முன்னுரை
“விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.”—எபிரெயர் 6:12.
1, 2. பயணக் கண்காணி ஒருவர் பைபிள் கதாபாத்திரங்களை எப்படிக் கருதியதாக ஒரு சகோதரி சொன்னார், அந்தக் கதாபாத்திரங்கள் நமக்கு நண்பர்களாக இருந்தால் ஏன் அருமையாக இருக்கும்?
“பைபிள் கதாபாத்திரங்களைப் பற்றிப் பேச்சு கொடுக்கும்போதெல்லாம் ஏதோ அவருடைய பால்ய நண்பர்களைப் பற்றிப் பேசுவது போல் பேசுகிறார்.” வயதான பயணக் கண்காணி ஒருவருடைய பேச்சைக் கேட்ட பின்பு, ஒரு சகோதரி சொன்ன குறிப்பு இது. இந்தச் சகோதரர் பல வருடங்களாக கடவுளுடைய வார்த்தையைப் படித்தும் போதித்தும் வருகிறார். அதனால் விசுவாசமிக்க ஆண்களும் பெண்களும் அவருக்குக் காலங்காலமாகப் பழகிய நண்பர்களைப் போலத் தெரிவதில் ஆச்சரியமே இல்லை!
2 பைபிள் கதாபாத்திரங்கள் நமக்கு நண்பர்களாக இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும், அல்லவா? அவர்கள் உங்களுக்கு அந்தளவு நிஜமானவர்களாக இருக்கிறார்களா? நோவா, ஆபிரகாம், ரூத், எலியா, எஸ்தர் போன்றவர்களுடன் பேசிக்கொண்டே போவது எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்; அவர்களோடு நன்கு பரிச்சயமாவது எப்படியிருக்கும் என்பதை மனதில் சிந்தித்துப் பாருங்கள். அவர்களோடு பழகுவதால்... அவர்கள் தருகிற முத்தான அறிவுரைகளையும் ஊக்கமூட்டும் வார்த்தைகளையும் கேட்பதால்... உங்கள் வாழ்க்கை எப்படி வளமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.—நீதிமொழிகள் 13:20-ஐ வாசியுங்கள்.
3. (அ) விசுவாசமுள்ள ஆண்கள் பெண்களின் வாழ்க்கையைப் படிப்பதன் மூலம் எப்படிப் பயனடையலாம்? (ஆ) என்ன கேள்விகளுக்குப் பதிலைக் காண்போம்?
3 ‘நீதிமான்கள் . . . உயிர்த்தெழுப்பப்படும்’ காலத்தில், அவர்கள் நமக்கு நல்ல நண்பர்களாக ஆகப்போவது உறுதிதான். (அப். 24:15) இருந்தாலும், விசுவாசமுள்ள அந்த ஆண்கள் பெண்களின் வாழ்க்கையைப் படித்து இப்போதே பயனடையலாம். எப்படி? ‘விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய முன்மாதிரியை’ அன்றாட வாழ்வில் ‘பின்பற்றுவதன்’ மூலம் பயனடையலாம் என அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபி. 6:12) அவருடைய வார்த்தைகளை வாசிக்கும்போது நம் மனதில் சில கேள்விகள் எழலாம்... விசுவாசம் என்றால் என்ன? விசுவாசம் நமக்கு ஏன் அவசியம்? பூர்வகால விசுவாசிகளை நாம் எப்படிப் பின்பற்றலாம்? அவர்களுடைய வாழ்க்கையை ஆராயும்போது, இதற்கான பதிலைக் காண்போம்.
விசுவாசம் என்றால் என்ன, அது ஏன் அவசியம்?
4. விசுவாசம் என்றால் என்னவென்று அநேகர் நினைக்கிறார்கள், அது ஏன் தவறு?
