பைபிள் புத்தக எண் 19—சங்கீதம்
எழுத்தாளர்: தாவீதும் மற்றவர்களும்
எழுதப்பட்ட இடம்: தீர்மானிக்கப்படவில்லை
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 460
சங்கீதப் புத்தகம் பூர்வகாலங்களில் தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட, யெகோவாவின் உண்மை வணக்கத்தாருடைய பாட்டுப் புத்தகமாகும். இது 150 பரிசுத்த பாடல்களின் அல்லது சங்கீதங்களின் ஒரு தொகுப்பு. எருசலேமிலிருந்த யெகோவா தேவனின் ஆலயத்தில் வணக்கத்துக்காக இப்பாடல்களுக்கு முறையாக இசை அமைக்கப்பட்டன. இவை யெகோவாவைத் துதிப்பதற்கான பாடல்கள். அதுமட்டுமல்லாமல், இரக்கத்துக்காகவும் உதவிக்காகவும் கெஞ்சும் மன்றாட்டு விண்ணப்பங்களும் உறுதியான நம்பிக்கைக்குரிய சொற்றொடர்களும் இருந்தன. நன்றிசெலுத்துதல்களும், களிகூருதல்களும், உச்ச அளவிலான மகிழ்ச்சியின் உணர்ச்சியுரைகளும் அவற்றில் ஏராளம் உள்ளன. இப்பாடல்களில் சில யெகோவாவின் அன்புள்ள தயவையும் அவருடைய மகத்துவமான செயல்களையும் சித்தரிக்கும் சரித்திரத்தின் சுருக்கமாக உள்ளன. அவற்றில் தீர்க்கதரிசனங்கள் பொதிந்துள்ளன. இவற்றில் பல, துல்லியமாக நிறைவேறியிருக்கின்றன. நன்மையளிக்கும், பலப்படுத்தும் மிகுந்த போதனைகள் அப்பாடல்களில் அடங்கியுள்ளன. அவை யாவும், வாசகருடைய மனதைக் கவரும் மேன்மையான மொழியிலும் அடையாள மொழியிலும் வருணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சங்கீதம், மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு நமக்கு முன்பாக கவர்ந்திழுக்கும் வண்ணம் பரிமாறப்பட்டிருக்கும் முதல்தரமான ஆவிக்குரிய விருந்தாக இருக்கிறது.
2 இந்தப் புத்தகத்தினுடைய தலைப்பின் கருத்து என்ன, சங்கீதத்தை எழுதியது யார்? எபிரெய பைபிளில், இந்தப் புத்தகம் ஸீபெர் டெஹில்லிம் (Seʹpher Tehil·limʹ) என்றழைக்கப்படுகிறது; இதன் அர்த்தம், “துதிகளின் புத்தகம்” அல்லது வெறும் டெஹில்லிம் (Tehil·limʹ) அதாவது, “துதிகள்” என்பதாகும். இது டெஹில்லா (Tehil·lahʹ) என்பதன் பன்மை வடிவு. சங்கீதம் 145-ன் தலைப்பில் காணப்படும் இது “ஒரு துதி” அல்லது “துதிப் பாட்டு” என அர்த்தப்படுகிறது. இந்தப் புத்தகம் யெகோவாவுக்கு அளிக்கும் துதியை வலியுறுத்துவதால், “துதிகள்” என்ற பெயர் மிகவும் பொருத்தமே. “சங்கீதம்” என்ற இந்தத் தலைப்பு கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்து வருகிறது; அது சால்மோய் (Psal·moiʹ) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. இது பக்கவாத்திய இசையுடன் பாடும் பாடல்களைக் குறிப்பிடுகிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இந்தச் சொல், லூக்கா 20:42, அப்போஸ்தலர் 1:20 போன்ற பல இடங்களிலும் காணப்படுகிறது. சங்கீதம் என்பது, கடவுளைத் துதிப்பதற்கும் வணங்குவதற்கும் பயன்படுத்தும் பரிசுத்த பாட்டு அல்லது கவிதை ஆகும்.
3 இந்த சங்கீதத்தில் பலவற்றிற்குத் தலைப்புகள் அல்லது முகவுரைகள் உள்ளன. இவை பெரும்பாலும் எழுத்தாளனின் பெயரைக் குறிப்பிடுகின்றன. எழுபத்து மூன்று தலைப்புகளில், “இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின” தாவீதின் பெயர் காணப்படுகிறது. (2 சா. 23:1) 2, 72, 95 ஆகிய சங்கீதங்கள் தாவீதால் எழுதப்பட்டன என்பதில் சந்தேகமில்லை. (அப்போஸ்தலர் 4:25, 26, சங்கீதம் 72:20, எபிரெயர் 4:7 ஆகியவற்றைக் காண்க.) மேலுமாக, சங்கீதம் 9 மற்றும் 70-ன் தொடர்ச்சியாகவே சங்கீதம் 10-ம் 71-ம் தோன்றுகின்றன; ஆகவே அவையும் தாவீதால் இயற்றப்பட்டிருக்கலாம். பன்னிரண்டு சங்கீதங்களை ஆசாப் இயற்றியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இது ஆசாப்பின் வீட்டாரையும் குறிக்க வேண்டும். ஏனென்றால், இவற்றில் சில ஆசாப்பின் நாளுக்குப் பிற்பட்ட சம்பவங்கள். (சங். 79; 80; 1 நா. 16:4, 5, 7; எஸ்றா 2:41) பதினோரு சங்கீதங்களை கோராகின் குமாரர்கள் இயற்றியதாக நேரடியாக சொல்லப்படுகிறது. (1 நா. 6:31-38) 43-ம் சங்கீதம், 42-ன் தொடர்ச்சியாக தோன்றுகிறது. ஆகவே இதுவும் கோராகின் குமாரர்கள் இயற்றியதாக கூறலாம். சங்கீதம் 88-ன் தலைப்பு ‘கோராகின் புத்திரரைக்’ குறிப்பிடுவதோடு ஏமானும் அதை எழுதியதாக குறிப்பிடுகிறது; சங்கீதம் 89 ஏத்தானை எழுத்தாளராக குறிப்பிடுகிறது. 90-வது சங்கீதத்தை மோசே இயற்றியதாக குறிப்பிடப்படுகிறது, 91-ம் சங்கீதமும் மோசேயினுடையதாக இருக்கலாம். சங்கீதம் 127 சாலொமோனுடையது. மூன்றில் இரண்டு பகுதிக்கும் மேற்பட்ட சங்கீதங்களை இவ்வாறு பல்வேறு எழுத்தாளர்கள் இயற்றியிருக்கின்றனர்.
4 சங்கீதப் புத்தகம் பைபிளில் உள்ள புத்தகங்களிலேயே பெரிய புத்தகம். 90, 126, 137 ஆகிய சங்கீதங்களைக் கவனிக்கும்போது சங்கீதம் நீண்ட காலமாக எழுதப்பட்டு வந்திருப்பது தெரிகிறது. மோசே எழுதிய காலப்பகுதி, (பொ.ச.மு. 1513-1473) முதற்கொண்டு பாபிலோனிலிருந்து விடுதலை பெற்று மீண்டும் நிலைநாட்டப்பட்டதற்குப் பிற்பட்ட காலம் வரையாக, ஒருவேளை எஸ்றாவின் நாள் வரையாக (பொ.ச.மு. 537-ஏ. 460) இருக்க வேண்டும். இவ்வாறு, இதை எழுதுவதற்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் எடுத்ததாக தெரிகிறது. ஆனால் இதில் உட்பட்டுள்ள சம்பவங்களின் காலப்பகுதி இன்னும் அதிகமானதே. சிருஷ்டிப்பு காலத்திலிருந்து கடைசியாக இயற்றப்பட்ட சங்கீதத்தின் காலம் வரையாக யெகோவா தமது ஊழியர்களுடனான செயல்தொடர்புகளைப் பற்றிய சரித்திரத்தைச் சுருக்கமாக இவை குறிப்பிடுகின்றன.
