உங்களை உட்படுத்துகிற சர்வலோக நீதிமன்ற வழக்கு
“‘வாதத்துக்கிடமான உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள்,’ . . . என்கிறார் யெகோவா. ‘உங்கள் வாதுரைகளை வழங்குங்கள்.’”—ஏசாயா 41:21, NW.
சரித்திரம் முழுவதிலும் எண்ணற்ற நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றில் சாட்சிகள் கொண்டுவரப்பட்டு ஒரு தரப்பினர் சார்பாகவோ அல்லது மறு தரப்பினர் சார்பாகவோ வாதிட ஆதாரம் அளிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்த வழக்குகளில் பல, தனிப்பட்ட நபர்களை உட்படுத்தியதாயும் மற்றவை அதிக எண்ணிக்கையான மக்களை பாதித்தவையாயும் இருந்திருக்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட வழக்குகள் எல்லாமே இப்பொழுது விவாதிக்கப்பட்டு வரும் சர்வலோக நீதிமன்ற வழக்குடன் ஒப்பிடப்படுகையில் முக்கியமற்றதாகிவிடுகிறது. இது சரித்திரத்திலேயே மிக முக்கியமான தீர்புக்குரிய வழக்காக இருக்கிறது. ஒருவன் இதில் உட்பட விரும்பினாலுஞ்சரி விரும்பாவிட்டாலுஞ்சரி, இதன் முடிவுகள் பூமியிலுள்ள ஒவ்வொரு ஆளையும் பாதிக்கும்.
2 இந்த வழக்கில் இடம்பெறும் முக்கிய நபர், சர்வலோகத்தில் மிக உயர்ந்தவரும் “வானங்களை சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும் . . . கொடுக்கிறவருமான” யெகோவா தேவன். (ஏசாயா 42:5) விவாதத்தில் உட்பட்டிருப்பது என்ன? அவருடைய தேவத்துவமே விவாதத்துக்குட்பட்டதாய் இருக்கிறது—பூமியும் அதன் குடிகளும் உட்பட இந்தச் சர்வலோக முழுவதன் மீதும் அவருடைய ஆளுகையின் நீதி விவாதத்துக்குட்பட்டதாய் இருக்கிறது. இது சர்வலோக அரசுரிமை சம்பந்தப்பட்ட விவாதம் என்று அழைக்கப்படலாம்.
3 இந்த விவாதத்துக்கு சம்பந்தப்பட்ட அடிப்படைக் கேள்விகள்: வணங்கப்பட்டுவரும் எல்லா தெய்வங்களிலும் எது உங்களுடைய வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் அற்பணிக்குமளவுக்கு நம்பத்தகுந்த தெய்வமாக நிரூபித்திருக்கிறது? எது உண்மையில் உயிருடனிருந்திருக்கிறது? அது வெறுமனே மனிதனின் கைவேலையாக அல்லது கண்டுபிடிப்பாக இருந்துவந்திருக்கிறது, மனிதவர்க்கத்தைத் தற்போதய மோசமான நிலைமையிலிருந்து மீட்டு உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும், செழிப்பையும் சுகத்தையும் உறுதிபடுத்தும் சரியான வகை அரசாங்கத்தைக் கொண்டுவரும் உண்மையான, உயிருள்ள உன்னத கடவுள் ஒருவர் இருக்கிறாரா?
4 தாங்கள் ஏற்கனவே கடவுளில் நம்பிக்கையுடையவர்களாய் இருப்பதால் தாங்கள் உட்படுகிறதற்கு எந்த ஒரு விவாதமும் இல்லை என்று அநேகர் உணருகின்றனர். ஆனால் தாங்கள் வணங்கும் தெய்வம் உண்மையான தெய்வம் என்பதற்கும், அதன் வாக்குத்தத்தங்கள் நம்பத்தகுந்தவை என்பதற்கும், அதன் நோக்கங்களும் சட்டங்களும் தங்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதற்கும் அவர்கள் ஆதாரம் அளித்திடமுடியுமா? அப்படிப்பட்டவர்கள் ஆம் என்று பதிலளிப்பார்களானால், அவர்கள் பின்வரும் இந்தக் கேள்விகளுக்கும் பதில் கூறுகிறவர்களாய் இருக்க வேண்டும்: நம்பத்தகுந்த வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கும் உண்மையான ஒரு கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? மனிதவர்க்கத்துக்கும் இந்தப் பூமிக்கும் கடவுள் என்ன நோக்கத்தையுடையவராய் இருக்கிறார்? கடவுளுடைய கால அட்டவணையில் நாம் எங்கே இருக்கிறோம்? உடனடியான எதிர்காலம் நமக்கு எதை வைத்திருக்கிறது? அவரை நாம் மகிமைப்படுத்திட நாம் தனிப்பட்டவர்களாக என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்?
