பைபிள் புவியியல் அது துல்லியமாக இருக்கிறதா?
கதிரவன் இப்போதுதான் பாலஸ்தீனாவில் தன்னை மறைத்துக்கொண்டான். வருடமோ, 1799. படையெடுப்பின் கடினமான நாளிற்குப் பின்பு பிரஞ்சு படை முகாமிட்டிருக்கிறது, படைத்தலைவர் நெப்போலியன் தன் கூடாரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய ஊழியக்காரர்களில் ஒருவர், மினுக்மினுக்கென்று எரியும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், பிரஞ்சு பைபிளிலிருந்து சப்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறார்.
பாலஸ்தீனாவில் நெப்போலியனின் படையெடுப்பின்போதெல்லாம் தெளிவாகவே இது அடிக்கடி நடந்தது. “அந்தப் பூர்வீக நகரங்களின் இடிபாடுகளில் முகாமிடும்போது,” நினைவுபடுத்தி பின்வருமாறு சொன்னார், “ஒவ்வொரு மாலையும் அவர்கள் சப்தமாக வசனங்களை வாசிக்கிறார்கள் . . . விளக்கங்களின் இணையொப்புமையும் உண்மைத்தன்மையும் வியக்கவைக்கிறது: அவை பல நூற்றாண்டுகளுக்கும் மாற்றங்களுக்கும் பின்பு இப்போதும் இத்தேசத்துக்குப் பொருத்தமாய் இருக்கின்றன.”
உண்மையில், மத்திய கிழக்குப் பகுதிக்குப் பிரயாணம் செய்கிற பயணிகள், இன்றைய நாளின் இடங்களோடு பைபிள் நிகழ்ச்சிகளைச் சம்பந்தப்படுத்திப் பார்ப்பதை எளிதாக உணர்கிறார்கள். பிரஞ்சு படை எகிப்தியரை ஜெயிப்பதற்கு முன்பு, அந்தப் பூர்வீக இடத்தைப்பற்றி அயல்நாட்டினர் சிறிதளவே அறிந்திருந்தனர். பின்பு, நெப்போலியன் எகிப்திக்குக் கொண்டுவந்த அறிவியல் வல்லுநர்களும் ஞானிகளும், எகிப்தின் பழங்காலச் சிறப்பைப்பற்றிய விவரங்களை உலகிற்கு வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இது ஒரு காலத்தில் இஸ்ரவேலர்மேல் சுமத்தப்பட்ட ‘கொடும் அடிமைத்தனத்தை’ எளிதில் காட்சிப்படுத்திப்பார்க்க உதவிசெய்கிறது.—யாத்திராகமம் 1:13, 14.
எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலையாக்கப்பட்ட இரவில், அவர்கள் ராமசேசில் கூடினர், பின்பு “வனாந்தரத்தின் ஓரத்திற்கு” நடந்துபோனார்கள். (யாத்திராகமம் 12:37; 13:20) இந்தச் சமயத்தில், கடவுள் அவர்களைத் ‘திரும்பும்படியும்,’ ‘சமுத்திரத்தண்டையிலே . . . பாளயமிறங்கவும்’ கட்டளையிட்டார். இந்த விநோதமான சூழ்ச்சிமிக்க நடவடிக்கை, “திகைத்துத் திரிகிறார்கள்” என்று சுட்டியுணர்த்தப்பட்டது; மேலும் எகிப்தின் அரசன் தன் படையோடும் 600 யுத்த ரதங்களோடும் தன்னுடைய பழைய அடிமைகளை மீண்டும் பிடிக்கப் போனான்.—யாத்திராகமம் 14:1-9.
