தீங்கிழைக்கும் வீண்பேச்சுக்கு—எதிராக எச்சரிக்கையுடன் இருங்கள்!
“சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.”—நீதிமொழிகள் 10:19.
1. தீய நோக்கமுடைய வீண்பேச்சு, அல்லது பழிதூற்றுதல் எவ்வளவு சேதமுண்டாக்கும்?
கொல்லுகிற நஞ்சை ஓர் ஆரோக்கியகரமான பானமாக எதுவும் மாற்ற முடியாது. தீய நோக்கமுடைய வீண்பேச்சு, அல்லது பழிதூற்றுதல் பொருத்தமாக நஞ்சிற்கு ஒப்பிடப்பட்டுள்ளது, அது நேர்மையான ஓர் ஆளின் நற்பெயரையும் எடுத்துவிடும். ரோம கவிஞர் ஜுவெனல் பழிதூற்றுதலை, “எல்லா நஞ்சுகளிலும் மிக மோசமானது” என்றழைத்தார். ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் தன் நாடக பாத்திரங்களில் ஒருவர் பின்வருமாறு சொல்வதாக எழுதினார்: “என்னிடமிருந்து என் நற்பெயரை திருடுபவன் அதனால் செல்வம் பெறப் போவதில்லை, ஆனால் அது உண்மையில் என்னை ஏழையாக்குகிறது.”
2. என்ன கேள்விகள் சிந்திப்பதற்கு தகுதிவாய்ந்ததாய் இருக்கின்றன?
2 ஆனால் வீண்பேச்சு என்றால் என்ன? அது பழிதூற்றுதலில் இருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது? தீங்கிழைக்கும் வீண்பேச்சிற்கு எதிராக ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? இது எவ்வாறு செய்யப்படலாம்?
அவை எவ்வாறு வித்தியாசப்படுகின்றன
3. வீண்பேச்சுக்கும் பழிதூற்றுதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
3 வீண்பேச்சு என்பது “மற்ற ஆட்களையும் அவர்களுடைய அலுவல்களையும் பற்றிய சில சமயங்களில் உண்மையற்ற பயனில பேச்சு.” இது “இலேசான, அறிமுகமான பேச்சாக அல்லது எழுத்தாக” இருக்கிறது. நாம் அனைவருமே ஜனங்களில் அக்கறையுள்ளவர்களாக இருப்பதனால், மற்றவர்களைப் பற்றி நல்ல, கட்டியெழுப்பும் காரியங்களை சில சமயங்களில் சொல்கிறோம். பழிதூற்றுதல் வித்தியாசமாய் இருக்கிறது. இது “மற்றொருவருடைய நற்பெயருக்கும் நன்மதிப்புக்கும் தீங்கிழைக்கும் நோக்கோடு உள்ள ஒரு பொய் அறிக்கை.” இப்பேர்ப்பட்ட பேச்சு பொதுவாக தீய நோக்கமுடையதாக மேலும் கிறிஸ்தவமற்றதாக இருக்கிறது.
4. ஓர் எழுத்தாளனின் பிரகாரம், பழிதூற்றுதல் எவ்வாறு ஆரம்பிக்கலாம், மேலும் அது எதிலிருந்து துவங்குகிறது?
4 தீங்கற்ற வீண்பேச்சு ஒருவேளை கொடிய பழிதூற்றுதலாக மாறலாம். எழுத்தாளர் ஆர்த்தர் மீ சொன்னார்: “ஒரு மனிதனை புண்படச் செய்யும் பழிதூற்றுதல் பெரும்பாலும் அவருக்கு அழிவை கொண்டுவரக்கூடும், இது வீண்பேச்சில் ஆரம்பமாகிறது. இந்த வீண்பேச்சு முதலில் மோசமான எதிலிருந்தும் இல்லாமல் சோம்பேறித்தனத்திலிருந்து உருவாகிறது. உலகிலேயே மிகப் பெரிய கேடாக இது இருக்கிறது, ஆனால் இது ஒரு நிபந்தனையாக அறியாமையிலிருந்து தோன்றுகிறது. வெகு சிறிதே செய்வதற்கிருப்பவர்கள் மற்றும் வாழ்க்கையில் முக்கியமான குறிக்கோள் இல்லாதவர்களிடையே முக்கியமாக இதை நாம் காண்கிறோம்.”
5. 1 தீமோத்தேயு 5:11-15-ல் உள்ள பவுலின் புத்திமதியின் சாரம் என்ன?