5 கடவுள் நம்பிக்கை இருப்பதாக சொல்லும் அநேகர் இந்தக் கேள்விகளுக்கு ஆதாரச் சான்றுடன் கூடிய பதிலை கொடுக்க முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களை கடவுள் நம்பிக்கை இருப்பதாக உரிமை பாராட்டி ஆனால் தங்களுடைய உரிமை பாராட்டலை பொய்யென நிரூபித்த கிரியைகளைக் கொண்டிருந்த முதல் நூற்றாண்டு மக்களுக்கு ஒப்பிடலாம். அவர்களை குறித்து கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு சொல்லுகிறது: “அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்.” ஆம், “கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.” (தீத்து 1:16; யாக்கோபு 2:26) எனவே தங்களுக்குக் கடவுளில் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லுகிறவர்கள், அதை ஆதரிப்பதற்கு பலமான அத்தாட்சி அளிக்க முடியாதிருப்பவர்கள், ஆராதனைப் பொருட்களாக வெகு காலத்துக்கு முன்பாகவே மறைந்துவிட்டிருக்கும் பொய்க் கடவுட்களை நம்பிவந்த கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களிலிருந்து எந்த விதத்திலும் வித்தியாசப்படுவதில்லை.
சோதனை வழக்குகள்
6 இதற்கு ஓர் உதாரணம், நம்முடைய பொது சகாப்தத்துக்கு முன் ஏறக்குறைய 1,500 ஆண்டுகளுக்கு முன்பு பூர்வ எகிப்திய கடவுட்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட ஒரு வழக்காகும். எகிப்தியர்கள் ஏராளமான கடவுட்களை வணங்கினார்கள். இவற்றில் காளை, பூனை, பசு, முதலை, கழுகு, தவளை, நரி, சிங்கம், சர்ப்பம், பருந்து மற்றும் ஓநாய் போன்ற விலங்குகள் உட்பட்டிருந்தன. இவ்விலங்குகளில் பல ஒரு தெய்வத்தின் அல்லது தேவதையின் அவதாரங்களாகக் கருதப்பட்டது, மற்றும் அவற்றை வேண்டுமென்றே கொல்லுவது ஒருவரை மரண தண்டனைக்கு ஆளாக்கியது. புனித விலங்குகளின் சடலங்கள் பதனீடுசெய்யப்பட்டு சிறப்பாக அடக்கம் செய்யப்பட்டன.
7 அந்தக் கடவுளுக்கெல்லாம் எதிராக இருந்த கடவுள்தான் பூர்வ இஸ்ரவேலர் வணங்கிய யெகோவா. அவருடைய பிரதிநிதியாகிய மோசே யெகோவாவின் மக்களை விடுவிக்கும்படி கேட்க பார்வோனிடம் அனுப்பப்பட்டான். இஸ்ரவேலர் அப்பொழுது அடிமைத்தனத்தில் இருந்தனர். யெகோவா அவர்களுக்கு விடுதலையளிப்பதாக வாக்களித்திருந்தார். (யாத்திராகமம் 3:6-10) ஆனால் பார்வோன் அறிக்கையிட்டதாவது: “யெகோவா யார்? நான் ஏன் அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து இஸ்ரவேலைப் போகவிட வேண்டும்? நான் அந்த யெகோவாவை அறியேன்? நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை.” (யாத்திராகமம் 5:2, தி.மொ.) எகிப்தின் கடவுட்கள் யெகோவாவுக்கு மேலானவர்கள் என்பதாகப் பார்வோன் உறுதியாக நம்பினான்.
