மூப்பர்களே, உங்களுடைய மேய்க்கும் உத்தரவாதத்தை பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றுங்கள்
“உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை மேய்ப்பீர்களாக.”—1 பேதுரு 5:2.
1. கடவுளால் அங்கீகரிக்கப்படும் மனிதர்களை அடையாளமாக குறிப்பிடுவதற்கு ஆடுகள் பயன்படுத்தப்படுவது ஏன் அத்தனை பொருத்தமானதாக இருக்கிறது?
யெகோவா தேவனுக்குப் பிரியமாயிருக்கும் மனிதர்களை அடையாளமாக குறிப்பிட செம்மறி ஆடுகள் பயன்படுத்தப்படுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! ஆடுகள், மேய்ப்பனின் சத்தத்தைக் கேட்டு, அவனை உடனடியாக பின்தொடர்ந்து செல்லும், எளிதில் பயிற்றுவிக்கப்படக்கூடிய உயிரினங்களாக இருக்கின்றன. அதே விதமாகவே செம்மறி ஆடுகளைப் போன்ற கடவுளுடைய ஜனங்களும் நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவால் வழிநடத்தப்பட தங்களை அனுமதிக்கிறார்கள். அவர்கள் அவரை அறிந்திருக்கிறார்கள். அவருடைய சத்தத்துக்கு செவிகொடுத்து, அவருடைய தலைமையை சந்தோஷத்தோடே அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். (யோவான் 10:11-16) நிச்சயமாகவே ஒரு நல்ல மேய்ப்பனில்லாவிட்டால், சொல்லலர்த்தமான செம்மறி ஆடுகள் விரைவில் பயங்கொண்டு உதவியற்றதாகிவிடுகின்றன. ஆகவே இயேசு கிறிஸ்து “மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருந்த ஜனங்கள் மீது மனதுருகினதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.—மத்தேயு 9:36.
2. அன்பற்ற “இஸ்ரவேலின் மேய்ப்பரின்” கீழ் துன்பம் அனுபவித்த ஆடுகளைப் போன்றவர்களை யெகோவா எவ்விதமாக கருதினார்?
2 வேதாகமத்தில் ஆடுகள் என்பதாக தனிப்பட குறிப்பிடப்படும் நேர்மையான இருதயமுள்ள மனிதர்களின் ஆவிக்குரிய நலனில் யெகோவா தேவன் ஆழ்ந்த அக்கறையுள்ளவராக இருக்கிறார். உதாரணமாக, ஆடுகளை கவனியாமல், தங்களைத் தாங்களே போஷித்துக்கொண்டிருந்த பொறுப்புள்ள மனிதர்களான “இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு” எதிராக சாபத்தை கடவுள் எசேக்கியேல் தீர்க்கதிசியின் மூலமாக அறிவித்தார். ஆனால் ஆடுகளைப் போன்றவர்களை, உதவியில்லாமல் துன்பம் அனுபவிக்க யெகோவா அனுமதிக்கப்போவதில்லை. ஏனென்றால் அவர் இவ்விதமாகச் சொன்னார்: “நான் காணாமற்போனதைத் தேடி தூரத்துண்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல் கொண்டதைத் திடப்படுத்துவேன்.”—எசேக்கியேல் 34:2-16.
3. இயேசு கிறிஸ்து எவ்விதமாக ஆடுகளுக்கு அக்கறையை காண்பித்திருக்கிறார்?
3 நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்து ஆடுகளைப் போன்றவர்கள் மீது அதேவிதமாக அக்கறையுள்ளவராக இருக்கிறார். ஆகவே பரலோகத்துக்கு ஏறிப்போவதற்கு முன்பாக, ஆடுகள் சரியான கவனிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தம்முடைய விருப்பத்தை இயேசு வெளிப்படுத்தினார். அவர் அப்போஸ்தலனாகிய பேதுருவிடம், ‘என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக, என் ஆடுகளை மேய்ப்பாயாக, என் ஆடுகளை மேய்ப்பாயாக’ என்று சொன்னார். (யோவான் 21:15-17) இயேசு அன்பான கவனிப்பை ஆடுகள் தொடர்ந்து பெற்றுக்கொள்வதை உறுதிசெய்ய “கிறிஸ்துவின் சரீர” வளர்ச்சிக்காக சிலரை “மேய்ப்பராக” கொடுத்தார்.—எபேசியர் 4:11, 12.
