“நீங்கள் மும்முரமாக பிரயாசப்படுங்கள்”
“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்க [மும்முரமாக, NW] பிரயாசப்படுங்கள். அநேகர் உட்பிரவேசிக்க வகை தேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—லூக்கா 13:24.
1. பெரும்பாலான ஆட்கள் விரும்புவது என்ன?
ஆறு வயது நிரம்பிய ராபியிடம், அவன் ஏன் ராஜ்ய மன்றத்துக்குப் போக விரும்புகிறான் என்று கேட்டுப் பாருங்கள். “நான் யெகோவாவைப் பற்றியும், பரதீஸில் நல்ல மிருகங்களோடேகூட நீண்ட காலம் வாழக்கூடிய வாய்ப்பைப் பற்றியும் கற்றுக்கொள்கிறேன்” என்று அவன் பதிலளிப்பான். மூன்று வயதே நிரம்பிய அவனுடைய அத்தை மகன், டஸ்டின் “ராஜ்ய மன்றம் போகலாம்” என்று சரியான நேரத்தில் மழலையில் சொல்ல தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு அவனுடைய பெற்றோரின் பழக்கத்தை நன்றாக அறிந்து வைத்திருக்கிறான். ராபி சொல்வதும், டஸ்டின் சொல்ல கற்றுக்கொள்வதும் பெரும்பாலான ஆட்களுக்கு கவர்ச்சியாக இருக்கும்—ஜீவன், நித்திய ஜீவன். ஆட்கள் “இரட்சிக்கப்பட” விரும்புகிறார்கள். ஆனால் எவ்விதமாக? மத சம்பந்தமான ஆராதனைகளுக்கு வெறுமென போய் வருவதன் மூலமாகவா?
2. (எ) இரட்சிப்பை ஏன் சம்பாதித்துக்கொள்ள முடியாது? (பி) இரட்சிப்புக்கு தேவைப்படுவது என்ன என்பதை லூக்கா 13:24.லுள்ள இயேசுவின் வார்த்தைகள் எவ்விதமாக காண்பிக்கின்றன?
2 கூட்டங்களுக்கு வருவதன் மூலமாகவோ வேறு எந்த விதத்திலோ, இரட்சிப்பை சம்பாதித்துக்கொள்ள முடியாது. இது இலவசமாக கிடைக்கிறது. கடவுளிடமிருந்து வரும் ஒரு ஈவாக இருக்கிறது. என்றபோதிலும், அவருடைய பரிசாகிய நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், நம்முடைய பங்கில் முயற்சியை யெகோவா கேட்கிறார். (ரோமர் 6:23) அவை என்ன? ஒரு காரியம், அவருடைய ஊழியத்தில் மும்முரமாகப் பிரயாசப்படுவதாகும்! மெய்யான போற்றுதலினால் தூண்டப்பட்டு செய்யும் செயல்களாக இவை இருக்க வேண்டும். ஒரு சமயம், கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, ஒரு மனிதன் “ஆண்டவரே இரட்சிக்கப்படுகிறவர்கள் சில பேர்தானா” என்று கேட்டான். இதற்கு இயேசு அளித்த பதிலானது கேள்வி கேட்டவனை மட்டுமல்ல, நம்மையும் உட்பட இரட்சிப்பில் அக்கறையுள்ள மற்ற அனைவரையும் மனதில் கெண்டு சொல்லப்பட்டதாக இருந்தது. அவர் சொன்னார்: “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகை தேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—லூக்கா 13:23, 24.
3. (எ) அந்த மனிதனின் கேள்வி ஏன் அசாதாரணமாக இருந்தது? (பி) இயேசு அளித்த பதிலில் எவ்விதமாக அவர் நம்மை உட்படுத்தினார்?
3 பெயர் குறிப்பிடப்படாத அந்த மனிதனின் கேள்வி அசாதாரணமான ஒன்றாகும். “இரட்சிக்கப்படும் ஒரு சிலரில் நான் இருப்பேனா?” அல்லது “நான் எவ்விதமாக இரட்சிக்கப்பட முடியும்?” என்பதாகக் கேட்காமல், அவன் “இரட்சிக்கப்படுகிறவர்கள் ஒரு சில பேர்தானா” என்பதாகக் கேட்டான். வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான ஆட்கள் மட்டுமே இரட்சிக்கப்பட தகுதியுள்ளவர்களாக இருப்பார்கள் என்ற யூதர்களின் தத்துவம் இந்த கேள்வியை ஒருவேளை கேட்க அவனை தூண்டியிருக்கலாம்.a அவனுடைய ஆர்வம் எதிலிருந்து தூண்டப்பட்டதாக இருந்தாலும், தெளிவற்ற கோட்பாட்டிலிருந்து எழுந்த அந்த கேள்வியை இயேசு நடைமுறை பொருத்தத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். தனிப்பட்ட வகையான பொருத்தம், அவன் இரட்சிக்கப்படுவதற்காக என்ன செய்வது அவசியம் என்பதை சிந்திக்கும்படியாக கேள்வி எழுப்பியவனை அவர் நிர்பந்தம் செய்தார். ஆனால் அதற்கும் மேலாக “நீங்கள் மும்முரமாக பிரயாசப்படுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகள் பன்மையில் இருப்பதால், நம்முடைய வணக்க முறையைக் குறித்தும் ஆழ்ந்து சிந்திக்கும்படியாக அவை நம்மை தூண்ட வேண்டும்.
