யெகோவாவின் அன்பான குடும்ப ஏற்பாடு
“இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, . . . பிதாவை நோக்கி முழங்கால்படியி(டுகிறேன்).”—எபேசியர் 3:14, 15.
1, 2. (எ) குடும்ப தொகுதியை யெகோவா எந்த நோக்கத்துடன் சிருஷ்டித்தார்? (பி) யெகோவாவின் ஏற்பாட்டில் குடும்பம் இன்று என்ன பாகத்தைக் கொண்டிருக்க வேண்டும்?
யெகோவா குடும்ப தொகுதியை சிருஷ்டித்தார். அதன் மூலம் அவர் தோழமை, ஆதரவு, அல்லது நெருங்கிய உறவு ஆகியவற்றுக்கான மானிட தேவையைத் திருப்தி செய்வதற்கும் மேலாக அதிகத்தைச் செய்தார். (ஆதியாகமம் 2:18) பூமியை நிரப்பும், கடவுளுடைய மகத்தான நோக்கம் நிறைவேற்றப்படுவதற்குக் குடும்பம் வழிவகையாக இருந்தது. “நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள்,” என்று அவர் முதல் திருமண தம்பதியிடம் சொன்னார். (ஆதியாகமம் 1:28) ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அவர்களுடைய சந்ததியாருக்கும் பிறக்கப்போகும் பேரெண்ணிக்கையான பிள்ளைகளுக்கு அனலான பேணி வளர்க்கும் குடும்ப சூழல் பயனுள்ளதாக நிரூபிக்கும்.
2 என்றபோதிலும், அந்த முதல் தம்பதி கீழ்ப்படிதலை மீறும் போக்கை தெரிந்து கொண்டனர்—தங்களுக்கும் தங்களுடைய பிள்ளைகளுக்கும்—சமாளிக்கமுடியாத அளவு நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தினர். (ரோமர் 5:12) குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்பினாரோ, அதன் உருகுலைந்த வடிவில்தான் இன்றைய குடும்ப வாழ்க்கை உள்ளது. இருந்தபோதிலும், யெகோவாவின் ஏற்பாட்டில் குடும்பம் ஒரு முக்கியமான இடத்தை தொடர்ந்து வகித்துக்கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ சமுதாயத்தின் அடிப்படை தொகுதியாக சேவிக்கிறது. நம் மத்தியில் இருக்கும் அநேக மணமாகாத கிறிஸ்தவர்கள் செய்யும் சிறந்த வேலைக்கு எந்தப் போற்றுதலுமின்றி இது சொல்லப்படவில்லை. மாறாக, முழு கிறிஸ்தவ அமைப்பின் ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கு குடும்பங்களும்கூட அளிக்கும் பெரும் பங்கை நாங்கள் மதித்துணருகிறோம். பலமான குடும்பங்கள் பலமான சபைகளை உண்டுபண்ணுகின்றன. இன்றைய அழுத்தங்களின் மத்தியில் உங்களுடைய குடும்பம் எப்படி செழிப்பாக இருக்கமுடியும்? இதற்கு பதிலை பெற, குடும்ப ஏற்பாட்டைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் ஆராயலாம்.
பைபிள் காலங்களில் குடும்பம்
3. முற்பிதாக்களின் குடும்பத்தில் கணவனும் மனைவியும் என்ன பாகங்களை வகித்தனர்?
3 கடவுளின் தலைமைத்துவ ஏற்பாட்டை ஆதாமும் ஏவாளும் உதாசீனமாக புறக்கணித்தனர். ஆனால் விசுவாசமுள்ள மனிதர்களாகிய நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோபு ஆகியோர் குடும்ப தலைவர்களாக தங்கள் ஸ்தானங்களை சரியாக ஏற்றுக்கொண்டனர். (எபிரெயர் 7:4) முற்பிதாக்களின் குடும்பம் ஒரு சிறிய அரசாங்கத்தைப் போன்று இருந்தது. தகப்பன் மதத்தலைவராகவும், போதனையாளராகவும், நியாயாதிபதியாகவும் செயல்பட்டார். (ஆதியாகமம் 8:20; 18:19) மனைவிகளும் முக்கியமான பங்கைக் கொண்டிருந்தனர். அவர்கள் அடிமைகளாக அல்ல, ஆனால் வீட்டு துணை மேலாளர்களாக சேவித்தனர்.
4. மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின் கீழ் குடும்ப வாழ்க்கை எவ்வாறு மாறியது, ஆனால் பெற்றோர் என்ன பங்கை தொடர்ந்து வகித்து வந்தனர்?
4 பொ.ச.மு. 1513-ல் இஸ்ரவேல் ஒரு தேசமாக ஆனபோது, குடும்ப சட்டம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட தேசீய நியாயப்பிரமாண சட்டத்துக்கு கீழாக ஆனது. (யாத்திராகமம் 24:3-8) ஜீவன்-மரணம் உட்பட்டிருந்த விஷயங்கள் உட்பட தீர்மானம் செய்வதற்கான அதிகாரம் இப்போது நியமிக்கப்பட்ட நியாயாதிபதிகளுக்குக் கொடுக்கப்பட்டது. (யாத்திராகமம் 18:13-26) லேவிய ஆசாரியத்துவம் வணக்கத்தின் பலி சம்பந்தப்பட்ட அம்சங்களை கவனித்துக்கொண்டது. (லேவியராகமம் 1:2-5) எனினும், தகப்பன் ஒரு முக்கியமான பங்கைத் தொடர்ந்து வகித்து வந்தார். மோசே தகப்பன்மாருக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.” (உபாகமம் 6:6, 7) தாய்மார்களுக்கு கணிசமான செல்வாக்கு இருந்தது. நீதிமொழிகள் 1:8 இளைஞருக்கு இவ்வாறு கட்டளையிட்டது: “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.” ஆம், தன் கணவனின் அதிகார ஏற்பாட்டுக்குள், எபிரெய மனைவி குடும்ப சட்டத்தை உருவாக்கலாம். அதை செயற்படுத்தலாம். வயதாகிய பின்பும் அவள் தன் பிள்ளைகளால் கனப்படுத்தப்பட வேண்டும்.—நீதிமொழிகள் 23:22.
5. குடும்ப ஏற்பாட்டில் பிள்ளைகளின் ஸ்தானத்தை மோசேயின் நியாயப்பிரமாணம் எவ்வாறு விளக்கியது?
5 பிள்ளைகளின் ஸ்தானத்தையும்கூட கடவுளுடைய சட்டம் தெளிவாக வரையறுத்தது. “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக,” என்று உபாகமம் 5:16 கூறியது. ஒருவருடைய பெற்றோருக்கு அவமரியாதை காண்பிப்பது, மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின் கீழ் ஓர் அதிவினைமையான குற்றமாக இருந்தது. (யாத்திராகமம் 21:15, 17) “தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்,” என்று நியாயப்பிரமாண சட்டம் கூறியது. (லேவியராகமம் 20:9, NW) ஒருவருடைய பெற்றோருக்கு எதிராக கலகம் செய்வது, கடவுளுக்கு எதிராக கலகம் செய்வதற்கு ஒப்பாக இருந்தது.
கிறிஸ்தவ கணவர்களின் பங்கு
6, 7. எபேசியர் 5:23-29 வரை உள்ள பவுலின் வார்த்தைகள் அவரது முதல் நூற்றாண்டு வாசகர்களுக்கு ஏன் புரட்சிகரமானதாய் தோன்றியது?
6 கிறிஸ்தவம் குடும்ப ஏற்பாட்டைக் குறித்து, குறிப்பாக கணவனின் பங்கைக் குறித்து மிகுதியான தகவலை அளித்தது. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ சபைக்கு வெளியே இருந்த கணவர்கள் தங்கள் மனைவிகளை கடுமையாகவும் அடக்கியாளும் முறையிலும் நடத்தியது வழக்கமாக இருந்தது. பெண்களுக்கு அடிப்படை உரிமைகளும் கண்ணியமும் மறுக்கப்பட்டது. தி எக்ஸ்பாசிட்டர்ஸ் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நாகரிகமான கிரேக்கன் பிள்ளைகளைப் பிறப்பிப்பதற்காக ஒரு மனைவியை எடுத்துக் கொண்டான். அவளுடைய உரிமைகள் அவனுடைய பாலுறவு சம்பந்தமான ஆசைகள் பேரில் எந்தத் தடையும் விதிக்கவில்லை. திருமண ஒப்பந்தத்தில் அன்பு ஒரு பாகமாக இல்லை . . . அடிமையாக இருந்த அந்தப் பெண்ணுக்கு எந்த உரிமைகளும் இல்லை. அவளுடைய உடல் அவளுடைய எஜமானின் உபயோகத்திற்கு என இருந்தது.”
