அதிகாரம் 1
யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
இந்த உலகத்தில், வித்தியாச வித்தியாசமான லட்சியங்களையும் கருத்துகளையும் கொள்கைகளையும் கொண்ட எத்தனையோ மத அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும், வியாபார அமைப்புகளும், சமூக அமைப்புகளும் இருக்கின்றன. ஆனால், ஒரு அமைப்பு மட்டும் அவை எல்லாவற்றிலிருந்தும் வித்தியாசப்பட்டு தனித்து நிற்கிறது. அதுதான் யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பு. அவர்கள் எல்லாவற்றையும் பைபிள் சொல்கிறபடி செய்வதால், அவர்களுடைய அமைப்பு மற்ற அமைப்புகளிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது.
2 நீங்கள் யெகோவாவின் அமைப்பில் ஒருவராக ஆகியிருப்பது சந்தோஷமான விஷயம். கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு, அதை இப்போது செய்தும் வருகிறீர்கள். (சங். 143:10; ரோ. 12:2) உலகம் முழுவதும் இருக்கிற அன்பான சகோதரர்கள் எல்லாரோடும் சேர்ந்து, ஒரு பிரஸ்தாபியாக சுறுசுறுப்போடு சேவை செய்து வருகிறீர்கள். (2 கொ. 6:4; 1 பே. 2:17; 5:9) அதனால், கடவுளுடைய வார்த்தையில் வாக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அளவில்லாத ஆசீர்வாதத்தையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறீர்கள். (நீதி. 10:22; மாற். 10:30) யெகோவா விரும்புவதை இப்போதே உண்மையோடு செய்வதால், என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு அருமையான எதிர்காலத்துக்குத் தயாராகிறீர்கள்.—1 தீ. 6:18, 19; 1 யோ. 2:17.
3 நம்முடைய மகத்தான படைப்பாளருக்கு உலகளாவிய ஓர் அமைப்பு இருக்கிறது. இது ஒரு தேவராஜ்ய அமைப்பு. அதாவது, எல்லாருக்கும் தலைவரான யெகோவாவினால் ஆளப்படுகிற தனிச்சிறப்பான ஓர் அமைப்பு. அவர்மீது நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவர்தான் நம்முடைய நீதிபதி, நமக்குச் சட்டம் கொடுப்பவர், நம்முடைய ராஜா. (ஏசா. 33:22) அவர் ஒழுங்கின் கடவுள். அதனால், ‘அவருடைய சக வேலையாட்களாக’ சேவை செய்து அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை அவர் செய்திருக்கிறார்.—2 கொ. 6:1, 2.
4 சாத்தானுடைய உலகத்துக்கு முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிற இந்தக் காலத்தில், ராஜாவாக நியமிக்கப்பட்டிருக்கிற கிறிஸ்து இயேசுவின் தலைமையில் நாம் மும்முரமாகச் சேவை செய்கிறோம். (ஏசா. 55:4; வெளி. 6:2; 11:15) தன்னைப் பின்பற்றுகிறவர்கள், தான் இந்தப் பூமியில் செய்ததைவிட பெரிய செயல்களைச் செய்வார்கள் என்று இயேசுவே சொல்லியிருந்தார். (யோவா. 14:12) எப்படியென்றால், அவரைப் பின்பற்றுகிறவர்கள் ரொம்பக் காலத்துக்கு ஊழிய வேலையைச் செய்வார்கள், அதிகமான ஆட்களும் இதில் கலந்துகொள்வார்கள்; இப்படி, அவர் செய்ததைவிட இன்னும் அதிகமான இடங்களில் பிரசங்கிப்பார்கள். சொல்லப்போனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பூமியின் எல்லைகள்வரை அவர்கள் பிரசங்கிப்பார்கள்.—மத். 24:14; 28:19, 20; அப். 1:8.
5 இது ஏற்கெனவே நிறைவேறி வருகிறது. இருந்தாலும், நல்ல செய்தியை அறிவிக்கிற இந்த வேலை, யெகோவா குறித்திருக்கிற நேரத்தில் முடிவுக்கு வரும் என்று இயேசு தெளிவாகச் சொல்லியிருந்தார். யெகோவாவின் படுபயங்கரமான மகா நாள் பக்கத்தில் வந்துவிட்டது என்பதைக் கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற தீர்க்கதரிசனங்கள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன.—யோவே. 2:31; செப். 1:14-18; 2:2, 3; 1 பே. 4:7.