4. நித்திய ஜீவனையடைய நாம் என்ன செய்ய வேண்டும்?
4 ஆகவே நித்திய ஜீவனை அடைவது சிலர் கற்பனை செய்வது போல அவ்வளவு எளியதல்ல. “இடுக்கமான வாசல் வழியாய்” உட்பிரவேசிக்க வழியாக, கடின உழைப்பையும் இடைவிடாத முயற்சியையும் இயேசு அழுத்திக் காண்பித்தார். தளர்ந்துவிடாமல் பிரயாசப்படுவதற்கு சக்தி, கிறிஸ்துவின் போதகங்களுக்கு கீழ்ப்படிந்து அதன் மேல் கட்டப்படும் நிலையான விசுவாசத்திலிருந்து கிடைக்கிறது. ஆகவே இரட்சிப்படைவதற்கு அவருடைய “வார்த்தைகளைக் கேட்பதை”விட அதிகத்தைச் செய்ய வேண்டும். விடாது தொடர்நது நாம் ‘அவைகளின்படி செய்ய’ வேண்டும்.—லூக்கா 6:46-49; யாக்கோபு 1:22-25.
இப்பொழுது நீங்கள் “கடுமையாக போராட” வேண்டும்
5. (எ) “நீங்கள் மும்முரமாக பிரயாசப்படுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளின் பொருள் என்ன? (பி) அந்த வார்த்தைகள் பரிசுத்த சேவையின் சம்பந்தமாக உங்களுடைய கருத்துக்கு எவ்விதமாக கூடுதலான அர்த்தத்தை கூட்டுவதாக இருக்கின்றன?
5 “நீங்கள் மும்முரமாக பிரயாசப்படுங்கள்” என்ற சொற்றொடர் எதை அர்த்தப்படுத்துகிறது? மூல கிரேக்கில் இது ஆகனீஜெத் (a-gonizesthe) என்பதாகும். இது “கடும் போராட்டத்திற்குரிய இடம்” என்று பொருள்படும் ஆகன் (agon) என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். “தொடர்ந்து கடுமையாக போராடுங்கள்” என்பதாக கிங்டம் இன்டர்லீனியர் மொழிப்பெயர்ப்பு குறிப்பிடுகிறது. இதே கிரேக்க வினைச்சொல்லிலிருந்துதான் ஆங்கில வார்த்தையாகிய ஆகனைஸ் (agonize) (போராடு) நாம் பெற்றிருப்பது அக்கறைக்குரியதாக இருக்கிறது. ஆகவே பூர்வ காலத்து அரசாங்கத்தையும் பரிசைப் பெற்றுக்கொள்வதற்கு தன்னுடைய எல்லா சக்தியையும் திரட்டிக்கொண்டு இப்பொழுது போராடிக் கொண்டிருக்கும் அல்லது மும்முரமாகப் பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விளையாட்டு வீரனை கற்பனை செய்து பாருங்கள். ஆகவே இங்கு கிரேக்க வினைச்சொல், கிரேக்க விளையாட்டுகளில் போட்டியிடுவதற்கான தொழில் பதமாக இருந்தாலும், முழு இருதயத்தோடு செயல்படும்படியான இயேசுவின் புத்திமதியை இது வலியுறுத்துகிறது. அரை மனதோடு முயற்சிப்பது போதாது.—லூக்கா 10:27; 1 கொரிந்தியர் 9:26, 27 ஒப்பிடவும்.
6. இப்பொழுது ஏன் நாம் மும்முரமாக பிரயாசப்பட வேண்டும்.
