யெகோவாவுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்துங்கள்
“அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் [இயேசு கிறிஸ்து] மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.”—எபிரெயர் 13:15.
1. யெகோவா பாவமுள்ள இஸ்ரவேலரை என்ன செய்யும்படியாகத் துரிதப்படுத்தினார்?
யெகோவா தமக்கு ஏற்றுக்கொள்ளப்படத்தக்க பலிகளைச் செலுத்துகிறவர்களுக்குச் சகாயராயிருக்கிறார். ஆகவே, அவருடைய தயவு, ஒரு சமயம் மிருக பலிகளைச் செலுத்திய இஸ்ரவேலர் மீது தங்கியிருந்தது. ஆனால் அவர்கள் திரும்பத் திரும்ப பாவங்களைச் செய்த போது என்ன நடந்தது? ஓசியா தீர்க்கதரிசியின் மூலமாக அவர்கள் இவ்விதமாக துரிதப்படுத்தப்பட்டனர்: “இஸ்ரவேலே, உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். வார்த்தைகளைக் கொண்டு யெகோவாவிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: ‘தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.’”—ஓசியா 14:1, 2.
2 ஆகவே கடவுளுடைய பூர்வீக மக்கள் யெகோவா தேவனுக்கு ‘உதடுகளின் காளைகளைச்’ செலுத்துவதற்கு உற்சாகப்படுத்தப்பட்டனர். இவை என்னவாக இருந்தன? ஏன், உண்மையான துதியின் பலிகள்! இந்தத் தீர்க்கதரிசனத்தைக் குறிப்பிட்டு அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெய கிறிஸ்தவர்களை, “அவருடைய நாமத்தை துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை” செலுத்தும்படியாக துரிதப்படுத்தினான். (எபிரெயர் 13:15) இன்று இப்படிப்பட்ட பலிகளைச் செலுத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு எது உதவக்கூடும்?
“அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்”
3. எபிரெயர் 13:7-ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிற காரியத்தின் சாராம்சம் என்ன? என்ன கேள்வி எழும்புகிறது?
3 பவுல் எபிரெயர்களுக்குக் கொடுத்தப் புத்திமதியைப் பின்பற்றுவது, நம்முடைய மிகப் பெரிய சகாயராகிய யெகோவா தேவனுக்கு ஏற்கத்தகுந்த பலிகளைச் செலுத்த நமக்கு உதவிசெய்யும். உதாரணமாக, அப்போஸ்தலன் எழுதியதாவது: “தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” (எபிரெயர் 13:7) “உங்களை நடத்துகிறவர்களை நீங்கள் நினைத்து” அல்லது “உங்களை ஆளுகிறவர்களை” என்பதாகப் பவுல் சொன்னபோது அவன் யாரைக் குறிப்பிட்டான்?—புதிய உலக மொழிபெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிள், அடிக்குறிப்பு.
4. (எ) கிரேக்க வாசகத்தின்படி “நடத்துகிறவர்கள்” என்ன செய்கிறார்கள்? (பி) யெகோவாவின் சாட்சிகளின் மத்தியில் “நடத்துகிறவர்கள்” யார்?
4 பவுல் “நடத்துகிறவர்களை” அல்லது “ஆளுகிற”வர்களைப் பற்றி பேசினான். (வசனம் 7, 17, 24) “கவர்ன்” (govern) என்ற ஆங்கில வார்த்தை “ஒரு கப்பலைத் திசையறிந்து செலுத்துவது, வழிநடத்துவது, ஆளுவது” என்று பொருள்படும் கைபெர்னோ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து லத்தீனின் மூலமாகப் பெறப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மூப்பர்கள் உள்ளூர் சபைகளில் தலைமையேற்று நடத்துவதிலும் வழிநடத்தலை அளிப்பதிலும் தங்கள் “வழிநடத்தும் திறமைகளை” கைபெர்னோசிஸ் பயன்படுத்துவதன் மூலம் ஆளுகிறார்கள். (1 கொரிந்தியர் 12:28) ஆனால் எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மற்ற மூப்பர்களும் எல்லாச் சபைகளுக்கும் அறிவுரைகளையும் புத்திமதிகளையும் கொடுக்க ஒரு குழுவாகச் செயல்பட்டார்கள். (அப்போஸ்தலர் 15:1, 2, 27–29) ஆகவே இன்று, மூப்பர்களின் ஓர் ஆளும் குழு, உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆவிக்குரிய மேற்பார்வையை அளித்துவருகிறது.
