எபிரெயருக்குக் கடிதம்
11 விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயம் நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்;+ பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியை* பார்ப்பதாகும். 2 விசுவாசத்தால்தான் கடவுளிடமிருந்து நம் முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
3 இந்தப் பிரபஞ்சத்தில்* இருப்பதெல்லாம் கடவுளுடைய வார்த்தையால் படைக்கப்பட்டன* என்பதையும் பார்க்க முடியாதவற்றிலிருந்து பார்க்க முடிகிறவை தோன்றியிருக்கின்றன என்பதையும் விசுவாசத்தால் நாம் புரிந்துகொள்கிறோம்.
4 விசுவாசத்தால்தான் ஆபேல், காயீனுடைய பலியைவிட உயர்ந்த பலியைக் கடவுளுக்குக் கொடுத்தார்.+ அதனால் அவர் நீதிமான் என்று நற்சாட்சி பெற்றார். அவருடைய காணிக்கைகளைக் கடவுள் ஏற்றுக்கொண்டாரே.*+ அவர் இறந்துபோனாலும் தன்னுடைய விசுவாசத்தால் இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறார்.+
5 விசுவாசத்தால்தான் ஏனோக்கு,+ வேதனைப்பட்டுச் சாகாதபடி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். அப்படி அவரைக் கடவுள் இடம் மாற்றியதால் அதற்குப் பின்பு அவரை யாரும் பார்க்கவில்லை;+ அவர் இடம் மாற்றப்படுவதற்கு முன்பே, கடவுளுக்கு மிகவும் பிரியமாக நடந்துகொண்டவர் என்று நற்சாட்சி பெற்றிருந்தார். 6 விசுவாசமில்லாமல் யாரும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது. ஏனென்றால், கடவுளை அணுகுகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறார் என்றும் நம்ப வேண்டும்.+
7 விசுவாசத்தால்தான் நோவா,+ பார்க்காதவற்றைப் பற்றிக் கடவுளிடமிருந்து எச்சரிப்பு கிடைத்தபோது+ கடவுள்பயத்தைக் காட்டினார். தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு பேழையைக் கட்டினார்;+ இந்த விசுவாசத்தால்தான் உலகத்தை அவர் கண்டனம் செய்தார்,+ அதே விசுவாசத்தால்தான் நீதிமான்களில் ஒருவரானார்.
8 விசுவாசத்தால்தான் ஆபிரகாம்,+ தனக்குச் சொத்தாகக் கிடைக்கவிருந்த இடத்துக்குப் போகும்படி சொல்லப்பட்டபோது, அந்த இடம் எங்கே இருக்கிறதென்று தெரியாவிட்டாலும் கீழ்ப்படிந்து புறப்பட்டுப் போனார்.+ 9 விசுவாசத்தால்தான் அவர், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் ஓர் அன்னியனாகத் தங்கியிருந்தார்.+ அதே வாக்கைப் பெற்ற சக வாரிசுகளான ஈசாக்கோடும் யாக்கோபோடும்+ கூடாரங்களில் தங்கியிருந்தார்.+ 10 ஏனென்றால், கடவுளே வடிவமைத்துக் கட்டிய உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரத்துக்காக+ அவர் காத்துக்கொண்டிருந்தார்.
