யெகோவாவின் நித்திய கரங்களை உங்கள் ஆதரவாக்கிக்கொள்ளுங்கள்
“நித்திய தேவனே உன் வாசஸ்தலம், கீழே இருப்பது நித்திய கரங்கள்.”—உபாகமம் 33:27, அமெரிக்கன் ஸ்டான்டர்டு மொழிபெயர்ப்பு.
1, 2. யெகோவாவின் மக்கள் ஏன் அவருடைய ஆதரவைக் குறித்து உறுதியாக நம்பிக்கையாயிருக்கலாம்?
யெகோவா தம்முடைய மக்களில் அக்கறையுள்ளவராக இருக்கிறார். ஏன், இஸ்ரவேலரின் எல்லா நெருக்கத்திலும் “அவர் நெருக்கப்பட்டார்”! அவர் அன்பின் நிமித்தமும் பரிதாபத்தின் நிமித்தமும் “அவர்களை மீட்டு, . . . அவர்களைத் தூக்கிச் சுமந்து வந்தார்.” (ஏசாயா 63:7–9) ஆகவே நாம் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தால், நாம் அவருடைய ஆதரவைக் குறித்து உறுதியாக நம்பிக்கையாயிருக்கலாம்.
2 தீர்க்கதரிசியாகிய மோசே சொன்னார்: “அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்.” (உபாகமம் 33:27) மற்றொரு மொழிபெயர்ப்பு சொல்கிறது: “நித்திய தேவனே உன் வாசஸ்தலம், கீழே இருப்பது நித்திய கரங்கள்.” (அமெரிக்கன் ஸ்டான்டர்டு மொழிப்பெயர்ப்பு) ஆனால் கடவுளுடைய கரங்கள் எவ்வாறு அவருடைய ஊழியர்களுக்கு ஆதரவளிக்கிறது?
ஏன் இத்தனை துன்பங்கள்?
3. கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் எப்போது முழுமையாக “தேவனுடைய சுயாதீனத்தை” அனுபவித்துக் களிக்கும்?
3 யெகோவாவை சேவிப்பது, அபூரணமான மனிதர்களுக்குப் பொதுவாக இருக்கும் துன்பங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது கிடையாது. கடவுளுடைய ஊழியனாகிய யோபு சொன்னார்: “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.” (யோபு 14:1) “எங்கள் ஆயுசு நாட்களைக்” குறித்து, சங்கீதக்காரன் “வருத்தமும் சஞ்சலமும்” நிறைந்தது என்று சொன்னார். (சங்கீதம் 90:10) “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்” வரையாக வாழ்க்கை அவ்விதமாகத்தான் இருக்கும். (ரோமர் 8:19–22) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் போது அது சம்பவிக்கும். அப்போது ராஜ்யத்தின் மனித குடிமக்கள், இயேசுவின் மீட்பின் பலியின் அடிப்படையில் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையை அனுபவிப்பர். ஆயிரம் வருட ஆட்சியின் முடிவில், கிறிஸ்துவும் அவருடைய துணை ராஜ–ஆசாரியர்களும் பரிபூரணத்தை அடைய கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு உதவி செய்திருப்பர். சாத்தானும் அவனுடைய பேய்களும் கொண்டுவரும் முடிவான பரீட்சையில் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாயிருப்பவர்கள் நிரந்தரமாக “ஜீவ புஸ்தகத்தில்” தங்கள் பெயர்கள் எழுதப்பட்டவர்களாக இருப்பர். (வெளிப்படுத்துதல் 20:12–15) அப்போது அவர்கள் தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை முழுமையாக அனுபவித்துக் களிப்பர்.
4. வாழ்க்கையில் நம்முடைய சொந்த சூழ்நிலைமைகளையும் நிலைமையையும் குறித்து குறைகூறுவதற்கு பதிலாக, நாம் என்ன செய்ய வேண்டும்?