5. ஏன் மற்றும் எவ்விதமாக நாம் சபை மூப்பர்களுக்காகவும் ஆளும் குழுவின் அங்கத்தினர்களுக்காகவும் ஜெபம் செய்ய வேண்டும்?
5 உள்ளூர் மூப்பர்களும் ஆளும் குழுவின் அங்கத்தினர்களும், நம் மத்தியில் நடத்துகிறவர்களாக இருக்கிறார்கள்; ஆகவே, நாம் அவர்களுக்கு மரியாதை காண்பித்து சபையை ஆளுவதற்குத் தேவையான ஞானத்தை அவர்களுக்கு அருளும்படியாக ஜெபிக்க வேண்டும். (எபேசியர் 1:15–17-ஐ ஒப்பிடவும்.) ‘நமக்கு தேவ வசனத்தைப் போதித்த’ எவரையும் நினைவுகூருவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! தீமோத்தேயு அவனுடைய தாயாலும் பாட்டியாலும் மட்டுமல்லாமல், பின்னால் பவுலாலும் மற்றவர்களாலும்கூட போதிக்கப்பட்டிருந்தான். (2 தீமோத்தேயு 1:5, 6; 3:14) ஆகவே தீமோத்தேயு நடத்துகிறவர்களின் நடக்கையின் முடிவு என்னவாக இருந்தது என்பதைச் சிந்தித்துப் பார்த்து அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்ற முடிந்தது.
6. யாருடைய விசுவாசத்தை நாம் பின்பற்ற வேண்டும்? ஆனால் நாம் யார் பின்னால் செல்ல வேண்டும்?
6 ஆபேல், நோவா, ஆபிரகாம், சாராள், ராகாப் மற்றும் மோசே போன்ற ஆட்கள் விசுவாசத்தை அப்பியாசித்தார்கள். (எபிரெயர் 11:1–40) ஆகவே அவர்கள் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக மரித்ததன் காரணமாக நாம் எந்தவித தயக்கமுமின்றி அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றலாம். ஆனால் நாம் இப்பொழுது நம் மத்தியில் நம்மை நடத்துகிற உண்மையுள்ள மனிதர்களின் ‘விசுவாசத்தையும்கூட பின்பற்றலாம்’. நிச்சயமாகவே நாம் அபூரணமான மனிதர்களின் பின்னால் செல்வதில்லை. ஏனென்றால் நாம் நம்முடைய கண்களை கிறிஸ்துவின் மீது வைத்திருக்கிறோம். பைபிள் மொழிபெயர்ப்பாளர் எட்கர் J. குட்ஸ்பீட் சொன்னவிதமாகவே: “விசுவாசிகளுக்குப் பண்டைய கால கதாநாயகர்கள் மாதிரிகளாக இல்லை, ஏனென்றால் கிறிஸ்துவில் அவனுக்கு மேம்பட்ட மாதிரி இருக்கிறது. . . . கிறிஸ்தவ ஓட்டப்பந்தயக்காரன் இயேசுவின் மீது தன் கண்களை பதிய வைத்திருக்க வேண்டும்.” ஆம், ‘கிறிஸ்து நமக்காகப் பாடுபட்டு தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி நமக்கு மாதிரியை பின்வைத்துப் போனார்.’—1 பேதுரு 2:21; எபிரெயர் 12:1–3.
7. இயேசு கிறிஸ்துவுக்காக கஷ்டப்படுகையில் எபிரெயர் 13:8 நம்முடைய மனநிலையை எவ்விதம் பாதிக்க வேண்டும்?