4. அப்போஸ்தலனாகிய பவுல், அபிஷேகம் பண்ணப்பட்ட “மூப்பரை” என்ன செய்யும்படியாக உற்சாகப்படுத்தினான்?
4 கடவுளும் கிறிஸ்துவும் ஆடுகள் போன்றவர்களிடமாக ஆழ்ந்த அன்பையும் அக்கறையையும் உடையவர்களாக இருப்பதன் காரணமாக, கடவுளுடைய ஆடுகளின் உதவி மேய்ப்பனாக இருப்பது மிகவும் பொறுப்புள்ள ஒரு வேலையாக இருக்கிறது. ஆகவே அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலிருந்த “மூப்பரை” தகுதியான கவனத்தைச் செலுத்தி “தேவனுடைய சபையை மேய்க்கும்”படியாக உற்சாகப்படுத்தினான். (அப்போஸ்தலர் 20:17, 28) ஆகவே, நியமிக்கப்படும் மூப்பர்கள் இந்த பொறுப்பை எவ்விதமாக சரிவர கவனித்துக் கொள்ளலாம்?
மூப்பர்கள் அறிவுரைகளை பெற்றுக்கொள்கிறார்கள்
5. பேதுரு உடன் கண்காணிகளுக்கு என்ன புத்திமதியைக் கொடுத்தான்?
5 இயேசுவின் ஆடுகளை போஷிக்கும்படியாக எதிர்பார்க்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுரு உடன் கண்காணிகளுக்கு இவ்விதமாகச் சொன்னான்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும் சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும் கண்காணிப்புச் செய்யுங்கள்.” (1 பேதுரு 5:1-3) பரிசுத்த ஆவியினால் நியமிக்கப்படும் மூப்பர்கள் எவ்விதமாக இந்த புத்திமதிக்கு இணங்க திருப்திகரமாக செயலாற்ற முடியும் என்பதை நாம் பார்ப்போம்.
6. என்ன மனநிலையோடு மூப்பர்கள் “தேவனுடைய மந்தையை” மேய்க்க வேண்டும்?
6 பேதுரு உடன் மூப்பர்களை இவ்விதமாக உற்சாகப்படுத்தினான்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை, நீங்கள் மேய்த்து கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாய் கண்காணிப்புச் செய்யுங்கள்.” ஆவிக்குரிய மேய்ப்பர்களாக சேவிக்க சிலாக்கியம் பெற்றிருப்பவர்கள் ஆடுகளை கவனித்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டவர்களாக உணர்ந்து அரை மனதுடன் அவ்விதமாகச் செய்யக்கூடாது. இது ஏதோ ஒருவிதமான அடிமை வேலைப்போன்று அல்லது மந்தையை மேய்க்கும்படியாக மற்றவர்கள் இவர்களை வற்புறுத்துவதுபோல அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டவர்களாக உணரக்கூடாது. மாறாக, மூப்பர்கள் மனப்பூர்வமான ஆவியோடு சேவை செய்ய வேண்டும். (சங்கீதம் 11:3) மற்றவர்களுக்கு நன்மை செய்ய ஒரு நபர் மனமுள்ளவராக இருக்கும்போது, அவர் பொதுவாக முழு இருதயத்தோடும், தன்னை வருத்திக்கொண்டும், மற்றவர்களுடைய நலனுக்காக வலிய தானாகச் சென்று உதவி செய்கிறவராகவும் இருக்கிறார். மனப்பூர்வமாகச் செய்யும் மூப்பர், தன்னுடைய நேரத்தையும் சக்திகளையும் தாராளமாக கொடுக்கிறவராக இருக்கிறார். சில சமயங்களில் ஆடுகள் வழித்தவறி போய்விடக்கூடும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். செம்மறி ஆடுகளைப் போன்றவர்களிடமாக கடவுள் காண்பிக்கும் அக்கறையை பின்பற்றுகிறவராய், அவர் அவர்களுக்கு உதவி செய்ய விருப்பமுள்ளவராக இருக்கிறார். ஏன், வழித்தவறி சென்றுவிட்ட இஸ்ரவேலர்களுக்கு யெகோவாவின் அக்கறை அத்தனை அதிகமாக இருந்ததன் காரணமாக அவர் இவ்விதமாகச் சொன்னார்: “என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.”—ஏசாயா 65:1.