4 இதற்கிடையில், வாழ்க்கையில் நம்முடைய சொந்த சூழ்நிலைமைகளையும் நிலைமைகளையும் குறித்து குறைகூறிக்கொண்டிருப்பதற்கு பதிலாக, நாம் யெகோவாவில் நம்பிக்கையாயிருப்போமாக. (1 சாமுவேல் 12:22; யூதா 16) நம்முடைய பிரதான ஆசாரியர் இயேசு கிறிஸ்துவுக்கும்கூட நாம் நன்றியுள்ளவர்களாயிருப்போமாக. ஏனென்றால் இவர் மூலமாய் நாம் “இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும்” முடியும். (எபிரெயர் 4:14–16) ஆதாமைப் போன்று நாம் ஒருபோதும் இருக்கக்கூடாது. அவன் பின்வருமாறு சொல்வதன் மூலம் உண்மையில் ஒரு கெட்ட மனைவியைத் தனக்கு கொடுத்துவிட்டதாக யெகோவாவைத் தவறாக குற்றஞ்சாட்டினான்: “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்.” (ஆதியாகமம் 3:12) கடவுள் நமக்கு நல்ல காரியங்களைக் கொடுக்கிறார், நம்மீது துன்பங்களை அவர் கொண்டுவருவதில்லை. (மத்தேயு 5:45; யாக்கோபு 1:17) இன்னல்கள் அநேகமாக நம்முடைய சொந்த ஞானக்குறைவின் அல்லது வேறு எவரோ ஒருவரின் தவறின் விளைவாக ஏற்படுகின்றது. நாம் பாவமுள்ளவர்களாகவும் சாத்தானுக்குள் கிடக்கும் உலகில் நாம் வாழ்வதாலும்கூட அவை நம்மீது வரலாம். (நீதிமொழிகள் 19:3; 1 யோவான் 5:19) என்றபோதிலும், ஜெபசிந்தையோடு அவர் மீது சார்ந்திருந்து, அவருடைய வார்த்தையின் புத்திமதிகளை தனிப்பட்டவிதமாக பின்பற்றுகிற அவருடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு யெகோவாவின் நித்திய கரங்கள் எப்போதும் ஆதரவளிக்கின்றன.—சங்கீதம் 37:5; 119:105.
நோயுற்றிருக்கையில் காக்கப்படுதல்
5. வியாதியாயிருக்கிறவர்கள் சங்கீதம் 41:1–3-ல் என்ன ஊக்குவிப்பைக் காணமுடியும்?
5 சில சமயங்களில் நோய் நம்மில் அநேகருக்கு வேதனையளிக்கிறது. என்றபோதிலும், தாவீது சொன்னார்: “சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் [யெகோவா, NW] அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு அவனை ஒப்புக்கொடீர். படுக்கையின் மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனை யெகோவா தாங்குவார். அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப் போடுவீர்.”—சங்கீதம் 41:1–3.
6, 7. தாவீது வியாதிப் படுக்கையில் இருந்தபோது கடவுள் எவ்விதமாக அவனுக்கு உதவி செய்தார்? இது எவ்வாறு இன்று யெகோவாவின் ஊழியர்களை உற்சாகப்படுத்தக்கூடும்?
6 சிந்தையுள்ள ஒரு நபர் தேவையிலிருப்பவர்களுக்கு உதவி செய்கிறார். “தீங்கு நாள்” என்பது ஒரு நபரை பலவீனமடையச் செய்யும் எந்த ஒரு கடுந்துயரமான ஒரு சந்தர்ப்பமாக அல்லது நீண்டதொரு துன்பமான காலப்பகுதியாக இருக்கக்கூடும். பலங்குன்றி போன சமயத்தில் தன்னை பாதுகாப்பதற்கு அவர் கடவுளில் நம்பிக்கை வைத்திருக்கிறார். அவரோடு யெகோவாவின் இரக்கமுள்ள செயல்தொடர்புகளின் செய்தியைப் பரப்புவதன் மூலம் மற்றவர்கள், ‘பூமியில் அவனை பாக்கியவான்’ என்று அறிவிப்பார்கள். தாவீதின் குமாரன் அப்சலோம் இஸ்ரவேலின் சிங்காசனத்தை கைப்பற்ற நாடிய அந்த அழுத்தங்கள் நிறைந்த சமயத்தின் போது கடவுள் “படுக்கையின் மேல் வியாதியாய் கிடைந்த” அவனைத் தாங்கினார்.—2 சாமுவேல் 15:1–6.