7 கடவுளுடைய குமாரன் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தும் வகையில் பவுல் மேலுமாகச் சொன்னது: “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” (எபிரெயர் 13:8) ஸ்தேவான், யாக்கோபு போன்ற உண்மையுள்ள சாட்சிகள், இயேசு வைத்த உறுதியான மாதிரியின்படி, அசைக்கமுடியாத உத்தமத்தன்மையை விளங்கப்பண்ணினார்கள். (அப்போஸ்தலர் 7:1–60; 12:1, 2) கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக அவர்கள் மரிக்கத் தயாராக இருந்ததன் காரணமாக அவர்களுடைய விசுவாசம் நாம் பின்பற்றுவதற்குத் தகுதியுள்ளதாக இருக்கிறது. கடந்த காலத்திலும், இப்போதும், எதிர்காலத்திலும்கூட இயேசுவின் சீஷர்களாக, இரத்த சாட்சிகளாக துன்புறுவதிலிருந்து தெய்வ பயமுள்ள ஆட்கள் தங்களை விடுவித்துக் கொள்ள வகைத்தேடுவதில்லை.
பொய்ப் போதகங்களைத் தவிர்த்திடுங்கள்
8. எபிரெயர் 13:9-லுள்ள பவுலின் வார்த்தைகளை எவ்விதமாக நீங்கள் தொகுத்துரைப்பீர்கள்?
8 இயேசுவின் ஆளுமை மற்றும் போதனையின் மாறாதத் தன்மை, அவரும் அவருடைய அப்போஸ்தலர்களும் கற்பித்தக் காரியங்களை விடாது பற்றிக் கொண்டிருக்க நம்மைச் செய்ய வேண்டும். எபிரெயர்கள் இவ்விதமாகச் சொல்லப்பட்டனர்: “பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சி செய்கிறவர்கள் பலனடையவில்லையே.”—எபிரெயர் 13:9.
9. எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் என்ன மேன்மையான காரியங்களை பவுல் சுட்டிக் காண்பித்தான்?
9 யூதர்கள் நியாயப்பிரமாணம் சீனாய் மலையில் தனிச் சிறப்புக்குரிய வகையில் கொடுக்கப்பட்டதையும் தாவீதின் நிலையான ராஜரீகம் போன்றவற்றையும் சுட்டிக் காண்பித்தனர். ஆனால் நியாயப்பிரமாண உடன்படிக்கை துவக்கிவைக்கப்பட்டது ஆச்சரியத்தையும் பயபக்தியையும் ஏற்படுத்துவதாக இருந்தாலும், புதிய உடன்படிக்கையைத் துவக்கி வைக்கையில் யெகோவா அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், பகிர்ந்து கொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும் பலத்தவிதமாக சாட்சிக் கொடுத்திருக்கிறார் என்பதாக பவுல் காண்பித்தான். (அப்போஸ்தலர் 2:1–4; எபிரெயர் 2:2–4) பொ.ச.மு. 607-ல் தாவீதின் வழியில்வந்த பூமிக்குரிய ராஜரீகத்தை அசைக்க முடியாதிருந்தது போலவே கிறிஸ்துவின் பரலோக ராஜ்யமும் அசைக்கப்பட முடியாதது. (எபிரெயர் 1:8, 9; 12:28) மேலுமாக அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் பரலோக சீயோன் மலையினிடத்துக்கு வந்து சேருவதன் காரணமாக சீனாய் மலையில் காணப்பட்ட அற்புதமான காட்சியைக் காட்டிலும் மிக அதிகமாக பயபக்தியை ஏற்படுத்தும் ஒன்றுக்கு முன்னால் யெகோவா அவர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.—எபிரெயர் 12:18–27.
10. எபிரெயர் 13:9-ன்படி இருதயம் எதனால் ஸ்திரப்படுகிறது?