5 வீண்பேச்சு பழிதூற்றுதலுக்கு வழிநடத்தக்கூடும், அப்போஸ்தலனாகிய பவுல் வீண்பேச்சு பேசுகிற சிலருக்கு எதிராகப் பேசினார். சபையின் உதவியைப் பெற தகுதியுள்ள விதவைகளைப் பற்றி குறிப்பிட்ட பிறகு, அவர் எழுதினார்: “இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங்கொள்ளும்போது . . . அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய் வீடு வீடாய்த் திரியப் பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள். ஆகையால் இளவயதுள்ள விதவைகளை விவாகம் பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன். ஏனெனில் இதற்கு முன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப் போனார்கள்.”—1 தீமோத்தேயு 5:11-15.
6. பழிதூற்றுதலுக்கு வழிநடத்தக்கூடிய வீண்பேச்சு பேசும் தனிப்பட்ட பலவீனத்தை மேற்கொள்ள என்ன செய்யவேண்டும்?
6 பவுல் தெய்வீக ஏவுதலின் கீழ் எழுதினதினால், அந்தப் பெண்களைப் பற்றி அவர் நேர்மையற்ற குறிப்புகளை சொல்லவில்லை. அவர் சொன்னது அதிக கவனமான சிந்தனைக்குரிய விஷயமாயிருக்கிறது. எந்தத் தெய்வீகப் பெண்ணும் ‘சாத்தானைப் பின்பற்றி விலகிப் போக’ விரும்ப மாட்டாள். என்றபோதிலும், பழிதூற்றும் குற்றமுள்ளவளாக தன்னை ஆக்கும் பேச்சையுடைய பலவீனம் தனக்கிருக்கிறது என்பதை ஒரு கிறிஸ்தவ பெண் கண்டால் என்ன? அப்பொழுது அவள் பவுலின் அறிவுரைக்கு தாழ்மையாய் செவிகொடுக்க வேண்டும்: “ஸ்திரீகள் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறு பண்ணாதவர்களுமாய் [பழிதூற்றாதவர்களுமாய், NW] இருக்க வேண்டும்.” அவர் மேலும் சொன்னார்: “முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்ற விதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களுமாயிருக்க [பழிதூற்றாதவர்களுமாயிருக்க, NW] வேண்டும்.” (1 தீமோத்தேயு 3:11; தீத்து 2:3) அந்த ஞானமான ஆலோசனையை சகோதரர்களும் ஆழ்ந்த கவனத்தோடு பொருத்த வேண்டும்.
7. வேதப்பூர்வமாக நாம் அனைவருமே நம் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும் என்று நீங்கள் ஏன் சொல்வீர்கள்?
7 சில சமயங்களில் நாம் அனைவரும் மற்ற ஆட்களைப் பற்றி, ஊழியத்தில் அவர்களுடைய அனுபவங்கள் மேலும் அதைப் போன்ற காரியங்களைப் பேசுகிறோம். என்றபோதிலும், நாம் ஒருபோதும் ‘உட்கார்ந்து நம் சகோதரனுக்கு விரோதமாய் பேசக்’கூடாது. (சங்கீதம் 50:19, 20) உண்மையில், மிக அதிகமாக பேசுவது ஞானமானதல்ல, ஏனென்றால் “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.” (நீதிமொழிகள் 10:19) ஆகையால் நாம் வீண்பேச்சுக்கு எதிராக கவனமாயிருக்க வேண்டும், அது தீங்கிழைப்பதாக இல்லாமல் தோன்றினாலும்கூட கவனமாயிருக்க வேண்டும். எல்லாச் சமயங்களிலும் ஆட்களைப் பற்றி பேசுவதற்கு நமக்கு எந்தத் தேவையுமில்லை, ஏனென்றால் நீதியுள்ளவைகள், கற்புள்ளவைகள், அன்புள்ளவைகள், நற்கீர்த்தியுள்ளவைகள் மேலும் புகழத்தக்க காரியங்களை நாம் சிந்தித்துப் பார்த்தால் நமக்கு தேர்ந்தெடுப்பதற்கு சிறந்த பேச்சுப் பொருள்கள் இருக்கின்றன.—பிலிப்பியர் 4:8.
வீண்பேச்சு எவ்வாறு பழிதூற்றுதலாக ஆகிறது
8. உடன் கிறிஸ்தவர்களைப் பற்றி பேசுவது ஏன் எப்போதுமே தவறானதாயில்லை?