8 தம்முடைய வாக்குறுதியைக் காத்துக்கொள்பவரும் தம்முடைய மக்களைப் பாதுகாக்கக்கூடியவருமான கடவுளாக நிரூபிப்பவர் யார்? பதில் சீக்கிரத்தில் காணப்படுவதாயிருந்தது. யெகோவா முன்னறிவித்தாவது: “எகிப்தின் சகல தேவர்களையும் நியாயந்தீர்ப்பேன்.” (யாத்திராகமம் 12:12) அவர் இந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினாரா? ஆம்! எகிப்தியரின் கடவுட்களைத் தாழ்த்திடுவதற்காக யெகோவா பத்து வாதைகளைக் கொண்டுவந்தார். இந்தக் கடவுட்களில் எதுவுமே எகிப்தியரைப் பாதுகாக்க முடியவில்லை. பத்தாவது வாதை விசேஷமாகக் குறிப்பிடத்தக்கதாயிருந்தது, ஏனென்றால், பார்வோனின் முதல் குமாரன் உட்பட, அது எகிப்தியரின் முதற்பேறானவர்களைக் கொன்று போட்டது. இது அவர்களுடைய பிரதான தெய்வமாகிய ரா (அம்மோன் ரா) வுக்கு பலமான அடியாக இருந்தது, ஏனென்றால் எகிப்திய அரசர்கள் தங்களைக் கடவுட்களாகக் கருதினர், ரா-வின் குமாரர்களாகக் கருதினர். எகிப்தியர்களைப் பொருத்ததில், பார்வோனின் முதற்பேறானவனின் சாவு ஒரு தெய்வத்தின் சாவைக் குறிப்பதாயிருந்தது.
9 என்றபோதிலும், இஸ்ரவேலரின் முதற்பேறானவர்களில் ஒருவர்கூட மரிக்கவில்லை, ஏனென்றால் அவர்களுக்கு யெகோவாவின் பாதுகாப்பு இருந்தது. அதோடுகூட கடவுள் தம்முடைய மக்களுக்கு வாக்களித்திருந்த விடுதலையையும் அவர் அவர்களுக்குக் கொடுத்தார். எகிப்திய பொய் தெய்வங்களுக்கு ஒரு கடைசி அடியாக, பார்வோனும் அவனுடைய சேனையும்—அவர்கள் எல்லாரும்—செங்கடலில் அழிக்கப்பட்டனர். இப்படியாக யெகோவா தேவன் உண்மையுள்ள கடவுளாக நிரூபித்தார். அவர் கொடுத்த வாக்குத்தத்தங்கள் தாமே நிறைவேறின, அவருடைய வணக்கத்தார்தான் பாதுகாக்கப்பட்டனர். (யாத்திராகமம் 14:21-31) மறுபட்சத்தில், எகிப்திய கடவுட்கள் தங்களுடைய வணக்கத்தாருக்கு உதவியளிக்க முடியாதவையாய் சக்தியற்றிருந்தன. அந்தக் கடவுட்கள் முன்னால் எந்த சமயத்திலும் இருந்ததில்லை, ஆனால் மனிதரின் கண்டுபிடிப்புகளாகவே இருந்தன.
10 தேவத்துவத்தை உட்படுத்திய மற்றொரு வழக்கு எட்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் எசேக்கியா அரசனின் காலத்தில் முன்நிலைக்கு வந்தது.a தன்னுடைய வழியிலிருந்து சகல தேசங்களையும் மேற்கொண்ட கொடுமையான அசீரிய உலக வல்லரசால் யெகோவாவின் வணக்கத்தார் அச்சுறுத்தப்பட்டனர். அப்பொழுது அது எருசலேமை ஒப்புகொடுத்துவிடும்படி வற்புறுத்தியது. எருசலேம் “யெகோவாவின் சிங்காசனத்தைக்” கொண்டிருந்த நகரம், பூமியில் அவருடைய வணக்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்தது. (1 நாளாகமம் 29:23) அசீரியர்கள் ‘மற்ற அந்த தேசங்களையும் நாசமாக்கி அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது, ஏனென்றால் அவைகள் தேவர்கள் அல்ல, ஆனால் மனுஷர் கைவேலை’ என்று யூதாவின் அரசனாகிய எசேக்கியா ஒப்புக்கொண்டான்.—ஏசாயா 37:18, 19.