5 சங்கீதப் புத்தகம் ஒழுங்கமைப்பை வெளிக்காட்டுகிறது. “என் கடவுளும் ராஜாவுமானவர் [“பரிசுத்த ஸ்தலத்திற்குள்,” UV] [செல்லும்] பவனி . . . முன்னாகப் பாடுவோரும் பின்னாக நரம்புவாத்தியங்களை வாசிப்போரும் சுற்றிலும் தம்புரு வாசிக்கும் கன்னிகைகளும் நடந்தார்கள். . . . சபைகளின் நடுவே ஆண்டவராகிய [“யெகோவாவாகிய,” NW] கடவுளை ஸ்தோத்திரியுங்கள்” என்று தாவீது குறிப்பிடுகிறார். (சங். 68:24-26, தி.மொ.) எனவேதான், அடிக்கடி தலைப்புகளில் குறிப்பிடப்படும் “பாடகர் தலைவனுக்கு” என்ற சொற்றொடரையும், அதோடுகூட கவிதை, இசை பதங்கள் பலவற்றையும் காண்கிறோம். சில தலைப்புகள் சங்கீதத்தின் உபயோகத்தை அல்லது நோக்கத்தை விளக்குகின்றன அல்லது இசைக்குரிய குறிப்புகளை அளிக்கின்றன. (6, 30, 38, 60, 88, 102, 120 ஆகிய சங்கீதங்களின் தலைப்புகளை காண்க.) 18, 51 ஆகிய சங்கீதங்களைப்போல் குறைந்தபட்சம் தாவீதின் 13 சங்கீதங்களிலாவது, அவை இயற்றப்படுவதற்கு காரணமான சம்பவங்கள் சுருக்கமாக கூறப்பட்டுள்ளன. சங்கீதப் புத்தகத்தில் முப்பத்து நான்கு அதிகாரங்களுக்கு தலைப்புகளே இல்லை. வசனங்களில் 71 தடவை தோன்றும் “சேலா” (NW) என்ற இந்தச் வார்த்தையின் சரியான முக்கியத்துவம் அறியப்படவில்லை. இருப்பினும் இசைக்குரிய அல்லது மீண்டும் மீண்டும் பாடுவதை குறிக்கும் இசை பதம் என்று பொதுவாக எண்ணப்படுகிறது. பாடும்போதும் இசைக்கருவியை இசைக்கும்போதும் மெளன தியானத்துக்கான இடை நிறுத்தத்தைக் குறிப்பிடுகிறது என்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆகவே, வாசிக்கையில் அந்த வார்த்தையை உச்சரிக்க வேண்டியதில்லை.
6 பூர்வ காலங்கள் முதற்கொண்டு, சங்கீதப் புத்தகம் பின்வரும் ஐந்து புத்தகங்களாக அல்லது தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது: (1) சங்கீதம் 1-41; (2) சங்கீதம் 42-72; (3) சங்கீதம் 73-89; (4) சங்கீதம் 90-106; (5) சங்கீதம் 107-150. தாவீது இந்தப் பாடல்களை முதலில் தொகுத்திருக்க வேண்டும். சங்கீதப் புத்தகத்தை முழுவதுமாக தொகுப்பதற்கு, ஆசாரியனும் ‘மோசேயின் நியாயப்பிரமாணத்திலே அனுபவம் வாய்ந்த நகல் எழுதுபவருமான’ எஸ்றாவையே யெகோவா பயன்படுத்தினார்.—எஸ்றா 7:6.
7 சங்கீத வசனங்களில் சில வெவ்வேறு பிரிவுகளில் மீண்டும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இப்புத்தகம் தொடர்ந்து படிப்படியாக தொகுக்கப்பட்டு வந்ததே இதற்கு காரணமாகலாம்: உதாரணமாக, சங்கீதம் 14-லோடு 53-ஐயும்; 40:13-17--லோடு 70-ஐயும்; 57:7-11-லோடு 108:1-5-ஐயும் ஒத்துப்பாருங்களேன். இந்த ஐந்து பிரிவுகளில் ஒவ்வொன்றும் யெகோவாவுக்குத் துதி செலுத்துவதோடு அல்லது ஒரு புகழ்மாலையோடு முடிவடைகின்றன. இவற்றில் மக்களிடமிருந்து வரும் மறுமொழிகள் முதல் நான்கில் உள்ளன; கடைசியில் 150-ம் சங்கீதம் முழுவதுமே புகழ்மாலையாக இருக்கிறது.—சங். 41:13, NW அடிக்குறிப்பு.
8 சங்கீதத்தின் ஒன்பது அதிகாரங்களில் மிக விசேஷமான நடையமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது; முதல் எழுத்திலிருந்து கடைசி எழுத்துவரை அகர வரிசையில் வசனங்கள் அமைந்திருப்பதால் அகரவரிசை பாட்டு (acrostic) என்றழைக்கப்படுகிறது. (சங்கீதம் 9, 10, 25, 34, 37, 111, 112, 119, 145) இந்த அமைப்பில், பாடலின் முதல் பத்தியின் முதல் அடி அல்லது அடிகள் எபிரெயு மொழியின் எழுத்து வரிசையின் முதலெழுத்தான அலிஃப் (ʼaʹleph [א]) என்பதோடு தொடங்குகிறது. அடுத்த அடி(கள்) இரண்டாவது எழுத்தான பேத் (behth [ב]) என்பதோடு தொடங்குகிறது. இவ்வாறு எபிரெயு எழுத்து வரிசையின் எல்லா அல்லது ஏறக்குறைய எல்லா எழுத்துக்களைப் பயன்படுத்தியும் இயற்றப்படுகிறது. இது ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு உதவியாக இருந்திருக்கலாம்; ஆலய பாடகர்கள், சங்கீதம் 119-ஐப் போன்ற அவ்வளவு நீளமான பாட்டை நினைவில் வைக்க வேண்டியிருப்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்! யெகோவாவின் பெயர் சங்கீதம் 96:11-ல் ஒரு கரந்துறை பாடலாக காணப்படுவது அக்கறைக்குரிய விஷயம். எபிரெயுவில் இந்த வசனத்தின் முதல் பாதியில் நான்கு வார்த்தைகள் இருக்கின்றன. இந்த வார்த்தைகளின் சொற்களின் முதல் எழுத்துக்களை வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக வாசிக்கையில், ய்ஹ்வ்ஹ் (YHWH [יהוה]) என்ற எபிரெய மெய்யெழுத்துக்களின் நான்கெழுத்துக்கள் கிடைக்கின்றன.
9 எபிரெயு வசனங்களில் இந்தப் பரிசுத்தமான, உணர்ச்சிபொங்கும் கவிதைகள் உச்சரிப்பில் இசைந்திருப்பதில்லை; ஆனால் செய்யுள் அடியில் எழுதப்படுகையில், மிஞ்ச முடியாத அழகிய நடையில் எண்ணங்கள் ஒன்றுக்கொன்று இசைவாக தொடருகின்றன. அவை நேரடியாக மனதோடும் இருதயத்தோடும் பேசுகின்றன. தெள்ளத்தெளிவான காட்சிகளை கண் முன் கொண்டு வருகின்றன. பொருளடக்கத்திலும் அது வெளிப்படுத்தும் தீவிர உணர்ச்சி வேகங்களிலும் உள்ள ஆழ அகலங்கள் அதிசயமானவை. தாவீதின் அசாதாரண வாழ்க்கை அனுபவங்களே ஓரளவு இதற்கு காரணம். இவையே, சங்கீதம் பலவற்றிற்கு பின்னணியாய் அமைகின்றன. தாவீதைப் போல இந்தளவு வித்தியாசப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் சிலரே—இடையனாக, கோலியாத்துக்கு எதிரே தன்னந்தனி போர்வீரராக, அரசவை இசைக் கலைஞராக, உண்மையான நண்பர்களுக்கும் துரோகிகளுக்கும் மத்தியில் நாடுகடத்தப்பட்டவராக, அரசரும் வெற்றிவீரருமாக, தன் குடும்பத்துக்குள் பிரிவினையால் நெருக்கப்பட்ட அன்புள்ள தகப்பனாக, மிக மோசமான பாவத்தின் கசப்பான விளைவுகளை இருமுறை அனுபவித்தவராக வாழ்ந்தார். எனினும் எப்போதும் யெகோவாவை உள்ளார்வத்தோடு வணங்கி அவருடைய நியாயப்பிரமாணத்தை நேசித்தவராகவும் இருந்தார். இத்தகைய பின்னணி இருந்ததால் சங்கீதப் புத்தகம் மனித உணர்ச்சி வேகம் முழுவதையும் வெளிப்படுத்திக் காட்டுவதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டியதே இல்லை! எபிரெய கவிதைக்கு தனிச் சிறப்பைத் தரும் இசைவுப் பொருத்தங்களும் எதிர்நிலைகளும் அதன் வல்லமைக்கும் அழகுக்கும் மேலும் அழகு சேர்க்கின்றன.—சங். 1:6; 22:20; 42:1; 121:3, 4.