8 நாம் சொல்வது திருத்தமாகவும், அதனால் எந்தப் புண்படுத்தும் விளைவுகளும் ஏற்படாமலும் இருந்தால், உடன் விசுவாசிகளின் வெளி ஊழியம் மேலும் மற்ற தெய்வீக வேலைகளைப் பற்றி பேசுவதில் ஒரு தீங்குமில்லை. உண்மையில், இவ்விதமான உடன்பாடான குறிப்புகள் மற்றவர்களை ஒருவேளை உற்சாகப்படுத்தும். (அப்போஸ்தலர் 15:30-33-ஐ ஒப்பிடுக.) சில கிறிஸ்தவர்கள் விசுவாசமுள்ள மூப்பனாகிய காயுவைப் பற்றி பேசினார்கள், அவருக்கு அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார்: “பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய். அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்கு முன்பாகச் சாட்சி சொன்னார்கள்.” (3 யோவான் 5, 6) ஆகையால், உடன் கிறிஸ்தவர்களைப் பற்றி பேசுவது எப்பொழுதும் தவறு என்பது இல்லை.
9. (எ) இலேசான பயனில பேச்சு எவ்வாறு நேர்மையானவரைப் பற்றிய பழிதூற்றுதலாக மாறக்கூடும்? (பி) நம்மை நாமே என்ன பொருத்தமான கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம்?
9 என்றபோதிலும், இலேசான பேச்சு நேர்மையானவர்களை பழிதூற்றும் பேச்சாக மாறலாம். அவர்களுடைய தனிப்பட்ட விவகாரங்களை ஆழ்ந்து சோதிப்பது, அவர்களுடைய உள்நோக்கங்களை கேள்வி கேட்பது அல்லது அவர்களுடைய நடத்தையைப் பற்றி சந்தேகங்களை எழுப்புவது ஆகியவற்றை செய்தால் அவ்விதம் மாறலாம். நாம் நம்மையே இப்பேர்ப்பட்ட கேள்விகளைக் கேட்கும் பழக்கத்திற்கு உட்படுத்தலாம்: என் பேச்சு மற்றொருவருடைய நற்பெயரை கெடுக்குமா? நான் சொல்வது உண்மைதானா? (வெளிப்படுத்துதல் 21:8) இதேக் காரியத்தை அவருக்கெதிரில் நான் சொல்வேனா? இது சபையில் ஐக்கியமின்மையை பரப்புமா? என் கூற்றுகள் அவர் ஊழிய சிலாக்கியங்களை இழக்கும்படி செய்யுமா? என் இருதயத்தில் பொறாமை இருக்கக்கூடுமா? (கலாத்தியர் 5:25, 26; தீத்து 3:3) என் வார்த்தைகளின் பலன் நன்மையாக இருக்குமா அல்லது தீமையாக இருக்குமா? (மத்தேயு 7:17-20) அப்போஸ்தலர்களைப் பற்றி நான் இதே போன்ற காரியங்களை சொல்லியிருப்பேனா? (2 கொரிந்தியர் 10:10-12; 3 யோவான் 9, 10) யெகோவாவுக்கு பயபக்தியைக் கொண்டிருப்பவர்களுக்கு இப்பேர்ப்பட்ட பேச்சு தகுதியானதாக இருக்குமா?
10, 11. சங்கீதம் 15:1, 3-ன்படி நாம் கடவுளுடைய விருந்தினராக இருக்க விரும்பினால் என்ன செய்ய மாட்டோம்?
10 கடவுளுக்குப் பயபக்தியைக் காட்டுபவர்களுக்கு குறிப்பாக சங்கீதம் 15:1 கேட்கிறது: “கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?” அப்பேர்ப்பட்ட ஆளைக் குறித்து சங்கீதக்காரனாகிய தாவீது பதிலளிக்கிறார்: “அவன் தன் நாவினால் புறங்கூறாமலும் (பழிதூற்றாமலும், NW) தன் தோழனுக்குத் தீங்கு செய்யாமலும், தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.” (சங்கீதம் 15:3) இங்கே “பழிதூற்றுதல்” என்ற இவ்வார்த்தை “நடப்பது” அல்லது “அங்குமிங்கும் சொல்லித் திரிவது” என்ற அர்த்தமுள்ள எபிரெய வினைச்சொல்லிலிருந்து வருகிறது. இஸ்ரவேலர்கள் கட்டளையிடப்பட்டனர்: “உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் [பழித்தூற்றி, NW] திரியாயாக.” (லேவியராகமம் 19:16) ‘பழிதூற்றுதலை பரப்பிக் கொண்டிருக்கிற’ எவரும் கடவுளுடைய விருந்தினராகவும், நண்பராகவும் இருப்பதில்லை.