7 அப்படிப்பட்ட ஒரு சூழமைவில் எபேசியர் 5:23-29 வரை உள்ள வார்த்தைகளை பவுல் எழுதினார்: “கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார் . . . புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; . . . ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.” முதல் நூற்றாண்டு வாசகர்களுக்கு, இந்தச் சொற்கள் புரட்சிகரமானதாய் தொனித்தன. தி எக்ஸ்பாசிட்டர்ஸ் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “சீர்குலைந்த ஒழுக்கநெறிகள் இருந்த அக்காலத்தில், திருமணத்தைப் பற்றிய கிறிஸ்தவ நோக்குநிலையைவிட கிறிஸ்தவத்தில் வேறெதுவும் அவ்வளவு நவீனமாகவும் கடுமையாகவும் தோன்றவில்லை. . . . [அது] மனிதகுலத்திற்கு புதிய சகாப்தத்தைத் திறந்தது.”
8, 9. பெண்களைக் குறித்து என்ன ஆரோக்கியமற்ற மனநிலைகள் ஆண்களில் பொதுவாக இருக்கிறது, இப்படிப்பட்ட நோக்குநிலைகளை கிறிஸ்தவ ஆண்கள் வேண்டாம் என்று விலக்குவது ஏன் முக்கியமானதாய் இருக்கிறது?
8 கணவர்களுக்கான புத்திமதி இன்று அதன் புரட்சிகரமான தோற்றத்தில் குறைந்துவிடவில்லை. பெண்களின் விடுதலையைப் பற்றி அதிகமான பேச்சு இருந்தபோதிலும், வெறும் பாலுறவு ஆசைகளை திருப்தி செய்துகொள்வதற்குரிய பொருள்களாக பெண்கள் இன்றும் அநேக ஆண்களால் கருதப்படுகின்றனர். ஆதிக்கம் செலுத்தப்படுவதையும் கட்டுப்படுத்தப்படுவதையும் அல்லது கொடுமைப்படுத்தப்படுவதையும் பெண்கள் உண்மையில் அனுபவித்து மகிழ்கின்றனர் என்ற பொய்யை நம்பி அநேக ஆண்கள் தங்கள் மனைவிகளை சரீரப்பிரகாரமாகவும் உணர்ச்சிசம்பந்தமாகவும் தவறாகப் பயன்படுத்துகின்றனர். உலகப்பிரகாரமான சிந்தனையினால் பீடிக்கப்பட்டு தன் மனைவியை தவறாக நடத்துவது ஒரு கிறிஸ்தவனுக்கு எவ்வளவு அவமானமாக இருக்கும். “என்னுடைய கணவர் ஓர் உதவி ஊழியராக இருந்தார். பொதுப் பேச்சுகள் கொடுத்தார். இருந்தாலும், என் கணவனின் அடிஉதைகளுக்கு நான் ஆளானேன்” என்று ஒரு கிறிஸ்தவ பெண் வெளிப்படையாக சொல்கிறார்கள். இப்படிப்பட்ட செயல்கள் கடவுளுடைய ஏற்பாட்டுக்கு பொருத்தமற்றதாக இருந்தது என்பது தெளிவாக இருக்கிறது. அந்த மனிதன் வழக்கத்துக்கு மாறான விதிவிலக்காயிருந்தான். கடவுளுடைய ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் விரும்பினால், அவர் தன் கோபத்தைக் கையாளுவதற்கு உதவியை நாட வேண்டிய தேவை இருந்தது.—கலாத்தியர் 5:19-21.