7, 8. (எ) அவலட்சணமான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாக இல்லாமல் மேய்க்கும் வேலையை நிறைவேற்றுவது எதை அர்த்தப்படுத்துகிறது? ஆவலோடு சேவிப்பது எதை செய்வதை அர்த்தப்படுத்துகிறது?
7 மேய்க்கும் வேலை “அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடு” செய்யப்பட வேண்டும் என்பதாக பேதுரு சொன்னான். நியமிக்கப்பட்ட மூப்பர்கள் ஆடுகளுக்கு சுமையாக இருக்க விரும்புவதில்லை. அதுவே அப்போஸ்தலனாகிய பவுலின் மனநிலையாக இருந்தது. ஏனென்றால் தெசலோனிக்கேயாவிலிருந்த கிறிஸ்தவர்களிடம் அவன் இவ்விதமாகச் சொன்னான்: “சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலை செய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.” அவன் மேலுமாக இவ்விதமாக அவர்களுக்கு நினைப்பூட்டினான்: “நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும் ஒருவனிடத்திலும் இலவசமாய்க் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலை செய்து சாப்பிட்டோம்.”—1 தெசலோனிக்கேயர் 2:9; 2 தெசலோனிக்கேயர் 3:7, 8.
8 அதே விதமாகவே, இன்று கடவுளுடைய மந்தையின் உண்மையுள்ள மேய்ப்பர்கள், ஆடுகளிடமிருப்பதை பேராசையுடன் இச்சிப்பதோ அல்லது அவர்களுடைய செலவில் அநியாயமாக லாபத்தை சம்பாதிக்க முயற்சிப்பதோ இல்லை. (லூக்கா 12:13-15; அப்போஸ்தலர் 20:33-35) கண்காணிகளாக தகுதிப் பெறுகிறவர்கள், ‘இழிவான ஆதாயத்தை இச்சியாதவர்களாக’ இருக்க வேண்டும் என்பதாக பவுல் காண்பித்தான். (தீத்து 1:7) மாறாக அவர்கள் தங்களுடைய வேலையில் உற்சாகமான அக்கறையை கொண்டவர்களாய் அவர்களுடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆடுகளின் நன்மைக்காக முயற்சி செய்கிறவர்களாய் ஆவலோடு சேவிக்க வேண்டும். (பிலிப்பியர் 2:4) இவ்விதமாக, யெகோவா தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் காண்பித்த அதேவிதமான தன்னலமற்ற அக்கறையை இந்த மேய்ப்பர்கள் காண்பிக்கிறார்கள்.
9. ஒரு கிறிஸ்தவ மேய்ப்பன் ஏன் கடவுளுடைய சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளக்கூடாது?