கடவுள் எதிர்பார்க்கிற விஷயங்களைச் செய்ய நாம் இன்னும் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். அதற்கு, கடவுளுடைய அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்பதை நாம் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்
6 முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிற இந்தக் காலத்தில், யெகோவாவுடைய விருப்பம் என்னவென்று நாம் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். அதனால், கடவுள் எதிர்பார்க்கிற விஷயங்களைச் செய்ய நாம் இன்னும் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். அதற்கு, கடவுளுடைய அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்பதை நாம் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்; அந்த அமைப்புக்கு முழு ஆதரவைக் கொடுக்க வேண்டும். கடவுளுடைய அமைப்பு, அவருடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட வேத வார்த்தையில் இருக்கிற நியமங்கள், கட்டளைகள், சட்டங்கள், ஆணைகள், விதிமுறைகள், போதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் செயல்படுகிறது.—சங். 19:7-9.
7 பைபிளின் அடிப்படையில் கொடுக்கப்படுகிற அந்த வழிநடத்துதலுக்கு யெகோவாவின் மக்கள் கீழ்ப்படியும்போது, அவர்களால் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருந்து அவருக்குச் சேவை செய்ய முடிகிறது. (சங். 133:1; ஏசா. 60:17; ரோ. 14:19) உலகம் முழுவதும் இருக்கிற நம்முடைய சகோதரர்களை ஒன்றாக இணைப்பது அன்புதான்! நாம் அன்பைக் காட்டுவதால், நம்முடைய சகோதர சகோதரிகளிடம் அன்பாக நடந்துகொள்கிறோம். (யோவா. 13:34, 35; கொலோ. 3:14) இப்படி ஒற்றுமையாக இருக்க யெகோவா நமக்கு உதவி செய்திருப்பதால், அவருடைய அமைப்பின் பரலோக பாகத்தோடு சேர்ந்து நம்மால் சேவை செய்ய முடிகிறது.
யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகம்
8 தீர்க்கதரிசிகளான ஏசாயா, எசேக்கியேல், தானியேல் ஆகியோர் யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகத்தைத் தரிசனங்களில் பார்த்தார்கள். (ஏசா., அதி. 6; எசே., அதி. 1; தானி. 7:9, 10) அதேபோல், அப்போஸ்தலன் யோவானும் இந்தப் பரலோக பாகத்தைத் தரிசனத்தில் பார்த்தார். அதைப் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகத்தில் நமக்காகப் பதிவு செய்திருக்கிறார். மகிமையான சிம்மாசனத்தில் யெகோவா உட்கார்ந்திருப்பதையும், அவரைச் சுற்றி தேவதூதர்கள் இருப்பதையும் யோவான் பார்த்தார். “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று அந்தத் தேவதூதர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். (வெளி. 4:8) அதோடு, “சிம்மாசனத்துக்கு . . . நடுவில் ஓர் ஆட்டுக்குட்டி நிற்பதை,” அதாவது கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்து நிற்பதை, யோவான் பார்த்தார்.—வெளி. 5:6, 13, 14; யோவா. 1:29.
9 யெகோவா ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதைக் காட்டும் இந்தத் தரிசனத்திலிருந்து, இந்த அமைப்பின் தலைவர் அவர்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவரைப் பற்றியும் அவருடைய உயர்ந்த நிலையைப் பற்றியும் 1 நாளாகமம் 29:11, 12 இப்படிச் சொல்கிறது: “யெகோவாவே, நீங்கள் மகத்துவமும் வல்லமையும் அழகும் மாண்பும் கம்பீரமும் உள்ளவர். பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாமே உங்களுக்குத்தான் சொந்தம். யெகோவாவே, ஆட்சி உங்களுடையது. நீங்கள்தான் எல்லாருக்கும் தலைவர். நீங்கள்தான் செல்வத்தையும் புகழையும் தருகிறீர்கள். எல்லாவற்றையும் ஆட்சி செய்கிறீர்கள். உங்கள் கையில் பலமும் மகா வல்லமையும் இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் உங்களால் உயர்த்த முடியும்; யாருக்கு வேண்டுமானாலும் பலம் தர முடியும்.”