10 ஆகவே எபிரெயர்கள், யூதேய மதத்தினரின் “பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு” திரிவதைத் தவிர்க்க வேண்டியது அவசியமாயிருந்தது. (கலாத்தியர் 5:1–6) இப்படிப்பட்ட போதகங்களால் அல்ல, ஆனால் சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருப்பதற்கு ‘கடவுளுடைய கிருபையினாலே இருதயம் ஸ்திரப்பட’ முடியும். சிலர் போஜனத்தையும் பலிகளையும் பற்றி தர்க்கம் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் இருதயமானது “போஜனபதார்த்தங்களில்” ஸ்திரப்படுவதில்லை. இதில் “முயற்சி செய்கிறவர்கள் பலனடையவில்லை,” என்பதாக பவுல் சொன்னான். தெய்வ பக்தியினாலும், மீட்பைப் போற்றுவதினாலும் ஆவிக்குரிய நன்மைகள் கிடைக்கின்றன. ஒரு சில உணவு பதார்த்தங்களை உண்பதைப் பற்றிய அல்லது குறிப்பிட்ட நாட்களை அனுசரிப்பதைப் பற்றிய அனாவசியமான கவலைகளினால் அது கிடைப்பதில்லை. (ரோமர் 14:5–9) மேலுமாக கிறிஸ்துவின் பலி லேவி கோத்திர பலிகளைப் பயனற்றதாக்கிவிட்டது.—எபிரெயர் 9:9–14; 10:5–10.
கடவுளைப் பிரியப்படுத்தும் பலிகள்
11. (எ) எபிரெயர் 13:10, 11-லுள்ள பவுலின் வார்த்தைகளின் சாரம்சம் என்ன? (பி) கிறிஸ்தவர்களுக்கு என்ன அடையாள அர்த்தமுள்ள பலிபீடம் இருக்கிறது?
11 லேவி கோத்திர ஆசாரியர்கள் பலி செலுத்தப்பட்ட மிருகங்களின் இறைச்சியைப் புசித்தார்கள். ஆனால் பவுல் எழுதினான்: “நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் [ஆசரிப்பு கூடாரத்தில்] ஆராதனைச் செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை. ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டு வரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் [பாவ நிவாரண நாளில்] பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும்.” (எபிரெயர் 13:10, 11; லேவியராகமம் 16:27; 1 கொரிந்தியர் 9:13) கிறிஸ்தவர்களுக்குப் பாவத்தை நிவிர்த்தி செய்து யெகோவாவின் மன்னிப்பிலும் நித்திய ஜீவனுக்காக இரட்சிப்பிலும் விளைவடையக்கூடிய இயேசுவினுடைய பலியின் அடிப்படையில் கடவுளிடம் சேருவதைக் குறிக்கும் அடையாள அர்த்தமுள்ள ஒரு பலிபீடம் இருக்கிறது.
12. எபிரெயர் 13:12–14-ல் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன செய்யும்படியாக துரிதப்படுத்தப்பட்டார்கள்?
12 பவுல், பாவநிவாரண நாளோடு ஒப்புடைமைக்கு அழுத்தங் கொடாவிட்டாலும் அவன் மேலுமாகச் சொல்வதாவது: “அந்தப்படியே இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக [எருசலேமின்] நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். அங்கே இயேசு மரித்து, முற்றிலும் பயனுள்ளதாயிருந்த கிருபாதார பலியைக் கொடுத்தார். (எபிரெயர் 13:12; யோவான் 19:17; 1 யோவான் 2:1, 2) அப்போஸ்தலனாகிய பவுல் அபிஷேகம் பண்ணப்பட்ட உடன்கிறிஸ்தவர்களைத் துரிதப்படுத்தியதாவது: “ஆகையால் நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் [கிறிஸ்து] புறப்பட்டுப் போகக்கடவோம். நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை, வரப்போகிறதையே நாடித்தேடுகிறோம்.” (எபிரெயர் 13:13, 14; லேவியராகமம் 16:10) இயேசு நிந்திக்கப்பட்டது போலவே நாமும் செய்யப்பட்டாலும் யெகோவாவின் சாட்சிகளாக நாம் விடாமுயற்சியுடன் செயலாற்றுகிறோம். புதிய உலகத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கையில், ‘நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்’பண்ணுகிறோம். (தீத்து 2:11–14; 2 பேதுரு 3:13; 1 யோவான் 2:15–17) நம் மத்தியிலுள்ள அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் பரலோக ராஜ்யமாகிய “நகரத்தை” ஊக்கமாய் நாடுகிறார்கள்.—எபிரெயர் 12:22.