6 “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க எப்பொழுது, எவ்வளவு காலமாக கடுமையாக “போராடிக்” கொண்டிருக்க வேண்டும்? (லூக்கா 13:24, புதிய ஆங்கில பைபிள்) லூக்கா 13:24-ல் இயேசுவின் வார்த்தைகளை கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது “நீங்கள் மும்முரமாக பிரயாசப்படுங்கள்” என்பதை எதிர்காலத்தில் “வகைத் தேடுவார்கள்” என்பதோடு அவர் வேறுபடுத்திக் காண்பிப்பதை கவனியுங்கள். ஆகவே கடுமையாக போராடிக் கொண்டிருப்பதற்கு இப்பொழுதே சமயமாக இருக்கிறது. உட்பிரவேசிப்பதிலிருந்து தடை செய்யப்படுகிறவர்கள், தங்களுக்கு வசதியாக இருக்கும் சமயத்தில் உட்பிரவேசிக்க வகைத் தேடுகிறவர்களாக இருப்பார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் அதற்குள் மிகவும் பிந்திவிடுகிறது; சந்தர்ப்பத்தின் கதவு மூடப்பட்டு அது பூட்டப்படுகிறது. வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டின பின்பு ஜனங்கள் தட்டவும் மன்றாடவும் ஆரம்பிப்பார்கள் என்று லூக்கா 13:25-ல் இயேசு தொடர்ந்து சொல்லுகிறார்: “ஆண்டவரே எங்களுக்குத் திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: “நீங்கள் எவ்விடத்தாரோ உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.” யெகோவாவின் வணக்கத்தை தங்களுடைய வாழ்க்கையில் இப்பொழுது முக்கிய நோக்கமாக கொண்டிராதவர்களுக்கு என்ன விசனகரமான விளைவு காத்துக் கொண்டிருக்கிறது!—மத்தேயு 6:33.
7. பிலிப்பியர் 3:12-14 எவ்விதமாக இடைவிடாது முயற்சி செய்ய வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறது? அது ஏன் அவசியமாயிருக்கிறது?
7 நம்முடைய கடும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு காரியமாக இருக்கிறது. நம்மில் எவருமே “இடுக்கமான வாசல்” வழியாய் முழுமையாக பிரவேசித்துவிடவில்லை. பவுல் இதை உணர்ந்திருந்தான். ஜீவனுக்கான அவனுடைய ஓட்டத்தில் சுறுசுறுப்பாக அன்றாடம் அவன் முயற்சி செய்ய வேண்டியதாக இருந்தது. அவன் எழுதினான்: “நான் இவை அனைத்தையும் அடைந்தாயிற்று அல்லது பரிபூரணமானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை பிடித்துக்கொள்ளும்படி கடினமாக பிரயாசப்படுகிறேன். சகோதரரே அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து முன்னானவைகளுக்காக ஆனமட்டும் முயன்று கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கி கடினமாக பிரயாசப்படுகிறேன்.” (கொட்டை எழுத்துக்கள் எங்களுடையவை.)—பிலிப்பியர் 3:12-14, New International Version.
8. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதிலிருந்து அநேகரை தடைசெய்வது என்ன? (பி) இது நமக்கு என்ன எச்சரிப்பைக் கொடுக்கிறது?
8 “அநேகர்” யார்? அவர்களால் ஏன் உட்பிரவேசிக்க முடியவில்லை. “அநேகர்” கிறிஸ்தவ மண்டலமாக, விசேஷமாக அதனுடைய குருவர்க்கமாக அடையாளங் கண்டு கொள்ளப்படுகிறார்கள். அவரோடு ‘போஜன பானம் பண்ணியதாக’ உரிமைப் பாராட்டுவதன் மூலம், அவருடைய குடும்பத்தின் பாகமாக இருப்பதன் காரணமாக, அவரோடு மிக நெருங்கிய பழக்கம் இருப்பதாக அவர்கள் பாசாங்கு செய்கிறார்கள். ஆனால் கடவுளுடைய நிபந்தனைகளின்படி அல்லாமல் தங்களுடைய சொந்த நிபந்தனைகளின்படி அவர்கள் இரட்சிப்பை விரும்புவதன் காரணமாக, இயேசு தம்மை அறிந்திருப்பதாக அவர்கள் சொல்வதை மறுதலித்து “அக்கிரமக் காரர்களாக” அவர்களை கருதுகிறார். (லூக்கா 13:26, 27) நித்திய ஜீவனுக்குள் பிரவேசியாதபடி கதவடைப்புச் செய்யப்படும் நபர்களில், யெகோவாவுக்கு தங்களுடைய பரிசத்த சேவையில் தளர்ந்தவர்களாகி மெய் வணக்கத்தை வெகு சாதாரணமாக நோக்கிடும் ஆட்களும்கூட அடங்குவர். ராஜ்ய அக்கறைகளிடமாக அவர்களுடைய வைராக்கியம் வெதுவெதுப்பாக மாறிவிட்டிருக்கிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 3:15, 16) உண்மைதான், அவர்கள் இன்னும் ‘தேவபக்தியின் வேஷத்தை தரித்திருக்கலாம்’—கூட்டங்களுக்கு வந்துகொண்டும் அடையாள சேவை செய்து கொண்டுமிருக்கலாம். ஆனால் மெய் வணக்கத்துக்கு பின்னால் உண்மையான ஊக்குவிக்கும் சக்தியாக இருக்கும் விசுவாசத்துக்குரிய அத்தாட்சி காணப்படாமலிருக்கலாம். (2 தீமோத்தேயு 3:5 ஒப்பிடவும்) “இடுக்கமான வாசல்” வழியாய் பிரவேசிக்க வெறுமென வகைத் தேடினால் மாத்திரம் போதாது என்பதை அவர்கள் உணர தவறிவிடுகிறார்கள். இடையில் நில்லாது முழு நீளமும் செல்ல ஒருவர் போராட வேண்டும்.