11 உண்மையுள்ளவனாய் நிரூபித்த எசேக்கியா யெகோவாவிடம் ஜெபித்தான். அவருடைய பாதுகாப்புக்காக விண்ணப்பித்தான். அசீரியரின் எந்த ஒரு ஆயுதமும் எருசலேமுக்கு எதிராக வாய்க்காமற்போம் என்று யெகோவா வாக்களித்திருந்தார். (ஏசாயா 37:33) அந்தத் தீர்க்கதரிசனத்தின்படி ஒரு ஆயுதமும் எருசலேமை தாக்கவில்லை. மாறாக, “யெகோவாவின் தூதன் வந்து அசீரியரின் பாளயத்திலே லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்.” அந்தப் படுதோல்விக்குப் பின்பு அசீரிய அரசனாகிய சனகெரிப் பின்வாங்கிப்போனான். பின்பு அவன் நிஸ்ரோக் என்ற தன்னுடைய தெய்வத்தைத் தொழுதுகொண்டிருக்கும்போது அவனுடைய குமாரர்கள் அவனைக் கொலைசெய்தார்கள். (ஏசாயா 37:36-38) இப்படியாக மீண்டும் யெகோவா தம்முடைய வணக்கத்தாரை மீட்கவல்ல உண்மையான தீர்க்கதரிசன கடவுளாக நிரூபித்தார். அசீரியாவின் கடவுளும் அதைச் சுற்றியுள்ள தேசங்களின் கடவுட்களும் பொய் என்றும், உயிரோடிருந்ததில்லை என்றும் தங்களைப் பின்பற்றியவர்களைப் பாதுகாக்க முடியாதவை என்றும் நிரூபிக்கப்பட்டது.
12 ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்பு, உண்மையற்றவர்களாக நிரூபித்த கடவுளுடைய மக்கள், அடுத்த உலக வல்லரசாகிய பாபிலோனில் அடிமைகளாக சிறைப்பட்டிருந்தனர். ஏராளமான தெய்வங்களும் தேவதைகளும் வணக்கத்துக்குரிய ஆலயங்களும் அதன் பிரதான அம்சமாக இருந்தது. ஆனால் தற்பெருமையை கொண்ட பாபிலோனிய அரசனாகிய பெல்ஷாத்சார் யெகோவாவைப் பரியாசம் பண்ணினான். ஒரு பெரிய விருந்தின்போது, எருசலேம் ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பரிசுத்த பாத்திரங்களைக் கொண்டுவரச் சொன்னான்: “அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள். அவர்கள் திராட்சரசம் குடித்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள்.”—தானியேல் 5:1-4.
13 இது யெகோவாவை நேரடியாக எதிர்ப்பதாகும், பாபிலோனிய தேவர்களின் பெயரில் அவரிடம் சவால்விடுவதாகும். இந்தச் சமயத்தில் அரசனாகிய பெல்ஷாத்சாருக்கு விருந்துக்கு வந்திருந்த எல்லாருக்கும் ஒரு தைரியமான சாட்சி பகருவதற்காக யெகோவா தானியேல் தீர்க்கதரிசியைப் பயன்படுத்தினார். தானியேல் யெகோவாவின் தேவத்துவத்தை ஓங்கச்செய்து பெல்ஷாத்சார் அரசனிடம் பின்வருமாறு சொன்னான்: “உமது இருதயத்தைத் தாழ்த்தாமல் பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர். . . . இதுவுமன்றி, தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும் உமது வழிகளுக்கெல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களை புகழ்ந்தீர்.”—தானியேல் 5:22, 23.
14 பின்பு தானியேல் யெகோவாவின் இந்தச் செய்தியை கூறினான்: இறுமாப்பு கொண்ட அரசனாகிய பெல்ஷாத்சாரும் பாபிலோனும் மேதியராலும் பெர்சியராலும் அன்று இரவே கவிழ்க்கப்படும்! (தானியேல் 5:24-27) இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியதா? ஆம், “அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான். மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக் கொண்டான்.” (தானியேல் 5:30, 31) எகிப்து மற்றும் அசீரியாவின் காரியங்களில் இருந்ததுபோலவே மீண்டும் யெகோவா தம்மை உண்மையுள்ள கடவுளாக தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும் கடவுளாக நிரூபித்தார். கடவுளுடைய ஊழியர்கள் நன்மை அடைந்தார்கள், ஏனென்றால் அவர்கள் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தங்கள் தேசத்துக்குத் திரும்பினார்கள். பொய்த் தேவர்களைத் தொடர்ந்து பின்பற்றியவர்கள் பேரழிவுக்குள்ளானார்கள்.