13. கடவுளைப் பிரியப்படுத்தும் பலிகளில் எதுமட்டுமே அடங்கியதாக இல்லை?
13 பவுல் அடுத்ததாகப் பின்வருமாறு எழுதி கடவுளைப் பிரியப்படுத்தும் பலிகளைக் குறிப்பிடுகிறான்: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் [இயேசு] மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். அன்றியும் நன்மை செய்யவும் தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (எபிரெயர் 13:15, 16) கிறிஸ்தவ பலிகளில், வெறுமென மனிதாபிமான கிரியைகள் அடங்கியதாக இல்லை. மக்கள் பொதுவாக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறார்கள். உதாரணமாக, 1988-ம் ஆண்டின் பிற்பகுதியில் சோவியத் ஆர்மீனியா நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு அநேக தேசங்களிலிருந்து மக்கள் உதவி செய்ய வந்த போது இது நடந்தது.
14. ஏற்கத்தக்க பலியை கடவுளுக்குச் செலுத்துவது எந்த வேலையின் மீது அழுத்தத்தை வைக்கிறது?
14 ‘பயத்தோடும் பக்தியோடும்’ நாம் யெகோவாவுக்குச் செய்யும் பரிசுத்த சேவை இயேசு காண்பித்த தன்னையே தியாகம் செய்யும் விதமான ஓர் அன்பை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. (எபிரெயர் 12:28; யோவான் 13:34; 15:13) இந்த ஊழியமானது நம்முடைய பிரசங்க வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஏனென்றால் பிரதான ஆசாரியனாகிய கிறிஸ்துவின் மூலமாக ‘அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியைத் தேவனுக்குச் செலுத்துகிறோம்.’ (ஓசியா 14:2; ரோமர் 10:10–15; எபிரெயர் 7:26) நிச்சயமாகவே “விசுவாச குடும்பத்தா”ராயிருப்பவர்களைத் தவிர, மற்றவர்களுக்கும்கூட “நன்மை செய்யவும் தானதர்மம் பண்ணவும் நாம் மறப்”பதில்லை. (கலாத்தியர் 6:10) விசேஷமாக உடன் கிறிஸ்தவர்கள் துன்பம் அனுபவிக்கையில் அல்லது தேவையிலிருக்கையில் அல்லது வருத்தத்திலிருக்கையில் நாம் பொருள் சம்பந்தமாகவும் ஆவிக்குரிய விதத்திலும் அன்புள்ள உதவியைச் செய்கிறோம். ஏன்? ஏனென்றால் நாம் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். அவர்கள் அவர்களுடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்க வேண்டுமென்றுகூட நாம் விரும்புகிறோம். ஏனென்றால் “இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.”—எபிரெயர் 10:23–25; யாக்கோபு 1:27.
அடங்கியிருங்கள்
15. (எ) எபிரெயர் 13:17-லுள்ள புத்திமதியை நீங்கள் எவ்விதமாக தொகுத்துரைப்பீர்கள்? (பி) முன்சென்று நடத்துகிறவர்களுக்கு ஏன் மரியாதைக் காண்பிக்க வேண்டும்?
15 ஏற்கத்தகுந்த பலிகளைச் செலுத்துவதற்கு நாம் கடவுளுடைய அமைப்போடு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். அதிகாரத்தைப் பற்றிய விஷயத்தில் அலுக்கும்படி பேசிக் கொண்டேயில்லாமல் பவுல் எழுதினான்: “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள். அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால், அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.” (எபிரெயர் 13:17) சபையில் முன்சென்று நடத்தும் நியமிக்கப்பட்ட மூப்பர்கள் நாம் ஒத்துழைக்காததன் காரணமாக வருத்தத்தோடு துக்கிக்க அவசியமில்லாதபடி நாம் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். நாம் அடங்கியிருக்க தவறுவது கண்காணிகளுக்குச் சுமையாக நிரூபிக்க, இது ஆவிக்குரிய வகையில் நமக்குத் தீங்கு ஏற்படுவதில் விளைவடையும். ஒத்துழைக்கின்ற ஆவி உதவியளிப்பதை மூப்பர்களுக்கு எளிதாக்கி ஐக்கியத்துக்கும் ராஜ்ய பிரசங்க வேலையின் முன்னேற்றத்துக்கும் உதவி செய்வதாக இருக்கும்.—சங்கீதம் 133:1–3.