10 யெகோவாவுக்குத் துதிபாடும் பழமையான இந்த பாடல்களின் நம்பகத் தன்மையை பற்றியது என்ன? மற்ற வேதவசனங்களோடு இவை முழுமையாக ஒத்திசைந்திருப்பதால் நம்பகமானவை என்பதற்கு அத்தாட்சி உள்ளது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் சங்கீதப் புத்தகத்திலிருந்து பல தடவை மேற்கோள்கள் காட்டியிருக்கின்றனர். (சங். 5:9 [ரோ. 3:13]; சங். 10:7 [ரோ. 3:14]; சங். 24:1 [1 கொ. 10:26]; சங். 50:14 [மத். 5:33]; சங். 78:24 [யோவா. 6:31]; சங். 102:25-27 [எபி. 1:10-12]; சங். 112:9 [2 கொ. 9:9]) தனது கடைசி பாடலில் தாவீது பின்வருமாறு சொல்கிறார்: “யெகோவாவின் ஆவியே என்னைக்கொண்டு பேசினது, அவருடைய வார்த்தை என் நாவின்மீது இருந்தது.” சாமுவேல் அவரை அபிஷேகம் செய்த அந்நாளிலிருந்து இந்த ஆவியே அவர்மீது செயல்பட்டு வந்தது. (2 சா. 23:2, தி.மொ.; 1 சா. 16:13) மேலுமாக, அப்போஸ்தலர்கள் சங்கீதத்திலிருந்து மேற்கோள்கள் காட்டினர். “பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம்” என பேதுரு குறிப்பிட்டார். மற்றும் சங்கீதப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள் பலவற்றை, எபிரெயர் புத்தகத்தை எழுதிய எழுத்தாளன் கடவுள் பேசிய வார்த்தைகளாக அல்லது ‘பரிசுத்த ஆவியைக்கொண்டு உரைத்ததாக’ சொன்னார்.—அப். 1:16; 4:26, தி.மொ.; எபி. 1:5-14; 3:7, NW; 5:5, 6.
11 நம்பகத் தன்மைக்குப் பலமான நிரூபணமாக, உயிர்த்தெழுப்பப்பட்ட கர்த்தராகிய இயேசு சீஷர்களுக்கு சொன்னதை பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறோம்: “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிவந்தவைகள் இவைகளே.” யூதர்கள் தொகுத்திருந்த முறையிலும் அவர்களுக்கு நன்கு தெரிந்த முறையிலும் இயேசு அந்த முழு எபிரெய வேதாகமத்தையும் தொகுத்துரைத்தார். சங்கீதங்கள் என அவர் குறிப்பிட்டது வேதவாக்கியங்களின் மூன்றாவது தொகுதி முழுவதையும் உள்ளடக்கியது. இவற்றை ஹாகியோக்ராஃபா (அல்லது பரிசுத்த எழுத்துக்கள்) என்றழைத்தனர்; இதில் சங்கீதப் புத்தகமே முதல் புத்தகம். ஒருசில மணிநேரத்துக்கு முன்னால் எம்மாவுக்குப் போகும் வழியில் இருவரிடம் இயேசுவே சொன்னதிலிருந்து இது உறுதிசெய்யப்படுகிறது. அப்போது அவர், ‘வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியிருப்பவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.’—லூக். 24:27, 44.
சங்கீதத்தின் பொருளடக்கம்
12 புத்தகம் ஒன்று (சங்கீதம் 1-41). சங்கீதத்தின் 1, 2, 10, 33 ஆகிய அதிகாரங்களைத் தவிர, மற்ற யாவும் தாவீது இயற்றியதாக நேரடியாய் கூறப்படுகிறது. 1-ம் சங்கீதம் தொடக்கத்திலேயே முக்கியமான விஷயத்தை குறிப்பிடுகிறது. எவ்வாறெனில், தேவபக்தியற்ற பாவிகளைப்போல அல்லாமல் யெகோவாவின் பிரமாணத்தில் மகிழ்ந்து அதைப் பின்பற்றும்படி இரவும் பகலும் தியானமாயிருக்கும் மனிதன் மகிழ்ச்சியுள்ளவன் என அது அறிவிக்கிறது. இதுவே சங்கீதத்தில் காணப்படும் மகிழ்ச்சிக்கான முதல் அறிவிப்பு. 2-ம் சங்கீதம் சவால்விடும் கேள்வியுடன் தொடங்குகிறது. அதில் பூமியின் அரசர்களும் உயர்பதவியிலுள்ள அதிகாரிகள் யாவரும் “யெகோவாவுக்கும் அவர் மேசியாவுக்கும் விரோதமாய்” ஒன்றிணைந்து எழும்புவதைக் குறிப்பிடுகிறது. யெகோவா அவர்களைப் பார்த்து நகைக்கிறார். பின்பு கடுமையான கோபத்தில் அவர்களிடம் பேசி, “நானே சீயோனில், எனது பரிசுத்த பர்வதத்தில், என் ராஜாவை ஏற்படுத்தினேன்” என்று சொல்கிறார். இவரே எல்லா எதிர்ப்பையும் உடைத்து நொறுக்குபவர். அரசர்களும் அதிபதிகளுமாகிய நீங்கள் அழியாமலிருப்பதற்கு, “பயத்தோடு யெகோவாவைச் சேவியுங்கள்,” அவருடைய குமாரனை ஏற்றுக்கொள்ளுங்கள்! (வச. 2, 6, 11, தி.மொ.) இவ்வாறு சங்கீத புத்தகம் பைபிளின் மையப் பொருளாகிய ராஜ்யத்தை விரைவில் தொடங்கி வைக்கிறது.
13 இந்த முதல் தொகுப்பில், விண்ணப்பமும் நன்றிசெலுத்துதலும் அடங்கிய ஜெபங்கள் முதன்மையாக உள்ளன. யெகோவாவின் மகத்துவத்தை மனிதனின் அற்ப நிலையோடு 8-வது சங்கீதம் வித்தியாசப்படுத்தி காண்பிக்கிறது. 14-வது சங்கீதம், கடவுளுடைய அதிகாரத்துக்கு கீழ்ப்படிய மறுப்பவர்களின் மதியீனத்தை வெளிப்படுத்துகிறது. யெகோவா தேவனின் அதிசயமான படைப்புகள் அவருடைய மகிமையை எவ்வாறு அறிவிக்கின்றன என்பதை சங்கீதம் 19 காட்டுகிறது; 7-14 வசனங்கள் கடவுளுடைய பரிபூரண சட்டத்தைக் கைக்கொள்வதால் விளையும் மதிப்புள்ள நன்மைகளை உயர்வாக புகழ்கின்றன. பின்னால் சங்கீதம் 119-ல் மேலும் சிறப்பான முறையில் அந்த நன்மைகள் விளக்கப்படுகின்றன. சங்கீதம் 23, எல்லா இலக்கியங்களிலும் தலைசிறந்த படைப்பாக உலக முழுவதிலும் ஏற்கப்படுகிறது. ஆனால், உண்மையான பற்றுறுதியுள்ள நம்பிக்கையை யெகோவா மீது வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்ட அழகிய எளிய சொல்லமைப்பு தனிச்சிறப்பு மிக்கது. நாம் அனைவரும் ‘பெரிய மேய்ப்பராகிய யெகோவாவின் வீட்டில் நீடித்த நாட்கள் நிலைத்திருப்போமாக’! (23:1, 6, NW) 37-வது சங்கீதம், தீயவர் மத்தியில் வாழும் கடவுள் பயமுள்ளவர்களுக்கு நல்ல அறிவுரையைக் கொடுக்கிறது. தாவீதை போலவே கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் சந்தோஷப்படுவதை சங்கீதம் 40 வெளிப்படுத்துகிறது.