நம்முடைய காலத்துக்காக தீர்க்கதரிசனங்கள்
15 பூர்வகாலங்களில் நிறைவேற்றமடைந்த தீர்க்கதரிசனங்களைப் பதிவு செய்யும்படி ஏசாயா தீர்க்கதரிசி ஏவப்பட்டான். ஆனால் பைபிள் தீர்க்கதரிசனத்தில் நம்முடைய காலத்துக்கு சம்பந்தப்பட்ட இன்னொரு பெரிய நிறைவேற்றமும் இருக்கிறது. ஏசாயா எழுதிய பல காரியங்களைக் குறித்ததில் இது உண்மையாக இருந்தது. அவனுடைய செய்தியின் ஒரு பகுதி சகல தேசங்களுக்கும் அவற்றின் தெய்வங்களுக்கும் எதிராக யெகோவாவின் தற்கால சவாலை குறித்த தீர்க்கதரிசனங்களைக் கொண்டிருந்தது. “தெய்வங்கள்” அல்லது கடவுட்கள் என்ற வார்த்தையின் மூலம் நாங்கள் இன்றைய புறமத தேசங்கள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலுமுள்ள மக்களால் நேரடியாக வணங்கப்பட்டு வரும் கடவுட்களை மட்டும் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த வார்த்தையின் பொருளுக்குப் பொருந்தும் காரியங்களையும் குறிப்பிடுகிறோம். “கடவுள்” என்ற வார்த்தைக்கு ஓர் அகராதியின் விளக்கம்: “உண்மையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை அல்லது பகுதியை அடக்கியாளும் ஒருவர்; உன்னத மதிப்புடைய ஒரு ஆள் அல்லது பொருள்.”
16 இன்று கடவுட்களாக மதிக்கப்படுபவை இந்துக்கள் வணங்கும் பலகோடி தெய்வங்களையும், புத்தர்கள், ஷின்டோ மதத்தினர், ஆவியுலக கோட்பாட்டாளர் மற்றும் மற்ற மதத்தினர் வணங்கும் தெய்வங்களையும் உட்படுத்துகிறது. இது பொருளாசை என்ற தெய்வத்தையும் உட்படுத்துகிறது. இந்தக் காரியம் பூமியிலுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு உன்னத மதிப்புடையதாய், அவர்களுடைய வாழ்க்கையில் பிரதான நோக்கமுடையதாய் இருக்கிறது. பாதுகாப்புக்கும் இரட்சிப்புக்கும் இராணுவ வலிமை மற்றும் விஞ்ஞான தெய்வங்களையும் இது உட்படுத்துகிறது. உண்மைதான், கடவுளை நம்புவதாகச் சொல்லும் கிறிஸ்தவ மண்டலத்திலும் பெரும்பான்மையினர் அவரை உண்மையிலேயே நம்புவதில்லை அல்லது உண்மையோடு சேவிப்பதில்லை, மாறாக தங்களுடைய அடிப்படை பற்றுறுதிக்குரிய பொருட்களாக அவர்கள் மக்களை அல்லது பொருட்களை நம்பி சேவிக்கிறார்கள்.