ஏன் “இடுக்கமான வாசல்” வழியாய்?
9. இடுக்கமான வாசல் வழியாய் பிரவேசிப்பது, ஏன் மும்முரமாகப் பிரயாசப்படுவதை தேவைப்படுத்துகிறது?
9 இரட்சிப்புக்குப் போகும் “இடுக்கமான வாசல்” அனைவருக்கும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் உட்பிரவேசிக்க போராடுவதற்கு அநேகருக்கு விருப்பமிருப்பதில்லை. மும்முரமாக பிரயாசப்படுவதை தேவைப்படுத்தும் இடுக்கமான வாசல் வழியாய் பிரவேசிப்பதைப் பற்றிய சில உண்மைகள் யாவை? முதலாவதாக ஒரு நபர் பைபிள் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை பெற்றுக்கொண்டு, யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் அறிவது அவசியமாயிருக்கிறது. (யோவான் 17:3) கிறிஸ்தவ மண்டலத்தினுடையது உட்பட, உலகப்பிரகாரமான மதங்களின் பாரம்பரியங்களையும் பழக்க வழக்கங்களையும் விட்டொழிப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. பூமியில் இருந்தபோது, இயேசு செய்ததுபோல, கடவுளுடைய சித்தத்தை செய்வதை இது தேவைப்படுத்துகிறது. (1 பேதுரு 2:21) ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவனாக ஒருவர் பொருளாசையையும் ஒழுக்கக் கேட்டையும் உலகின் அசுத்தத்தையும்கூட தவிர்க்க வேண்டும். (1 யோவான் 2:15-17; எபேசியர் 5:3-5) இவைகள் களைந்து போடப்பட்டு கிறிஸ்துவைப் போன்ற குணாதிசயங்கள் தரித்துக்கொள்ளப்பட வேண்டும்.—கொலோசெயர் 3:9, 10, 12.
10. நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கும் இச்சையடக்கத்துக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?
10 “சில பேர்” இச்சையடக்கம் உட்பட ஆவியின் கனிகளை பிறப்பிப்பதோடுகூட ஊழியத்தில் வைராக்கியமுள்ளவர்களாக இருப்பதன் மதிப்பை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். (கலாத்தியர் 5:23) யெகோவாவின் ஆவியின் உதவியோடு அவர்கள் தங்களுடைய சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தி நித்திய ஜீவன் என்ற இலக்கிற்காக அதை கட்டுப்படுத்தி ஆளுகிறார்கள்.—1 கொரிந்தியர் 9:24-27.
இயேசுவின் வார்த்தைகள் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
11. (எ) வாழ்க்கையின் என்ன பகுதிகளில் சிலர் மும்முரமாகப் பிரயாசப்படுவது அவசியமாயிருக்கலாம்? ஏன்? (பி) என்ன வேலையில் அனைவருமே மும்முரமாக பிரயாசப்படலாம்?
