தப்படுவதாக. இத்தொகுப்பு சிறப்பாக உபாகமத்தில் முடிகிறது—நிச்சயமாகவே உபாகமம் தேவாவியால் ஏவப்பட்டது, ‘வேதாகமம் முழுவதன்’ பாகம்!
[அடிக்குறிப்புகள்]
a பி. எஃப். வெஸ்ட்காட் மற்றும் எஃப். ஜே. ஏ. ஹார்ட், 1956-ல் பிரசுரித்த மூல கிரேக்கில் புதிய ஏற்பாடு (ஆங்கிலம்) என்பதில், “பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள்கள்” பட்டியலை பக்கங்கள் 601-18-ல் காண்க.
b உபாகமம் 3:9, NW அடிக்குறிப்பு.
c ஹாலியின் பைபிள் கைப்புத்தகம், (ஆங்கிலம்) 1988, ஹென்றி ஹெச். ஹாலி, பக்கம் 56.
4. உபாகமம் என்பதன் அர்த்தம் என்ன, இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன?
5. உபாகமம் புத்தகத்தை எழுதியவர் மோசே என எது நிரூபிக்கிறது?
6. (அ) உபாகமத்தில் அடங்கிய காலப்பகுதி என்ன? (ஆ) இந்தப் புத்தகம் பெரும்பாலும் எப்போது எழுதி முடிக்கப்பட்டது?
7. உபாகமம் நம்பகமானது என்பதை எது காட்டுகிறது?
8. இயேசு கூறின எந்த முடிவான அத்தாட்சி உபாகமத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது?
9. பைபிள் சாராத என்ன அத்தாட்சி உபாகமத்தின் மெய்மையை நிரூபிக்கிறது?
10. உபாகமத்தில் என்ன அடங்கியுள்ளது?
11. தனது முதல் சொற்பொழிவை மோசே எவ்வாறு ஆரம்பிக்கிறார்?
12. கானானை முதன்முறையாக வேவு பார்த்தபோது நடந்த என்ன சம்பவங்களை மோசே அடுத்தபடியாக நினைப்பூட்டுகிறார்?
13. யோசுவா வெற்றிபெறுவார் என எதன் அடிப்படையில் மோசே அவருக்கு நம்பிக்கையளித்தார்?
14. கடவுளுடைய நியாயப்பிரமாணம், தனிப்பட்ட பக்தி சம்பந்தமாக மோசே என்ன வலியுறுத்துகிறார்?
15. யோர்தானுக்குக் கிழக்கே அடைக்கலப் பட்டணங்களுக்காக என்ன ஏற்பாடு செய்யப்படுகிறது?
16. மோசேயின் இரண்டாவது சொற்பொழிவு எதை அறிவுறுத்துகிறது?
17. யெகோவா தங்களுக்குக் காட்டிய அன்பிற்கு இஸ்ரவேலர் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
18. எவற்றிற்கு எதிராக தங்களை எச்சரிக்கையோடு காத்துக்கொள்ள வேண்டும் என்பதாக மோசே இஸ்ரவேலருக்கு அறிவுரை கூறுகிறார்?
19. என்ன தெரிவு தெளிவாகக் கூறப்படுகிறது, அந்த ஜனத்துக்கு என்ன கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன?
20. என்ன குறிப்புகள் வணக்கத்தைப் பற்றிய சட்டங்களை வலியுறுத்திக் காட்டுகின்றன?
21. நீதி சம்பந்தமாக என்ன சட்டங்கள் கொடுக்கப்படுகின்றன, எந்த முக்கியமான தீர்க்கதரிசனத்தை மோசே உரைக்கிறார்?
22. தனிப்பட்ட மற்றும் சமுதாய வாழ்க்கை சம்பந்தமான என்ன சட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
23. கடவுளுடைய ஜனங்கள் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்போது ஏற்படும் பலனை மோசே எவ்வாறு காட்டுகிறார்?
24. என்ன ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் இந்த மூன்றாவது சொற்பொழிவு இஸ்ரவேல் ஜனத்துக்குமுன் வைக்கிறது?
25. (அ) என்ன உடன்படிக்கையை யெகோவா இப்போது இஸ்ரவேலோடு செய்கிறார்? (ஆ) அந்த ஜனத்துக்கு முன்பாக என்ன தெரிவை மோசே வைக்கிறார்?