9 தங்களுடைய சொந்த சரீரங்களைப் போல தங்கள் மனைவிகளில் அன்புகூரவேண்டும் என்று கடவுள் கணவர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார். அவ்வாறு செய்ய மறுப்பது கடவுளுடைய ஏற்பாட்டுக்கு எதிராகவே கலகம் செய்வதாயிருக்கிறது. அது ஒருவர் கடவுளோடு கொண்டுள்ள உறவை அழித்துவிடக்கூடும். அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகள் தெளிவாக இருக்கிறது: “அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே [உங்கள் மனைவிகளுடனே] வாழ்ந்து, . . . அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.” (1 பேதுரு 3:7) ஒருவர் தன் மனைவியை கடுமையாக நடத்துவது, அவளுடைய ஆவிக்குரியத்தன்மையிலும் பிள்ளைகளுடைய ஆவிக்குரியத்தன்மையிலும்கூட நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
10. கிறிஸ்து செய்தது போன்று கணவர்கள் தலைமை ஸ்தானத்தை பயன்படுத்த சில வழிகள் யாவை?
10 கணவர்களே, உங்களுடைய தலைமை ஸ்தானத்தைக் கிறிஸ்து செய்தது போன்று பிரயோகித்தால், அதன் கீழ் உங்களுடைய குடும்பம் செழித்தோங்கும். கிறிஸ்து கடுமையாகவோ அல்லது பழிதூற்றுபவராகவோ ஒருபோதும் இருக்கவில்லை. அதற்கு மாறாக அவர் இவ்வாறு சொல்ல முடிந்தது: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; . . . என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத்தேயு 11:29) உங்களுடைய குடும்பம் உங்களைப்பற்றி அவ்வாறு சொல்லுமா? கிறிஸ்து தன் சீஷர்களை நண்பர்களைப் போல் நடத்தி, அவர்கள் மீது நம்பிக்கை வைத்தார். (யோவான் 15:15) நீங்கள் உங்களுடைய மனைவிக்கு அதே கண்ணியத்தை கொடுக்கிறீர்களா? “திறமைசாலியான மனைவியைப்” பற்றி பைபிள் இவ்வாறு சொன்னது: “அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்.” (நீதிமொழிகள் 31:10, 11, NW) மனைவிக்கு ஓரளவு சுயாதீனம் கொடுக்கவேண்டும். நியாயமற்ற தடைகளால் அவளைக் கட்டுப்படுத்தக்கூடாது. மேலும், சீஷர்கள் தங்கள் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வெளிப்படையாகச் சொல்லும்படி இயேசு அவர்களை உற்சாகப்படுத்தினார். (மத்தேயு 9:28; 16:13-15) நீங்கள் உங்கள் மனைவியோடு அதே போன்று செய்கிறீர்களா? அல்லது நேர்மையான கருத்துவேறுபாட்டை, உங்களுடைய அதிகாரத்துக்கு ஒரு சவாலாக நீங்கள் நோக்குகிறீர்களா? உங்களுடைய மனைவியின் உணர்ச்சிகளைப் புறக்கணிப்பதற்கு பதிலாக அவைகளை கவனத்துக்கு எடுத்துக் கொள்வதன் மூலம், நீங்கள் உண்மையில் உங்களுடைய தலைமை ஸ்தானத்துக்கு அவளுடைய மரியாதையை வளர்ப்பீர்கள்.
11. (எ) தகப்பன்மார் எவ்வாறு தங்கள் பிள்ளைகளின் ஆவிக்குரிய தேவைகளை கவனித்துக்கொள்ளலாம்? (பி) மூப்பர்களும் உதவிஊழியர்களும் தங்கள் குடும்பங்களை கவனித்துக்கொள்வதில் ஏன் ஒரு நல்ல முன்மாதிரியை வைக்கவேண்டும்?