9 மூப்பர்கள், யெகோவாவின் ஜனங்களை “சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாக, கண்காணிப்புச் செய்ய வேண்டும்” என்பதாகவும்கூட பேதுரு சொன்னான். அன்புள்ள ஒரு மேய்ப்பன் உயர்வான ஒரு வெளித் தோற்றத்தின் மூலமாகவும் ஆடுகளை இறுமாப்பாய் ஆளுவதன் மூலமாகவும் தன்னுடைய அதிகாரத்தை துர்பிரயோகம் செய்யாதபடிக்கு கவனமுள்ளவனாக இருக்கிறான். இறுமாப்பான ஆவி கிறிஸ்தவத்துக்கு எதிரானதாகும். யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புகிற அனைவராலும் இது தவிர்க்கப்பட வேண்டும். நீதிமொழிகள் 21:4 சொல்லுகிறது: “மேட்டிமையான பார்வையும் அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.” இயேசு தம்மை பின்பற்றியவர்களிடம் சொன்னார்: “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும் பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால் அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.” (மத்தேயு 20:25-27) ஆம், மந்தையை உண்டுபண்ணுகிறவர்கள், கடவுளுடைய ஆடுகள் என்பதையும் அவர்கள் கனிவற்ற விதத்தில் கையாளப்படக்கூடாது என்பதையும் மூப்பர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
10. (எ) எசேக்கியேலின் நாளின் ஜனங்களின் மேய்ப்பர்களில் சிலர் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? (பி) உண்மையுள்ள கண்காணிகள் எவ்விதமாக மந்தைக்கு சிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்?
10 எசேக்கியேலின் நாளில், தங்களையே பேணி பாதுகாத்துக்கொண்ட மேய்ப்பர்களுக்கு யெகோவா இவ்விதமாகச் சொன்னார்: “நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல் கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக் கொண்டுவராமலும் காணாமற்போனவைகளைத் தேடாமலும்போய், பலாத்காரமும், கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.” மேலுமாக, கடூரமான மேய்ப்பர்கள் “பலவீனமாயிருக்கிறவைகளையெல்லாம் புறம்பாக்கி சிதறப்” பண்ணினார்கள் என்பதாக கடவுள் சொன்னார். (எசேக்கியேல் 34:4, 20, 21) ஆனால் இன்று “தேவனுடைய மந்தை”யின் அன்புள்ள மேய்ப்பர்களின் விஷயத்தில் இது இவ்விதமாக இல்லை. அவர்கள் தங்களுடைய அதிகாரத்தைக் குறித்து பெருமையடித்துக்கொள்ளாமலும் ஆடுகளில் ஒன்றையும் இடறலடையச் செய்யாதிருக்கவும் கவனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். (மாற்கு 9:42 ஒப்பிடவும்) மாறாக, இந்த மூப்பர்கள் அன்புள்ள உதவியையும் ஊக்குவிப்பையும் அளிக்கிறார்கள். மேலுமாக அவர்கள் ஜெப சிந்தையோடு யெகோவாவின் மீது சார்ந்திருந்து, “வார்த்தையிலும் நடக்கையிலும் அன்பிலும், விசுவாசத்திலும், கற்பிலும்,” மாதிரிகளாக இருப்பதற்கு கடினமாக உழைக்கிறார்கள். (1 தீமோத்தேயு 4:12) இதன் காரணமாக, ஆடுகள் அன்புள்ள, கடவுள் பயமுள்ள மேய்ப்பர்களால் தாங்கள் கவனித்துக்கொள்ளப்படுவதை அறிந்தவர்களாய், மனநிறைவுடன் பாதுகாப்பாக உணருகிறார்கள்.
ஆபத்துக்களை ஆடுகள் எதிர்படுகின்றன
11. ஆடுகள் பாதுகாப்பாக உணரும் பொருட்டு நவீன நாளைய மேய்ப்பர்கள் ஏன் தேவனுடைய மந்தையை அவ்வளவு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்?
11 மந்தையை பாதுகாப்பதற்கு மூப்பர்கள் கொடுக்கும் மிகச் சிறந்த கவனிப்பினால் உறுதியளிக்கப்பட்டவர்களாக, செம்மறியாடுகளைப் போன்ற ஆட்கள் இன்று பாதுகாப்பாக உணருவது அவசியமாயிருக்கிறது. (ஏசாயா 32:1, 2) இது விசேஷமாக அவசியமாயிருக்கிறது. ஏனென்றால், “கடைசி நாட்களை” தனிப்படுத்திக் காட்டும் இந்த “கொடிய காலங்களில்” கிறிஸ்தவர்கள் அநேக அபாயங்களை எதிர்படுகிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-5) சங்கீதக்காரனாகிய தாவீதும்கூட ஆபத்துக்களை எதிர்ப்பட்டான். ஆனால் அவனால் இவ்விதமாகச் சொல்ல முடிந்தது: “யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார். . . . நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்.” (சங்கீதம் 23:1-4) தேவனுடைய மந்தையின் நவீன நாளைய மேய்ப்பர்கள், தாவீதைப் போல, செம்மறியாடுகளைப் போன்ற இவர்கள் யெகோவாவோடு மிகவும் நெருங்கியிருப்பதாக உணரும் வகையில் ஆடுகளை அவ்வளவு பாதுகாப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும். கடவுளுடைய அமைப்பின் பாகமாகவும்கூட அவர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும்.