7 தாவீது சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையாயிருந்ததன் காரணமாக, வியாதி படுக்கையில் உதவியற்றவனாக கிடக்கையில், கடவுள் தன்னைக் காப்பார் என்று உணர்ந்தான். (சங்கீதம் 18:24–26) உயிர்போகும் அளவுக்கு வியாதியாயிருந்த போதிலும், அற்புதமாக வியாதியை நீக்கிப் போடுவதன் மூலமாக அல்ல, ஆறுதலான எண்ணங்களால் அவனைப் பலப்படுத்துவதன் மூலம் கடவுள் ‘அவன் படுக்கையை மாற்றிப்போடுவார்’ என்று அவன் நம்பிக்கையாயிருந்தான். யெகோவா அவனுடைய வியாதி படுக்கையை, குணப்படும் படுக்கையாக மாற்றிக்கொண்டிருப்பது போல இருக்கும். அதேவிதமாக, கடவுளின் ஊழியர்களாக நாம் நோயை அனுபவித்துக் கொண்டிருந்தால், யெகோவாவின் நித்திய கரங்கள் நமக்கு ஆதரவாக இருக்கும்.
சோர்வுள்ளவர்களுக்கு ஆறுதல்
8. நோயுற்றிருக்கும் ஒரு கிறிஸ்தவன் எவ்விதமாக தான் கடவுளின் மீது சார்ந்திருப்பதைக் காண்பித்திருக்கிறார்?
8 வியாதி மனச்சோர்வை உண்டுபண்ணக்கூடும். சில சமயங்களில் வாசிப்பதற்குக்கூட போதிய பலம் இல்லாதிருப்பதாக உணரும், கவலைக்கிடமாக நோய்வாய்பட்டுள்ள ஒரு கிறிஸ்தவன் சொல்கிறார்: “இது அநேக சோர்வான உணர்ச்சிகளையும், தகுதியற்ற எண்ணங்களையும், கண்ணீரையும்கூட வரவழைக்கிறது.” சோர்வான உணர்ச்சிகளால் சாத்தான் அவரை நசுக்கிவிட விரும்புவதை அறிந்தவராய், யெகோவாவின் உதவியோடு தான் தோல்வியடைந்துவிட முடியாது என்பதை உணர்ந்தவராய் அவர் அதை எதிர்த்துப் போராடுகிறார். (யாக்கோபு 4:7) அவர் கடவுளை நம்பியிருக்கிறார் என்பதை அறிந்திருக்கும் மற்றவர்களுக்கு இந்த மனிதன் உற்சாகமளிப்பவராக இருக்கிறார். (சங்கீதம் 29:11) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவர் வியாதியாயிருப்பவர்களோடும் மற்றவர்களோடும் தொலைபேசியின் மூலம் பேசி அவர்களை ஆவிக்குரிய விதத்தில் கட்டியெழுப்புகிறார். ராஜ்ய இன்னிசை பாடல்களை ஆடியயோ கேஸட்டுகளில் கேட்பதன் மூலமும், இந்தப் பத்திரிகையிலும், இதன் கூட்டுப் பத்திரிகையான விழித்தெழு!-விலுமுள்ள கட்டுரைகளின் மூலமும், உடன் விசுவாசிகளோடு கூட்டுறவுக்கொள்வதன் மூலமும் அவர்தாமே கட்டியெழுப்பப்படுகிறார். இந்த சகோதரர் சொல்கிறார்: “நான் யெகோவாவிடம் ஒழுங்காக ஜெபத்தில் பேசி பெலத்தையும், வழிநடத்துதலையும் ஆறுதலையும் சகித்திருப்பதற்கு உதவியையும் கேட்கிறேன்.” கவலைக்குரிய உடல்நல பிரச்னைகளை அனுபவித்துவரும் ஒரு கிறிஸ்தவராக நீங்கள் இருந்தால், எப்போதும் யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து அவருடைய நித்திய கரங்களை உங்கள் ஆதரவாக்கிக் கொள்ளுங்கள்.
9. மனச்சோர்வு சில சமயங்களில் தேவபக்தியுள்ள ஆட்களைத் தொந்தரவு செய்கிறது என்பதை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?