14 புத்தகம் இரண்டு (சங்கீதம் 42-72). இந்தப் பிரிவு கோராகியரின் எட்டு சங்கீதங்களுடன் தொடங்குகிறது. 42, 43 ஆகிய சங்கீதங்கள் மொத்தத்தில் மூன்று பத்திகளையுடைய ஒரே செய்யுள்; மீண்டும் மீண்டும் வரும் ஒரு வசனத்தால் அது இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இவை இரண்டும் கோராகின் புத்திரர் இயற்றியதாக குறிப்பிடப்படுகின்றன. (42:5, 11; 43:5) மனிதன் தனக்காக ஒரு மீட்பரை உண்டுபண்ண முடியாததை அறிவுறுத்தி ‘ஷியோலின் கரத்திலிருந்து மனிதனை மீட்பதற்குக்’ கடவுளுக்கே வல்லமை இருப்பதை சங்கீதம் 49 குறிப்பிடுகிறது. (வச. 15, NW) ஏத்தியனான உரியாவின் மனைவி பத்சேபாளுடன் மோசமான பாவத்தில் ஈடுபட்ட பின்பு செய்யப்பட்ட தாவீதின் ஜெபம்தான் சங்கீதம் 51. அது அவருடைய உள்ளப்பூர்வ மனந்திரும்புதலை வெளிக்காட்டுகிறது. (2 சா. 11:1–12:24) இப்பிரிவு “சாலொமோனைப் பற்றிய” ஒரு சங்கீதத்தோடு முடிவடைகிறது. சாலொமோன் ஆட்சி காலம் சமாதானமாய் இருக்கவும் யெகோவாவின் ஆசீர்வாதம் அவரோடு இருக்கவும் விண்ணப்பிக்கும் ஒரு ஜெபம்.—சங். 72.
15 புத்தகம் மூன்று (சங்கீதம் 73-89). இவற்றில் இரண்டு சங்கீதமாவது, அதாவது சங்கீதம் 74-ம், 79-ம் பொ.ச.மு. 607-ல் எருசலேமின் அழிவுக்குப் பின் எழுதப்பட்டவை. இந்தப் பெரும் அழிவைக் குறித்து அவர்கள் புலம்புகின்றனர். ‘அவருடைய நாமத்தின் மகிமையினிமித்தம்’ அவருடைய ஜனத்துக்கு உதவிசெய்யுமாறு யெகோவாவிடம் அவர்கள் மன்றாடுகின்றனர். (79:9) சங்கீதம் 78, மோசேயின் காலத்திலிருந்து தாவீது ‘தன் இருதயத்தின் உத்தமத்தின்படி அவர்களை மேய்க்கத் தொடங்கியது’ வரை நடந்த சரித்திரத்தை விவரிக்கிறது. (வச. 72, NW) மேலும் உண்மையில் யெகோவாவை ‘இஸ்ரவேலின் மேய்ப்பராக’ 80-ம் சங்கீதம் குறிப்பிடுகிறது. (வச. 1) தம்முடைய எதிரிகளுக்கும் தம் ஜனத்தின் எதிரிகளுக்கும் எதிரான தீர்ப்புகளை நிறைவேற்றும்படி யெகோவாவிடம் ஊக்கமாக கேட்கும் வேண்டுதல்களே சங்கீதம் 82-ம் 83-ம். இந்த விண்ணப்பங்கள் பழிவாங்கும் தன்மை உடையவை அல்ல. “யெகோவா, அவர்கள் உமது திருநாமத்தைத் தேடும்படி . . . அப்பொழுது, யெகோவா என்னும் திருநாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணர்ந்துகொள்[ள வேண்டும்]” என்ற நோக்கத்திற்காகவே இந்த விண்ணப்பங்கள் செய்யப்பட்டன. (83:16, 17, தி.மொ.) இந்தப் பிரிவில் கடைசியாக வருவது சங்கீதம் 89. இதில் ‘யெகோவாவின் அன்புள்ள தயவின் வெளிக்காட்டுகள்’ விளக்கப்படுகின்றன. இவை தாவீதுடன் அவர் செய்த உடன்படிக்கையில் சிறப்பித்துக் காட்டப்படுகிறது. இதன் மூலம், தாவீதின் சிங்காசனத்துக்கு நித்திய உரிமையாளர் இருப்பதையும் அவர் யெகோவாவுக்கு முன்பாக வரையறையில்லா காலம் ஆளவிருப்பதையும் தெளிவாக்குகிறது அல்லவா!—வச. 1, 34-37, NW.
16 புத்தகம் நான்கு (சங்கீதம் 90-106). மூன்றாவது புத்தகத்தைப்போல, இதில் 17 சங்கீதங்கள் அடங்கியுள்ளன. இது மோசேயின் ஜெபத்தோடு தொடங்குகிறது. சதாகாலமும் வாழும் கடவுளையும் இறந்துபோகும் மனிதனின் குறுகிய வாழ்நாள் காலத்தையும் மிகச் சிறப்பாக இந்த சங்கீதம் வேறுபடுத்திக் காட்டுகிறது. சங்கீதம் 92, யெகோவாவின் உன்னத பண்புகளை உயர்வாக புகழுகிறது. அதைத் தொடர்ந்து, 93-100 (NW) வரையுள்ள சங்கீதத்தின் சிறப்பான தொகுதி ‘யெகோவாதாமே அரசராகிவிட்டார்!’ என்ற ஆரவாரத்துடன் தொடங்குகிறது. ஆகவே “யெகோவாவைப் பாடி அவர் திருநாமத்தை ஸ்தோத்திரி[யுங்கள்] . . . யெகோவா பெரியவர், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்” என்று துதிக்கும்படி ‘பூமியின் குடிகள் எல்லாரும்’ அழைக்கப்படுகின்றனர். “யெகோவா சீயோனில் மகத்தானவர்.” (93:1, NW; 96:1, 2, 4; 99:2, தி.மொ.) மக்களுடைய எண்ணற்ற முறுமுறுப்புகளையும் பின்வாங்குதல்களையும் பொருட்படுத்தாமல் ஆபிரகாமுடன் தாம் செய்த உடன்படிக்கையை யெகோவா உண்மையுடன் நிறைவேற்றுபவராக ஆபிரகாமின் வித்துக்கு தேசத்தை கொடுத்தார். இதற்காகவும் தம்முடைய ஜனங்களின் சார்பாக யெகோவா நடப்பித்த அதிசயமான செயல்களுக்காகவும், சங்கீதம் 105-ம் 106-ம் அவருக்கு நன்றிசெலுத்துகின்றன.
17 சங்கீதம் 104 வழக்கத்திற்கு மாறான ஆர்வத்தை தூண்டுகிறது. யெகோவா தம்மை மகத்துவத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டியிருப்பதால் இச்சங்கீதம் அவரைப் போற்றிப் புகழுகிறது. மேலும் பூமியில் அவருடைய பல செயல்களிலும் படைப்புகளிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் அவருடைய ஞானத்தை அது விவரிக்கிறது. பின்பு, ‘ஜனங்களே நீங்கள், யாவைத் துதியுங்கள்!’ என்ற ஆரவாரம் முதல் தடவையாக தோன்றுகிறது; அது சங்கீதப் புத்தகம் முழுவதற்குமுரிய கருப்பொருளை முழு வலிமையுடன் குறிப்பிடுகிறது. (வச. 35, NW) யெகோவாவின் பெயருக்கு உரித்தான துதியை அவருக்குச் செலுத்தும்படி இது உண்மையான வணக்கத்தாருக்கு அழைப்பு விடுக்கிறது. இது எபிரெயுவில் ஹல்லேலூயா (ha·lelu–Yahʹ) அல்லது “ஹல்லேலூஜா” என்ற ஒரே சொல்லாக உள்ளது. இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட வார்த்தை இன்று பூமியில் உள்ளவர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று. இந்த வசனம் முதற்கொண்டு, இந்தச் சொற்றொடர் 24 தடவை வருகிறது. அநேக சங்கீதங்கள் இந்த வார்த்தையை ஆரம்பத்திலும் முடிவிலும் பயன்படுத்துகின்றன.