17 நம்முடைய காலத்திலிருக்கும் அப்படிப்பட்ட கடவுட்களுக்கெல்லாம் ஏசாயா அறிவித்த செய்தியின் பெரிய நிறைவேற்றம் எடுத்துக் காட்டப்படுகிறது. தங்களை ஒன்று சேர்த்துப் “பேசும்”படியாக யெகோவா தேசிய தொகுதிகளிடம் கூறுகிறார். “நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம்,” என்று அவர் சவாலிடுகிறார். (ஏசாயா 41:1) இன்று நாம் இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படும் காலத்தில் வாழ்கிறோம். 2 தீமோத்தேயு 3:1-5 மற்றும் மத்தேயு 24:1-14-ல் முன்னறிவித்தபடி இது அதின் கடைசி நாட்களில்” இருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் யெகோவா தேசங்களின் தெய்வங்களுக்கு சவால் விடுகிறார். எதிர்காலத்தை திருத்தமாக முன்னறிவிக்கும்படியாகவும் இப்படியாகத் தாங்கள் கடவுட்கள் என்பதை நிரூபிக்கும்படியாகவும் சொல்லுகிறார். தங்களால் முடிந்தால் தங்களைப் பின்பற்றுகிறவர்களைப் பாதுகாக்கும்படியும் அவர் சவால்விடுகிறார். “வாதத்துக்கிடமான உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள்,” என்று கூறுகிறார். “உங்கள் வாதுரைகளை வழங்குங்கள் . . . சம்பவிக்கப் போகிறவைகளை எங்களுக்குச் சொல்லுங்கள்.”—ஏசாயா 41:21, 22, NW.
18 சர்வவல்லமையுள்ள கடவுள் தம்மை யார் என்று குறிப்பிட்டுக் காண்பிக்கிறார்: “நானே யெகோவா, என் நாமம் இதுவே, என் மகிமையை மற்றவர்களுக்கும் என் புகழை விக்கிரகங்களுக்கும் கொடேன்.” (ஏசாயா 42:8, தி.மொ.) தம்மைப் பற்றியிருப்பவர்களைக் குறித்து பின்வருமாறு சொல்லுகிறார்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னை பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்.” அவர் பின்வருமாறு வாக்களிக்கிறார்: “உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற் போவார்கள்.” “உனக்கு விரோதமாய்ச் செய்யப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். . . . அது யெகோவாவின் தாசருடைய சுதந்தரம்.”—ஏசாயா 41:10, 11; 54:17.
19 வெகு காலமாக, பல நூற்றாண்டுகளாக யெகோவா தேசங்களைத் தங்களுடைய சொந்த வழிகளில் தொடர அனுமதித்துவிட்டார். என்றபோதிலும் பூமியில் காரியங்களைச் சீர்ப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட காலம் நெருங்கிவிட்டது. எனவே அவர் சொல்கிறதாவது: “நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக் கொண்டிருந்தேன்.” ஆனால் இப்பொழுதோ, “யெகோவா பராக்கிரமசாலியைப் போல் புறப்பட்டு யுத்த வீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்சித்து தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.” (ஏசாயா 42:13, 14, தி.மொ.) ஏசாயா தீர்க்கதரிசனங்களிலும் மற்ற பைபிள் எழுத்தாளர்களின் தீர்க்கதரிசனங்களிலும், இயேசுவின் தீர்க்கதரிசனங்களிலும் இந்தக் கடைசி நாட்களில் தமக்காக வைராக்கியமாய்ச் சாட்சி சொல்வதற்கு, ஒரு நீதிமன்ற வழக்கில் சாட்சிகளைப் போன்று ஒரு ஜனத்தாரை எழுப்புவதாக யெகோவா வாக்களித்திருக்கிறார்.
20 யெகோவாவை சேவிக்க அவர் ஏற்படுத்தும் மக்கள் அவர்தான் உண்மையுள்ள கடவுள், அவரை வணங்குகிறவர்களின் இரட்சகர், பொய்க் கடவுட்களையும் அவற்றைப் பின்பற்றுகிறவர்களையும் அழிப்பவர் என்பதற்கு அத்தாட்சிகளை வழங்குவர். யெகோவாவின் மக்கள் இன்று ‘பூமியின் கடையாந்தரத்திலிருந்து தேசங்களிலும் தீவுகளிலுமிருந்தும், பர்வதங்களின் கொடுமுடியிலிருந்தும் அவருடைய துதியைப் பாடுகிறார்கள்.’ (ஏசாயா 42:10-12) இது ஏசாயாவின் மற்றொரு தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்றுகிறது. அது முன்னுரைத்ததாவது: “கடைசி நாட்களில் [நம்முடைய காலத்தில்] யெகோவாவின் ஆலயமுள்ள பர்வதம் [அவருடைய உண்மை வணக்கம்] பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு மலைகளுக்கு மேலாய் [மற்ற எல்லா வகையான வணக்கத்துக்கும் மேலாய்] உயர்த்தப்படும். எல்லா ஜாதிகளும் [எல்லா தேசங்களிலிருந்தும் மக்கள்] அதற்கு ஓடிவருவார்கள்.” அவர்கள் மற்றவர்களை என்ன செய்யும்படி துரிதப்படுத்துகிறார்கள்? நேர்மை இருதயமுள்ள ஆட்களிடம், “நாம் யெகோவாவின் பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்,” என்று பரிந்துரைக்கிறார்கள்.—ஏசாயா 2:2-4, தி.மொ.