4 விசுவாசம் என்பது மனதைக் கவருகிற ஒரு குணம்; இந்தப் புத்தகத்தில் நாம் பார்க்கப்போகிற ஆண்கள் பெண்கள் எல்லோருமே இந்தக் குணத்தை உயர்வாய்க் கருதினார்கள். இன்றோ அநேகர் விசுவாசத்துக்குச் சரியான அர்த்தம் தெரியாமல் இருக்கிறார்கள்; விசுவாசம் என்பது எந்தவொரு அத்தாட்சியோ ஆதாரமோ இல்லாமல் ஒன்றை நம்புவது என நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு. விசுவாசம் என்பது குருட்டு நம்பிக்கை அல்ல; வெறும் ஓர் உணர்ச்சியும் அல்ல; ஏதோ பெயருக்கு நம்புவதும் அல்ல. குருட்டு நம்பிக்கை ஆபத்தானது; உணர்ச்சி மனதில் தோன்றி மறைந்துவிடும்; கடவுளை ஏதோ பெயருக்கு நம்புவதும்கூட போதாது; ஏனென்றால், ‘பேய்களும்கூட நம்புகின்றன, பயத்தில் நடுங்குகின்றன.’—யாக். 2:19.
5, 6. (அ) காண முடியாத என்ன இரண்டு அம்சங்கள் விசுவாசத்தில் உட்பட்டுள்ளன? (ஆ) நம் விசுவாசம் எந்தளவு உறுதியாக இருக்க வேண்டும்? உதாரணம் தருக.
5 விசுவாசம் என்பது இவை எல்லாவற்றையும்விட மேலானது. விசுவாசத்திற்கு பைபிள் தரும் விளக்கத்தைச் சற்று நினைவுக்குக் கொண்டு வாருங்கள். (எபிரெயர் 11:1-ஐ வாசியுங்கள்.) காண முடியாத இரண்டு அம்சங்கள் விசுவாசத்தில் உட்பட்டிருப்பதாக பவுல் விளக்கினார். முதலாவதாக, நம்மால் ‘பார்க்க முடியாவிட்டாலும்’ நிஜமாக இருப்பவற்றை நம்புவதாகும். உதாரணமாக, யெகோவா தேவனையோ அவருடைய மகனையோ கண்களால் காண முடியாவிட்டாலும் அவர்கள் நிஜமாகவே இருக்கிறார்கள் என நம்புவதாகும். அதேபோல், அவருடைய பரலோக அரசாங்கத்தைக் காண முடியாவிட்டாலும் அது நிஜமானது என நம்புவதாகும். இரண்டாவதாக, நாம் ‘எதிர்பார்க்கிற காரியங்களை,’ அதாவது இனிமேல் நடக்கப்போகிற காரியங்களை, நம்புவதாகும். உதாரணமாக, கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் புதிய உலகத்தைக் கொண்டுவருமென நம்புவதாகும். இதை இப்போது நம்மால் பார்க்க முடியாது. அப்படியானால், நிஜமானவற்றையும் நாம் எதிர்பார்க்கிறவற்றையும் விசுவாசிப்பது வெறும் குருட்டு விசுவாசமா?
6 இல்லவே இல்லை! உண்மையான விசுவாசம் என்பது உறுதியான ஆதாரத்தில் அமைந்திருக்கிறது என்று பவுல் விளக்கினார். விசுவாசம் என்பது ‘நிச்சயமாக நடக்கும் என்ற உறுதி’ என பவுல் எழுதினார்; இதற்கு அவர் பயன்படுத்திய வார்த்தையை “மூலப்பத்திரம்” என்றும் மொழிபெயர்க்கலாம். ஒரு வீட்டை உங்களுக்குக் கொடுக்க ஒருவர் தீர்மானிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். “இதுதான் உங்கள் புது வீடு” என்று சொல்லி அந்த வீட்டின் பத்திரத்தை அவர் உங்கள் கையில் கொடுக்கலாம். அப்படியானால், நீங்கள் அந்தக் காகிதத்தில்தான் குடியிருக்கப் போகிறீர்கள் என்று அர்த்தமல்ல; சட்டப்படி பார்த்தால், அந்த வீடே உங்கள் கைக்கு வந்துவிட்டது என்பதற்கு அந்தப் பத்திரம் ஓர் உறுதியான ஆதாரமாக இருக்கிறது. அது போலவே, நம் விசுவாசத்துக்கான அத்தாட்சி அந்தளவு உறுதியாக இருப்பதால்... நம்பத்தக்கதாக இருப்பதால்... அந்த அத்தாட்சியே விசுவாசத்திற்குச் சமமாக இருக்கிறது.