12. இன்றைய நாளின் என்ன மனசாய்விலிருந்து ஆடுகள் பாதுகாக்கப்படுவது அவசியமாயிருக்கிறது? இந்த விஷயத்தில் மூப்பர்கள் எவ்விதமாக உதவியாக இருக்கலாம்?
12 கட்டுப்பாடற்ற ஒழுக்கங்கெட்ட நடத்தையினிடமாக இன்றைய மனச்சாய்வு தேவனுடைய மந்தையிலிருப்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அபாயமாக இருக்கிறது. தொலைக்காட்சி மூலமாக இருந்தாலும்சரி, மற்ற வழிமுறைகளின் மூலமாக இருந்தாலும்சரி, மொத்தத்தில் இன்றைய பொழுதுபோக்குகளின் காரணமாக, அநேக ஆட்கள் கடவுளுடைய வார்த்தையில் அறிவிக்கப்பட்டிருக்கும் தராதரங்களுக்கு நேர் எதிர்மாறான வாழ்க்கை பாணியில் வாழ்ந்து வருகிறார்கள்.. இன்று, இந்த உலகின் மிக மோசமான ஒழுக்கங்கெட்ட நடத்தையோடுகூட, எதுவும் சரி என்ற மனநிலை, சபையினுள்ளே கொடுக்கப்படும் வேதப்பூர்வமான புத்திமதியினால் எதிர்த்து தடை செய்யப்படுவது அவசியமாக இருக்கிறது. ஆகவே ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், பைபிள் என்ன போதிக்கிறது என்பதை மந்தையின் மேய்ப்பர்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். மேலுமாக, யெகோவாவின் ஊழியத்துக்கு சுத்தமுள்ளவர்களாக தங்களைக் காத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை ஆடுகளுக்கு முன்பாக அவர்கள் வைக்க வேண்டும்.—தீத்து 2:13, 14.
13. (எ) என்ன ஆபத்துக்கு எதிராக யூதாவின் கடிதம் ஆரோக்கியமான புத்திமதிகளை கொடுக்கிறது? (பி) விசுவாச துரோகிகளின் சம்பந்தமாக, மூப்பர்கள் என்ன நிலைநிற்கையை எடுக்க வேண்டும்?
13 விசுவாச துரோகிகளிடமிருந்தும் ஆபத்துக்கள் இருக்கின்றன. 19 நூற்றாண்டுகளுக்கு முன்பாக பொய் போதகர்களாக இருந்த ஒரு சில “பக்தியற்றவர்கள்” சபையினுள் நுழைந்துவிட்டதை நினைவுபடுத்திப் பாருங்கள். இவர்கள் “தண்ணீருக்கு கீழே மறைந்திருக்கிற பாறைகளாக” தங்களைத் தாங்களே மேய்த்துக்கொண்ட பொய் மேய்ப்பர்களாக பிரிவினைகளை உண்டுபண்ணிக் கொண்டிருந்த மிருகத்தனமான மனிதர்களாக, ஆவிக்குரிய தன்மையற்றவர்களாக இருந்தார்கள். யூதாவின் கடிதம், மூப்பர்களுக்கும் உண்மையுள்ள அனைவருக்கும் “விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராடு”வதற்கு உதவிய ஆரோக்கியமான புத்திமதிகளை கொடுத்தது. (யூதா 3, 4, 12, 19) பிரிவினைகளை உண்டுபண்ண நாடும் எவருடைய விஷயத்தின் சம்பந்தமாகவும் மூப்பர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. ஏனென்றால் பவுல் இவ்விதமாக எழுதினான்: “நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலக வேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.” (ரோமர் 16:17) ஆகவே, இவர்களிடமிருந்து அல்லது ‘ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு வரும் மற்ற ஓநாய்களிடமிருந்து’ மந்தையை பாதுகாக்கும் பொறுப்பு மேய்ப்பர்களுடையதாக இருக்கிறது.—மத்தேயு 7:15.