18 புத்தகம் ஐந்து (சங்கீதம் 107-150). சங்கீதம் 107-ல் யெகோவா கொடுத்த விடுதலைகளை பற்றிய விவரத்தை நாம் வாசிக்கிறோம். இதோடு, “அவருடைய அன்புள்ள தயவுக்காகவும் மனுபுத்திரருக்குச் செய்கிற அவருடைய அதிசயமான செயல்களுக்காகவும் ஜனங்கள் யெகோவாவுக்கு நன்றி செலுத்துவார்களாக” என்ற இன்னிசை பல்லவி ஒலிக்கிறது. (வச. 8, 15, 21, 31, NW) சங்கீதப் புத்தகத்தில் 113-லிருந்து 118 வரையானவை ஹல்லேல் சங்கீதங்கள் எனப்படும். மிஷ்னா சொல்லுகிறபடி, பஸ்கா, பெந்தெகொஸ்தே, கூடாரப்பண்டிகைகள், பிரதிஷ்டை பண்டிகை ஆகியவற்றின்போது இவற்றை யூதர்கள் பாடினர்.
19 சங்கீதம் 117 அதன் எளிய நடையில் வல்லமை வாய்ந்ததாக உள்ளது; பைபிளிலுள்ள அனைத்து சங்கீதத்திலும் அதிகாரங்களிலும் மிகச் சிறியது. சங்கீதம் 119, அனைத்து சங்கீதத்திலும் பைபிள் அதிகாரங்களிலும் மிக நீண்டது. ஒவ்வொன்றிலும் 8 வசனங்கள் என அதன் 22 அகரவரிசை செய்யுள் பத்திகளில் மொத்தம் 176 வசனங்கள் உள்ளன. இந்த வசனங்களில் இரண்டைத் (90-ம் 122-ம்) தவிர மற்ற எல்லாம் ஏதோவொரு விதத்தில் யெகோவா தேவனின் வார்த்தையை அல்லது நியாயப்பிரமாணத்தைக் குறிப்பிடுகின்றன. இதில், சங்கீதம் 19:7-14-ல் வரும் சொற்கள், (வேதம், சாட்சி, கட்டளை, கற்பனை, நியாயங்கள்) 119-வது சங்கீதத்தின் ஒவ்வொரு வசனத்திலும் திரும்பத் திரும்ப குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பின்வரும் 8 சொற்களான, கற்பனை, நியாயத்தீர்ப்பு, பிரமாணம், கட்டளைகள், நியமங்கள், சாட்சியம், திருவசனம், வார்த்தை போன்றவை வித்தியாசமான இடங்களில் 170-க்கு மேற்பட்ட தடவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன; இவை யாவும் கடவுளுடைய வார்த்தையையே குறிப்பிடுகின்றன.
20 அடுத்தபடியாக வருவது 120-134 வரையான சங்கீதம். இவற்றில் சங்கீதங்களின் மற்றொரு தொகுதியான 15 யாத்திரை (தி.மொ.) பாடல்களை (NW) பாடல்களை நாம் காண்கிறோம். இந்தச் சொல்லை மொழிபெயர்ப்பாளர்கள் பல்வேறு வகைகளில் மொழிபெயர்த்திருக்கின்றனர், ஏனெனில் இதன் உட்பொருள் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை. இந்தச் சங்கீதங்களின் மேன்மையான பொருளடக்கத்தை அது குறிப்பதாக சிலர் சொல்லுகின்றனர். எனினும் இவற்றை தேவாவியால் ஏவப்பட்ட மற்ற சங்கீதங்களிலும் மேம்பட்டதாக கருதுவதற்குத் தெளிவான காரணம் எதுவும் இல்லை. வருடாந்தர பண்டிகைகளுக்காக எருசலேமுக்கு பயணப்படும், அல்லது “ஏறிவரும்” வணக்கத்தார் இந்தப் பாடல்களை பயன்படுத்தியதால் இந்த பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பதாக அநேக கருத்துரையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நகரம் யூதாவின் மலைகளின் மேல் முகட்டில் அமைக்கப்பட்டிருந்தது. எனவே, தலைநகராகிய எருசலேமிற்கு மேற்கொள்ளப்பட்ட பயணம் மேலேறுவதாக கருதப்பட்டது. (ஒப்பிடுக: எஸ்றா 7:9, NW.) கடவுளுடைய ஜனங்கள் வணக்கத்தில் ஒன்றுபடுவதற்கான தேவைக்கு முக்கியமாக தாவீது ஆழ்ந்த மதித்துணர்வைக் காட்டினார். பின்வரும் அழைப்பைக் கேட்பதில் அவர் மகிழ்ச்சியடைந்தார்: “யெகோவாவின் வீட்டுக்குப் போவோம் வாருங்கள்”; அந்தக் கோத்திரங்கள், “யெகோவாவின் திருநாமத்திற்கு நன்றிசெலுத்துவதற்கு” நிச்சயமாகவே மேலே சென்றார்கள். அதன் காரணமாக எருசலேமின் சமாதானத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் வாழ்வுக்காகவும் ஊக்கமாக பின்வருமாறு ஜெபித்தார்: “நமது கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தினிமித்தம் உனது நன்மையை நாடுவேன்.”—சங். 122:1, 4, 9, தி.மொ.
21 யெகோவாவுக்குப் பொருத்தமான இளைப்பாறுமிடத்தை உடன்படிக்கை பெட்டி அடையாளமாக குறித்துக் காட்டியது. எனவே, அதை ஏற்படுத்தும் வரையில் தான் ஓய்வெடுக்கப் போவதில்லை என்பதாக தாவீது ஆணையிட்டதைப்பற்றி சங்கீதம் 132 சொல்லுகிறது. உடன்படிக்கைப் பெட்டி சீயோனில் வைக்கப்பட்ட பின்பு, யெகோவா தாமே சீயோனைத் தெரிந்துகொண்டாரென அழகிய செய்யுள் நடையில் விவரிக்கப்படுகிறது: “இது என்றென்றும் என் தாபர ஸ்தலம், இங்கேயே நான் வசிப்பேன். இதையே நான் விரும்பினேன்.” வணக்கத்துக்குரிய இந்த மைய ஸ்தலத்தை அவர் அங்கீகரித்தார்; எவ்வாறெனில், ‘அங்கே யெகோவா ஆசீர்வாதத்தை கட்டளையிட்டார்.’ ‘யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.’—132:1-6, 13, 14; 133:3; 134:3; தி.மொ.; சங்கீதம் 48-ஐயும் காண்க.