11 நாம் புதிதாக முழுக்காட்டப்பட்டவர்களாக இருந்தாலும்சரி, யெகோவாவின் அமைப்போடு பல பத்தாண்டுகளாக சுறுசுறுப்பாக சேவித்து வந்தவர்களாக இருந்தாலும்சரி, அவரை பிரியப்படுத்தும் நம்முடைய முயற்சியில் நாம் தளர்ந்துவிடக்கூடாது. இயேசுவின் வார்த்தைகள் தெளிவாக காண்பிக்கிற விதமாகவே, யெகோவாவுக்கு நம்முடைய பக்தியில் முழு இருதயத்தோடிருந்து, என்ன விலையானாலும், இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். கடவுளுக்குச் செய்யும் நம்முடைய ஊழியத்தில் வெறுமென முன்னேறுவதையும் பெருகுவதையும்பற்றி இயேசு பேசிக் கொண்டில்லாவிட்டாலும் நம்மில் சிலருக்கு, நம்முடைய நடத்தையில் முன்னேறுவதற்கு அல்லது நாம் “யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல்” இருப்பதற்காக, கெட்ட பழக்க வழக்கங்களை விட்டொழிப்பதற்கு மும்முரமாக பிரயாசப்படுவது அவசியமாக இருக்கிறது. (2 கொரிந்தியர் 6:1-4) நம்மில் மற்றவர்கள் நம்முடைய “அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகதிகமாய்ப் பெருகும்’ பொருட்டு தனிப்பட்ட படிப்பு அட்டவணைக்கு இடைவிடாமல் கவனம் செலுத்துவது அவசியமாயிருக்கிறது. (பிலிப்பியர் 1:9-11) இன்னும் மற்றவர்கள், சபை புத்தகப்படிப்பு உட்பட, சபை கூட்டங்களில் ஒழுங்காக ஆஜராயிருந்து அதில் பங்குகொள்வதற்கு அதிகமாக முயற்சி செய்வது அவசியமாயிருக்கிறது. (எபிரெயர் 10:23-25) ஆனால் நாம் அனைவருமே, “சுவிசேஷகனுடைய வேலையைச்” செய்வதில் நாம் உண்மையில் மும்முரமாக பிரயாசப்படுகிறோமா என்பதைக் காண நம்முடைய சொந்த தனிப்பட்ட வெளி ஊழியத்தை ஆராய்ந்து பார்க்கலாம்.—2 தீமோத்தேயு 4:5.
12. நம்முடைய ஆவிக்குரிய முயற்சியின் அளவை பரிசோதித்துப் பார்க்க நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்?
12 அதிகமான எண்ணிக்கையான ஆட்களுக்கு யெகோவாவைப் பிரியப்படுத்த மும்முரமாக பிரயாசப்படுவதில் முன்னேற்றம், துணைப் பயனியர் ஒழுங்கான பயனியர், அல்லது பெத்தேல் சேவைக்கு அவர்களை தகுதியுள்ளவர்களாக்கியிருக்கிறது. ஆனால் உங்களைப் பற்றி என்ன? நிங்கள் ஒரு ராஜ்ய பிரஸ்தாபியாக இருந்தால், வருடத்தில் பல முறைகள் துணைப்பயனியர் சேவையில் ஈடுபட முடியுமா? அல்லது ஒரு ஒழுங்கான பயனியராக ஆக முடியுமா? நீங்கள் ஏற்கெனவே ஒரு துணைப்பயனியராக இருந்தால், ஒழுங்கான பயனியர் சேவைக்கா நீங்கள் முயன்று வருகிறீர்களா? இல்லையென்றால், அவ்விதமாகச் செய்வதைப்பற்றி ஏன் சிந்தித்துப் பார்க்கக்கூடாது? இந்த விதத்தில் யெகோவா தேவனோடும் இயேசு கிறிஸ்துவோடும் ஒரு நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதில் நீங்கள் ஆசீர்வதிக்கப்படலாம்.—சங்கீதம் 25:14.
பயனியர் ஊழியம் செய்வதற்காக நீங்கள் மும்முரமாக பிரயாசப்பட முடியுமா?
13. (எ) நீங்கள் ஒரு பயனியராக ஆக விரும்பினால், என்ன இரண்டு காரியங்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன? (பி) பயனியர் ஊழியம் செய்வதற்கு வாழ்க்கையின் என்ன பகுதிகளில் மாற்றங்கள் செய்வது அவசியமாயிருக்கலாம்?
13 நீங்கள் ஒரு ஒழுங்கான பயனியராக இருக்க முடிந்து, ஆனால் அவ்விதமாக இல்லையென்றால், பயனியர் ஊழியஞ் செய்வதற்காக உங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய நீங்கள் “கடுமையாக போராட” முடியுமா? இரண்டு காரியங்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. முதலாவது உங்களுக்கு ஆசை இருக்க வேண்டும். இரண்டாவது உங்களுக்கு சரியான சூழ்நிலைமைகள் இருக்க வேண்டும். உங்களுக்கு ஆசையில்லாவிட்டால் அதற்காக ஜெபியுங்கள். பயனியர்களிடம் பேசுங்கள். சபை பிரஸ்தாபியாக இப்பொழுது உங்களுடைய ஊழியத்தை அதிகரியுங்கள். முடியும் போதெல்லாம் துணைப் பயனியர் சேவையில் பங்கு கொள்ளுங்கள். இந்த ஊழியத்துக்கு இப்பொழுது உங்களுடைய சூழ்நிலைமைகள் உங்களை அனுமதிக்கவில்லையென்றால், ஏதாவது மாற்றம் செய்யப்பட முடியுமா என்று பாருங்கள். வேலைக்குப் போகும் மனைவி கட்டாயம் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஒருவேளை இருக்காது. ஓய்வு பெறும் வயதை அடைந்துவிட்டபின் ஒருவர் கட்டாயம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் ஒருவேளை இருக்காது. மிக உயர்ந்த வாழ்க்கைத் தரம், ஆடம்பரமான விடுமுறைகள், நவீன வாகனங்கள், இது போன்றவை வாழ்க்கைக்கு இன்றியமையாதவை அல்ல.—லூக்கா 12:15; 1 யோவான் 2:15-17.