7. உண்மையான விசுவாசம் எதைக் குறிக்கிறது?
7 எனவே, உண்மை விசுவாசம் என்பது முக்கியமாக யெகோவா தேவன்மீது வைக்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை... பலமான ஆதாரங்களின் அடிப்படையில் வைக்கிற நம்பிக்கையை... குறிக்கிறது. யெகோவாவை ஓர் அன்பான தகப்பனாகப் பார்ப்பதற்கும், அவருடைய வாக்குறுதிகள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்று நம்புவதற்கும் விசுவாசம் உதவுகிறது. அதேசமயம், உண்மையான விசுவாசத்தில் இன்னும் அதிக விஷயங்கள் உட்பட்டுள்ளன. ஏதோவொன்று உயிர்வாழ தொடர்ந்து ஊட்டம் அவசிமாய் இருப்பதுபோல் விசுவாசத்திற்கும் தொடர்ந்து ஊட்டம் தேவை. அதுமட்டுமல்ல, அதை நாம் செயலில் காட்ட வேண்டும், இல்லாவிட்டால் அது செத்துவிடும்.—யாக். 2:26.
8. விசுவாசம் ஏன் மிக முக்கியம்?
8 விசுவாசம் ஏன் மிக முக்கியம்? தெள்ளத்தெளிவான ஒரு பதிலை பவுல் கொடுக்கிறார். (எபிரெயர் 11:6-ஐ வாசியுங்கள்.) நமக்கு விசுவாசம் இல்லாவிட்டால், யெகோவாவை அணுகவோ பிரியப்படுத்தவோ முடியாது. புத்திக்கூர்மையுள்ளவர்களை யெகோவா படைத்ததற்கான உயர்ந்த நோக்கம்... சீரிய நோக்கம்... இதுவே: அவரிடம் நெருங்கிச் செல்வதும் அவருக்குப் புகழ் சேர்ப்பதும்தான். இந்த நோக்கத்தை அடைய விசுவாசம் நமக்கு மிகவும் அவசியம்.
9. நமக்கு விசுவாசம் முக்கியமென யெகோவா அறிந்திருக்கிறார் என எப்படிச் சொல்லலாம்?
9 நமக்கு விசுவாசம் மிகவும் முக்கியம் என்பதை யெகோவா அறிந்திருக்கிறார்; அதனால்தான், விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தலாம், எப்படிக் காட்டலாம் என்பதை முன்னுதாரணங்கள் மூலம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். சபையை வழிநடத்த விசுவாசமுள்ள ஆண்களை... முன்னுதாரணமாய் விளங்குபவர்களை... வரங்களாய்த் தந்திருக்கிறார். “அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 13:7) அதுமட்டுமல்ல, விசுவாசத்தில் தலைசிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்ந்த பூர்வகால ஆண்களையும் பெண்களையும் பற்றிய பதிவுகளையும் கொடுத்திருக்கிறார்; அவர்களைத்தான், ‘திரண்டிருக்கும் மேகம் போன்ற சாட்சிகள்’ என்று பவுல் குறிப்பிட்டார். (எபி. 12:1) எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் பவுல் கொடுத்த விசுவாசிகளின் பட்டியல் முழுமையான பட்டியல் அல்ல. பைபிளின் பக்கங்களைப் புரட்டும்போது, விசுவாசத்தில் சிறந்து விளங்கிய ஆண்கள் பெண்கள் பலரை... பலதரப்பட்ட பின்னணியினரை... வித்தியாசப்பட்ட வயதினரை... பற்றிய நிஜக் கதைகளைப் படிப்பீர்கள். இவர்களுடைய வாழ்க்கை விசுவாசமற்ற இந்தக் காலப்பகுதியில் வாழ்கிற நமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத் தருகிறது.
மற்றவர்களுடைய விசுவாசத்தை எப்படிப் பின்பற்றலாம்?
10. விசுவாசமுள்ள ஆண்கள் பெண்களைப் பின்பற்ற தனிப்பட்ட படிப்பு எப்படி உதவும்?