21 இப்படியாக, ஒரு நீதிமன்றத்தில் பேசுவதுபோல், யெகோவா பின்வருமாறு சொல்லுகிறார்: “சகல ஜாதிகளும் [தேசங்களும், NW] ஏகமாய்ச் சேர்ந்துகொண்டு சகல ஜனங்களும் கூடிவரட்டும் . . . கேட்பவர்கள் உண்மையென்று சொல்லும்படி அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து தங்களைக் குற்றமற்றவர்களென்று காட்டட்டும்.” (ஏசாயா 43:9, தி.மொ.) இது தேசங்களின் கடவுட்களுக்கு ஒரு நேரடியான சவாலாக இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்பதை அவற்றில் எவையேனும் சொல்ல முடியுமா? கடந்த காலங்களில் இதைச் செய்ய முடிந்ததா? அப்படிப்பட்ட கடவுட்கள் உண்மையாகவும் நம்முடைய பற்றுறுதிக்குத் தகுதியாகவும் நிரூபித்திருக்கின்றன என்பதற்குப் பலமான ஆதாரத்தோடுகூட சாட்சி கொடுப்பதற்கு அவை ஒரு நபரையாவது கண்டுபிடிக்க முடியுமா? தேசங்களின் கடவுட்களும் அவற்றின் சீடர்களும் நம்முடைய காலத்தில் என்ன பதிவை ஏற்படுத்தியிருக்கின்றனர்? பூர்வ எகிப்தியரின், அசீரியரின் மற்றும் பாபிலோனியரின் கடவுட்கள் ஏற்படுத்தியிருப்பவற்றைவிட மேன்மையானதாக இருந்திருக்கிறதா? மறுபட்சத்தில் யெகோவாவுக்கு சாட்சி கொடுக்கும் ஆட்கள் யெகோவாதான் உண்மையான கடவுள், நம்முடைய வணக்கத்துக்குப் பாத்திரரான ஒரே கடவுள் என்பதற்கு யெகோவாவுக்கு சாட்சி பகரும் ஆட்கள் பலமான அத்தாட்சியை அளித்திருக்கின்றனரா? பின்வரும் கட்டுரை இந்தக் காரியங்களைக் கலந்தாலோசிக்கும். (w88 2⁄1)
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம் பத்திரிகையின் ஆகஸ்ட் 1 வெளியீடு, எசேக்கியா யெகோவாவில் கொண்டிருந்த நம்பிக்கைக்கு அவர் எப்படி பலனளித்தார் என்பதை சிந்தித்தது. அந்தக் கிளர்ச்சி மிகுந்த சம்பவங்களும் தேவத்துவத்தை உட்படுத்தியது.
விமர்சனக் கேள்விகள்
◻ சர்வலோக அரசுரிமை விவாதம் என்பது என்ன?
◻ இன்று இந்த விவாதத்தில் தேசங்களின் எந்தக் கடவுட்கள் உட்பட்டிருக்கின்றன?
◻ மூன்று சோதனை வழக்குகளின் என்ன முடிவுகள் யெகோவா பொய்க் கடவுட்களுக்கு மேலானவர் என்பதைக் காண்பிக்கிறது?
◻ யெகோவா நம்முடைய நாளில் காரியங்களை சீர்படுத்துவார் என்பதை ஏசாயா எப்படி காண்பிக்கிறான்?
◻ அனைத்து மத பக்தர்களையும் குறித்த என்ன கேள்விகள் பதிலளிக்கப்பட வேண்டும்?