10 யெகோவாவின் சக வேலையாளாக இருக்கிற இயேசு கிறிஸ்துவும் பரலோகத்தில் ஓர் உயர்ந்த நிலையில் இருக்கிறார். அவருக்கு அதிகமான அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், கடவுள் “எல்லாவற்றையும் அவருடைய காலடியில் கீழ்ப்படுத்தி, சபை சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் தலையாக அவரை நியமித்தார்.” (எபே. 1:22) இயேசுவைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: “கடவுள் அவரை மேலான நிலைக்கு உயர்த்தினார். மற்ற எல்லா பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்குக் கொடுத்தார். பரலோகத்திலும் பூமியிலும் மண்ணுக்குள்ளும் இருக்கிற எல்லாரும் இயேசுவின் பெயரில் மண்டிபோட வேண்டும் என்பதற்காகவும், இயேசு கிறிஸ்துதான் எஜமான் என்று எல்லாரும் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்தார். இவையெல்லாம், பரலோகத் தகப்பனாகிய கடவுளுடைய மகிமைக்காகத்தான்.” (பிலி. 2:9-11) அதனால், நீதியுள்ள தலைவரான இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலை நாம் முழுமையாக நம்பலாம்.
11 தானியேல் தீர்க்கதரிசி ஒரு தரிசனத்தில் பரலோகத்தைப் பார்த்தார். அதில், யுகம் யுகமாக வாழ்கிறவர் தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார். தேவதூதர்கள் “ஆயிரமாயிரம் பேர் அவருக்குச் சேவை செய்தார்கள், கோடானுகோடி பேர் அவருக்கு முன்னால் நின்றார்கள்.” (தானி. 7:10) ஒரு படையைப் போல இருக்கிற இந்தத் தேவதூதர்களை, “பரிசுத்த சேவை செய்கிற தூதர்கள் . . . மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்ய அனுப்பப்படுகிறவர்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 1:14) இந்தத் தேவதூதர்கள் எல்லாருக்கும், கடவுளுடைய அமைப்பில் ஒவ்வொரு விதமான பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.—கொலோ. 1:16.
12 யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிற இந்த விஷயங்களை யோசித்துப் பார்க்க நாம் நேரம் ஒதுக்கும்போது, ஏசாயாவைப் போல நாமும் உணருவோம். ‘யெகோவா மிகவும் உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதையும்,’ ‘சேராபீன்கள் அவரைச் சூழ்ந்து நின்றுகொண்டிருப்பதையும்’ ஒரு தரிசனத்தில் ஏசாயா பார்த்தார். உடனே அவர், “ஐயோ, என் கதி அவ்வளவுதான்! நான் செத்தவனைப் போல ஆகிவிட்டேன். ஏனென்றால், ராஜாவாகிய பரலோகப் படைகளின் யெகோவாவைப் பார்த்துவிட்டேன். அதுமட்டுமல்ல, என் உதடுகள் அசுத்தமாக இருக்கின்றன. அசுத்தமான உதடுகள் உள்ள ஜனங்களோடு நான் வாழ்கிறேன்” என்று சொன்னார். யெகோவாவுடைய அமைப்பு எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்துகொண்டபோது ஏசாயா அசந்துபோனார், தான் எந்தளவு தாழ்ந்தவன் என்பதை உணர்ந்துகொண்டார். இந்தத் தரிசனம் அவருடைய மனதை ரொம்பவே தொட்டது. அதனால், யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்திகளை அறிவிக்கிற ஒரு விசேஷ வேலைக்கான அழைப்பு பரலோகத்திலிருந்து வந்தபோது, “இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!” என்று ஏசாயா சொன்னார்.—ஏசா. 6:1-5, 8.
13 யெகோவாவின் அமைப்பைப் பற்றி அவருடைய மக்களாகிய நாம் நன்றாகப் புரிந்துகொள்ளும்போது, அதன்மீது இருக்கிற நன்றியுணர்வு நமக்கு அதிகமாகிறது. இது, ஏசாயாவைப் போலவே செயல்பட நம்மைத் தூண்டுகிறது. அமைப்பு முன்னேற முன்னேற, நாமும் அதனோடு சேர்ந்து முன்னேற கடினமாக உழைக்கிறோம். இப்படி, யெகோவாவின் அமைப்புமீது நம்பிக்கை வைத்திருப்பதைச் செயலில் காட்ட நாம் முயற்சி செய்கிறோம்.