அந்த யாத்திரை
பொ.ச. முதல் நூற்றாண்டின் சரித்திராசிரியன் ஜொஸிஃபஸின் பிரகாரம், எகிப்தியரின் படை இஸ்ரவேலரை “இடுக்கமான இடத்திற்கு” ஓடச்செய்து, “ஏறித் தப்பிக்க முடியாத செங்குத்தான பாறைகளுக்கும் கடலுக்கும் இடையே” அவர்களைச் சிக்கவைத்தது. இஸ்ரவேலர் சரியாக எந்த இடத்தில் செங்கடலைக் கடந்தனர் என்பது இன்று நிச்சயமாக அறியப்படவில்லை. ஆனாலும், மலைத்தொடரின் உச்சியிலிருந்து செங்கடலின் வடமுனையைக் கீழ்நோக்கிப் பார்க்கும் இந்தக் காட்சியை மனதிற்கு கொண்டுவருவது எளிதாக இருக்கிறது. அக்கறையைத் தூண்டும்விதமாக, அந்த மலை ஜெபல் அட்டாக்க என்று அழைக்கப்படுகிறது, அதன் பொருள் “ரட்சிப்பின் மலை.” இந்த மலைத்தொடருக்கும் செங்கடலுக்கும் இடையே ஒரு சிறிய சமவெளி, மலையடிவாரக் குன்றுகள் ஏறக்குறைய கடலுக்குள் முட்டிநிற்கும் இடம்வரை குறுகி வருகிறது. செங்கடலின் எதிர்ப்பக்கத்தில் பல நீரூற்றுகளுள்ள பாலைவனச்சோலை இருக்கிறது, இது ‘ஆயூன் மூசா’ என்றழைக்கப்படுகிறது, இதற்கு “மோசேயின் கிணறுகள்” என்று பொருள். இந்த இரண்டு இடங்களுக்கு இடைப்பட்ட கடற்தரை மிகச் சீராகக் கீழிறங்குகிறது, மற்ற இடங்களிலோ இது 9 முதல் 18 மீட்டர் வரை ஆழத்திற்கு திடீரென்று குறைகிறது.
கிறிஸ்தவ மண்டலத்தின் விசுவாசமற்ற இறையியல் வல்லுநர்கள், செங்கடலின் தண்ணீர்களை இரண்டாகப் பிரித்து, இஸ்ரவேலரை உலர்ந்த தரையிலே கடந்துபோகும்படி கடவுள் செய்த அற்புதத்தை நம்பாதிருக்கிறார்கள். நிகழ்ச்சி நடந்த இடத்தை, செங்கடலின் வடக்கே உள்ள ஓர் ஆழமற்ற சேறுள்ளப் பகுதிக்கு அல்லது சதுப்புநிலப்பகுதிக்கு அவர்கள் மாற்றுகிறார்கள். ஆனால் அது, பார்வோனையும் அவனுடைய முழு சேனையையும் இழுத்துக்கொண்டுப்போய், ஆம், அமிழ்ந்துபோகச் செய்யும் அளவிற்கு போதுமான தண்ணீர் இருந்த இடத்திலேயே இந்தச் செங்கடலைக் கடந்துபோவது நடந்திருக்கவேண்டும் என்று திரும்பத்திரும்பச் சொல்லும் பைபிள் பதிவோடு ஒத்துப்போவதில்லை.—யாத்திராகமம் 14:26-31; சங்கீதம் 136:13-15; எபிரெயர் 11:29.
சீனாய் வனாந்தரம்
சீனாய் தீபகற்பத்தில் காணப்பட்ட கடினமான நிலைமைகள், இஸ்ரவேலரின் அலைந்துதிரிதல்களைப் பற்றிய பைபிள் பதிவில் தத்ரூபமாக வர்ணிக்கப்பட்டுள்ளன. (உபாகமம் 8:15) ஆகவே முழு தேசமும், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைப் பெறுவதற்கு, சீனாய் மலையின் அடிவாரத்தில் கூடியிருந்துவிட்டு, பின்பு அவர்கள் பின்வாங்கி நகர்ந்து “தூரத்திலே” நிற்க முடிந்ததா? (யாத்திராகமம் 19:1, 2; 20:18) கணக்கெடுப்பின்படி 30 லட்சம் எண்ணிக்கையில் இருந்த ஒரு மக்கள் கூட்டம் அவ்வாறு நகர்வதற்குப் போதுமான பெரிய இடம் அங்கு இருக்கிறதா?
ஆர்த்தர் ஸ்டேன்லி, 19-ம் நூற்றாண்டு பயணியும் பைபிள் அறிஞரும், சீனாய் மலைக்கு விஜயம்செய்து, ராஸ் சாஃப்சாஃப-ஐ ஏறினப்பிறகு அவருடைய குழு கண்ட காட்சியை விளக்கினார்: “அதைக் கண்ட ஒவ்வொருவரும் சொன்னதுபோலவே, எங்கள்மீது அந்தக் காட்சியின் பாதிப்பு உடனடியாக இருந்தது. . . . இங்கு ஆழமான மிகப்பரந்த மஞ்சள்நிற சமவெளி செங்குத்துப்பாறைகளின் அடிவாரத்தை நோக்கிப் பரந்த அளவில் போய்ச் சேருகிறது. . . . இந்த நிலப்பகுதியில் மலை, சமவெளி ஆகிய இரண்டும் இணைந்திருக்கும் இப்படிப்பட்ட இணைப்புகள் ஏறக்குறைய எங்கும் காணப்படாததாக இருப்பதைக் கருத்தில் கொள்ளும்போது, அப்படிப்பட்ட ஒரே ஓர் இணைந்திருக்கும் இணைப்பு காணப்பட முடிந்தது, அதுவும் மரபுவழி வந்த சீனாய் மலையின் அருகாமையிலேயே காணப்படுவது, உண்மையிலேயே சம்பவம் நடந்ததன் முக்கியமான சான்றாக இருக்கிறது.”