மற்ற வழிகளில் ஆடுகளுக்கு உதவி செய்தல்
14, 15. ஒருவரையொருவர் தயவற்ற விதமாக நடத்திக்கொள்ளும் உடன் விசுவாசிகளுக்கு எவ்விதமாக மூப்பர்கள் உதவி செய்யக்கூடும்?
14 “தேவனுடைய மந்தை”யை மேய்ப்பது, சபையினுள்ளே எழக்கூடிய பல்வேறு பிரச்னைகளில் ஆடுகளுக்கு உதவி செய்வதை தேவைப்படுத்தலாம். சில சமயங்களில், ஆடுகள் ஆடுகளோடும்கூட போட்டியிட ஆரம்பிக்கலாம். சிறிய சம்பவங்களின் காரணமாக சிலர் ஒருவரையொருவர் தயவற்ற விதமாக நடத்த ஆரம்பிக்கலாம். இவர்கள் ஒருவரையொருவர் பழித்தூற்றி, கடைசியாக யெகோவாவின் ஊழியத்தில் அவர்களுடைய முன்னாள் நண்பர்களோடு கூட்டுறவுக்கொள்வதை நிறுத்திவிடலாம். இது அவர்களுடைய சொந்த ஆவிக்குரிய கேட்டுக்கே வழிநடத்துகிறது.—நீதிமொழிகள் 18:1.
15 இதுபோன்ற உடன் விசுவாசிகளுக்கு உதவி செய்ய ஆவிக்குரிய மேய்ப்பர்கள் அதிக விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக ஒருவரையொருவர் பழிதூற்றுவது எவ்வளவு தவறானது என்பதையும், சபையின் ஐக்கியத்தை பாதுகாக்க எவ்விதமாக எல்லா உண்மை கிறிஸ்தவர்களும் பாடுபட வேண்டும் என்பதையும் மூப்பர்கள் சுட்டிக் காட்டுவது அவசியமாயிருக்கலாம். (லேவியராகமம் 19:16-18; சங்கீதம் 133:1-3; 1 கொரிந்தியர் 1:10) பவுலின் எச்சரிப்பை சுட்டிக்காட்டுவதன் மூலம் மூப்பர்கள் உதவிச் செய்யக்கூடியவர்களாக இருக்கலாம்: “நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.”—கலாத்தியர் 5:13-15; யாக்கோபு 3:13-18.
16. மூப்பர்கள் சபையில் ஏதாவது ஆரோக்கியமற்ற மனசாய்வுகளை கவனிப்பார்களேயானால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
16 மூப்பர்களே, “பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடிச் சுற்றித்திரிகிறான்” என்பதை நினைவில் வையுங்கள். (1 பேதுரு 5:8) எல்லா கிறிஸ்தவர்களுக்கும், “மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல, ஆனால் பொல்லாத ஆவியின் சேனைகளோடு ஒரு போராட்டம் இருக்கிறது. (எபேசியர் 6:10-13) உண்மையுள்ள மேய்ப்பர்கள் நிச்சயமாகவே ஆடுகள், சாத்தானால் மேற்கொள்ளப்படுவதை விரும்ப மாட்டார்கள். ஆகவே ஆடுகளில் ஒன்று கிறிஸ்தவ கூட்டங்களை தவறவிட ஆரம்பித்தால், அக்கறையுள்ள மூப்பர்கள் காரணத்தை தெரிந்துகொள்ள முயற்சித்து போதிய ஆவிக்குரிய உதவியைக் கொடுக்க வேண்டும். மேய்ப்பர்கள் மந்தையின் தோற்றத்தை அறிந்தவர்களாக, சபையில் எந்த ஆரோக்கியமற்ற