14. (எ) விவாகமான ஒரு தம்பதி ஏன் சபை பிரஸ்தாபிகளாக இருப்பதில் திருப்தியாக இருக்கவில்லை? (பி) அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு முன்பாக என்ன இலக்கை வைத்திருக்கிறார்கள்?
14 மூன்று மகன்களையுடைய ஒரு தகப்பன் ஆறு வருடங்களுக்கு முன்பாக பயனியர் ஊழியஞ்செய்ய ஆரம்பித்தார். ஏன்? “நான் அதிகம் செய்ய விரும்பினேன்” என்பதாக அவர் விளக்குகிறார். “என்னால் ஒழுங்கானப் பயனியர் ஊழியஞ்செய்ய முடிந்து, நான் அதை செய்யாவிட்டால் நான் என்னுடைய ஒப்புக்கொடுத்தலின்படி வாழ்ந்துக் கொண்டிருக்க மாட்டேன்.” அவருடைய மனைவியும்கூட ஒழுங்கான பயனியர் ஊழியத்தை செய்ய ஆரம்பித்தாள். ஏன்? “ஒழுங்காக நான்கு வருடங்களாக நான் துணைப் பயனியர் ஊழியம் செய்து வந்திருக்கிறேன். அது எளிதாக இருப்பதை நான் கடைசியில் உணர்ந்தேன்” என்று அவள் சொல்லுகிறாள். “ஒருபோதும் மறுபடியுமாக செய்யப்படப் போகாத இந்த வேலையில் முழுமையான ஒரு பங்கை கொண்டிருக்கவும் எங்களுடைய மகன்களுக்கு சரியான முன்மாதிரியை வைக்கவும் நான் விரும்பினேன்.” கணவனும் மனைவியும் பல்கலைக்கழக பயிற்சிக்குப் பின்பே சத்தியத்தை கற்றுக்கொண்டார்கள். “எங்களுடைய பெற்றோர் நாங்கள் நான்கு வருடங்கள் கல்லூரிக்குப் போக வேண்டும் என்று சொன்னார்கள்” என்று தகப்பன் சொல்லுகிறார். ஆகவே, அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன இலக்குகளை வைத்திருக்கிறார்கள்? “அவர்கள் பயனியர் ஊழியஞ்செய்து குறைந்தபட்சம் நான்காண்டுகளாவது பெத்தேல் ஊழியஞ் செய்யவேண்டும் என்று நாங்கள் விரும்புவதை என்னுடைய பையன்களுக்கு நான் தெரியப்படுத்தியிருக்கிறேன்.”
15. (எ) ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்வதற்கு சிலர் என்ன காரணங்களுக்காக மும்முரமாகப் பிரயாசப்பட்டிருக்கிறார்கள்? (பி) என்ன காரணத்துக்காக, நீங்கள் முழு நேர ஊழியத்தில் இருக்க விரும்புவீர்கள்?
15 பின்வரும் காரணங்களுக்காக, மற்றவர்கள் ஒழுங்கான பயனியர் சேவை செய்ய தீர்மானித்திருக்கிறார்கள்:
“ஆவிக்குரிய விதத்தில் நான் முன்னேறாமலே இருந்தேன். இது என்னை உறுத்திக்கொண்டே இருந்தது.” (ராபர்ட் H)
“ஒரு ஒழுங்கான பிரஸ்தாபியாக நான் ஒருபோதும் திருப்தியாக இருக்கவில்லை.” (ரியா H.)
“பயனியர் ஊழியம் என்னுடைய வாழ்க்கைக்கு இலக்கையும் நோக்கத்தையும் கொடுக்கிறது.” (ஹான்ஸ் K.)
யெகோவாவை முழுமையாக நான் சேவிக்க விரும்பினேன். அதைச் செய்வதற்கு பயனியர் சேவை என்னுடைய வழியாக இருந்தது.” (சரன்சிட் K.)