[கேள்விகள்]
1, 2. (எ) விவாதிக்கப்பட்டு வரும் மிக முக்கியமான நீதிமன்ற வழக்கில் உட்பட்டிருப்பது யார்? (பி) விவாதத்துக்குரிய காரியம் என்ன?
3. சர்வலோக அரசுரிமை சம்பந்தப்பட்ட விவாதத்துக்கு என்ன கேள்விகள் அடிப்படையாக இருக்கின்றன?
4. தாங்கள் ஏற்கனவே கடவுளை நம்புவதால் எந்த ஒரு விவாதமும் இல்லை என்று சொல்லுகிறவர்களைப் பற்றி என்ன சொல்லப்படலாம்?
5. தங்களுக்கிருக்கும் கடவுள் நம்பிக்கையின் ஆதரவாக அத்தாட்சி அளிக்க முடியாதிருக்கும் ஆட்களை யாருக்கு ஒப்பிடலாம்?
6, 7. (எ) பூர்வ எகிப்தியரின் மதத்தை விளக்குங்கள். (பி) யெகோவாவுக்கும் எகிப்திய கடவுட்களுக்கும் இடையே இருந்த விவாதத்தில் இஸ்ரவேலர் எப்படி உட்பட்டிருந்தனர்?
8, 9. (எ) எகிப்திய கடவுட்களின் மீது தம்முடைய மேன்மையை யெகோவா எப்படி நிரூபித்துக் காட்டினார்? (பி) நடந்த சம்பவங்களைக் கவனிக்கும்போது, எகிப்திய கடவுட்களைக் குறித்து என்ன சொல்லப்பட வேண்டும்?
10. யெகோவாவின் வணக்கத்தாரையும் அசீரியாவையும் எதிர்பட்ட விவாதம் என்ன?
11. யெகோவா தம்முடைய வணக்கத்தாரை எவ்வாறு மீட்டார்? இது எதை விளக்கிக் காண்பித்தது?
12. பெல்ஷாத்சார் எவ்விதம் யெகோவாவை பரியாசம் பண்ணினான்?
13. பெல்ஷாத்சாரிடம் என்ன சொல்லும்படியாக யெகோவா தானியேலை ஏவினார்?
14. தாம் மட்டுமே உண்மையான கடவுள் என்பதை யெகோவா எப்படி செயல்பூர்வமாய் விளக்கிக் காட்டினார்?
15. பல பைபிள் தீர்க்கதரினங்களில் என்ன அம்சம் காணப்படுகிறது? (பி) ‘கடவுள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது எதையும் குறிப்பிடுகிறோம்?
16. கிறிஸ்தவ மண்டலம் உட்பட தேசங்களின் மக்கள் இன்று என்ன கடவுட்களை வணங்குகின்றனர்?
17. ஏசாயாவின் செய்தி என்ன பெரிய நிறைவேற்றத்தைக் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது?
18. சர்வவல்லமையுள்ள தேவன் தம்மை எப்படி அடையாளங் காட்டுகிறார்? தம்முடைய வணக்கத்தாருக்கு என்ன வாக்களித்திருக்கிறார்?
19, 20. (எ) காரியங்களை சீர்படுத்திட யெகோவா ஒரு குறிப்பிட்ட காலத்தை நியமித்திருக்கிறார் என்பதை ஏசாயா எவ்விதம் காண்பிக்கிறார்? (பி) இந்தக் “கடைசி நாட்களில்” யெகோவா யாரைக் கொண்டு வருகிறார்? அவர்கள் அவரை எவ்வாறு பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்?
21. தேசங்களின் கடவுட்களுக்கு எதிராக யெகோவா எழுப்பியிருக்கும் சவாலால் என்ன கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
[பக்கம் 12-ன் படம்]
உண்மையான கடவுளாகிய யெகோவாவுக்கு முன்பாக எகிப்திய கடவுட்கள் சக்தியற்றவையாய் இருந்தன
[பக்கம் 13-ன் படம்]
அசீரியாவின் கடவுட்களும் அவற்றின் பக்தர்களும் உண்மையான கடவுளுடைய கரத்தில் படுதோல்வி கண்டனர்
[பக்கம் 14-ன் படம்]
பாபிலோனிய பொய்க் கடவுட்களின் வணக்கத்தாருக்கு தானியேல் யெகோவாவின் செய்தியை அறிவித்தான்