11 கடவுளின் நண்பர்கள் தங்கள் தோழர்களுக்கு எந்தத் தீங்கையும் செய்யமாட்டார்கள், தங்களுக்கு அறிமுகமான நேர்மையானவர்களைப் பற்றி எந்த அவதூறான கட்டுக்கதைகளையும் உண்மையென ஏற்றுக்கொள்ளவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ மாட்டார்கள். உடன் விசுவாசிகளைப் பற்றி பொய்யான கதைகளை பரப்பி, அவர்கள் ஏற்கெனவே தேவ பக்தியற்றவர்களால் அனுபவிக்கும் தீங்கான அவதூறுகளோடு கூட்டுவதற்கு பதிலாக நாம் அவர்களைப் பற்றி நல்ல காரியங்களைப் பேச வேண்டும். அவர்களைப் பற்றி அவதூறான காரியங்களைச் சொல்வதன் மூலம், நம் விசுவாசமுள்ள சகோதரர், சகோதரிகளின் பாரங்களை அதிகரிக்க நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம்.
சிக்கல்கள் எழும்புகையில்
12. நம்மோடு கருத்து வேறுபாடுள்ள ஓர் ஆளைப் பற்றி வதந்தி பரப்புவதற்கு நாம் தூண்டப்பட்டால் அப்போஸ்தலர் 15:36-41 நமக்கு எவ்வாறு உதவி செய்யும்?
12 அபூரணராக இருப்பதனால், நம்மோடு வினைமையான கருத்து வேறுபாடு கொண்ட நபருக்கு விரோதமாய்ப் பேசுவதற்கு நாம் ஒருவேளை தூண்டப்படலாம். அப்போஸ்தலனாகிய பவுல் தனது இரண்டாவது மிஷனெரி பயணத்தை தொடங்கும் சமயத்தில் என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மாற்கு தன்னோடு வருவதற்கு பர்னபா மிக உறுதியாக இருந்தபோதிலும் பவுல் ஒத்துக்கொள்ளவில்லை, ஏனென்றால், “அவன் [மாற்கு] பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக் கொண்டு போகக்கூடாது என்றான்.” அதனால் “கடுங்கோபமூண்டது.” அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா தன்னோடு மாற்குவை கூட்டிக்கொண்டு சீப்புரு தீவுக்குப் போனான், பவுலோ சீலாவோடு சீரியாவுக்கும், சிலிசியாவுக்கும் சென்றார். (அப்போஸ்தலர் 15:36-41) பின்பு பவுல், பர்னபா மற்றும் மாற்குவுக்கு இடையே ஏற்பட்ட முறிவு குணமாகியிருக்க வேண்டும், ஏனென்றால் மாற்கு பவுல் அப்போஸ்தலனோடு ரோமில் இருந்தார், மேலும் பவுல் அவரைப் பற்றி நன்றாகப் பேசினார். (கொலோசெயர் 4:10) கருத்து வேறுபாடு இருந்தபோதிலும், அந்தக் கிறிஸ்தவர்கள் எங்கும் சென்று உடன் விசுவாசிகள் மத்தியில் ஒருவரைப் பற்றி ஒருவர் வதந்தி பரப்பினதாக எந்த அத்தாட்சியும் இல்லை.
13. பேதுருவை உட்படுத்திய என்ன சூழ்நிலைகளின் கீழ் பவுல் ஓர் உடன் கிறிஸ்தவனைப் பற்றி வதந்தி பரப்புவதற்கு சாத்தியமான ஒரு சோதனையை எதிர்த்தார்?