11 நீங்கள் ஒரு தகப்பனாக இருக்கிறீர்களென்றால், உங்களுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய, உணர்ச்சிசம்பந்தமான மற்றும் சரீரத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதில் நீங்கள் தலைமைதாங்கி வழிநடத்தவும் வேண்டும். அது உங்களுடைய குடும்பத்துக்கு ஒரு நல்ல நடைமுறையான ஆவிக்குரிய சீரான பழக்கத்தைக் கொண்டிருப்பதை உட்படுத்துகிறது: அவர்களோடு வெளி ஊழியத்தில் வேலை செய்தல், ஒரு வீட்டு பைபிள் படிப்பை நடத்துதல், தினவசனத்தை கலந்தாலோசித்தல். ஒரு மூப்பரோ அல்லது ஓர் உதவி ஊழியரோ “தன் சொந்த குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனாய்” இருக்க வேண்டும் என்று பைபிள் காண்பிப்பது அக்கறைக்குரியதாயிருக்கிறது. இப்படிப்பட்ட தகுதிவாய்ந்த ஸ்தானங்களில் சேவிப்பவர்கள் முன்மாதிரியான குடும்ப தலைவர்களாக இருக்க வேண்டும். பெரும் பளுவான சபை உத்தரவாதங்களை அவர்கள் சுமக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் தங்கள் சொந்த குடும்பங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். ஏன் என்று பவுல் காண்பித்தார்: “ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?”—1 தீமோத்தேயு 3:4, 5, 12.
ஆதரவான கிறிஸ்தவ மனைவிகள்
12. கிறிஸ்தவ ஏற்பாட்டில் மனைவி என்ன பங்கை வகிக்கிறாள்?
12 நீங்கள் ஒரு கிறிஸ்தவ மனைவியா? அப்படியென்றால், குடும்ப ஏற்பாட்டில் நீங்களும்கூட ஒரு முக்கியமான பங்கை வகிக்க வேண்டும். கிறிஸ்தவ மனைவிகள் “தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிரு”க்க வேண்டும். (தீத்து 2:4, 5) இவ்வாறு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியான மனைவியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஒரு சுத்தமான மகிழ்வளிக்கிற வீட்டை நீங்கள் உங்களுடைய குடும்பத்துக்கு பராமரித்து காத்து வரவேண்டும். வீட்டு வேலை சில சமயங்களில் நம்மை களைப்படையச் செய்யும். ஆனால் அது மதிப்புக் குறைவானதோ அற்பமானதோ அல்ல. ஒரு மனைவியாக நீங்கள் ஒரு “வீட்டை நடத்து”கிறீர்கள். இந்த விஷயத்தில் நீங்கள் கணிசமான சுயாதீனத்தை அனுபவிக்கலாம். (1 தீமோத்தேயு 5:14) உதாரணமாக “திறமைசாலியான மனைவி” வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கினாள், சொத்துக்களை விசாரித்து வாங்கினாள், ஒரு சிறு வியாபாரத்தை நடத்தினதன் மூலம் ஊதியம் உண்டாக்கினாள். அவள் தன் கணவனின் பாராட்டை பெற்றுக்கொண்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை! (நீதிமொழிகள், அதிகாரம் 31) அவளுடைய தலைவனாக அவளுடைய கணவன் கொடுத்த அறிவுரைகளின் அடிப்படையில் மட்டுமே அப்படிப்பட்ட மனமுவந்த நடவடிக்கைகளை அவள் மேற்கொண்டாள்.
13. (எ) கீழ்ப்படிந்திருப்பது ஏன் சில பெண்களுக்கு கடினமாக இருக்கலாம்? (பி) கிறிஸ்தவ பெண்கள் தங்கள் கணவர்களுக்கு கீழ்ப்பட்டிருப்பது ஏன் பயனுள்ளது?
13 என்றாலும், உங்களுடைய கணவனுக்கு கீழ்ப்பட்டிருப்பது எப்போதுமே சுலபமானதாக இருக்காது. எல்லா ஆண்களுமே மரியாதை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுள்ளவர்களாய் இல்லை. பணத்தை கையாளுவதிலும், திட்டமிடுவதிலும் அல்லது ஏற்பாடு செய்வதிலும் நீங்கள் ஒருவேளை நல்ல திறமைசாலியாக இருக்கலாம். நீங்கள் ஓர் உலகப்பிரகாரமான வேலையை கொண்டிருக்கலாம். குடும்ப வருவாய்க்கு கணிசமான தொகையை நீங்கள் அளிக்கலாம். அல்லது கடந்த காலத்தில் நீங்கள் ஒருவேளை ஆண்களின் ஆதிக்கத்தினால் ஏதோ ஒரு விதத்தில் துன்பத்துக்கு ஆளாகியிருக்கலாம். அதனால் ஓர் ஆணுக்கு கீழ்ப்பட்டிருப்பதை நீங்கள் ஒருவேளை கடினமாக உணரலாம். இருப்பினும், உங்கள் கணவனுக்கு “ஆழ்ந்த மரியாதை,” அல்லது “பயம்” காண்பிப்பது, கடவுளுடைய தலைமை ஸ்தானத்துக்கு உங்களுடைய மரியாதையை வெளிக்காட்டுகிறது. (எபேசியர் 5:33; கிங்டம் இன்டர்லீனியர்; 1 கொரிந்தியர் 11:3) உங்களுடைய குடும்பத்தின் வெற்றிக்கு கீழ்ப்படிதலும்கூட மிகவும் முக்கியமானதாயிருக்கிறது; உங்களுடைய திருமணம் தேவையற்ற அழுத்தங்களுக்கும் சோர்வுகளுக்கும் உட்படுவதை தவிர்க்க அது உங்களுக்கு உதவுகிறது.