16. நம் மத்தியில் முன்சென்று வழிநடத்துகிறவர்களுக்கு அடங்கியிருத்தல் ஏன் பொருத்தமானதாக இருக்கிறது?
16 முன்சென்று நடத்துகிறவர்களுக்கு அடங்கியிருப்பது எத்தனை பொருத்தமானதாக இருக்கிறது! அவர்கள் நம்முடைய கூட்டங்களில் கற்பித்து ஊழியத்தில் நமக்கு உதவி செய்கிறார்கள். மேய்ப்பர்களாக, நம்முடைய நலனை அவர்கள் நாடுகிறார்கள். (1 பேதுரு 5:2, 3) கடவுளோடும் சபையோடும் நல்ல ஓர் உறவைக் காத்துக் கொள்ள அவர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள். (அப்போஸ்தலர் 20:28–30) ஞானமும் அன்புமுள்ள மேற்பார்வைக்கு நம்மைக் கீழ்ப்படுத்துவதன் மூலம் நாம் உன்னத கண்காணியாகிய யெகோவா தேவனுக்கும் அவருடைய உதவிக் கண்காணியான இயேசு கிறிஸ்துவுக்கும் மரியாதைக் காண்பிக்கிறோம்.—1 பேதுரு 2:25; வெளிப்படுத்துதல் 1:1; 2:1–3:22.
ஜெபசிந்தையாயிருங்கள்
17. என்ன வேண்டிக்கொள்ளும்படியாக பவுல் கேட்டான்? அவன் ஏன் அவைகளுக்காக சரியாகவே கேட்கமுடியும்?
17 பவுலும் அவனுடைய தோழர்களும், ஒருவேளை துன்புறுத்தலின் காரணமாக எபிரெயர்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்ததால் அவன் சொன்னான்: “எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம். நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்.” (எபிரெயர் 13:18, 19) பவுல் குற்றமுள்ள மனச்சாட்சியையுடைய ஒரு கபடமுள்ள ஆளாக இருந்திருப்பானேயானால் எபிரெயர்களோடு சீக்கிரமாய் வந்து சேர்ந்து கொள்வதற்காக அவர்களை வேண்டிக்கொள்ள அவனுக்கு என்ன உரிமை இருந்திருக்கும்? (நீதிமொழிகள் 3:32; 1 தீமோத்தேயு 4:1, 2) நிச்சயமாகவே அவன் நல்மனச்சாட்சியில் யூதேய மதத்தினரை எதிர்த்து நின்ற ஒரு நேர்மையான ஊழியனாக இருந்தான். (அப்போஸ்தலர் 20:17–27) எபிரெயர்கள் அவ்விதமாகச் சம்பவிக்கும்படி வேண்டிக் கொள்வார்களேயானால் அவன் மீண்டும் அவர்களைச் சீக்கிரத்தில் சேர்ந்துகொள்ள முடியும் என்பதாகவும்கூட பவுல் நம்பினான்.
18. மற்றவர்கள் நமக்காக வேண்டிக்கொள்ளும்படியாக நாம் எதிர்ப்பார்ப்போமேயானால், நம்மைநாமே என்ன கேள்விகளைக் கேட்டுக் கொள்ளலாம்?
18 எபிரெயர்களை வேண்டிக் கொள்ளும்படியாக பவுல் கேட்டுக் கொண்டது, கிறிஸ்தவர்கள் பெயர் குறிப்பிட்டும் ஒருவருக்கொருவர் வேண்டிக்கொள்வது சரியானதே என்பதைக் காண்பிக்கிறது. (எபேசியர் 6:17–20-ஐ ஒப்பிடவும்) ஆனால் மற்றவர்கள் நமக்காக வேண்டிக்கொள்ளும்படியாக நாம் எதிர்பார்ப்போமேயானால் அப்போஸ்தலனைப் போல இருந்து நாமும்கூட ‘நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடந்து’கொண்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டாமா? உங்களுடைய எல்லாச் செயல் தொடர்புகளிலும் நீங்கள் யோக்கியமாயிருக்கிறீர்களா? ஜெபத்தில் பவுலுக்கு இருந்த அதே நம்பிக்கை உங்களுக்கிருக்கிறதா?—1 யோவான் 5:14, 15.