13 எருசலேமிலிருந்து வந்த சில யூத கிறிஸ்தவர்கள் இருந்ததன் காரணமாக, புறஜாதி விசுவாசிகளுடன் உண்பதற்கும், அவர்களோடு கூட்டுறவு கொள்வதற்கும் வெட்கப்பட்ட பேதுருவை கடிந்துகொண்டபோது, பவுலும்கூட சேதமுண்டாக்கும் வதந்தி பரவச் செய்விக்கும் சோதனையை எதிர்ப்பட்டார். பேதுருவைப் பற்றி பின்னால் பேசுவதற்கு பதிலாக, பவுல் “முகமுகமாய் அவனோடே எதிர்த்து, எல்லாருக்கும் முன்பாக” பேசினார். (கலாத்தியர் 2:11-14) பேதுருவும் தன்னைக் கடிந்து கொண்டவரைப் பற்றி வீண்பேச்சு பேசவில்லை. உண்மையில், பின்பு அவரை “நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுல்” என்று குறிப்பிட்டார். (2 பேதுரு 3:15) ஆகையால் ஓர் உடன் விசுவாசியை திருத்துவதற்கான தேவை இருந்தபோதிலும், இது அவரைப் பற்றி வீணுரையாடுவதற்கு எந்தச் சாக்குப்போக்கையும் ஏற்படுத்துவதில்லை. இப்பேர்ப்பட்ட பேச்சிற்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்கவும் தீங்கிழைக்கும் வீண்பேச்சைப் பரப்புவதற்கான சோதனையை எதிர்ப்பதற்கும் மிக நல்ல காரணங்கள் இருக்கின்றன.
ஏன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?
14. தீங்கிழைக்கும் வீண்பேச்சுக்கு செவிகொடுக்கவோ அல்லது அதை பரப்பவோ கூடாது என்பதற்கு முக்கியமான காரணம் என்ன?
14 தீங்கிழைக்கும் வீண்பேச்சுக்கு செவிகொடுக்கவோ அல்லது அதைப் பரப்புவதில் பங்குகொள்ளவோ ஏன் கூடாது என்பதற்கு முக்கியமான காரணம், பழிதூற்றுதலை கண்டனம் செய்கிற யெகோவாவை நாம் பிரியப்படுத்த விரும்புகிறோம். குறிப்பிட்டபடி, அப்பேர்ப்பட்ட பேச்சை கடவுள் எவ்விதம் நோக்குகிறார் என்பது இஸ்ரவேலர்கள் கட்டளையிடப்பட்டபோது தெளிவாக்கப்பட்டது: “உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள் சொல்லித் [பழித்தூற்றி, NW] திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்பட வேண்டாம்; நான் கர்த்தர். (யெகோவா, NW)” (லேவியராகமம் 19:16) தெய்வீக தயவை நாம் அனுபவித்து மகிழ வேண்டுமென்றால், சம்பாஷணைகளில் நாம் குறிப்பிடும் எவரையும் பழிதூற்றக்கூடாது.
15. முதன்மையான பழித்தூற்றுபவன் யார், தீங்கிழைக்கும் வீண்பேச்சில் ஈடுபடுவது நமக்கு கடவுளோடு இருக்கும் உறவில் என்ன பாதிப்பை உடையதாயிருக்கும்?
15 தீங்கிழைக்கும் வீண்பேச்சில் ஈடுபடாததற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், முதன் முதலாக யெகோவாவை பழிதூற்றின சாத்தானை பின்பற்றுவதற்கு அது வழிநடத்தும். கடவுளின் இந்த முதல் எதிரி பொருத்தமாகவே “பிசாசு” (கிரேக்கு, டயபோலோஸ்) என்று பேர் கொடுக்கப்பட்டிருக்கிறான், அதன் அர்த்தம் “பழிதூற்றுபவன்.” ஏவாள் கடவுளுக்கு விரோதமான சாத்தானின் பழிதூற்றும் பேச்சிற்கு செவிகொடுத்து அதன் பேரில் செயல்பட்டபோது, முதல் மானிட ஜோடி தங்களுடைய மிகச் சிறந்த நண்பரிடமிருந்து பிரிக்கப்பட்டனர். (ஆதியாகமம் 3:1-24) தெய்வீக அங்கீகாரத்தை இழக்கச் செய்து, நம் மிகச் சிறந்த நண்பராகிய யெகோவா தேவனிடமிருந்து நம்மை பிரித்துவிடக்கூடிய தீங்கிழைக்கும் பேச்சிற்கு உட்படாமலும், சாத்தானின் தாக்குதல்களுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காமலும் இருப்போமாக.
16. பழிதூற்றுபவன் எவ்வாறு ‘ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களை பிரித்து விடுகிறான்’?