14. தன் கணவர் செய்திருக்கும் தீர்மானத்தை ஒரு மனைவி ஒத்துக்கொள்ளாவிட்டால் அவள் என்ன செய்யலாம்?
14 உங்களுடைய குடும்பத்தின் சிறந்த அக்கறைகளுக்கு எதிராக இருக்கும் ஒரு தீர்மானத்தை உங்களுடைய கணவன் எடுக்கிறார் என்று உணர்ந்தால் நீங்கள் மெளனமாயிருக்க வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? அவ்வாறு இருக்கவேண்டிய தேவையில்லை. ஆபிரகாமின் மனைவியாகிய சாராள் தன் குமாரனாகிய ஈசாக்கின் நலத்துக்கு இன்னல் வருமென உணர்ந்தபோது அவள் அமைதியாயிருக்கவில்லை. (ஆதியாகமம் 21:8-10) அதேபோன்று சில சமயங்களில் உங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு கடமைப்பட்டிருப்பதாக நீங்கள் ஒருவேளை உணரலாம். “ஏற்ற சமயத்தில்” மரியாதையான விதத்தில் இது செய்யப்பட்டால், தேவபக்தியுள்ள ஒரு கிறிஸ்தவ மனிதன் செவிகொடுத்துக் கேட்பார். (நீதிமொழிகள் 25:11) ஆனால் உங்களுடைய ஆலோசனை பின்பற்றப்படாமல், பைபிள் நியமத்தை வினைமையாக தவறுவது அதில் உட்படாமல் இருந்தால், உங்களுடைய கணவனின் விருப்பங்களுக்கு எதிராக செல்வது உங்களுக்கே கேடு செய்துகொள்வது போல் இருக்குமல்லவா? “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்,” என்பதை நினைவிற்கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 14:1) உங்களுடைய கணவனின் தலைமை ஸ்தானத்துக்கு ஆதரவு கொடுப்பது உங்களுடைய வீட்டைக் கட்டுவதற்கு ஒரு வழியாகும். அவருடைய சாதனைகளைப் புகழ வேண்டும். அவருடைய தவறுகளை அமைதியாக நிலைகுலைந்து விடாமல் கையாள வேண்டும்.
15. எந்த வழிகளில் ஒரு மனைவி தன் பிள்ளைகளை சிட்சிப்பதிலும் பயிற்றுவிப்பதிலும் பங்குகொள்ளலாம்?
15 உங்களுடைய பிள்ளைகளை பயிற்றுவிப்பதிலும், சிட்சிப்பதிலும் நீங்கள் பங்குகொள்வது, உங்களுடைய வீட்டை கட்டுவதற்கு மற்றொரு வழியாகும். உதாரணமாக, குடும்ப பைபிள் படிப்பை ஒழுங்காகவும், கட்டியெழுப்பக்கூடியதாகவும் வைக்க நீங்கள் உங்களுடைய பங்கை செய்யலாம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பிரயாணம் செய்யும்போது அல்லது வெறுமென பொருள் வாங்கக் கடைக்குச் செல்லும்போது உங்களுடைய பிள்ளைகளோடு கடவுளுடைய சத்தியங்களை பகிர்ந்துகொள்வதற்கான நேரம் வரும்போது “உன் கையை நெகிழவிடாதே.” (பிரசங்கி 11:6) கூட்டங்களில் பதில்கள் சொல்வதற்கும், தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் நியமிப்புகளுக்கு தயார் செய்வதற்கும் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்களுடைய கூட்டுறவுகளை விழிப்புடன் கூர்ந்து கவனியுங்கள். (1 கொரிந்தியர் 15:33) தெய்வீக தராதரங்கள், சிட்சை போன்ற விஷயங்களில் நீங்களும் உங்களுடைய கணவரும் ஒற்றுமையாய் இருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய பிள்ளைகளுக்கு தெரியப்படுத்துங்கள். பிள்ளைகள் உங்களுக்கும் உங்களுடைய கணவருக்கும் இடையே சண்டை மூட்டிவிட்டு தங்களுக்கு விருப்பமானதை பெற்றுக்கொள்ள அனுமதிக்காதீர்கள்.