முடிவான வார்த்தைகளும் அறிவுரையும்
19. (எ) எபிரெயர்களுக்குப் பவுலின் ஜெபசிந்தையுடன்கூடிய விருப்பம் என்னவாக இருந்தது? (பி) புதிய உடன்படிக்கை ஏன் ஒரு நித்திய உடன்படிக்கையாக இருக்கிறது?
19 எபிரெயர்களை வேண்டிக்கொள்ளும்படியாகக் கேட்டுக் கொண்ட பிறகு, பவுல் ஜெபசிந்தையுடன் ஒரு விருப்பத்தை இவ்விதமாக வெளியிட்டான்: “நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப் பண்ணின சமாதானத்தின் தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்கு முன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து நீங்கள் தம்முடைய சித்தத்தின்படி செய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக. அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.” (எபிரெயர் 13:20, 21) சமாதானமான ஒரு பூமியை கருத்தில் கொண்டு “சமாதானத்தின் தேவன்” கிறிஸ்துவைப் பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பினார். அங்கே இயேசு புதிய உடன்படிக்கையை உறுதிப்படுத்திய சிந்தப்பட்ட தம்முடைய இரத்தத்தின் மதிப்பைச் சமர்ப்பித்தார். (ஏசாயா 9:6, 7; லூக்கா 22:20) பரலோகத்தில் இயேசுவோடு ஆளுகைச் செய்யும் புதிய உடன்படிக்கையிலுள்ள கடவுளின் ஆவிக்குரிய குமாரர்களாகிய 1,44,000 பேரின் சேவையிலிருந்து பூமியிலுள்ளவர்கள் நிரந்தரமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வதன் காரணமாக இது ஒரு நித்திய உடன்படிக்கையாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:1–4; 20:4–6) மகிமைக்குரியவராக நாம் கருதும் தேவன் கிறிஸ்துவின் மூலமாகவே ‘அவருடைய சித்தத்தைச் செய்வதற்கும் அவருடைய பார்வையில் மிகவும் பிரியமாயிருப்பதற்கும் தேவையான ஒவ்வொரு நல்ல காரியத்தையும் நமக்குக் கொடுக்கிறார்.’
20. எபிரெய கிறிஸ்தவர்களுக்குப் பவுலின் முடிவான அறிவுரையை நீங்கள் எவ்விதமாக தொகுத்து விளக்குவீர்கள்?
20 எபிரெயர்கள் எவ்விதமாக தன்னுடைய கடிதத்துக்குப் பிரதிபலிப்பார்கள் என்பதைக் குறித்து நிச்சயமற்றவனாய் பவுல் எழுதினான்: “சகோதரரே நான் சுருக்கமாய் [அதன் முக்கியத்துவம் வாய்ந்த பொருளடக்கத்தைச் சிந்திக்கையில்] உங்களுக்கு எழுதிய இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக் கொள்ளும்படி [யூதேய மதத்தினருக்கு அல்ல, கடவுளுடைய குமாரனுக்குச் செவி கொடுக்கும்படி] வேண்டிக்கொள்ளுகிறேன். சகோதரனாகிய தீமோத்தேயு [சிறையிலிருந்து] விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனுடனேகூட நான் வந்து உங்களைக் காண்பேன்.” ரோமிலிருந்து எழுதுகிறவனாய், அப்போஸ்தலன் தீமோத்தேயுவோடுகூட எருசலேமிலிருந்த எபிரெயர்களைச் சென்று சந்திக்கலாம் என்ற நம்பிக்கையுடனிருந்தான். பின்பு பவுல் சொன்னான்: “உங்களை நடத்துகிறவர்களையும் [கடினமாக உழைக்கும் மூப்பர்களாக] பரிசுத்தவான்கள் யாவரையும் [பரலோக நம்பிக்கையுடையவர்கள்] வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். [கடவுளுடைய] கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக.”—எபிரெயர் 13:22–25.