26. தன் மரணத்துக்கு முன்பாக என்ன முடிவான ஏற்பாடுகளை மோசே செய்கிறார்?
27. என்ன வலிமையான செய்தி மோசேயின் பாடலில் அடங்கியுள்ளது?
28. மோசேயின் முடிவான ஆசீர்வாதத்தில் யெகோவா எவ்வாறு போற்றப்படுகிறார்?
29. என்ன வகைகளில் மோசே தனித்து விளங்கினார்?
30. ஐந்தாகமத் தொகுப்புக்கு உபாகமம் எவ்வாறு பொருத்தமான முடிவுரையை அளிக்கிறது?
31. கடவுளுடைய நோக்கங்களுக்கு போற்றுதலை பெருக்குவதற்கு தேவாவியால் ஏவப்பட்ட மற்ற வேதவாக்கியங்கள் எவ்வாறு உபாகமத்திலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டுகின்றன?
32. என்ன வகையில் யோசுவாவும், கிதியோனும், தீர்க்கதரிசிகளும் நமக்குச் சிறந்த முன்மாதிரிகளாக இருக்கின்றனர்?
33. (அ) எவ்வாறு உபாகமம் யெகோவாவுக்குத் துதி உண்டாக்குகிறது? (ஆ) உலக தேசங்கள் கடவுளுடைய சட்டத்தின் நியமங்களை மதித்துணர்ந்து பயன்படுத்துவதைக் குறித்து இங்குள்ள அட்டவணை என்ன காட்டுகிறது?
34. இந்த ‘நியாயப்பிரமாணத்தின் மறுபகர்ப்புக்கும்’ கடவுளுடைய ராஜ்யத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது?
[பக்கம் 41-ன் அட்டவணை]
உபாகமத்தில் சில சட்டப்பூர்வ முன்மாதிரிகள்d
I. தனிப்பட்ட மற்றும் குடும்ப சட்டங்கள் அதிகாரங்களும் வசனங்களும்
அ. தனிப்பட்ட உறவுகள்
1. பெற்றோரும் பிள்ளைகளும் 5:16
2. திருமண உறவுகள் 22:30; 27:20, 22, 23
3. விவாகரத்து சம்பந்தமான சட்டங்கள் 22:13-19, 28, 29
ஆ. சொத்துரிமைகள் 22:1-4
II. அரசியலமைப்பு சட்டங்கள்
அ. அரசரின் தகுதிகளும் கடமைகளும் 17:14-20
ஆ. இராணுவப் பிரமாணங்கள்
III. நீதித்துறை
அ. நீதிபதிகளின் கடமைகள் 16:18, 20
ஆ. மேல் முறையீடு செய்வதற்கு உச்சநீதிமன்றம் 17:8-11
IV. குற்றச்செயலுக்கான சட்டங்கள்
அ. அரசாங்கத்துக்கு எதிரான குற்றங்கள்
1. லஞ்சம், நியாயத்தைப் புரட்டுதல் 16:19, 20
2. பொய்ச்சாட்சி 5:20
ஆ. நல்லொழுக்கத்துக்கு எதிரான குற்றங்கள்
2. சட்டத்திற்கு புறம்பான மணம் 22:30; 27:20, 22, 23
இ. மனிதனுக்கு எதிரான குற்றங்கள்
1. கொலையும் திடீர்த் தாக்குதலும் 5:17; 27:24
2. கற்பழிப்பும் ஒழுக்கக்கேட்டிற்கு தூண்டுதலும் 22:25-29
V. மனிதாபிமான சட்டங்கள்
அ. மிருகங்களிடம் இரக்கங்காட்டுதல் 25:4; 22:6, 7
ஈ. அடிமைகளும் சிறைப்பட்டோரும் உட்பட, 15:12-15; 21:10-14;
சார்ந்து வாழ்வோரை நடத்தும் முறை 27:18, 19
உ. தேவையில் இருப்பவர்களுக்கு 14:28, 29; 15:1-11;
சமூக உதவி ஏற்பாடுகள் 16:11, 12; 24:19-22
[அடிக்குறிப்பு]
d இஸ்ரவேலின் சட்டங்களும் சட்டப்பூர்வ முன்மாதிரிகளும், (ஆங்கிலம்) 1907, சி. எஃப். கென்ட், பக்கங்கள் vii-லிருந்து xviii வரை; வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 214-20-ஐயும் காண்க.