மனச்சாய்வுகளைக் குறித்தும் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். (நீதிமொழிகள் 27:23) வெளி ஊழியத்தைப் புறக்கணிக்கும், தனிப்பட்ட படிப்பை அசட்டை செய்யும் மனச்சாய்வை, அல்லது பொழுதுபோக்கிலோ பொருளாதார முயற்சிகளிலோ மிதமிஞ்சிய ஈடுபாட்டை அவர்கள் கவனிப்பார்களேயானால், பொறுப்புள்ள இந்த மனிதர்கள் நிலைமையை சீர்படுத்த பிரயாசப்பட வேண்டும். மூப்பர்கள் “தேவனுடைய மந்தையை” கண்காணிப்பதில் யெகோவா தேவனையும் நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவையும் பின்பற்றுகிறவர்களாய், பொருத்தமான தனிப்பட்ட உதவியை அளிக்கிறார்கள். அல்லது சில சமயங்களில் தேவையான புத்திமதியை கூட்டங்களில் கொடுக்கிறார்கள். (கலாத்தியர் 6:1) இவ்விதங்களிலும் இன்னும் மற்ற விதங்களிலும் அன்புள்ள மூப்பர்கள் தங்களுடைய மேய்க்கும் உத்தரவாதத்தை பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சியைக் கொடுக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 20:28.
மேய்க்கும் வேலை பொறுப்பு மிக்க விஷயமாகும்
17. ஒரு மூப்பராக தகுதிப்பெறுவதற்கு தேவைப்படுவது என்ன?
17 ஒரு மூப்பராக, “தேவனுடைய மந்தை”யை மேய்ப்பது கடினமான ஒரு வேலையாக இருக்கிறது. இத்தகைய ஒரு சிலாக்கியத்துக்கு தகுதியுள்ளவராகும் பொருட்டு, நிறைவு செய்ய வேண்டிய உயர்ந்த தராதரங்கள் 1 தீமோத்தேயு 3:1-7, தீத்து 1:5-9 மற்றும் 1 பேதுரு 5:1-4-ல் தெளிவாக காண்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்தானத்தில் எந்த ஒரு சகோதரனும் சேவை செய்ய முடியாது. ஏனென்றால் ஆவிக்குரிய மனிதர்கள் மட்டுமே இந்த பொறுப்பை சரிவர நிறைவேற்ற முடியும். (1 கொரிந்தியர் 2:6-16) இப்பொழுது மூப்பர்களாக சேவை செய்துகொண்டில்லாத அநேக ஆண்கள் இந்த சிலாக்கியத்துக்காக தங்களை தகுதியுள்ளவர்களாக்கிக்கொள்ளலாம். ஆனால் முதலாவது அவர்கள் “கண்காணியின் வேலையை விரும்புகிற”வர்களாக இருக்க வேண்டும். கடவுளுடைய வார்த்தையை ஆழமாக புரிந்துகொள்ளும் பொருட்டு, அவர்கள் அதை ஊக்கமாக படிக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஆம் மூப்பர்கள், “தேவனுடைய மந்தை”யின் தகுதி வாய்ந்த மேய்ப்பர்களாக நியமிக்கப்படுவதற்கு வேதப்பூர்வமான தேவைகளை பூர்த்தி செய்வதன் காரணமாக சிபாரிசு செய்யப்பட தாங்கள் தகுதியுள்ளவர்களாக இருப்பதை அவர்கள் காண்பிக்க வேண்டும்.
18. சபைகளைக் குறித்து பவுல் எவ்விதமாக உணர்ந்தான்? மற்றவர்களும் அவனைப்போல உணருகிறார்களா?