9 மனச்சோர்வு மிகப் பழைமையான ஒரு பிரச்னையாகும். யோபு சோதனையின் கீழிருக்கையில் கடவுளால் கைவிடப்பட்டவனாக உணர்ந்த ஒரு மனிதனைப் போல பேசினார். (யோபு 29:2–5) எருசலேமும் அதன் மதில்களும் பாழடைந்த நிலையில் இருந்தது குறித்து நெகேமியா துக்கமாயிருந்தான், பேதுரு கிறிஸ்துவை மறுதலித்தது குறித்து அத்தனை சோர்வுற்றதனால் அவன் மனங்கசந்து அழுதான். (நெகேமியா 2:1–8; லூக்கா 22:62) பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவர்கள் எப்பாப்பிரோத்து வியாதிப்பட்டதை கேள்விப்பட்டதனாலே அவன் மிகவும் சோர்வடைந்தான். (பிலிப்பியர் 2:25, 26) தெசலோனிக்கேயாவிலிருந்த சில கிறிஸ்தவர்களை சோர்வு ஆட்டி வைத்திருக்கிறது, ஏனென்றால் அங்கிருந்த சகோதரர்களை, “திடனற்றவர்களை தேற்றும்படியாக” பவுல் துரிதப்படுத்தினார். (1 தெசலோனிக்கேயர் 5:14) ஆகவே இப்பேர்ப்பட்ட ஆட்களுக்கு கடவுள் எவ்வாறு உதவி செய்கிறார்?
10. மனச்சோர்வைச் சமாளிக்க முயற்சி செய்கையில் எது பிரயோஜனமாயிருக்கக்கூடும்?
10 கடுமையான சோர்வுக்கு சிகிச்சையைக் குறித்து சொந்த தீர்மானம் செய்யப்பட வேண்டும்.a (கலாத்தியர் 6:5) போதுமான ஓய்வும் சமநிலையான வேலைகளும் உதவிசெய்வதாக இருக்கும். பல்வேறு பிரச்னைகளை ஒரே ஒரு முக்கியமான ஆபத்தான நிலையாக கருதுவதற்குப் பதிலாக, சோர்வுற்ற ஒரு தனிநபர், அவற்றை ஒரு சமயத்தில் ஒன்றை தீர்ப்பதற்காக செயல்படுவதைப் பிரயோஜனமாகக் காணக்கூடும். சபை மூப்பர்களிடமிருந்து வரும் ஆறுதலான உதவி, விசேஷமாக இந்த உடல்நல பிரச்னை, ஆவிக்குரிய கவலையை உண்டுபண்ணுமேயானால், மிகவும் பிரயோஜனமுள்ளதாக இருக்கக்கூடும். (யாக்கோபு 5:13–15) எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் ‘நம் மீது அக்கறையுள்ளவராய் இருக்கிறபடியால், நம் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிட்டு’ யெகோவாவின் மீது சார்ந்திருப்பது இன்றியமையாததாகும். விடாது உறுதியாகவும், இறுதயப்பூர்வமாகவும் ஜெபிப்பது, ‘இருதயங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் தேவ சமாதானத்தைக்’ கொண்டுவரக்கூடும்.—1 பேதுரு 5:6–11; பிலிப்பியர் 4:6, 7.
துக்கத்தைச் சகித்துக்கொள்ள யெகோவா நமக்கு உதவியளிக்கிறார்
11-13. அன்பான ஒருவரின் மரணத்தில் துயரத்தைத் தணிக்க எது உதவக்கூடும்?
11 அன்பான ஒருவரின் மரணம் துயர்தரும் மற்றொரு அனுபவமாகும். சாராள் மரித்தபோது ஆபிரகாம் அவளுக்காக புலம்பி அழுதான். (ஆதியாகமம் 23:2) தன் மகன் அப்சலோம் மரித்தபோது, தாவீது ஆழ்ந்த துயரத்திலிருந்தான். (2 சாமுவேல் 18:33) ஏன், தன் சிநேகிதனாகிய லாசரு மரித்த போது பரிபூரண மனிதனாகிய இயேசு “கண்ணீர்விட்டார்.” (யோவான் 11:35) ஆகவே அன்பான ஒருவரை மரணம் பறித்துக்கொள்ளும் போது அங்கு துயரம் ஏற்படுகிறது. ஆனால், எது இப்பேர்ப்பட்ட துக்கத்தை தணிக்க உதவக்கூடும்?