16 தீய நோக்கத்தோடு வீண்பேச்சு பேசுபவர்களுக்கு நாம் செவிகொடுக்கக்கூடாது, ஏனென்றால் அவர்கள் நண்பர்களை பிரித்து விடுகின்றனர். பழிதூற்றுபவர்கள் அடிக்கடி மிகைப்படுத்தி, தவறாக எடுத்துரைத்து, பொய் பேசி, உணர்ச்சியை கிளறிவிடக்கூடிய வார்த்தைகளை மலையாகக் குவிக்கின்றனர். முகமுகமாய் ஒரு நபரோடு பேசுவதற்குப் பதிலாக, அவர்கள் அவருக்குப் பின்னால் மறைமுகமாகப் பேசுவர். ஆதாரமற்ற சந்தேகங்கள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. ஆக, “கோள் சொல்லுகிறவன் [பழிதூற்றுபவன், NW] பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.”—நீதிமொழிகள் 16:28.
17. இலேசான பயனில பேச்சில் ஆழமாக உட்பட்டுவிடுவதற்கு எதிராக நாம் ஏன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?
17 இலேசான பயனில பேச்சிலும் ஆழமாக உட்பட்டுவிடுவதற்கு எதிராக நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏன்? ஏனென்றால் எவரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்படாத ஒரு குறிப்பும் திரும்பத் திரும்ப சொல்லப்படும்பொழுது ஒருவேளை புண்படுத்துவதாகிவிடும். அது ஒருவேளை கற்பனை செய்யப்பட்டு அல்லது திரித்து கூறப்பட்டு கடவுள் பற்றுடைய ஒருவரின் நன்மதிப்பை சேதப்படுத்தி, அவருடைய நற்பெயரை திருடி விடுகிறது. அப்படி நடந்தால், அந்தக் கதையை ஆரம்பித்தது அல்லது அதை கடத்திச் சென்றது நீங்கள் என்றால், நீங்கள் எவ்வாறு உணருவீர்கள்? ஜனங்கள் உங்களை புண்படுத்தக்கூடிய ஆளாக ஒருவேளை நோக்கலாம். அதனால் இனிமேலும் அவர்கள் உங்கள் கூட்டுறவை நாட மாட்டார்கள்.—நீதிமொழிகள் 20:19-ஐ ஒப்பிடுக.
18. வீண்பேச்சு எவ்வாறு ஓர் ஆளை ஒரு பொய்யனாக ஆக்கக்கூடும்?
18 எச்சரிக்கையுடனிருப்பதற்கான மற்றொரு காரணம், சேதம் விளைவிக்கும் வீண்பேச்சு உங்களை ஒரு பொய்யராக ஆக்கும். “பழிதூற்றுபவனுடைய வார்த்தைகள் வேகமாய் விழுங்கப்பட வேண்டியவைப் போலிருக்கின்றன. அவை வயிற்றின் ஆழ்ந்த உட்பகுதிக்குள் செல்லும்.” (நீதிமொழிகள் 26:22, NW) நீங்கள் பொய்களை விழுங்கி அவற்றைத் திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் என்ன? நீங்கள் பொய்களை உண்மையென நினைத்தாலும், அவைகளை பரப்புகையில் நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள். அவர்களுடைய பொய் வெளியரங்கமாக்கப்பட்டால், நீங்கள் ஒரு பொய்யராக ஒருவேளை கருதப்படுவீர்கள். இது நிகழுமாறு நீங்கள் விரும்புகிறீர்களா? மத பொய்களுக்காக பொய் போதகர்களை கடவுள் பொறுப்பாளிகளாக கருதுகிறார் அல்லவா? ஆம், பொய் சொல்லும் பழிதூற்றுபவர்களையும் அவர் பொறுப்பாளிகளாகக் கருதுகிறார். இயேசு எச்சரித்தார்: “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்.” (மத்தேயு 12:36, 37) “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.” ஆகையால், அவர் உங்களை ஒரு பொய் பேசும் பழிதூற்றுபவராக கண்டனம் செய்ய நீங்கள் விரும்புவீர்களா?—ரோமர் 14:12.
19. தீங்கிழைக்கும் வீண்பேச்சு கொலைக்கேதுவானதாயிருக்கும் என்று ஏன் சொல்லப்படலாம்?