“இந்த மாபெரும் வேலையில் பங்குகொள்வதற்கு என்னுடைய சக்திகளையும் பலத்தையும், இளமையையும் நான் பயன்படுத்தாவிட்டால், அதற்காக நான் மனஸ்தாபப்படுவேன்.” (க்ரெக்கரி T.)
“முயற்சியைத்தானே யெகோவா ஆசீர்வதிக்கிறார். அவர் ஆசீர்வதிப்பதற்கு நான் அவருக்கு ஒன்றை கொடுப்பது அவசியமாயிருந்தது.” (க்ரேஸ்அன் T.)
“யெகோவாவைப் பற்றி நான் எவ்விதமாக உணருகிறேன் என்பதை வெளிக்கட்ட பயனியர் சேவை எனக்கு உதவி செய்கிறது.” (மாற்க்கோ P.)
“பயனியர்கள் மத்தியில் நான் கவனித்த மகிழ்ச்சியை எனக்கு முழு நேரமாக உலகப்பிரகாரமான வேலையைச் செய்வதானது கொண்டுவரவில்லை.” (நான்ஸி P.)
இந்த பட்டியலோடு வேறு என்ன காரணங்களை நீங்கள் சேர்க்க முடியும்?
உங்களால் இயன்றதையெல்லாம் நீங்கள் செய்கிறீர்களா?
16. மும்முரமாகப் பிரயாசப்படுகிறவர்கள் பயனியர்கள் மட்டும்தானா? விளக்கவும்.
16 யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் நேர்மையாகவும் ஜெப சிந்தையோடும் தங்களுடைய தனிப்பட்ட நிலைமைகளை ஆராய்ந்து பார்த்து, அவர்களுடைய தற்போதைய சூழ்நிலைமைகளின் கீழ், தங்களால் இயன்றதையெல்லாம் செய்துக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர்களில் நீங்கள் ஒருவராக இருக்கலாம். அவ்விதமாக இருந்தால், சந்தோஷமாக இருங்கள். யெகோவாவும் அவருடைய குமாரனும் உங்களைக் குறித்து அக்கறையுள்ளவர்களாக முழு ஆத்துமாவோடு நீங்கள் செய்யும் ஊழியத்தை உண்மையில் போற்றுகிறார்கள். (லூக்கா 21:1-4 ஒப்பிடவும்) உதாரணமாக சாதகமில்லாத அரசியல் அல்லது பொருளாதார நிலைமைகளின் காரணமாக சில தேசங்களில், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்வதற்கே, நம்முடைய சகோதரர்கள், ஒரு நாளில் ஒன்பது மணிநேரங்களும், வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்களும் வேலைசெய்ய வேண்டியதாக இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை கண்டிப்பாக அரசாங்கம் தடைசெய்திருக்கும் ஒரு தேசத்தில் பயனியர் ஊழியஞ்செய்கிறவர்கள், பொதுவாக, ஓய்வு பெற்றவர்கள், இரவில் வேலை செய்யும் இளைஞர்கள், அரசாங்கத்தால் வேலையிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கும் (பிள்ளைகளையுடைய) தாய்மார்களாக இருக்கிறார்கள். இதுபோன்ற தேசங்களில்தானே பயனியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது.
17. யெகோவாவின் ஊழியத்தில் நாம் செய்யும் வேலையின் அளவினாலே மாத்திரமே நம்முடைய பிரயாசத்தின் அளவை அவர் அளவிடுவதில்லை என்பதை எப்பாப்பிரோதீத்துவின் விஷயம் எவ்விதமாக காண்பிக்கிறது?
17 என்றபோதிலும், “எனக்கு சரீர பெலம் அதிகம் இருந்தால் நன்றாயிருக்கும். நான் மட்டும் மறுபடியுமாக வாலிப வயதில் இருந்தால்! என்பதாக நீங்கள் ஒருவேளைச் சொல்லக்கூடும். ஆனால் அதைரியமடையாதீர்கள். நம்முடைய பிரயாசம் கண்டிப்பாக கடவுளுடைய பரிசுத்த சேவையில் நாம் செய்யும் வேலையின் அளவினால் அளவிடப்படுவதில்லை. எப்பாப்பிரோதீத்துவை உங்களுக்கு நினைவிருக்கிறதா? “கர்த்தருடைய கிரியை”யிலே, அவன் சுகபெலத்தோடு இருந்தபோது, செய்ததோடு ஒப்பிடுகையில் அவன் வியாதிப்பட்டிருந்தபோது, அவனுடைய சுறுசுறுப்பான முயற்சியின் அளவு குறைவாகவே இருந்தது. என்றபோதிலும் பவுல் அவனுடைய பிரயாசத்துக்காக அவனை பாராட்டினான். உண்மையில் பவுல் குறிப்பிட்ட விதமாக, நாம் “இப்படிப்பட்ட ஆண்களையும் பெண்களையும் கனமாய் எண்ண வேண்டும்.”—பிலிப்பியர் 2:25-30.
