இலக்கை நோக்கி முன்னேறுங்கள்!
பிலிப்பியரிலிருந்து முக்கிய குறிப்புகள்
அப்போஸ்தலனாகிய பவுல், பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவர்கள் நித்திய ஜீவனின் பரிசுக்காக இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்க வேண்டுமென்று விரும்பினான். ஆகவே சுமார் பொ.ச. 60 அல்லது 61-ல், ரோமில் முதல் முறையாக காவலில் வைக்கப்பட்டிருந்த சமயத்தில் அவர்களுக்கு எழுதினான். அவனுடைய கடிதம் (மகா அலெக்ஸாண்டரின் தகப்பன்) மக்கெதோனின் பிலிப்புவால் தோற்றுவிக்கப்பட்ட பிலிப்பு பட்டணத்தில் அவன் பத்து வருடங்களுக்கு முன்பாக ஸ்தாபித்திருந்த ஒரு சபைக்கு அனுப்பப்பட்டது. பொ.ச. முதல் நூற்றாண்டுக்குள் அது “மக்கெதோனியா தேசத்து நாடுகளில் தலைமையான” பட்டணமாக மாறிவிட்டிருந்தது. இப்பொழுது அது வட கிரேக்கு மற்றும் தென் யூகோஸ்லாவியாவின் பாகமாக இருக்கிறது.—அப்போஸ்தலர் 16:11, 12.
பிலிப்பிய விசுவாசிகள் ஏழ்மையிலிருந்தார்கள், ஆனால் அவர்கள் உதாரகுணமுள்ளவர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள், பவுலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எதையாவது அனுப்பி வைத்திருக்கிறார்கள். (பிலிப்பியர் 4:14–17) ஆனால் அவனுடைய கடிதம் வெறுமென ஒரு நன்றி மடலைக் காட்டிலும் மிக அதிகமாக இருந்தது. அது உற்சாகமளிப்பதாக, அன்பை வெளிப்படுத்துவதாக, புத்திமதியை அளிப்பதாகவும் கூட இருந்தது.
கிறிஸ்தவ குணாதிசயங்கள் தெளிவாகத் தெரிகிறது
பிலிப்பிய விசுவாசிகளிடமாக அவனுடைய அன்பின் அத்தாட்சியோடு பவுலின் கடிதம் ஆரம்பமானது. (1:1–30) நற்செய்தியின் வளர்ச்சிக்காக அவர்களுடைய நன்கொடைகளுக்கு அவன் யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவர்களுடைய அன்பு பெருகவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறான். அவன் காவலில் வைக்கப்பட்டதானது, அவர்களுக்கு ‘பயமில்லாமல் திருவசனத்தைப் பேசுவதற்கு அதிகமான தைரியத்தை’ அளித்திருப்பதைக் குறித்து பவுல் சந்தோஷமடைந்தான். அவன் கிறிஸ்துவுடனே இருக்க ஆசையாயிருந்தான், ஆனாலும் அவர்களுக்குத் தான் ஊழியஞ்செய்ய முடியும் என்பதாக உணர்ந்தான். அவர்கள் “சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப் போராட” வேண்டும் என்றும்கூட பவுல் விரும்பினான்.
அடுத்ததாக மனநிலைகள் மற்றும் நடத்தையின் பேரில் புத்திமதி வந்தது. (2:1–30) பிலிப்பியர்கள் மற்றவர்களில் தனிப்பட்ட அக்கறையைக் காண்பிக்கவும் கிறிஸ்துவைப் போன்ற மனத்தாழ்மையை வெளிக்காட்டவும் உற்சாகப்படுத்தப்பட்டனர். அவர்கள் “உலகத்திலே சுடர்களைப் போல் பிரகாசி”த்தார்கள், அவர்கள் “ஜீவ வசனத்தை உறுதியாகப் பிடித்துக்”கொள்வதை காத்துக்கொள்ளுமாறு துரிதப்படுத்தப்பட்டனர். பவுல் அவர்களிடம் தீமோத்தேயுவை அனுப்ப நம்பிக்கையாயிருந்தான், அவன்தானே சீக்கிரத்தில் வருவான் என்று நிச்சயமாயிருந்தான். மிகவும் வியாதிப்பட்டிருந்த எப்பாப்பிரோதீத்துவைப் பற்றி அவர்களுக்கு மறுஉறுதியளிப்பதற்காக பவுல் இந்த உத்தம ஊழியனை அவர்களிடம் அனுப்பிக்கொண்டிருந்தான்.
இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருங்கள்
பிலிப்பியர் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கையில் தங்களுடைய நம்பிக்கையை எங்கே வைக்க வேண்டும் என்பதை பவுல் அடுத்ததாகக் காண்பித்தான். (3:1–21) சிலர் செய்துகொண்டிருந்தது போல மாம்சத்திலோ அல்லது விருத்தசேதனத்திலோ அல்ல, ஆனால் அது இயேசு கிறிஸ்துவில் வைக்கப்பட வேண்டும். பவுல், “கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக” தனக்கிருந்த மாம்சப்பிரகாரமான புகழ்ச்சிகளைக் குப்பையாகக் கருதினான். அப்போஸ்தலன் “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர்”ந்து கொண்டிருந்தான், இதே சிந்தையாய் இருக்கும்படி அவன் பிலிப்பியரை உற்சாகப்படுத்தினான்.
பவுலின் முடிவான புத்திமதியைப் பொருத்துவது, இலக்கையும் பரிசையும் கண்முன்னால் வைத்திருக்க உதவி செய்யும். (4:1–23) அவர்களுடைய கவலைகளை ஜெபத்தில் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு ஆரோக்கியமான எண்ணங்களால் அவர்களுடைய மனங்களை நிரப்பிக்கொள்ளும்படியாக அவர்களை அவன் துரிதப்படுத்தினான். பவுல் மறுபடியுமாக அவர்களுடைய உதாரகுணத்துக்காக அவர்களைப் பாராட்டி, வாழ்த்துதலோடும் அவர்கள் காண்பித்த ஆவியில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை இருக்கவேண்டும் என்ற விருப்பத்தோடும் முடித்தான்.
பிலிப்பியருக்கு பவுல் எழுதிய கடிதம் உதாரகுணத்தையும் அன்பையும் மனத்தாழ்மையையும் ஊக்குவிக்கிறது. அது கிறிஸ்துவில் நம்பிக்கையையும் கடவுளிடம் இருதயப்பூர்வமான ஜெபத்தையும் உற்சாகப்படுத்துகிறது. பவுலின் வார்த்தைகள், நித்திய ஜீவனின் பரிசுக்காக இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு நிச்சயமாகவே உதவிசெய்கிறது. (w90 11/15)
[பக்கம் 25-ன் பெட்டி/படம்]
இலக்கை நோக்கி: “பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருங்கள்,” என்பதாகப் பவுல் எழுதினான். (பிலிப்பியர் 3:13, 14) பவுல் பந்தயத்திலிருக்கும் ஒருவரைப் போல மும்முரமாக பிரயாசப்பட்டுக் கொண்டிருந்தான். பின்னால் திரும்பிப் பார்த்து நேரத்தையும் முயற்சியையும் விரயம் செய்யாமல் தன் இலக்கை நோக்கி முன்னேறினான்—இறுதிக் கோட்டைத் தாண்ட அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஓர் ஓட்டப்பந்தயக்காரனைப் போல. பவுலுக்கும் மற்ற அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும், கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாய்ப் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்தப் பிறகு, உயிர்த்தெழுதலின் மூலமாக பரலோக வாழ்க்கை பரிசாக இருந்தது. நம்முடைய நம்பிக்கை பரலோகத்துக்குரியதாக அல்லது பூமிக்குரியதாக இருந்தாலும்சரி, யெகோவாவிடம் உத்தமத்தைக் காத்துக்கொண்டு அவருடைய சாட்சிகளாக இலக்கை நோக்கி நாம் முன்னேறுவோமாக.—2 தீமோத்தேயு 4:7.