12 கடவுள் தம்முடைய மக்களுக்குக் இழப்பின் கடுமையான துக்கத்தைச் சகித்துக்கொள்ள உதவி செய்கிறார். அவருடைய வார்த்தை ஓர் உயிர்த்தெழுதல் இருக்கும் என்பதாக சொல்லுகிறது. ஆகவே நாம், “நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கி”ப்பதில்லை. (1 தெசலோனிக்கேயர் 4:13; அப்போஸ்தலர் 24:15) மரித்த அன்பானவரைப் பற்றிய துயரமான நினைவுகளில் ஆழ்ந்துவிடுவதற்குப் பதிலாக சமாதானத்தையும் விசுவாசத்தையும் கொண்டிருக்கவும் அவருடைய வார்த்தையில் வாக்குப்பண்ணப்பட்டுள்ள மகத்தான எதிர்காலத்தின் மீது தியானிக்கவும் யெகோவாவின் ஆவி நமக்கு உதவி செய்கிறது. வேதாகமத்தை வாசிப்பதன் மூலமும், “சகலவிதமான ஆறுதலின் தேவனிடம்” ஜெபிப்பதன் மூலமும்கூட ஆறுதல் கிடைக்கிறது.—2 கொரிந்தியர் 1:3, 4; சங்கீதம் 68:4–6.
13 தேவபக்தியுள்ள யோபு செய்தது போல, உயிர்த்தெழுதல் நம்பிக்கையிலிருந்து நாம் ஆறுதலைப் பெறக்கூடும். யோபு சொன்னார்: “நீர் [யெகோவா] என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின் மேல் விருப்பம் வைப்பீராக.” (யோபு 14:13–15) அன்புள்ள ஒரு நண்பர் பிரயாணம் போகும்போது பொதுவாக ஆழ்ந்த துயரம் அனுபவிக்கப்படுவதில்லை, ஏனென்றால் நாம் அவரை மறுபடியுமாக பார்க்க எதிர்பார்க்கிறோம். உண்மையுள்ள ஒரு கிறிஸ்தவனின் மரணத்தை நாம் அவ்விதமாக நோக்குவோமானால் துக்கம் குறையக்கூடும். அவருக்கு பூமிக்குரிய ஒரு நம்பிக்கை இருந்தால், அவர் மரண நித்திரையிலிருந்து இங்கே பூமியின் மீது கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில் உயிர்த்தெழுப்பப்படுவார். (யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 20:11–13) பூமியின் மீது என்றும் வாழும் நம்பிக்கை நமக்கிருக்குமேயானால், உயிர்த்தெழுந்துவரும் நம்முடைய அன்பானவரை வரவேற்க நாம் இங்கே இருக்கக்கூடும்.
14. இரண்டு கிறிஸ்தவ விதவைகள் எவ்விதமாக தங்கள் கணவன்மார்களின் மரணத்தைச் சமாளித்தார்கள்?