11 விசுவாசத்தால்தான் சாராள்கூட, வயதானவளாக இருந்தாலும் கர்ப்பமானாள்.*+ ஏனென்றால், வாக்குறுதி கொடுத்தவர் உண்மையுள்ளவர்* என்று அவள் நம்பினாள். 12 அதனால்தான், பிள்ளை பெற முடியாத*+ ஒரு மனிதருக்கு வானத்திலுள்ள ஏராளமான நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணற்ற மணலைப் போலவும்+ பிள்ளைகள் பிறந்தார்கள்.+
13 மேலே சொல்லப்பட்ட இவர்கள் எல்லாரும் விசுவாசமுள்ளவர்களாக இறந்தார்கள். வாக்குறுதிகள் நிறைவேறுவதை அவர்கள் பார்க்காவிட்டாலும்,+ தூரத்திலிருந்து அவற்றைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.+ தாங்கள் குடியிருந்த தேசத்தில் தங்களை அன்னியர்கள் என்றும், தற்காலிகக் குடிகள் என்றும் எல்லாருக்கும் சொன்னார்கள். 14 இப்படிச் சொல்கிறவர்கள் தங்களுக்காக ஒரு தேசத்தை ஊக்கமாகத் தேடிக்கொண்டிருந்ததற்கு அத்தாட்சி கொடுக்கிறார்கள். 15 ஆனாலும், தாங்கள் விட்டுவந்த இடத்தை அவர்கள் நினைத்துக்கொண்டே இருக்கவில்லை;+ அப்படி நினைத்துக்கொண்டே இருந்திருந்தால், அங்கே திரும்பிப்போக அவர்களுக்கு வாய்ப்பு இருந்திருக்கும். 16 ஆனால், அதைவிட உயர்ந்த இடத்தை, அதாவது பரலோகத்துக்குரிய இடத்தை, பெறுவதற்கு அவர்கள் முயற்சி செய்தார்கள். அதனால், அவர்களுடைய கடவுள் என்று அழைக்கப்படுவதைக் கடவுள் அவமானமாக நினைக்கவில்லை.+ அதற்குப் பதிலாக, அவர்களுக்கென்று ஒரு நகரத்தைத் தயார்படுத்தி வைத்திருக்கிறார்.+
17 விசுவாசத்தால்தான் ஆபிரகாம், தான் சோதிக்கப்பட்டபோது+ ஈசாக்கைப் பலி கொடுக்கும் அளவுக்குப் போனார். வாக்குறுதிகளைச் சந்தோஷத்தோடு பெற்றிருந்த அவர், தன்னுடைய ஒரே மகனைப் பலி கொடுக்க முன்வந்தார்.+ 18 “ஈசாக்கின் வழியாக உருவாகும் சந்ததிதான் உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படும்” என்று அவருக்குச் சொல்லப்பட்டிருந்தாலும் அப்படிச் செய்ய முன்வந்தார்.+ 19 ஏனென்றால், இறந்தவனை மறுபடியும் கடவுளால் உயிரோடு எழுப்ப முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால், மரணத்திடமிருந்து அவனைப் பெற்றுக்கொண்டார்; எதிர்காலத்தில் நடக்கவிருந்த சம்பவத்துக்கு இது ஓர் அடையாளமாக இருந்தது.+
20 விசுவாசத்தால்தான் ஈசாக்கு, எதிர்கால சம்பவங்களைப் பற்றிச் சொல்லி யாக்கோபையும்+ ஏசாவையும் ஆசீர்வதித்தார்.+
21 விசுவாசத்தால்தான் யாக்கோபு, தான் சாவதற்கு முன்பு+ யோசேப்பின் மகன்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தார்,+ பின்பு தன்னுடைய கைத்தடியில் சாய்ந்தபடி கடவுளை வணங்கினார்.+
22 விசுவாசத்தால்தான் யோசேப்பு, சாகும் நிலையில் இருந்தபோது, இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டு வெளியே போவார்கள் என்று சொன்னார். அதோடு, தன்னுடைய எலும்புகளை என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமான* அறிவுரைகளையும்* கொடுத்தார்.+
23 விசுவாசத்தால்தான் மோசேயின் அப்பாவும் அம்மாவும், ராஜாவின் கட்டளைக்குப் பயப்படாமல்,+ அழகான குழந்தையாகிய மோசேயை+ மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள்.+ 24 விசுவாசத்தால்தான் மோசே, வளர்ந்து ஆளானபோது+ பார்வோனுடைய மகளின் மகன்+ என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை; 25 பாவத்தால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களை அனுபவிப்பதைவிட, கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்புறுத்தப்படுவதையே அவர் தேர்ந்தெடுத்தார். 26 ஏனென்றால், எகிப்தின் பொக்கிஷங்களைவிட கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக* இருப்பதால் வரும் அவமானத்தையே உயர்ந்த செல்வமாக நினைத்தார், தனக்குக் கிடைக்கவிருந்த பலன்மேல் கண்களைப் பதிய வைத்தார். 27 விசுவாசத்தால்தான் அவர், ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல்+ எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனார்;+ பார்க்க முடியாதவரைப்+ பார்ப்பதுபோல் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்தார். 28 விசுவாசத்தால்தான் அவர், இஸ்ரவேலர்களின் மூத்த மகன்களைக் கடவுளுடைய தூதன் கொல்லாதபடி* பஸ்காவைக் கொண்டாடினார், வாசல் நிலைக்கால்களில் இரத்தத்தைத் தெளித்தார்.+
29 விசுவாசத்தால்தான் அவர்கள், வறண்ட தரையில் நடப்பதுபோல் செங்கடலில் நடந்து போனார்கள்;+ எகிப்தியர்கள் அதைக் கடக்க முயற்சி செய்தபோது அதில் மூழ்கிப்போனார்கள்.+
30 விசுவாசத்தால்தான், எரிகோ நகரத்தின் மதிலை இஸ்ரவேலர்கள் ஏழு நாட்கள் சுற்றி வந்தபின்பு அது விழுந்தது.+ 31 விசுவாசத்தால்தான் ராகாப் என்ற விலைமகள், உளவாளிகளைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டாள்.+ அதனால், கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அவள் அழியவில்லை.