18 கிறிஸ்தவ சபையின் தலைவரான நல்ல மேய்ப்பன் இயேசு கிறிஸ்து, யெகோவா தேவனின் கீழ் சேவை செய்கிறார். (யோவான் 10:11; 1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:22, 23) ஆடுகளை சரிவர வழிநடத்தி பாதுகாக்கும், மந்தையின் உதவி மேய்ப்பர்களைக் கொண்டிருப்பதில் இயேசு எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவராக இருக்க வேண்டும்! இந்த ஆவிக்குரிய மனிதர்கள், கிறிஸ்தவ மூப்பர்களுக்குரிய உயர்ந்த வேதப்பூர்வமான தகுதிகளையுடையவர்களாக இருக்கிறார்கள். மேலுமாக அப்போஸ்தலனாகிய பவுல் விளங்கப் பண்ணின அதே ஆழ்ந்த அக்கறையை இவர்கள் ஆடுகளிடம் கொண்டிருக்கிறார்கள். அவன் இவ்விதமாக எழுதினான்: “இவை முதலானவைகளையல்லாமல் (கஷ்டங்களும் வேதனைகளும்) எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது. ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? (2 கொரிந்தியர் 11:23-29) பவுல் பல இடங்களுக்கும் பிரயாணம் செய்தான். இன்று பிரயாண கண்காணிகள் அனுபவிப்பதுபோலவே தினந்தோறும் “எல்லாச் சபைகளைக் குறித்தும்” கவலையை அவன் அனுபவித்தான். அதே விதமாகவே தனி சபைகளில், நியமிக்கப்பட்ட மூப்பர்கள் ஆவிக்குரிய மேய்ப்பர்களாக, அவர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மந்தையிலுள்ள ஆடுகளுக்காக கவலையுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
19. எபிரெயர் 13:17 பின்பற்றப்படும்போதும், மூப்பர்கள் தொடர்ந்து தங்களுடைய மேய்க்கும் உத்தரவாதத்தை பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொள்ளும்போதும் என்ன கிடைக்கும்?
19 “தேவனுடைய மந்தை”யை மேய்ப்பது கடினமான வேலையாக இருக்கிறது. ஆனால் அதிக பலன்தரத்தக்க வேலையாக இருக்கிறது. ஆகவே மந்தையின் மேய்ப்பர்களே, விலைமதிப்புள்ள உங்களுடைய சிலாக்கியத்தை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். கடவுளுடைய ஆடுகளை சிறப்பாக கவனித்துக் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியினால் நியமிக்கப்பட்ட உதவி மேய்ப்பர்களோடு ஆடுகளைப்போன்ற அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பார்களாக. “உங்களை நடத்துகிறவர்கள் உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்” என்பதாக பவுல் உற்சாகப்படுத்தினான். (எபிரெயர் 13:17) யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு ஒப்புக்கொடுத்தவர்களாக இருக்கும் அனைவரும் ஐக்கியமாக ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யும்போது, மேய்க்கும் உத்தரவாதத்தை பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொள்ளும் கிறிஸ்தவ மூப்பர்களின் உண்மையுள்ள ஊழியத்தினால் தொடர்ந்து அதிகமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் நன்மைகளும் கிடைக்கும். (w85 11/15)
உங்களால் விளக்க முடியுமா?
◻ ஆவிக்குரிய மேய்ப்பர்கள் ஏன் மனப்பூர்வமாக சேவை செய்ய வேண்டும்?
◻ மூப்பர்கள் ஏன் அவலட்சணமான ஆதாயத்தை விரும்பாதவர்களாக இருக்க வேண்டும்?
◻ மூப்பர்கள் தேவனுடைய மந்தையின் மேல் இறுமாப்பாய் ஆளுகைச் செய்வது ஏன் தவறாக இருக்கும்?
◻ கண்காணிகள் ஏன் மந்தைக்கு மாதிரிகளாக இருக்க வேண்டும்?
◻ என்ன சில ஆபத்துக்களிலிருந்து மேய்ப்பர்கள் “தேவனுடைய மந்தை”யை பாதுகாப்பது அவசியமாயிருக்கிறது?
[பக்கம் 12-ன் படம்]
பூர்வ காலங்களிலிருந்த அக்கறையுள்ள மூப்பர்களைப் போலவே, நவீன நாளைய மூப்பர்கள் அன்போடு “தேவனுடைய மந்தை”யை மேய்க்கிறார்கள்”