22 தமக்கு விருப்பமான எல்லாவற்றையும் செய்கிற, துதிக்கப்படத்தக்க கடவுளாக யெகோவாவை சங்கீதம் 135 போற்றிப் புகழ்கிறது. அதேசமயம் வீணானதும், ஒன்றுமில்லாததுமான விக்கிரகங்களுக்கு எதிர் மாறானவராகவும் அவரை சித்தரித்துக் காட்டுகிறது. அவற்றை உண்டுபண்ணுவோரும் அவற்றைப் போலவே இருப்பார்கள். பாடல் வரிக்கு எதிர்வரி கூறி பாடும் பாடலாக அமைந்திருப்பது சங்கீதம் 136 (NW); ஒவ்வொரு வசனமும், “அவருடைய அன்புள்ள தயவு வரையறையில்லா காலத்துக்குமுள்ளது” என்ற மறுமொழியால் முடிகிறது. இத்தகைய மறுமொழி கூற்றுகள் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. (1 நா. 16:41; 2 நா. 5:13; 7:6; 20:21; எஸ்றா 3:11) பாபிலோனில் நாடுகடத்தப்பட்டிருந்தபோது யூதர்களின் இருதயம் சீயோனுக்காக ஏங்கிய ஏக்கத்தை 137-வது சங்கீதம் சித்தரிக்கிறது. மேலும், அவர்கள் தாய்நாட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்தபோதிலும் சீயோனின் பாட்டுகளை அல்லது சங்கீதங்களை மறந்துவிடவில்லை என்பதற்கும் சாட்சிபகருகிறது. சங்கீதம் 145 யெகோவாவின் நற்குணத்தையும் அரசதிகாரத்தையும் உயர்வாக புகழ்கிறது. மேலும், அவர் “தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்” என்று காட்டுகிறது. (வச. 20) பின்பு, 146-150 (NW) வரையான முடிவான சங்கீதத்தின் அதிகாரங்கள், ஆர்வத்தை தூண்டியெழுப்பும் இந்தப் புத்தகத்தின் மகிமையான மையப்பொருளை மறுபடியும் குறிப்பிடுகின்றன; “ஜனங்களே, யாவைத் துதியுங்கள்!” (அல்லேலூயா) என்ற சொற்றொடருடன் ஒவ்வொரு சங்கீதமும் தொடங்கி முடிகின்றன. இந்த இன்னிசை துதி 150-வது சங்கீதத்தில் மகத்தான உச்சக்கட்டத்தை எட்டுகிறது. அதில் படைப்புகள் யாவும் யெகோவாவைத் துதிக்கும்படி அதன் ஆறு வசனங்களில் 13 தடவை அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஏன் பயனுள்ளது
23 பைபிளின் சங்கீதப் புத்தகத்தின் அழகும் மொழிநடையின் தனிச் சிறப்பும் இதை எந்த மொழியிலும் மிகச் சிறந்த இலக்கியமாக கருத செய்கிறது. எனினும், அவை இலக்கியத்தைப் பார்க்கிலும் மிக அதிக மதிப்பு வாய்ந்தவை. அவை சர்வலோகம் முழுவதன்மீதும் ஈடற்ற உன்னத அரசதிகாரமுள்ள யெகோவா தேவனிடமிருந்து வரும் உயிருள்ள செய்திகளே. அவை வெகு முக்கியமாக சங்கீதத்தில் அதன் நூலாசிரியராகிய யெகோவாவைப்பற்றி பேசி, பைபிளின் அடிப்படை போதகங்களுக்கு ஆழமான உட்பார்வையை அளிக்கின்றன. அவரே சர்வலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர் என்பதாக சங்கீதம் தெளிவாக குறிப்பிடுகிறது. (8:3-9; 90:1, 2; 100:3; 104:1-5, 24; 139:14) சங்கீதப் புத்தகத்தில் (NW) யெகோவா என்ற பெயர் நிச்சயமாகவே உயர்வாக மகிமைப்படுத்தப்படுகிறது, அங்கே அது ஏறக்குறைய 700 தடவை வருகிறது. மேலும், “யா” என்ற அப்பெயரின் சுருக்கம் 43 தடவை காணப்படுகிறது. இவ்வாறு மொத்தத்தில் கடவுளுடைய பெயர், சராசரியாக ஒவ்வொரு சங்கீதத்திலும் ஏறக்குறைய 5 தடவை வருகிறது. மேலும், யெகோவா, எலோஹிம் (ʼElo·himʹ), அல்லது கடவுள் என ஏறக்குறைய 350 தடவை குறிப்பிடப்படுகிறார். யெகோவாவின் ஈடற்ற உன்னத ஆட்சியதிகாரம், “உன்னத அரசதிகாரமுள்ள கர்த்தர்” என்று பல சங்கீதங்களில் (NW) அவரைக் குறிப்பிடும் இடங்களில் காட்டப்படுகிறது.—68:20; 69:6; 71:5; 73:28; 140:7; 141:8.
24 நித்திய கடவுளுக்கு நேர்மாறாக, சாகும் தன்மையுள்ளவன் மனிதன். அவன் பாவத்தில் பிறந்திருப்பதும், அவனுக்கு ஒரு மீட்பர் தேவை என்பதும் காட்டப்படுகிறது. மேலும் அவன் இறந்து “தூசிக்குத்” திரும்பி, கீழே ஷியோலுக்குள், மனிதகுலத்தின் பொதுப் பிரேதக்குழிக்குள் செல்வதும் காட்டப்படுகிறது. (6:4, 5; 49:7-20; 51:5, 7; 89:48; 90:1-5; 115:17; 146:4) கடவுளுடைய சட்டங்களுக்குச் செவிகொடுத்து யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கான தேவையைச் சங்கீதப் புத்தகம் அறிவுறுத்துகிறது. (1:1, 2; 62:8; 65:5; 77:12; 115:11; 118:8; 119:97, 105, 165) துணிகரத்துக்கும் ‘மறைவான குற்றங்களுக்கும்’ எதிராக அது எச்சரிக்கிறது. (19:12-14; 131:1) நேர்மையான, பயனுள்ள கூட்டுறவுகளை வரவேற்கிறது. (15:1-5; 26:5; 101:5) சரியான நடத்தை யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது என்பதாகவும் காட்டுகிறது. (34:13-15; 97:10) “இரட்சிப்பு யெகோவாவினுடையதே” என்றும், தமக்குப் பயப்படுவோரின் ‘ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிப்பார்’ என்றும் சொல்லி மகிழ்ச்சியான நம்பிக்கையை அளிக்கிறது. (3:8, தி.மொ.; 33:18) இது தீர்க்கதரிசன அம்சங்களுக்கு நம்மை வழிநடத்துகிறது.
25 “தாவீதின் குமாரனான” இயேசு கிறிஸ்துவைக் குறிப்பிட்டுக்காட்டும் தீர்க்கதரிசனங்களால் நிறைந்ததே சங்கீதப் புத்தகம். மேலும், யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவராகவும் அரசராகவும் அவர் வகிக்கப்போகும் பாகத்தையும் குறிப்பிடும் தீர்க்கதரிசனங்களும் இதில் அடங்கியுள்ளன.a (மத். 1:1) பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் கிறிஸ்தவ சபை உருவாகியது. அந்த சமயத்திலிருந்து இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைக் குறித்து பரிசுத்த ஆவி அப்போஸ்தலருக்கு அறிவொளியூட்ட தொடங்கியது. அதே நாளில், பேதுரு பிரசித்தி பெற்ற தன் பேச்சின் பொருளைப் படிப்படியாக விளக்கினார். அப்போது சங்கீதப் புத்தகத்திலிருந்து திரும்பத் திரும்ப மேற்கோள்களை அவர் குறிப்பிட்டார். தனிநபர் ஒருவர் சம்பந்தப்பட்டது இது. “நசரேயனாகிய இயேசு” அவரே. பேதுருவுடைய விவாதத்தின் பிற்பகுதி, ஏறக்குறைய முழுமையாக சங்கீதப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களையே ஆதாரத்திற்குப் பயன்படுத்துகிறது. கிறிஸ்து இயேசுவே பெரிய தாவீது; இயேசுவின் ஆத்துமாவை யெகோவா ஷியோலில் விட்டுவிடாமல், அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதாக பேதுரு நிரூபிக்கிறார். ‘தாவீது பரலோகத்துக்கு எழுந்துபோகவில்லை’; ஆனால் அவர் சங்கீதம் 110:1-ல் முன்னறிவித்தபடி, அவருடைய ஆண்டவர் பரலோகத்திற்கு சென்றார். தாவீதின் ஆண்டவர் யார்? பேதுரு தனது பேச்சின் முக்கிய உச்சக்கட்டத்தில் மிகுந்த ஊக்கத்துடன் அதற்கு பதிலளிக்கிறார்: “நீங்கள் மரத்தில் அறைந்த இந்த இயேசுவே”!—அப். 2:14-36, NW; சங். 16:8-11; 132:11.
26 சங்கீதத்தை ஆதாரமாக கொண்ட பேதுருவின் பேச்சு பயனுள்ளதாக இருந்ததா? அதே நாளில் ஏறக்குறைய 3,000 பேர் முழுக்காட்டப்பட்டு கிறிஸ்தவ சபையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் இந்த கேள்விக்கு சரியான பதிலளிக்கிறது.—அப். 2:41.
27 இச்சம்பவம் நடந்த கொஞ்ச காலத்துக்குப் பிறகு, ஒரு விசேஷ கூட்டத்தில், சீஷர்கள் யெகோவாவை நோக்கி விண்ணப்பித்து சங்கீதம் 2:1, 2-ஐ (தி.மொ.) மேற்கோளாக குறிப்பிட்டனர். இது, கடவுளால் “அபிஷேகஞ் செய்யப்பட்ட [கடவுளுடைய] பரிசுத்த தாசன் இயேசுவுக்கு” எதிராக அதிபதிகள் ஒன்றிணைந்து எதிர்த்ததில் நிறைவேற்றமடைந்ததாக அவர்கள் கூறினர். ‘அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள்’ என்று விவரப்பதிவு கூறுகிறது.—அப். 4:23-31, தி.மொ.