19 தீங்கிழைக்கும் வீண்பேச்சைப் பரப்பக்கூடாததற்கு இன்னும் மற்றொரு காரணம் அது கொலைக்கேதுவாய் இருக்கக்கூடும். ஆம், அது சாவுக்கேதுவானதாக இருக்கலாம், குற்றமற்றவரின் நன்மதிப்பை அழிக்கக்கூடியதாயிருக்கும். சில நாவுகள் “கூர்மையான பட்டயங்கள்,” மேலும் கசப்பான வார்த்தைகள் குற்றமற்றவரின் மீது பதுங்கியிருந்து எறியும் அம்புகளைப் போலிருக்கின்றன. தாவீது ஜெபித்தார்: “துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும். அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப் போல் கூர்மையாக்கி, மறைவுகளில் உத்தமன் மேல் எய்யும் பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள்.” (சங்கீதம் 64:2–4) சங்கீதக்காரன் செய்ததுபோல துயர்த்தீர்ப்புக்காக கடவுளிடம் ஜெபிக்கும்படி ஓர் உடன் மானிடன் கட்டாயப்படுத்தப்படும் அளவுக்கு அவரைப் பற்றி நீங்கள் தீங்கான காரியங்களைச் சொன்ன பொறுப்பை ஏற்க விரும்புவீர்களா? கொலைக்கு சமமானதைச் செய்யும் குற்றவாளியாக ஆக நீங்கள் விரும்புகிறீர்களா?
20. (எ) கடவுளுடைய சபையை பொறுத்த வரையில், மனந்திரும்பாத பழிதூற்றுபவனுக்கு என்ன ஏற்படலாம்? (பி) வீண்பேச்சு பேசுதல் மற்றும் பழிதூற்றுதல் சம்பந்தமாக மூப்பர்கள் எதில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
20 கடவுளுடைய அமைப்பிலிருந்து நீக்கம் செய்வதற்கு பழிதூற்றுதல் வழிநடத்தக்கூடும்; பழிதூற்றுபவர் மனந்திரும்பாத பொய்யனாக ஒருவேளை சபைநீக்கம் செய்யப்படலாம். என்றபோதிலும், வீணான பயனில பேச்சுக்கு குற்றமுடையவர்களுக்கு எதிராக இப்பேர்ப்பட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது. மூப்பர்கள் ஜெபசிந்தையோடு விஷயங்களை சீர்தூக்கிப் பார்த்து, வெறும் வீண்பேச்சுக்கும் உட்பகையுடைய பழிதூற்றுதலுக்கும் இடையே உள்ள கூர்மையான வித்தியாசத்தைக் காண வேண்டும். சபை நீக்கம் செய்யப்படுவதற்கு, குற்றம் செய்தவர் தீய நோக்கமுடைய மனந்திரும்பாத பழிதூற்றுபவராக இருக்கவேண்டும். மானிட அக்கறைகளால் உந்துவிக்கப்பட்ட பொய்யாக இல்லாத அல்லது தீய நோக்கமற்ற அற்ப வீண்பேச்சுக்காக எவரையும் சபை நீக்கம் செய்வதற்கு மூப்பர்கள் அதிகாரமளிக்கப்பட்டில்லை. சரியான அளவுகளுக்கு மேல் விஷயங்கள் பெரிதுபடுத்தப்படக்கூடாது, கேள்விக்கிடமின்றி பழிதூற்றுதல் உட்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்க போதிய அளவான அத்தாட்சியோடு கூடிய சாட்சிகள் இருக்கவேண்டும். (1 தீமோத்தேயு 5:19) முக்கியமாக தீய நோக்கமுடைய வீண்பேச்சைத் தணிப்பதற்காக மனந்திரும்பாத பழிதூற்றுபவர்கள் நீக்கப்படுகின்றனர். சபை பாவத்தினால் புளிப்பாக்கப்படாமல் இருக்க விடுவிக்கப்படும். (1 கொரிந்தியர் 5:6-8, 13) வேதப்பூர்வமற்ற அடிப்படையில் எவரையும் நீக்கம் செய்வதற்கு மூப்பர்கள் ஒருபோதும் அவசரப்படக்கூடாது. ஜெபம் மற்றும் ஆலோசனையின் மூலம், அந்த நபர் மனந்திரும்பவும் குற்றத்தை ஒப்புக்கொண்டு அல்லது பிழை திருத்தம் செய்யப்பட்டு, நாவை அடக்கி பழக்கப்படுத்துவதில் தொடர்ந்து முன்னேற்றம் செய்ய அவர்கள் உதவக்கூடும்.
அது பழிதூற்றுதலா?