14 தன்னுடைய கணவரின் மரணத்துக்குப் பின்பு, ஒரு சகோதரி, தான் கடவுளுடைய சேவையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தாள். “கர்த்தருடைய கிரியையிலே செய்வதற்கு அதிகத்தை கொண்டிருப்பதை” தவிர, அவள் 800 துண்டுதுணிகளை வைத்து ஒரு பஞ்சுறையை செய்தாள். (1 கொரிந்தியர் 15:58) “இது ஒரு நல்ல திட்டமாக இருந்தது” என்று அவள் சொல்கிறாள், “ஏனென்றால் நான் வேலைசெய்துகொண்டிந்த போதெல்லாம், ராஜ்ய இன்னிசைகளையும் பைபிள் டேப்புகளையும் கேட்டுக் கொண்டிருக்க முடியும், இது என் மனதை சுறுசுறுப்பாக வைத்தது.” அனுபவமுள்ள ஒரு மூப்பரும் அவர் மனைவியும் தன்னை வந்து சந்தித்ததை அவள் உருக்கத்தோடு நினைவுபடுத்திப் பார்க்கிறாள். பைபிளிலிலிருந்து, கடவுள் உண்மையில் விதவைகளில் அக்கறையுள்ளவராக இருப்பதை மூப்பர் சுட்டிக் காண்பித்தார். (யாக்கோபு 1:27) மற்றொரு கிறிஸ்தவ பெண் தன் கணவன் மரித்தபோது சுய–பரிதாப உணர்ச்சிக்கு இடங்கொடுக்கவில்லை. நண்பர்களின் ஆதரவை அவள் போற்றினாள், மற்றவர்களில் அவள் அதிகமான அக்கறை எடுத்துக் கொண்டாள். “நான் அதிக அடிக்கடி ஜெபித்து யெகோவாவோடு நெருக்கமான ஓர் உறவை வளர்த்துக் கொண்டேன்,” என்று அவள் சொல்கிறாள். கடவுளுடைய நித்திய கரங்களின் ஆதரவைக் கொண்டிருப்பது என்னே ஓர் ஆசீர்வாதம்!
நாம் தவறு செய்கையில் உதவி
15. சங்கீதம் 19:7–13-லுள்ள தாவீதின் வார்த்தைகளின் சாராம்சம் என்ன?
15 நாம் யெகோவாவின் பிரமாணத்தை நேசித்த போதிலும், நாம் சில சமயங்களில் தவறு செய்துவிடுகிறோம். தாவீதுக்கு செய்தது போலவே இது நமக்கு வேதனையளிப்பது குறித்து எந்த சந்தேகமுமில்லை. தாவீதுக்கு கடவுளுடைய சட்டங்களும், கட்டளைகளும் பிரமாணங்களும் பொன்னைவிட அதிகமாக விரும்பத்தக்கதாக இருந்தது. அவர் சொன்னார்: “அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு, தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும். அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.” (சங்கீதம் 19:7–13) இந்த வார்த்தைகளை நாம் ஆராய்ந்து பார்ப்போமாக.
16. நாம் ஏன் துணிகரத்தைத் தவிர்க்க வேண்டும்?
16 துணிகரமான பாவங்கள் தவறுகளைக்காட்டிலும் அதிக வினைமையான பாவங்களாகும். துணிகரமாக பலி செலுத்தியதற்காகவும், அமலேக்கியர் முழுவதுமாக சங்கரிக்கப்பட வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருந்த போதிலும் மிகச் சிறந்த கொள்ளைப் பொருளையும் ராஜாவாகிய ஆகாகையும் விட்டுவைத்தமைக்காகவும் சவுல் ராஜாவாயிராதபடி தள்ளப்பட்டார். (1 சாமுவேல் 13:8–14; 15:8–19) உசியா ராஜா ஆசாரியருடைய சேவைகளை துணிந்து செய்ததற்காக அவன் குஷ்டரோகத்தால் அடிக்கப்பட்டான். (2 நாளாகமம் 26:16–21) உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்கு எடுத்து செல்லப்படுகையில் மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்த போது உசியா அதை நிலைநிறுத்துவதற்காக பயபக்தியில்லாமல் பிடித்ததற்காகக் கடவுள் அவனை குஷ்டரோகத்தால் அடித்தார். (2 சாமுவேல் 6:6, 7) ஆகவே என்ன செய்வது என்பதையோ அல்லது ஏதோவொன்றைச் செய்வதற்கு நமக்கு அதிகாரமிருக்கிறதா என்பதையோ அறியாமலிருந்தால், நாம் அடக்கத்தைக் காண்பித்து பகுத்துணர்வு உள்ளவர்களிடம் கலந்து பேச வேண்டும். (நீதிமொழிகள் 11:2; 13:10) நிச்சயமாகவே நாம் எப்போதாவது துணிகரமுள்ளவர்களாயிருந்தால், நாம் மன்னிப்புக்காக ஜெபித்து எதிர்காலத்தில் துணிகரமாயிருப்பதற்கு எதிராக நம்மை விலக்கியருள வேண்டும் என்று கடவுளிடம் கேட்கலாம்.