28 இப்பொழுது, எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபத்தைப் பாருங்கள். சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட கடவுளுடைய பரலோக குமாரனாக, இயேசு தேவதூதர்களுக்கும் மேலாக இருக்கிறார். இயேசுவின் இந்த மேன்மையைக் குறித்து சங்கீதத்திலிருந்து பல மேற்கோள்களை முதல் இரண்டு அதிகாரங்களில் காண்கிறோம். ஆபிரகாமுடைய வித்தின் பாகமாகவும் ‘பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகவும்’ உள்ள சபையோரான ‘சகோதரர்கள்’ இயேசுவுக்கு இருப்பதாக, சங்கீதம் 22:22-லிருந்தும் மற்ற மேற்கோள்களிலிருந்தும் பவுல் குறிப்பிட்டுக் காட்டுகிறார். (எபி. 2:10-13, 16; 3:1) பின்பு, எபிரெயர் 6:20 முதல் எபி 7-ம் அதிகாரம் வரையாக ‘மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக’ இயேசு வகிக்கும் கூடுதல் அதிகாரத்தை அப்போஸ்தலன் விலாவாரியாக விளக்குகிறார். இது சங்கீதம் 110:4-ல் கடவுளுடைய ஆணையிட்ட வாக்குறுதியை குறிப்பிடுகிறது. இயேசுவின் ஆசாரியத்துவம் ஆரோனுடையதைப் பார்க்கிலும் மேன்மையானது என்பதை நிரூபிப்பதற்கு பவுல் இதைப் பல முறை குறிப்பிடுகிறார். யெகோவாவின் ஆணையால் இயேசு கிறிஸ்து ஆசாரியராக இருக்கிறார்; பூமியில் அல்ல, பரலோகத்தில் இருக்கிறார். மேலும், ‘என்றென்றைக்கும் ஆசாரியராக நிலைத்திருக்கிறார்’—அவருடைய ஆசாரிய சேவையின் நன்மைகள் நித்தியமானவை.—எபி. 7:3, 15-17, 23-28.
29 மேலும், தம்மைக் குறித்து கடவுளுடைய சித்தமாயிருந்த அந்தப் பலிக்குரிய வாழ்க்கை முறையை இயேசு நன்கு மதித்துணர்ந்தார். அதோடு, அந்தச் சித்தத்தை நிறைவேற்றுவதற்கான அவர் தீர்மானமாயும் இருந்தார். இதைக் குறித்து எபிரெயர் 10:5-10-ல் நாம் வாசிக்கிறோம். இது சங்கீதம் 40:6-8-லுள்ள தாவீதின் வார்த்தைகளை ஆதாரமாக கொண்டுள்ளது. கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறும்படி, பக்திக்குரிய இந்த முன்மாதிரியை நாம் அனைவரும் பின்பற்றுவது அதிக பயனுள்ளது.—சங்கீதம் 116:14-19-ஐயும் காண்க.
30 இயேசுவின் அந்த வாழ்க்கை முறை வாதனைக்குரிய கழுமரத்தில் அவர் பயங்கர சோதனையை சகித்ததில் முடிவடைந்தது. இந்த விவரங்கள் அனைத்தும் சங்கீதங்களில் கவனிக்கத்தக்க விதத்தில் நுட்பவிவரமாய் முன்னறிவிக்கப்பட்டன. அவருக்குக் காடியைக் குடிப்பதற்கு அளித்தது; அவருடைய மேலங்கிகளுக்கு சீட்டுப்போட்டது; அவருடைய கைகளையும் பாதங்களையும் கொடூரமாக காயப்படுத்தியது; ஏளனமாக நிந்தித்தது; இன்னுமதிகமாக கடும் மனத்துயரத்தின் வேதனையான, “என் தேவனே என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கதறுதல் உட்பட எல்லாமே முன்னறிவிக்கப்பட்டன. (மத். 27:34, 35, 43, 46; சங். 22:1, 7, 8, 14-18; 69:20, 21) அந்த மணிநேரத்திலும், யோவான் 19:23-30-ல் காட்டப்படுகிற இந்த வேதவசனங்கள் யாவும் கடைசி நுட்பவிவரம் வரையாக நிறைவேற்றமடைய வேண்டுமென்பதை அவர் அறிந்தவராய், சங்கீதத்திலிருந்து மிகுந்த ஆறுதலையும் வழிநடத்துதலையும் பெற்றிருப்பார். தம்முடைய உயிர்த்தெழுதலையும் உயர்த்தப்படுதலையும் குறித்தும் சங்கீதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை இயேசு அறிந்திருந்தார். தம்முடைய மரணத்துக்கு முன்னான அந்தக் கடைசி இரவில் தம்முடைய அப்போஸ்தலருடன் “ஸ்தோத்திரப் பாட்டை” அல்லது சங்கீதத்தை முன்னின்று பாடியபோது இத்தகைய காரியங்கள் அவருடைய மனதில் இருந்ததில் சந்தேகமில்லை.—மத். 26:30.
31 இவ்வாறு ‘தாவீதின் குமாரனும்’ ராஜ்ய வித்துமானவர் கிறிஸ்து இயேசுவே என்பதாக சங்கீதம் அவரைத் தெளிவாய் அடையாளம் காட்டுகிறது. இவர் இப்போது அரசரும் ஆசாரியருமாக பரலோக சீயோனில் உயர்த்தப்பட்டிருக்கிறார். யெகோவா அபிஷேகம் செய்த இயேசுவில் சங்கீதத்தில் சொல்லப்பட்ட அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றமடைந்தன. எனினும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மேற்கோள் காட்டப்பட்ட இந்த எல்லா தீர்க்கதரிசனங்களையும் நுட்பமாக விவரிப்பதற்கு இடமில்லை. ஆனால் ஒருசில உதாரணங்களை இங்கே குறிப்பிடுகிறோம்: சங். 78:2—மத். 13:31-35; சங். 69:4—யோவா. 15:25; சங். 118:22, 23—மாற். 12:10, 11-னும் அப். 4:11-னும்; சங். 34:20—யோவா. 19:33, 36; சங். 45:6, 7—எபி. 1:8, 9. மேலும், இயேசுவை உண்மையாக பின்பற்றுவோர் உள்ள அவருடைய சபையும் சங்கீதத்தில் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. தனி ஆட்களாக அல்ல, ஆனால் யெகோவாவின் பெயருக்குத் துதியுண்டாகும் ஓர் ஊழியத்தில் பங்குகொள்வதற்குச் சகல ஜனத்தாரிலிருந்து வந்தவர்களாகவும் கடவுளுடைய தயவுக்குள் ஏற்கப்பட்ட ஒரு தொகுதியாகவும் குறிக்கப்பட்டுள்ளனர்.—சங். 117:1—ரோ. 15:11; சங். 68:18—எபே. 4:8-11; சங். 95:7-11—எபி. 3:7, 8; 4:7.
32 சங்கீதத்தை நாம் ஆராய்ந்தது, யெகோவா தேவனின் அரசதிகாரத்தைப் பற்றிய நம்முடைய போற்றுதலை இன்னும் அதிகமாக்குகிறது. தம்முடைய வாக்குப்பண்ணப்பட்ட வித்துவும் ராஜ்ய சுதந்தரவாளியுமானவர் மூலம், தம்முடைய மகிமைக்காகவும் அரசுரிமையின் நியாயநிரூபணத்துக்காகவும் அவர் இந்த அதிகாரத்தை செலுத்துகிறார். ‘யெகோவாவின் மகத்துவத்தின் மகிமையான மேன்மையில்’ சந்தோஷப்படும் பற்றுறுதியுள்ளோரும் “தாவீது பாடின ஸ்தோத்திர சங்கீதம்” என குறிப்பிடப்படுகிற சங்கீதம் 145-ல் இவ்வாறு பேசப்படுவோருமான இவர்களோடு நாம் என்றும் இருப்போமாக: “மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு; உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.” (சங். 145:5, தி.மொ., 11-13) இந்தத் தீர்க்கதரிசன சங்கீதத்தின்படி கிறிஸ்துவினால் கடவுள் ஸ்தாபித்திருக்கும் ராஜ்யத்தின் மகத்துவம் இப்போதே எல்லா தேசங்களிலுமுள்ளவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த ராஜ்யத்துக்காகவும் அதன் அரசருக்காகவும் நாம் எவ்வளவு நன்றியுள்ளோராக இருக்க வேண்டும்! சங்கீதத்தின் முடிவான இவ்வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றன: “சுவாசமுள்ள ஒவ்வொன்றும்—யாவைத் துதிப்பதாக. ஜனங்களே நீங்கள், யாவைத் துதியுங்கள்!”—150:6, NW.