16. (எ) ஒற்றை பெற்றோரையும், விசுவாசத்தில் இல்லாதவர்களை மணந்திருப்பவர்களையும் எந்தப் பைபிள் உதாரணம் உற்சாகப்படுத்துகிறது? (பி) அப்படிப்பட்டவர்களுக்கு சபையில் இருக்கும் மற்றவர்கள் எவ்வாறு உதவி செய்யலாம்?
16 நீங்கள் ஓர் ஒற்றை பெற்றோராகவோ அல்லது விசுவாசத்தில் இல்லாத துணையை உடையவராகவோ இருக்கிறீர்களென்றால், நீங்கள் ஆவிக்குரிய காரியங்களில் தலைமைதாங்கி வழிநடத்த வேண்டியிருக்கும். இது ஒருவேளை கடினமாக இருக்கலாம். சில சமயங்களில் சோர்வடையச் செய்வதாகவும்கூட இருக்கலாம். ஆனால் முயற்சி செய்வதை நிறுத்திவிடாதீர்கள். தீமோத்தேயுவின் தாயாகிய ஐனிக்கேயாள் விசுவாசத்தில் இல்லாத ஒருவரை மணந்திருந்தபோதிலும், “சிறுவயது முதல்” அவனுக்கு வேதவசனங்களை கற்பிப்பதில் வெற்றியடைந்தாள். (2 தீமோத்தேயு 1:5; 3:15) நம் மத்தியில் இருக்கும் அநேகர் இப்படிப்பட்ட வெற்றியை அனுபவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்களுடைய தேவைகளை மூப்பர்களிடம் தெரிவியுங்கள். கூட்டங்களுக்கும், வெளி ஊழியத்துக்கும் செல்ல உங்களுக்கு உதவி செய்ய யாராவது ஒருவரை அவர்கள் ஏற்பாடு செய்வார்கள். பொழுதுபோக்குக்காக ஒன்றாக கூடுவது அல்லது வெளியே செல்வது போன்றவற்றில் உங்களுடைய குடும்பத்தையும் சேர்த்துக்கொள்ள அவர்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம். அல்லது ஓர் அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபி குடும்ப படிப்பை ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு உதவி செய்ய அவர்கள் ஏற்பாடு செய்யலாம்.
போற்றுதலுள்ள பிள்ளைகள்
17. (எ) குடும்ப நலத்துக்கு இளைஞர் எவ்வாறு உதவி செய்யலாம்? (பி) இந்த விஷயத்தில் இயேசு என்ன முன்மாதிரியை வைத்தார்?
17 எபேசியர் 6:1-3 வரை உள்ள புத்திமதியை பின்பற்றுவதன் மூலம் கிறிஸ்தவ இளைஞர் குடும்பத்தின் நலனுக்கு பங்களிக்கலாம்: “பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.” உங்களுடைய பெற்றோரோடு ஒத்துழைப்பதன் மூலம், நீங்கள் யெகோவாவுக்கு உங்களுடைய மரியாதையை வெளிப்படுத்திக் காண்பிக்கிறீர்கள். இயேசுகிறிஸ்து பரிபூரணராக இருந்தார். ஆதலால் அபூரணமான பெற்றோருக்கு கீழ்ப்பட்டிருப்பது அவருடைய மதிப்புக்கு குறைவானது என்று அவர் எளிதாக வாதாடியிருக்கலாம். என்றாலும், “அவர் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். . . . இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.”—லூக்கா 2:51, 52.