17. மறைந்திருக்கும் பாவங்கள் எவ்விதமாக ஒரு நபரை பாதிக்கக்கூடும், என்றாலும் மன்னிப்பையும் நிவாரணத்தையும் எவ்விதமாக பெற்றுக்கொள்ள முடியும்?
17 மறைந்திருக்கும் பாவங்கள் வேதனையளிக்கக்கூடும். சங்கீதம் 32:1–5-ன் பிரகாரம், தாவீது தன் பாவத்தை மறைக்க முயன்றான், ஆனால் அவன் சொன்னான்: “நான் அடக்கி வைத்த மட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சி போல வறண்டுபோயிற்று.” குற்றமுள்ள மனசாட்சியை அடக்கி வைக்க முயன்றது தாவீதை சோர்வுறச் செய்தது, ஒரு விருட்சம் வறட்சியின் போது அல்லது கோடைகால வறண்ட உஷ்ணத்தில் உயிரளிக்கும் ஈரத்தை இழப்பது போல, துயரம் அவன் வலிமையைக் குறைத்தது. அவன் மனதின் பிரகாரமாயும் சரீரபிரகாரமாயும் மோசமான பாதிப்புகளை அனுபவித்தான், பாவத்தை அறிக்கை செய்ய தவறியதால் சந்தோஷத்தை இழந்து போனான். கடவுளிடம் அறிக்கை செய்வது மட்டுமே மன்னிப்பையும் நிவாரணத்தையும் கொண்டு வரமுடியும். தாவீது சொன்னான்: “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான் . . . நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, NW] அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.” கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்து வரும் அன்பான உதவி, ஆவிக்குரிய சுகமடைதலுக்கு ஊக்கமளித்து உதவக்கூடும்.—நீதிமொழிகள் 28:13; யாக்கோபு 5:13–20.
18. பாவம் நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய பாதிப்புகளை கொண்டிருக்கக்கூடும் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் எது ஆறுதலின் ஊற்றுமூலமாக இருக்கக்கூடும்?
18 பாவம், நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய பாதிப்புகளைக் கொண்டிருக்கக்கூடும். பத்சேபாளோடு வேசித்தனம் பண்ணி, அவளுடைய கணவனைக் கொல்லப்படும்படிச் செய்து, கர்ப்பமாயிருந்த விதவையை விவாகம் செய்து கொண்ட போது தாவீதுக்கு அது அவ்விதமாக இருந்தது. (2 சாமுவேல் 11:1–27) ராஜ்ய உடன்படிக்கையினாலும், தாவீது மனந்திரும்பியதாலும், மற்றவர்களை அவன் தயவோடு நடத்தியதன் காரணமாகவும் கடவுள் அவனுக்கு இரக்கம் காண்பித்தபோதிலும், தாவீது, ‘அவன் சொந்த வீட்டிலே பொல்லாப்பை’ அனுபவித்தான். (2 சாமுவேல் 12:1–12) வேசித்தனத்தினால் பிறந்த பிள்ளை செத்துப் போனது. தாவீதின் குமாரன் அம்னோன் தன் ஒன்றுவிட்ட சகோதரியான தாமாரை கற்பழித்தான், அவளுடைய சகோதரன் அப்சலோமின் உத்தரவுபடி அவன் கொல்லப்பட்டான். (2 சாமுவேல் 12:15–23; 13:1–33) அப்சலோம், தாவீதின் மறுமனையாட்டிகளோடு உறவு கொள்வதன் மூலம் அவனை அவமானப்படுத்தினான். அவன் சிங்காசனத்தை கைப்பற்ற முயன்றான், ஆனால் கொல்லப்பட்டான். (2 சாமுவேல் 15:1–18:33) பாவம் இன்னும் பின்விளைவுகளைக் கொண்டதாகவே இருக்கிறது. உதாரணமாக, சபை நீக்கம் செய்யப்பட்ட தவறிழைத்த நபர் மனந்திரும்பி, சபையில் திரும்பவும் நிலைநாட்டப்படலாம், ஆனால் பாவத்தின் விளைவாக இருக்கும் கறைபடிந்த பெயரையும், உணர்ச்சிபூர்வமான அதிர்ச்சியையும் மேற்கொள்வதற்கு பல ஆண்டுகள் எடுக்கக்கூடும். இதற்கிடையில், யெகோவாவின் மன்னிப்பையும் அவருடைய நித்திய கரங்களின் ஆதரவையும் கொண்டிருப்பது எத்தனை ஆறுதலாக இருக்கிறது!