[அடிக்குறிப்பு]
a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக். 710-11.
[கேள்விகள்]
1. சங்கீதப் புத்தகம் என்பது என்ன, அதில் என்ன அடங்கியுள்ளது?
2. (அ) என்ன தலைப்புகள் சங்கீதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, அவற்றின் உட்பொருள் என்ன? (ஆ) சங்கீதம் என்றால் என்ன?
3. எழுத்தாளர்களைக் குறித்து தலைப்புகள் என்ன சொல்கின்றன?
4. இதில் அடங்கியுள்ள காலப்பகுதி என்ன?
5. (அ) சங்கீதப் புத்தகம் எவ்வாறு ஒழுங்கமைப்பை வெளிக்காட்டுகிறது? (ஆ) மேலும் என்ன தகவலை தலைப்புகள் அளிக்கின்றன? (இ) சங்கீதத்தை வாசிக்கையில் “சேலா” என்ற சொல்லை ஏன் உச்சரிக்க வேண்டியதில்லை?
6. (அ) என்ன பகுதிகளாக சங்கீதப் புத்தகம் பிரிக்கப்பட்டிருக்கிறது? (ஆ) சங்கீதப் புத்தகத்தை முழுவதுமாக தொகுத்தமைத்தது யார்?
7. சங்கீதத்தின் வேறு என்ன அம்சங்களை கவனிக்க வேண்டும்?
8. அகரவரிசை பாட்டு வரிசை நடையமைப்பை விவரியுங்கள்.
9. (அ) சங்கீதத்தில் பல, எந்தப் பின்னணியின் காரணமாக மனதையும் இருதயத்தையும் நேரடியாக கவருகின்றன? (ஆ) அவற்றின் வல்லமைக்கும் அழகுக்கும் வேறு எதுவும் உதவுகிறது?
10. சங்கீதப் புத்தகத்தின் நம்பகத் தன்மைக்கு எது அத்தாட்சியளிக்கிறது?
11. ஆதரிக்கும் அத்தாட்சிக்கு இயேசுவின் வார்த்தைகள்தாமே எப்படி மகுடம்போல் அமைந்தன?
12. எவ்வாறு சங்கீதம் மகிழ்ச்சிக்குரிய பொருளையும் மையப் பொருளாகிய ராஜ்யத்தையும் விரைவில் தொடங்கி வைக்கிறது?
13. சங்கீதத்தின் முதல் தொகுப்பை வேறு எவையும் சிறப்புமிக்கதாக ஆக்குகின்றன?
14. சங்கீதத்தின் இரண்டாவது புத்தகத்தில் மீட்பைப்பற்றி என்ன சொல்லப்படுகிறது, தாவீதின் எப்படிப்பட்ட ஜெபங்கள் இதில் வலியுறுத்திக் காட்டப்படுகின்றன?
15. இஸ்ரவேலின் சரித்திரத்தையும், யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளையும், அவருடைய ராஜ்ய உடன்படிக்கையையும் குறித்து புத்தகம் மூன்று என்ன குறிப்பிடுகிறது?
16. புத்தகம் நான்கு எவ்வாறு யெகோவாவின் அரசதிகாரத்தையும் அவர் உடன்படிக்கையைக் காத்துக்கொள்வதையும் உயர்வாக மதித்துப் போற்றுகிறது?
17. சங்கீதம் 104 வழக்கத்திற்கு மாறாக எவ்வாறு ஆர்வத்தை தூண்டுகிறது, இந்தப் பகுதியிலிருந்து என்ன கருப்பொருள் திரும்பத் திரும்பக் குறிப்பிடப்படுகிறது?
18. (அ) சங்கீதம் 107-ஐ என்ன பல்லவி சிறப்பிக்கிறது? (ஆ) ஹல்லேல் சங்கீதங்கள் எனப்படுபவை யாவை?
19. சங்கீதம் 117-ம் 119-ம் எவ்வாறு வேறுபடுகின்றன, 119-ம் சங்கீதத்தின் முக்கியமான சில அம்சங்கள் யாவை?
20, 21. (அ) யாத்திரை பாடல்கள் யாவை? (ஆ) ஒன்றுபட்ட வணக்கத்திற்கான தேவையை தாவீது மதித்துணர்ந்ததை அவை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன?
22. (அ) யெகோவா துதிக்கத்தக்கவராக இருப்பது எவ்வாறு போற்றிப் புகழப்படுகிறது? (ஆ) இந்தப் புத்தகத்தின் மகிமையான மையப்பொருள், முடிவான சங்கீத அதிகாரங்களில் எவ்வாறு உச்சக்கட்டத்தை எட்டுகிறது?
23. (அ) என்ன உயிருள்ள செய்தி சங்கீதத்தில் அடங்கியிருக்கிறது? (ஆ) யெகோவாவின் பெயரும் உன்னத அரசதிகாரமும் எவ்வாறு புகழ்ந்து பேசப்படுகின்றன?
24. சாகும் தன்மையுள்ள மனிதனைக் குறித்து சங்கீதத்தில் என்ன சொல்லப்படுகிறது, என்ன நல்ல அறிவுரை கொடுக்கப்படுகிறது?
25. (அ) சங்கீதப் புத்தகம் எந்த விஷயங்களால் நிரம்பியுள்ளது? (ஆ) பெரிய தாவீதை அடையாளம் காட்டுவதில் சங்கீதத்தைப் பேதுரு எவ்வாறு பயன்படுத்தினார்?
26. பேதுருவின் பேச்சு எவ்வாறு பயனுள்ளதாக நிரூபித்தது?
27. சங்கீதம் 2-ன் உட்பொருளைப் “பரிசுத்த ஆவி” எவ்வாறு வெளிப்படுத்தியது?
28. (அ) எபிரெயர் 1-லிருந்து 3 வரையான அதிகாரங்களில் பவுல் சங்கீதத்தைப் பயன்படுத்தி, என்ன விவாதத்தை படிப்படியாக விளக்குகிறார்? (ஆ) மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தைப் பற்றிய பவுலின் ஆய்வுரைக்கு சங்கீதம் 110:4 எவ்வாறு ஆதாரம் அளிக்கிறது?
29. சங்கீதத்தில் கூறப்பட்டு எபிரெயர் 10:5-10-ல் விளக்கப்பட்டுள்ள பக்திக்குரிய யாருடைய முதன்மையான முன்மாதிரியை நாம் பின்பற்றவேண்டும்?
30. சங்கீதம் இயேசுவின் வாழ்க்கை முறையை எவ்வாறு நுட்பவிவரமாக முன்னறிவித்தது, அவற்றிலிருந்து அவர் எவ்வாறு ஆறுதல் அடைந்திருக்க முடியும்?
31. ராஜ்ய வித்து, இயேசுவின் சபை ஆகியவை சம்பந்தமாக சங்கீதப் புத்தகம் என்ன முன்னறிவிக்கிறது?
32. (அ) சங்கீதத்தின் ஆராய்ச்சி யெகோவாவின் அரசுரிமையின் நியாயநிரூபணத்தைக் குறித்தும் ராஜ்ய நோக்கங்களைக் குறித்தும் என்ன வெளிப்படுத்துகிறது? (ஆ) அவருடைய அரசதிகாரத்தை போற்றுவோராக, நாம் எவ்வாறு பற்றுறுதியையும் நன்றியறிதலையும் வெளிக்காட்ட வேண்டும்?