18, 19. (எ) ஒருவருடைய பெற்றோரை கனம்பண்ணுவது என்பதன் அர்த்தம் என்ன? (பி) வீடு எவ்வாறு ஒரு புத்துணர்ச்சியளிக்கும் இடமாக ஆகக்கூடும்?
18 அதேபோன்று நீங்களும் உங்களுடைய பெற்றோருக்கு கனம் செலுத்தவேண்டுமல்லவா? “கனம்” என்பது தகுதிப்படி அமைக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை மதித்துணர்வது என்று இங்கே அர்த்தப்படுகிறது. (1 பேதுரு 2:17 ஒப்பிடவும்.) ஒருவருடைய பெற்றோர் விசுவாசத்தில் இல்லாதவர்களாக இருந்தாலும் அல்லது ஒரு நல்ல முன்மாதிரியை வைக்க தவறுகிறவர்களாக இருந்தாலும், அப்படிப்பட்ட கனம் கொடுக்கப்படுவது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தகுதியாயிருக்கிறது. உங்களுடைய பெற்றோர் முன்மாதிரியான கிறிஸ்தவர்களாக இருந்தால், நீங்கள் அவர்களுக்கு இன்னுமதிகமான கனத்தைச் செலுத்த வேண்டும். உங்களுடைய பெற்றோர் கொடுக்கும் சிட்சையும் வழிநடத்துதலும் மட்டுக்குமீறி உங்களை கட்டுப்படுத்துவதற்காக கொடுக்கப்படுவதில்லை என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள். மாறாக, நீங்கள் “தொடர்ந்து வாழ்வதற்கு” அவைகள் உங்களை பாதுகாப்பதற்கு கொடுக்கப்படுகின்றன.—நீதிமொழிகள் 7:1, 2, NW.
19 அப்படியென்றால் குடும்பம் எப்படிப்பட்ட ஓர் அன்பான ஏற்பாடு! குடும்ப வாழ்க்கைக்கான கடவுளுடைய சட்டங்களை கணவர்கள், மனைவிகள், பிள்ளைகள் எல்லாரும் பின்பற்றும்போது வீடு ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் இடமாக, புகலிடமாக ஆகிறது. இருப்பினும், பேச்சுத்தொடர்பு, பிள்ளை பயிற்றுவிப்பு ஆகியவற்றில் உட்பட்டிருக்கும் பிரச்னைகள் எழும்பலாம். இப்படிப்பட்ட பிரச்னைகளில் சில எவ்வாறு தீர்க்கப்படலாம் என்பதை எமது அடுத்த கட்டுரை கலந்தாலோசிக்கிறது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ பைபிள் காலங்களில் கடவுள் பயமுள்ள கணவர்கள், மனைவிகள், பிள்ளைகள் ஆகியோரால் என்ன முன்மாதிரி வைக்கப்பட்டது?
◻ கணவனின் பங்கின் மீது கிறிஸ்தவம் என்ன கூடுதலான விளக்கத்தைக் கொடுத்தது?
◻ கிறிஸ்தவ குடும்பத்தில் மனைவி என்ன பங்கை வகிக்க வேண்டும்?
◻ குடும்பத்தின் நலத்துக்கு கிறிஸ்தவ இளைஞர் எவ்வாறு உதவி செய்யலாம்?
[பக்கம் 9-ன் படம்]
“சீர்குலைந்த ஒழுக்க நெறிகள் இருந்த அக்காலத்தில், திருமணத்தைப் பற்றிய கிறிஸ்தவ நோக்குநிலையைவிட கிறிஸ்தவத்தில் வேறெதுவும் அவ்வளவு நவீனமாகவும் கடுமையாகவும் தோன்றவில்லை . . . [அது] மனிதகுலத்திற்கு புதிய சகாப்தத்தை திறந்தது”
[பக்கம் 10-ன் படம்]
கிறிஸ்தவ கணவர்கள் தங்கள் மனைவிகள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாக எடுத்துச் சொல்ல உற்சாகப்படுத்துகின்றனர், அப்படிப்பட்ட உணர்ச்சிகளை கவனத்தில் கொள்கின்றனர்