வாக்குப்பண்ணப்பட்ட தேசம்
வனாந்தரத்தில் இஸ்ரவேலர் சுற்றித்திரிந்த 40-ம் வருடத்தில், அவர்கள் கூடிய சீக்கிரத்தில் சுதந்தரிக்கப்போகும் தேசத்தின் அம்சங்களைப்பற்றி மோசே பின்வரும் இந்த விளக்கத்தைக் கொடுத்தார்: “உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப் பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்.”—உபாகமம் 8:7.
ஏபால் மலைக்கும் கெரிசீம் மலைக்கும் இடையே உள்ள தண்ணீர்கள் நிறைந்த சீகேம் பள்ளத்தாக்கில், முழு தேசமும்—ஆண்கள், பெண்கள், சிறு பிள்ளைகள், அந்நியர்—கூடிவந்தபோது, இந்த வாக்கின் துல்லியத்தன்மை சீக்கிரத்தில் உணரப்பட்டது. கெரிசீம் மலையடிவாரத்தில் ஆறு கோத்திரங்கள் நின்றன. மற்ற ஆறு கோத்திரங்கள், பள்ளத்தாக்கின் எதிர்ப் பக்கத்திலே, ஏபால் மலையடிவாரத்தில் கூடியிருந்தன. இவர்கள், யெகோவாவின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படிந்தால் தெய்வீக ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள் என்றும், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளத் தவறினால் சாபங்களை அடைவார்கள் என்றும் காது கொடுத்துக் கேட்பதற்கு வந்தனர். (யோசுவா 8:33-35) ஆனால், தேசம் அங்கு வந்து கூடிவருவதற்குப் போதுமான இடம் அந்தக் குறுகலான பள்ளத்தாக்கில் இருந்ததா? மேலும் நவீனகால ஒலிப்பெருக்கிச் சாதனங்கள் இல்லாமல் எப்படி அவர்கள் அனைவரும் காதுகொடுத்துக் கேட்க முடிந்தது?
யெகோவா தேவன், லேவியர்களின் குரலொலி சப்தத்தை அற்புதமாக அதிகரித்திருக்கலாம். ஆனால், அந்த அற்புதமே அவசியமில்லாததுபோல் தோன்றுகிறது. இந்தப் பள்ளத்தாக்கில் ஒலிபரவும்திறன் மிகச் சிறப்பாயிருந்தது. “எல்லா பயணிகளுமே,” 19-ம் நூற்றாண்டின் பைபிள் அறிஞர் ஆல்ஃப்ரட் எடர்ஷைம் எழுதினார், “இரண்டு முக்கியமான குறிப்புகளில் ஒருமித்து இருந்தனர்: 1. பள்ளத்தாக்கில் பேசப்படும் எதையும், ஏபால், கெரிசீம் ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் மிகத் தெளிவாகவே எந்தக் கடினமும் இல்லாமல் கேட்கமுடியும். 2. இந்த இரண்டு மலைகளும் எல்லா இஸ்ரவேலருக்கும் போதிய நிற்பதற்கான-நிலப்பகுதியை உடையதாயிருக்கின்றன.”
வில்லியம் தாம்ஸன், மற்றொரு 19-ம் நூற்றாண்டு பைபிள் அறிஞர், அந்தப் பள்ளத்தாக்கில் அடைந்த அவருடைய அனுபவத்தை அந்த இடமும் புத்தகமும் (The Land and the Book) என்ற அவருடைய புத்தகத்தில் விளக்கினார்: “எதிரொலியைக் கேட்பதற்காக மிகுந்த சப்தமிட்டேன், பின்பு உரத்த சப்தமிடும் லேவியர் அறிவித்தபோது எப்படி இருந்திருக்குமென கற்பனை செய்துபார்த்தேன் . . . ‘யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணுகிறவன் சபிக்கப்பட்டவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவனுமாய் இருப்பானாக.’ இதைத் தொடர்ந்து, மிகப்பெரிய சபையிலிருந்து, பிரமாண்டமான ஆமென்!, பத்து மடங்கு அதிகமாக, உயர்ந்து உரத்த சப்தமாகி, ஏபாலிலிருந்து கெரிசீமிற்கும், கெரிசீமிலிருந்து ஏபாலிற்கும் மறு-எதிரொலிக்கிறது.”—உபாகமம் 27:11-15-ஐ ஒப்பிடுங்கள்.
யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு
சீகேமிற்கு வடக்கில் மற்றொரு செழிப்பான பள்ளத்தாக்கு இருக்கிறது, கடல் மட்டத்தின் கீழிருந்து மேலெழும்பி ஒரு பரந்த சமவெளியாக விரிவாகிறது. இந்த முழுப் பகுதியும் யெஸ்ரயேல் நகர் பெயரின் அடிப்படையில், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. பள்ளத்தாக்கின் வடபுறம், இயேசுவின் சொந்த நகரம் நாசரேத் இருந்த இடமாகிய கலிலேயாவின் மலைக்குன்றுகள் இருக்கின்றன. ஜார்ஜ் சுமித், பரிசுத்த தேசத்தின் சரித்திரப்பூர்வ புவியியல் (The Historical Geography of the Holy Land) என்ற தன்னுடைய புத்தகத்தில், “குன்றுகளுக்கு மத்தியில் உள்ள ஓர் ஆற்றுப்பள்ளத்தாக்கில் நாசரேத் அமைகிறது; ஆனால் இந்த ஆற்றுப்பள்ளத்தாக்கின் முனைக்கு நீங்கள் ஏறினவுடன், . . . என்னே ஒரு காட்சியை நீங்கள் காண்கிறீர்கள்! [யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு] அதனுடைய . . . போர்க்களங்களோடு உங்களுக்கு முன்பாகத் தென்படுகிறது . . . இது பழைய ஏற்பாடு வரலாற்றின் ஒரு வரைபடம்.”
இந்தச் சமவெளி பள்ளத்தாக்கில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், யோசுவாவின் நாட்களில் இஸ்ரவேலால் கைப்பற்றப்பட்ட நகர-ராஜ்யங்களின், அதாவது தானாக், மெகிதோ, யொக்னியாம், ஒருவேளை கேதேசு போன்ற ராஜ்யங்களின் இடிபாடுகளைத் தோண்டியெடுத்திருக்கின்றனர். (யோசுவா 12:7, 21, 22) இதேப் பகுதியில்தான், பாராக், கிதியோன் போன்ற நியாயாதிபதிகளின் நாட்களில், மிக அதிகளவு வல்லமைமிக்க எதிரி தேசங்களிலிருந்து தம்முடைய மக்களுக்கு யெகோவா விடுதலையளித்தார்.—நியாயாதிபதிகள் 5:1, 19-21; 6:33; 7:22.
நூற்றாண்டுகளுக்குப் பின்பாக, யெகூ ராஜா, யேசபேலையும் ஆகாபின் விசுவாசமற்ற குடும்பத்தையும் சங்காரம் செய்யவும், யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றவும் இந்தப் பள்ளத்தாக்கின் வழியாய் யெஸ்ரயேல் நகருக்கு (பட்டணத்திற்கு) ரதமோட்டிச் சென்றார். யெகூவின் படை 19 கிலோமீட்டர் தூரத்தில் வரும்போதே யெஸ்ரயேலின் காவல் கோபுரத்திலிருந்து கிழக்குத் திசையில் பார்ப்பது எளிதாக இருந்திருக்கும். எனவே, யோராம் ராஜா முதலில் ஒருவனையும், பின்பு இரண்டாவது தூதுவனையும் குதிரையில் அனுப்பவும், இறுதியாக, இஸ்ரவேலின் யோராம், யூதாவின் அகசியா ஆகிய ராஜாக்கள் தங்கள் ரதங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு, யெகூ யெஸ்ரயேல் பட்டணத்தை அடைவதற்குள் அவரைப் போய் சந்திக்கவும் அநேக சமயம் இருந்திருக்கும். யெகூ சரியான சமயத்தில் யோராமை கொலைசெய்தார். அகசியா ஓடிப்போனான், ஆனால் பின்பு காயப்படுத்தப்பட்டு, மெகிதோவில் அவன் இறந்தான். (2 இராஜாக்கள் 9:16-27) மேற்கூறப்பட்ட யுத்த களங்கள் போன்றவற்றைப்பற்றி, ஜார்ஜ் சுமித் எழுதுகிறார்: “புவியியல் சார்பில் நடந்திருக்க முடியாததாக . . . எந்த நிகழ்ச்சிப் பதிவும் இல்லையென்பது கருத்தைக் கவருவதாய் இருக்கிறது.”