நிலையான மதிப்புள்ள ஒரு கடிதம்
21. எபிரெயருக்கு எழுதப்பட்ட கடிதம் என்ன முக்கிய குறிப்புகளைப் புரிந்து கொள்ள நமக்கு உதவி செய்கிறது?
21 ஒருவேளை பரிசுத்த வேதாகமத்தின் வேறு எந்தப் புத்தகத்தையும்விட அதிகமாக எபிரெயர்களுக்கு எழுதப்பட்ட கடிதமே நியாயப்பிரமாணத்தின் கீழ் செலுத்தப்பட்ட பலிகளின் உட்பொருளை புரிந்து கொள்ள நமக்கு உதவி செய்கிறது. இயேசு கிறிஸ்துவின் பலி மாத்திரமே பாவமுள்ள மனிதவர்க்கத்துக்குத் தேவையான மீட்பை அளிக்கிறது என்பதை இந்த நிருபம் தெளிவாகக் காண்பிக்கிறது. நாம் கடவுளுடைய குமாரனுக்குச் செவி கொடுக்க வேண்டுமென்பதே கடிதத்தில் காணப்படும் குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.
22. எபிரெயருக்கு எழுதப்பட்ட கடிதத்துக்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருப்பதற்குச் சில காரணங்கள் யாவை?
22 மேலுமாக, முந்தைய இரண்டு கட்டுரைகளில் நாம் பார்த்தவிதமாகவே, எபிரெயர்களுக்குத் தேவ ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட கடிதத்துக்காக நன்றியுள்ளவர்களாயிருப்பதற்கு நமக்கு நல்ல காரணங்கள் உண்டு. நம்முடைய ஊழியத்தில் நாம் சோர்ந்து போகாதிருக்க உதவி செய்து, யெகோவா நமக்குச் சகாயர் என்பதை அறிந்திருப்பதன் காரணமாக அது நம்மை தைரியத்தால் நிரப்புகிறது. மேலுமாக, இரவும் பகலும் தன்னலம் பாராமல் பரிசுத்த சேவை செய்வதிலும், துதிக்குப் பாத்திரராயும் அன்புள்ள கடவுளாயுமிருக்கும் யெகோவாவுக்குப் பிரியமான இருதயப்பூர்வமான பலிகளைச் செலுத்துவதிலும் நம்முடைய உதடுகளையும் நம்முடைய எல்லாத் தனித்திறமைகளையும் பயன்படுத்துவதற்கு அது நம்மை உற்சாகப்படுத்துகிறது. (w89 12⁄15)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ எபிரெயர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் எவ்விதமாகப் பொய்ப் போதகங்களைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு உதவி செய்தது?
◻ கடவுளுக்குப் பிரியமான பலிகள் எந்த முக்கியமான வேலையின் மீது கருத்தை ஒருமுகப்படுத்துகிறது?
◻ “முன்சென்று நடத்துகிறவர்கள்” யார்? அவர்களுக்கு ஏன் அடங்கியிருக்க வேண்டும்?
◻ எபிரெயருக்கு எழுதப்பட்ட கடிதம் எவ்விதமாக ஜெபத்தை உயர்த்திக் காண்பிக்கிறது?
◻ எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் நிலையான மதிப்புள்ளது என்பதாக நாம் ஏன் சொல்லலாம்?
2. ‘உதடுகளின் காளைகளாக’ இருந்தவை யாவை? அப்போஸ்தலனாகிய பவுல் எவ்விதமாக ஓசியா தீர்க்கதரிசனத்தைக் குறிப்பிடுகிறான்?
[பக்கம் 23-ன் படம்]
கடவுளுக்குப் பிரியமான பலிகள், வெளி ஊழியத்தில் பங்கு கொள்வதையும் உடன் கிறிஸ்தவர்களுக்குப் பயனுள்ள ஆலோசனையைக் கொடுப்பதையும் உட்படுத்துகிறது