32 இன்னும் யாரைப் பற்றிச் சொல்வேன்? கிதியோன்,+ பாராக்,+ சிம்சோன்,+ யெப்தா,+ தாவீது,+ சாமுவேல்+ என்பவர்களையும், மற்ற தீர்க்கதரிசிகளையும் பற்றிச் சொல்லிக்கொண்டே போனால் எனக்கு நேரம் போதாது. 33 விசுவாசத்தால்தான் இவர்கள் ராஜ்யங்களைத் தோற்கடித்தார்கள்,+ நீதியை நிலைநாட்டினார்கள், வாக்குறுதிகளைப் பெற்றார்கள்,+ சிங்கங்களின் வாயை அடைத்தார்கள்,+ 34 கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைத் தாக்குப்பிடித்தார்கள்,+ வாளுக்குத் தப்பினார்கள்,+ பலவீனத்தில் பலம் பெற்றார்கள்,+ போர்களில் வல்லவர்களாக ஆனார்கள்,+ எதிரிகளுடைய படைகளைத் தோற்கடித்தார்கள்.+ 35 பெண்கள், இறந்துபோன தங்களுடைய அன்புக்குரியவர்களை உயிர்த்தெழுதலில் பெற்றுக்கொண்டார்கள்.+ வேறு சிலர், அதைவிட மேலான உயிர்த்தெழுதல் கிடைப்பதற்காக, விடுதலை* பெறச் சம்மதிக்காமல் சித்திரவதையைச் சகித்தார்கள். 36 மற்றவர்கள் கேலி செய்யப்பட்டார்கள், முள்சாட்டையால் அடிக்கப்பட்டார்கள், சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்,+ சிறையில் தள்ளப்பட்டார்கள்.+ 37 அதோடு கல்லெறியப்பட்டார்கள்,+ சோதிக்கப்பட்டார்கள், இரண்டாக அறுத்துக் கொல்லப்பட்டார்கள், வாளால் வெட்டப்பட்டார்கள்,+ உபத்திரவங்களின்போது செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போட்டிருந்தார்கள்,+ வறுமையில் வாடினார்கள், உபத்திரவத்தை அனுபவித்தார்கள்,+ கொடுமைக்கு ஆளானார்கள்.+ 38 அப்படிப்பட்டவர்களைப் பெற்றிருக்க இந்த உலகத்துக்கு அருகதை இல்லாமல்போனது; அவர்கள் பாலைவனங்களிலும் மலைகளிலும் அலைந்து திரிந்தார்கள், குகைகளிலும்+ குழிகளிலும் தஞ்சம் புகுந்தார்கள்.
39 அவர்கள் எல்லாரும் தங்களுடைய விசுவாசத்தால் கடவுளிடமிருந்து நற்சாட்சி பெற்றிருந்தாலும் அவர் தந்த வாக்குறுதி நிறைவேறுவதைப் பார்க்கவில்லை. 40 ஏனென்றால், நமக்கு முன்பே அவர்கள் பரிபூரணம் அடையாதபடி, மேலான ஒன்றை நமக்குக் கொடுக்க கடவுள் நினைத்திருந்தார்.+