சந்தேகமின்றி இயேசு, வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக, யெகோவாவின் பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்வதில், பெரிய யோசுவா, பெரிய பாராக், பெரிய கிதியோன், பெரிய யெகூ என்ற பாகங்களைப் பூர்த்திசெய்யவேண்டியவராக இருந்தார் என்பதை அறிந்தவராக, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கை அடிக்கடிப் பார்த்து, அங்கு நடந்த கிளர்ச்சியூட்டும் வெற்றிச்சம்பவங்களைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்திருப்பார். உண்மையில், இந்தப் பள்ளத்தாக்குச் சமவெளியிலிருக்கும் அதிக போர்நடவடிக்கையுள்ள பட்டணமான மெகிதோவைப் பைபிள், கடவுளுடைய யுத்தமாகிய ஹார்-மெகதோன் (அர்த்தம், “மெகிதோ மலை”) நடக்கும் இடத்தின் அடையாளமாகப் பயன்படுத்துகிறது. இது பூமியளவான யுத்தம், அதில் கடவுளின், கிறிஸ்தவச் சபையின், கடவுளுடைய உண்மையான மக்களின், எல்லா எதிரிகளையும் ராஜாக்களின் ராஜாவாகிய இயேசு கிறிஸ்து அழிப்பார்.—வெளிப்படுத்துதல் 16:16; 17:14.
ஒரு சமயம், கோபமடைந்த நாசரேத்தின் யூதர்கள், இயேசுவை “தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து” தள்ளிகொன்றுவிட முயற்சித்தனரென பைபிள் விவரிக்கிறது. (லூக்கா 4:29) அக்கறையூட்டும்வகையில், இன்றைய நாசரேத் நகரத்தின் தென்மேற்கில், இந்தச் சம்பவம் நடந்திருக்கக்கூடிய அந்த இடத்தில், 12 மீட்டர் உயரமுள்ள செங்குத்துப் பாறை இருக்கிறது. இயேசு தம்முடைய எதிரிகளிடமிருந்து தப்பினார், பின்பு, ‘கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்தார்,’ என்றும் பைபிள் சொல்கிறது. (லூக்கா 4:30, 31) நிச்சயமாகவே, கலிலேயாக் கடலில் கப்பர்நகூம் அதிகக் குறைவான உயரத்தில் இருக்கிறது.
இவையும் மற்ற அநேகக் குறிப்புகளும், நெப்போலியனையும் மற்றவர்களையும் பைபிள் புவியியலின் துல்லியத்தன்மையைப்பற்றிய வியப்பைத் தெரிவிக்கும்படிச் செய்திருக்கின்றன. “இட இயல்பு பற்றிய [பைபிளின்] குறிப்புகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதோடு, முற்றிலும் திருப்திதருவதாயும் இருக்கின்றன,” என்று அந்த இடமும் புத்தகமும் (The Land and the Book) என்பதில் எழுதினார் தாம்ஸன். சீனாயும் பாலஸ்தீனமும் என்பதில் ஸ்டேன்லி சொல்கிறார்: “பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் பதிவுசெய்யப்பட்ட வரலாறும் இயற்கை புவியியலும் எப்போதும் ஒத்துப்போவது மனதில் பதியாமல் இருக்க முடியாது.”
புவியியல் சம்பந்தமான விஷயங்களில் பைபிளின் மலைக்கவைக்கும் துல்லியத்தன்மை, அது வெறும் மனிதனால் உண்டாக்கப்பட்ட புத்தகம் அல்ல என்பதற்கு ஒரு நிச்சயமான சான்றாக இருக்கிறது. இதற்கு முன்பு வந்த மூன்று தி உவாட்ச்டவர் இதழ்களும் பைபிள் சம்பந்தமான கட்டுரைகளைக் கொண்டிருந்தன. நீங்கள் அவற்றைப் பெற்று, இந்த வரிசையில் வந்த மற்ற மூன்று பாகங்களையும் படித்தனுபவிக்கும்படி நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
[பக்கம் 7-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு
யெஸ்ரயேல்
நாசரேத்
தானாக்
மெகிதோ
யொக்னியாம்
கேதேசு
வ
கலிலேயாக் கடல்
மகா சமுத்திரம்
மைல்கள்
கிலோமீட்டர்
5
10
10
20
[படத்திற்கான நன்றி]
Based on a map copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel.
[பக்கம் 5-ன் படம்]
இஸ்ரவேலர் சீனாய் மலையில் நியாயப்பிரமாணத்தைப் பெற்றனர்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.