10 ஒரு நபரை முதலில் கூர்ந்து கவனித்தால்தான் அவரை உங்களால் பின்பற்ற முடியும். அதற்காகத்தான், பூர்வகால விசுவாசிகளின் வாழ்க்கையைப் பற்றி நிறைய விஷயங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டு இந்தப் புத்தகத்தில் அளிக்கப்பட்டிருக்கின்றன. நீங்களும்கூட அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிக் கூடுதல் ஆராய்ச்சி செய்யலாம், அல்லவா? உங்களுடைய தனிப்பட்ட படிப்பின்போது, உங்கள் கையிலுள்ள ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்தி பைபிளை இன்னும் ஆழமாக ஊடுருவிப் பாருங்கள். படித்த விஷயங்களைத் தியானிக்கும்போது, பைபிள் சம்பவங்களின் சூழலையும் பின்னணியையும் கற்பனை செய்து பாருங்கள். அந்த இடத்தில் இருப்பதுபோல் நினைத்து காட்சிகளைக் காணுங்கள்... சப்தங்களைக் கேளுங்கள்... வாசனைகளை முகருங்கள். மிக முக்கியமாக, அந்த நபர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயலுங்கள். விசுவாசமுள்ள இந்த ஆண்கள் பெண்களின் இடத்தில் உங்களை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் உங்களுக்கு இன்னும் நிஜமானவர்களாய்... பரிச்சயமானவர்களாய்... தெரிவார்கள்; சிலர் உங்களுடைய பால்ய நண்பர்களைப் போலவும்கூட தெரிவார்கள்.
11, 12. (அ) ஆபிராமிடமும் சாராயிடமும் நீங்கள் நெருக்கமாக உணர என்ன செய்ய வேண்டும்? (ஆ) அன்னாள், எலியா, சாமுவேல் ஆகியோருடைய உதாரணத்திலிருந்து நீங்கள் எப்படிப் பயனடையலாம்?
11 அவர்களைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்துகொள்ளும்போது அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்ற விரும்புவீர்கள். உதாரணமாக, ஒரு புதிய நியமிப்பு உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். தேவை அதிகமுள்ள இடங்களுக்கு மாறிச் செல்லும்படி அல்லது நீங்கள் இதுவரை செய்திராத... செய்ய தயங்குகிற... பிரசங்க முறையைப் பயன்படுத்தும்படி யெகோவாவின் அமைப்பு உங்களிடம் கேட்கலாம். உங்களுடைய நியமிப்பைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்த்து அதற்காக ஜெபம் செய்யும்போது, ஆபிராமைப் பற்றித் தியானிப்பது உதவியாக இருக்கும், அல்லவா? அவரும் சாராயும் ஊர் தேசத்தில் அனுபவித்த சொகுசான வாழ்வைத் துறக்க முன்வந்தார்கள், அதனால் அபரிமிதமாய் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றும்போது, முன்பைவிட இன்னும் அதிகமாக அவர்களை அறிந்துகொள்வீர்கள்.
12 இன்னொரு உதாரணத்தைச் சிந்தியுங்கள்: நெருக்கமான ஒருவர் உங்கள்மீது வெறுப்பைக் கொட்டியதால் நீங்கள் மனமுடைந்துபோகலாம்; ஏன், சபைக் கூட்டங்களுக்குப் போகப் பிடிக்காத அளவுக்குச் சோர்ந்துபோகலாம். அப்போது, அன்னாளின் உதாரணத்தைச் சிந்தித்துப் பார்ப்பது உதவியாக இருக்கும். பெனின்னாள் என்னதான் வெறுப்பைக் கொட்டினாலும் யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்துக்குப் போகாமல் அன்னாள் இருந்துவிடவில்லை. சரியான தீர்மானம் எடுக்க அவளுடைய உதாரணம் உங்களைத் தூண்டும். அதுமட்டுமல்ல, அவள் உங்களுடைய நெருங்கிய தோழியாகவும் தெரிவாள். இப்போது இன்னொரு சந்தர்ப்பத்தைப் பார்க்கலாம். எதற்கும் லாயக்கில்லை என்ற உணர்வு உங்களுக்குள் தலைதூக்கினால், எலியாவுக்கு வந்த இக்கட்டான சூழ்நிலையையும் அவருக்கு யெகோவா ஆறுதல் தந்த விதத்தையும் படிக்கும்போது எலியாவுடன் நெருக்கமாக உணர்வீர்கள். பள்ளியில் படிக்கிற மாணவராக இருந்தால், ஒழுக்கங்கெட்ட மாணவர்கள் தப்புத்தண்டாவில் ஈடுபடச் சொல்லி உங்களை வற்புறுத்தலாம்; அப்படிப்பட்ட சூழலில் சாமுவேலின் உதாரணம் கைகொடுக்கலாம். வழிபாட்டுக் கூடாரத்தில் ஏலியின் பொல்லாத மகன்கள் செய்த அட்டூழியங்கள் தன்னைப் பாதிக்காதபடி அவர் எப்படிப் பார்த்துக்கொண்டார் என்று படிக்கும்போது அவரிடம் நெருங்கிவிடுவீர்கள்.