யெகோவாவின் அமைப்பு முன்னேறுகிறது
14 எசேக்கியேல் புத்தகத்தின் முதல் அதிகாரத்தில், பிரமாண்டமான பரலோக ரதத்தில் யெகோவா சவாரி செய்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பிரமாண்டமான இந்த ரதம், யெகோவாவுடைய அமைப்பின் பார்க்க முடியாத பாகத்தைக் குறிக்கிறது. அவர் இந்த அமைப்பை அன்பாக வழிநடத்துகிறார், தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற அதைப் பயன்படுத்துகிறார். இந்த விதத்தில்தான், யெகோவா இந்த ரதத்தில் சவாரி செய்கிறார்.—சங். 103:20.
15 இந்த ரதத்தின் ஒவ்வொரு சக்கரத்துக்குள்ளும் ஒரு சக்கரம் இருக்கிறது. அதாவது, அந்தச் சக்கரத்தின் உள்ளே குறுக்காக அதே அளவில் மற்றொரு சக்கரம் இருக்கிறது. அதனால்தான், ரதத்தினால் “நான்கு திசைகளிலும் போக” முடிகிறது. (எசே. 1:17) இந்தச் சக்கரங்களால் சட்டென திசையை மாற்றிக்கொள்ள முடியும். ஆனாலும், இந்த ரதம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமலோ, புத்திக்கூர்மையுள்ள ஓட்டுனர் இல்லாமலோ ஓடிக்கொண்டில்லை. தன்னுடைய அமைப்பு அதன் இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் போக யெகோவா அனுமதிப்பதில்லை. “கடவுளுடைய சக்தி எங்கே போகத் தூண்டியதோ அங்கே [சக்கரங்கள்] போயின” என்று எசேக்கியேல் 1:20 சொல்கிறது. இதிலிருந்து, யெகோவாதான் தன்னுடைய சக்தியின் மூலமாக, தான் விரும்புகிற திசையில் தன்னுடைய அமைப்பை வழிநடத்துகிறார் என்று தெரிகிறது. அப்படியானால், ‘நான் அந்த அமைப்போடு சேர்ந்து போகிறேனா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்.
16 வெறுமனே கூட்டங்களுக்குப் போவதாலும் ஊழியத்தில் கலந்துகொள்வதாலும் நாம் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து போகிறோம் என்று சொல்லிவிட முடியாது. முன்னேற்றமும் ஆன்மீக வளர்ச்சியும் இருந்தால்தான் நாம் அமைப்போடு சேர்ந்து போகிறோம் என்று அர்த்தம். ‘மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்’; அதோடு, அமைப்பிடமிருந்து சமீபத்தில் வெளிவந்த தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். (பிலி. 1:10; 4:8, 9; யோவா. 17:3) ஒரு அமைப்பில் இருக்கிற எல்லாரும் ஒன்றாகச் செயல்படும்போது, ஒத்துழைப்பு கொடுக்கும்போது அது ஒழுங்காகச் செயல்படும் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். தன்னுடைய வேலையைச் செய்து முடிப்பதற்காக யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற நேரம், சக்தி, திறமை, பொருள்கள் ஆகியவற்றை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். யெகோவாவின் பரலோக ரதத்தோடு சேர்ந்து நாம் போகும்போது, நாம் அறிவிக்கிற செய்திக்கு ஏற்றபடி நம்முடைய வாழ்க்கையும் இருக்கும்.
17 யெகோவாவின் அமைப்பு தரும் உதவியோடு, அவருடைய விருப்பத்தைச் செய்வதில் நாம் தொடர்ந்து முன்னேறுகிறோம். பரலோக ரதத்தை யெகோவாதான் ஓட்டுகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த அமைப்போடு சேர்ந்து போவதன்மூலம், யெகோவாமீது மதிப்பு வைத்திருப்பதைக் காட்டுகிறோம், நம்முடைய கற்பாறையான அவர்மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறோம். (சங். 18:31) “யெகோவா தன்னுடைய மக்களுக்குப் பலம் தருவார். யெகோவா தன்னுடைய மக்களுக்குச் சமாதானம் அருளுவார்” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது. (சங். 29:11) இன்று யெகோவாவின் அமைப்பில் ஒருவராக நாம் இருப்பதால், தன்னுடைய மக்களுக்கு அவர் தருகிற பலம் நமக்கும் கிடைக்கிறது, தன்னுடைய மக்களுக்கு அவர் தருகிற சமாதானத்தையும் நாம் அனுபவிக்கிறோம். யெகோவா விரும்புவதை இப்போதும் எப்போதும் செய்யும்போது அளவில்லாத ஆசீர்வாதங்களை நாம் தொடர்ந்து அனுபவிப்போம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!