நம்மீதுள்ள அழுத்தங்களிலிருந்து விடுவிக்கப்படுதல்
19. நாம் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகையில் கடவுளுடைய ஆவி எவ்விதமாக உதவியாக இருக்கக்கூடும்?
19 மிகக் கடுமையாக சோதிக்கப்படுகையில், ஒரு தீர்மானம் செய்யவும், அதை நிறைவேற்றவும் நமக்குப் போதிய ஞானமும் பலமும் குறைவுபடக்கூடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் கடவுளுடைய ஆவி “நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்ய சேர்ந்துகொள்கிறது. நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவிதாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறது.” (ரோமர் 8:26, NW) யெகோவா சூழ்நிலைமைகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவாரேயானால், நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். என்றபோதிலும், அவருடைய கரம் நம்மை மற்றொரு வழியில் இரட்சிக்கக்கூடும். நாம் ஞானத்துக்காக வேண்டுதல் செய்தால், யெகோவா நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தம்முடைய ஆவியால் உணர்த்தி அதை செய்வதற்குத் தேவையான பெலத்தைக் கொடுப்பார். (யாக்கோபு 1:5–8) “பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படும்” போது அவருடைய உதவியோடு நாம் சகித்திருந்து சோதிக்கப்பட்ட மற்றும் பலப்படுத்தப்பட்ட விசுவாசத்தோடு அவைகளிலிருந்து வெளியே வரலாம்.—1 பேதுரு 1:6–8.
20. நாம் யெகோவாவின் நித்திய கரங்களை உண்மையில் நம்முடைய ஆதரவாக ஆக்கிக்கொள்வோமேயானால், நாம் எதை அனுபவித்துக் களிப்போம்?
20 ஜெபத்தில் கடவுளிடமாகத் திரும்புவதில் நாம் ஒருபோதும் சோர்ந்து போகாதிருப்போமாக. “என் கண்கள் எப்போதும் கர்த்தரை (யெகோவாவை, NW) நோக்கிக் கொண்டிருக்கிறது. அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்,” என்று தாவீது சொன்னான். “என் மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன். என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும். என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.” (சங்கீதம் 25:15–18) தாவீதைப் போல நாம் யெகோவாவின் நித்திய கரங்களை உண்மையில் நம்முடைய ஆதரவாக்கிக் கொள்வோமானால், நாம் தெய்வீக மீட்பையும் தயவையும், மன்னிப்பையும் அனுபவித்துக்களிப்போம். (w91 10/1)
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! அக்டோபர் 22, 1987, பக்கங்கள் 2–16, மற்றும் நவம்பர் 8, 1987, பக்கங்கள் 12–16-ல் மனச்சோர்வு என்ற பொருளின் பேரில் கட்டுரைகளைப் பார்க்கவும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻யெகோவா வியாதியிலிருக்கும் தம்முடைய ஊழியர்களுக்கு எவ்வாறு உதவி செய்கிறார்?
◻மனச்சோர்வைச் சமாளிக்க நாம் முயற்சி செய்துகொண்டிருக்கையில் எது உதவியாக இருக்கக்கூடும்?
◻அன்பான ஒருவரின் மரணத்தினால் ஏற்படும் துக்கத்தைத் தணிக்க எது உதவக்கூடும்?
◻தங்கள் பாவங்களை மறைக்கிறவர்கள் எவ்விதமாக நிவாரணம் பெறலாம்?
◻யெகோவாவின் மக்கள் கடுமையாகச் சோதிக்கப்படுகையில் என்ன உதவி இருக்கிறது?
[பக்கம் 16 , 17-ன் படம்]
தேவபக்தியுள்ள யோபு செய்தது போலவே, நாம் உயிர்த்தெழுதல் நம்பிக்கையிலிருந்து ஆறுதல் பெறலாம்.