13. பைபிள் கதாபாத்திரங்களின் விசுவாசத்தைப் பின்பற்றினால், நம்முடைய விசுவாசம் மதிப்புக் குறைந்ததாக ஆகிவிடுமா? விளக்கம் தருக.
13 பைபிள் கதாபாத்திரங்களின் விசுவாசத்தைப் பின்பற்றினால், உங்கள் விசுவாசம் மதிப்புக் குறைந்ததாக ஆகிவிடுமா, தனித்துவம் இல்லாமல் போய்விடுமா? இல்லவே இல்லை! விசுவாசமுள்ள நபர்களைப் பின்பற்றச் சொல்லி யெகோவாவின் வார்த்தையே நம்மை ஊக்கப்படுத்துகிறது என்பதை நினைவில் வையுங்கள். (1 கொ. 4:16; 11:1; 2 தெ. 3:7, 9) சொல்லப்போனால், நாம் இந்தப் புத்தகத்தில் பார்க்கப்போகிற நபர்கள் சிலரும்கூட தங்களுக்கு முன்னால் வாழ்ந்த விசுவாசமுள்ளவர்களைப் பின்பற்றினார்கள். உதாரணமாக, 17-ஆம் அதிகாரத்தில் நாம் மரியாளைப் பற்றிச் சிந்திப்போம்; அவள் தனக்கு முன்னால் வாழ்ந்த அன்னாளை முன்னுதாரணமாக வைத்து, அவளைப் போலவே ஜெபம் செய்தாள். அப்படியென்றால், மரியாளின் விசுவாசம் மதிப்புக் குறைந்ததாக ஆகிவிட்டதா? நிச்சயமாக இல்லை! மாறாக, தன் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள அன்னாளின் உதாரணம் மரியாளுக்கு உதவியது, யெகோவா தேவனோடு தனக்கென ஒரு நற்பெயரைச் சம்பாதிக்க உதவியது.
14, 15. இந்தப் புத்தகத்திலுள்ள சில அம்சங்கள் யாவை, அவற்றை நீங்கள் எப்படி நன்கு பயன்படுத்தலாம்?
14 உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தவே இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 2008 முதல் 2013 வரை, “இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” என்ற தலைப்பில் காவற்கோபுரத்தில் வெளிவந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இது. சில புதிய கட்டுரைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. கலந்தாலோசிக்கவும் கடைப்பிடிக்கவும் உதவும் விதத்தில் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. நுணுக்கமான விவரங்கள் கொண்ட வண்ண வண்ண படங்கள் இந்தப் புத்தகத்திற்காகவே புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. அதோடு, பழைய படங்கள் பெரிதாக்கப்பட்டு, மெருகூட்டப்பட்டுள்ளன. கால அட்டவணை, வரைபடங்கள் போன்ற பயனுள்ள அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட படிப்புக்கும், குடும்ப வழிபாட்டுக்கும், சபை பைபிள் படிப்புக்கும் உதவுவதற்காக இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள கதைகளைக் குடும்பமாகச் சேர்ந்து சப்தமாக வாசித்தும் மகிழலாம்.
15 யெகோவாவுக்கு உண்மையாய் இருந்த பூர்வகால ஊழியர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்ற இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவுவதாக! விசுவாசத்தில் இன்னும் வளரவும் உங்கள் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவிடம் மேன்மேலும் நெருங்கி வரவும் கைகொடுப்பதாக!