18. (எ) கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளையுடையவர்கள் சபையில் எவ்விதமாக முழு நேர ஊழியத்தை ஊக்குவிக்கலாம்? (பி) உங்களுடைய சபையில் பயனியர் ஆவியை உற்சாகப்படுத்த நீங்கள் என்ன செய்யக்கூடும்?
18 என்றபோதிலும் சபையில் முழு நேர ஊழியத்தை ஊக்குவிப்பதற்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரு காரியம் இருக்கிறது. அது என்ன? பயனியர் ஆவியை கொண்டிருப்பதில் நீங்கள் மும்முரமாக பிரயாசப்படுங்கள். உதாரணமாக, குடும்ப பொறுப்புகளின் காரணமாக, தற்சமயம் உங்களால் ஒரு பயனியராக இருக்க முடியாவிட்டால், உங்களுடைய குடும்பத்திலுள்ள மற்றவர்கள்—உங்கள் மனைவி, பிள்ளைகள், சகோதரர் அல்லது சகோதரி—பயனியர் ஊழியஞ்செய்ய அவர்களை விடுவிக்க முடியுமா? நல்ல உடல் நலமில்லாதவர்கள் அல்லது மற்றபடி ஊனமுற்றிருப்பவர்கள், பயனியர் ஊழியம் செய்ய முடிகிறவர்களில் உண்மையான அக்கறையை எடுத்துக்கொள்ளலாம். சூழ்நிலைமைகள் அனுமதிப்பதைப் பொறுத்து அவர்களோடு வெளி ஊழியத்துக்குச் செல்லலாம். (1 கொரிந்தியர் 12:19-26 ஒப்பிடவும்) இவ்விதமாக சபையிலுள்ள அனைவருமே, முழு நேர ஊழியத்தை வலியுறுத்துவதில் மும்முரமாக பிரயாசப்படலாம். இதன் விளைவுகள் அனைவருக்கும் மிகவும் உற்சாகமளிப்பதாக இருக்கக்கூடும்.
19. நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
19 .நீங்கள் மும்முரமாக பிரயாசப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது? முழுக்காட்டப்படுவதற்காக முன்னேறுவதை அது அர்த்தப்படுத்துகிறதா? ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தை மேற்கொள்வதையா? ஏதோ ஒரு விதத்தில் யெகோவாவோடு உங்களுடைய உறவை பலப்படுத்துவதையா? துணைப்பயனியர் ஊழியத்தை அது அர்த்தப்படுத்தக்கூடுமா? ஒழுங்கான பயனியர் ஊழியம்? பெத்தேல் ஊழியம்? ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்யும்பொருட்டு அது உங்களிடமிருந்து எதை தேவைப்படுத்தினாலும் இப்பொழுது சுறுசுறுப்பாக முயற்சிப்பது தகுதியுள்ளதாக இருக்கிறது. ஆகவே, நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க நாம் அனைவருமே போராட்டத்தில் தளர்ந்தவிடாதிருப்போமாக. (w86 1/15)
[அடிக்குறிப்புகள்]
a இரட்சிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை யூத குருக்கள் மத்தியில் அதிகமாக விவாதிக்கப்பட்ட இறைமை நூல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருந்தது. ஒரு பைபிள் குறிப்புரை ஏடு இவ்விதமாக குறிப்பிடுகிறது: “யூத குருக்களின் விநோதமான மறைபொருளுள்ள ஆதாரமற்ற நம்பிக்கைகளில் ஒன்று, இந்த அல்லது அந்த வசனத்தின் எழுத்துக்களின் எண் இலக்கத்தினுடைய மதிப்பை வைத்து, இரட்சிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையை முடிவு செய்ய முயற்சிப்பதாகும்.”
சிந்திப்பதற்கு குறிப்புகள்
◻ நீங்கள் மும்முரமாக பிரயாசப்படுங்கள்“ என்பதாக இயேசு சொன்னபோது அவர் என்ன அர்த்தப்படுத்தினார்?
◻ எப்பொழுது எவ்விதமாக இயேசுவின் வார்த்தைகள் உங்களுக்கு பொருந்துகின்றன?
◻ “அநேகரால்” ஏன் இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க முடியவில்லை?
◻ கட்டுப்படுத்தும் சூழ்நிலைமைகளையுடையவர்கள் எவ்விதமாக மும்முரமாக பிரயாசப்படலாம்?
◻ இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க நாம் எவ்வளவு காலமாக போராடிக்கொண்டிருக்க வேண்டும்?