21. தவறு செய்தவரைப் பற்றி வீண்பேச்சு பேசுவதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
21 ஞானமான நீதிமொழி ஒன்று சொல்கிறது: “பழிதூற்றித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.” (நீதிமொழிகள் 11:13, NW) யாராவது ஒருவர் இரகசியமாக வினைமையான பாவத்தில் ஈடுபடுகிறார் என்பதை நீங்கள் அறிந்தால், அதைக் குறித்து எதையும் சொல்வது பழிதூற்றுதலாக இருக்கும் என்று இது அர்த்தப்படுத்துமா? இல்லை. ஆனால் அந்த விஷயத்தைக் குறித்து நீங்கள் வீண்பேச்சு பேசக்கூடாது. தவறு செய்பவரிடம் நீங்கள் பேச வேண்டும், மூப்பர்களின் உதவியை நாடும்படி அவரைத் தூண்ட வேண்டும். (யாக்கோபு 5:13-18) அவர் இதை போதிய காலப்பகுதிக்குள் செய்யவில்லையென்றால், சபையின் சுத்தத்திற்கான அக்கறை மூப்பர்களிடம் இந்த விஷயத்தைக் குறித்து அறிக்கை செய்ய உங்களை உந்துவிக்க வேண்டும்.—லேவியராகமம் 5:1.
22. 1 கொரிந்தியர் 1:11 வீண்பேச்சு பேசுவதற்கு அதிகாரமளிப்பதில்லை என்று நாம் ஏன் சொல்லலாம்?
22 தவறு செய்தவருக்கு அப்பேர்ப்பட்ட அறிக்கை ஒருவேளை சிட்சிப்பில் விளைவடையும், அது சந்தோஷமானதாக இருக்காது. இருந்தபோதிலும், சிட்சையினால் பயிற்றுவிக்கப்பட்ட ஓர் ஆள் நீதியின் கனியை அறுப்பார். (எபிரெயர் 12:11) அப்பேர்ப்பட்ட விஷயங்களை கையாளுவதற்கு நியமிக்கப்பட்டவர்களிடம் தவறு வெளிப்படுத்தப்பட வேண்டும், அதைக் குறித்து வாயடிக்கும் வம்பர்களிடம் அல்ல. கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களிடம் பவுல் சொன்னார்: “என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக் குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.” (1 கொரிந்தியர் 1:11) அந்த வீட்டாரின் அங்கத்தினர்கள் உடன் விசுவாசிகளைப் பற்றி வதந்தி பரப்பிக் கொண்டிருந்தனரா? இல்லை, ஜீவனின் பாதையில் அவர்கள் கால்களை மறுபடியும் கொண்டுவர உதவி தேவைப்படுவோர்க்கு உதவி செய்ய படிகளை எடுக்கக்கூடிய உத்தரவாதமுள்ள ஒரு மூப்பரிடம் அறிவிக்கப்பட்டது.
23. சிந்திப்பதற்கு என்ன கேள்வி இன்னும் இருக்கிறது?
23 தீங்கிழைக்கும் வீண்பேச்சில் ஈடுபடுவதற்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க நாம் ஒரு நபருக்கு உதவி செய்தால், நாம் அவருடைய நன்மைக்காக ஏதோவொன்றை செய்கிறோம். ஒரு ஞானமான நீதிமொழி சொல்கிறது: “தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.” (நீதிமொழிகள் 13:3) தீங்கிழைக்கும் வீண்பேச்சுக்கும், துன்மார்க்கமான பழிதூற்றுதலுக்கும் எதிராக எச்சரிப்புடன் இருக்க நல்ல காரணங்கள் இருக்கின்றன என்பது தெளிவாக இருக்கிறது. இருந்தபோதிலும், தீங்கிழைக்கும் வீண்பேச்சு எவ்வாறு நொறுக்கப்படலாம்? அடுத்த இதழில் வரும் கட்டுரை சொல்லும். (w89 10/15)
உங்கள் பதில்கள் என்ன?
◻ இலேசான வீண்பேச்சுக்கும் பழிதூற்றுதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
◻ வீண்பேச்சு எவ்வாறு பழிதூற்றுதலாக ஆகக்கூடும்?
◻ தீங்கிழைக்கும் வீண்பேச்சுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க என்ன சில காரணங்கள் இருக்கின்றன?
◻ மற்றொரு நபருடைய வினைமையான தவறை நாம் அறிக்கை செய்யும்போது அதில் பழிதூற்றுதல் ஏன் உட்பட்டில்லை?
[பக்கம் 27-ன் படம்]
ஒருவரைப் பற்றி வீண்பேச்சு பேசுவதன் மூலம் அவரை முதுகில் சுட்டுகொல்லும் குற்றமுள்ளவராய் நீங்கள் ஒருபோதும் இராதபடி நிச்சயமாயிருங்கள்